ஏழாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, பெருந்தொற்றின் போது யோகாவின் பங்கு குறித்து பேசினார். இந்த கடினமான நேரத்தில், யோகா மக்களுக்கு மூல வலிமையையும், சமநிலையையும் அளித்து நிரூபித்துள்ளது என்று கூறினார். பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகள் யோகா தினத்தை மறந்துவிடுவது இயல்பானது என்று அவர் சுட்டிக்காட்டினார், ஏனெனில் இது அவர்களின் கலாச்சாரத்தில் உள்ளார்ந்ததல்ல. ஆனால், இதற்கு மாறாக, உலகளவில் யோகா மீதான உற்சாகம் அதிகரித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
யோகாவின் முக்கிய மூலப்பொருளில் ஒன்று துன்பங்களை எதிர்கொள்ளும் வலிமை. பெருந்தொற்று தோன்றிய நேரத்தில், திறன்கள், வளங்கள் அல்லது மன இறுக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, தொற்றை எதிர்கொள்ள யாரும் தயாராக இருக்கவில்லை. உலகெங்கிலும் பெருந்தொற்றுடன் போராடுவதற்கு, நம்பிக்கையையும், வலிமையையும் திரட்ட யோகா மக்களுக்கு உதவியது .
முன்கள கொரோனா வீரர்கள் எவ்வாறு யோகாவை தங்கள் கேடயமாக்கி, யோகா மூலம் தங்களை வலுப்படுத்திக் கொண்டனர் என்பதையும், வைரஸின் விளைவுகளைச் சமாளிக்க மக்களையும், மருத்துவர்களையும், செவிலியர்களையும் யோகாவுக்கு அழைத்துச் சென்றதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். எல்லா இடங்களிலும், மருத்துவமனைகளில் மருத்துவர்களும், செவிலியர்களும் நடத்திய யோகா அமர்வுகள் நடைபெறத் துவங்கின. நமது சுவாச மண்டலத்தை வலுப்படுத்த, பிராணயாமா மற்றும் அனுலோம்-விலோம் போன்ற சுவாச பயிற்சிகளின் முக்கியத்துவத்தை வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.