மக்கள் மருந்தகப் பயனாளிகளில் ஒருவரான ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த குலாம் நபி தர், இந்தத் திட்டத்துக்காகப் பிரதமர் மோடிக்கு நன்றி கூறினார். இது தனக்கு மிகுந்த பயனைத் தந்துள்ளதாகவும் மக்களுக்கு மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதாகவும் அவர் கூறினார். மக்கள் மருந்தகத்தில் மருந்துகள் வாங்குவதன் மூலம் ரூ.9,000 வரை தன்னால் எவ்வாறு சேமிக்க முடிகிறது என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்தத் திட்டதின் மூலம் பயனடைவதைக் காண்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தத் திட்டத்தை அரசு ஒவ்வொரு கிராமத்துக்கும் எடுத்து செல்லும் என்றும் இதனால் அனைத்து மக்களும் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் மோடி மேலும் கூறுகையில், "370வது பிரிவை நீக்குவதற்கு முன் ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சியைக் கொண்டு வருவது கடினமாக இருந்தது. ஆனால் தற்போது மக்களுக்கு அரசு திட்டங்களின் பயன்கள் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றன. எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானம் நடந்து வருகிறது. அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரையும் அரவணைப்போம் என்பதைத் தற்போது ஜம்மு காஷ்மீரில் அனைவரும் காணலாம்," என்றார்.
பயனாளி பற்றிக் குலாம் நபி தர்ருடன் நட்பு ரீதியாகப் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாதை குறிப்பிட்டார். "குலாம் நபி அவர்களே, தில்லியில் எனக்கு உங்களைப் போலவே பெயர் கொண்ட நண்பர் ஒருவர் இருக்கிறார். நான் குலாம் நபி ஆசாத் அவர்களை அடுத்த முறை சந்திக்கும்போது, புல்வாமாவில் ஒரு உண்மையான குலாம் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று கூறுவேன்," என்றும் கூறினார்.