வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். பிரதமரின் மகளிர் வேளாண் ட்ரோன் மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது, தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வரலாற்றுச் சிறப்புமிக்க 10,000 ஆவது மக்கள் மருந்தக மையத்தைப் பிரதமர் அர்ப்பணித்தார். மேலும், நாட்டில் உள்ள மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 என்பதிலிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தையும் திரு. மோடி தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்களை வழங்குதல் மற்றும் மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 என்பதிலிருந்து 25,000 ஆக உயர்த்துதல் என்ற இரண்டு முன்முயற்சிகளையும் பிரதமர் இந்த ஆண்டின் தனது சுதந்திர தின உரையின் போது அறிவித்தார். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை இந்த நிகழ்வு குறிக்கிறது.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த சுய உதவிக் குழுவின் உறுப்பினரான திருமதி கோம்லபதி வெங்கட ரவ்னம்மா, வேளாண் பணிகளுக்காக ட்ரோன்களை இயக்குவதைக் கற்றுக் கொண்ட தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இப்பயிற்சியை முடிக்க தனக்கு 12 நாட்கள் ஆனதாக அவர் பிரதமரிடம் தெரிவித்தார்.
கிராமங்களில் வேளாண்மைக்கு ட்ரோன்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பிரதமரின் கேள்விக்கு பதிலளித்த அவர், இது தண்ணீர் பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது, அதே சமயம் நேரத்தையும் சேமிக்கிறது என்று கூறிறார். இந்திய மகளிர் சக்தியை சந்தேகிப்பவர்களுக்கு திருமதி வெங்கடா போன்ற பெண்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர் என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். வேளாண்மையில் ட்ரோன்களின் பயன்பாடு எதிர்காலத்தில் பெண்களுக்கு அதிகாரமளித்தலின் அடையாளமாக உருவெடுக்கும் என்று அவர் கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையில் பெண்கள் பங்கேற்பதன் முக்கியத்துவத்தையும் அவர் குறிப்பிட்டார்.