எது நரேந்திர மோடியை வேறுபட்டவராக்குகிறது.?
மற்றவர்களுக்கும் நரேந்திர மோடிக்கும் இடையேயுள்ள வேறுபாடு என்ன என்று எவரையும் கேட்பது வெளிப்படையானதாகவே இருக்கும். அவரை நீங்கள் சந்திக்கும்போது அந்த மனிதர் வித்தியாசமானவர் என்று உங்கள் உள்ளுணர்வு தெரிவிக்கும். உங்களின் உள்ளுணர்வுக்கும் அப்பால் சென்று சுதந்திர இந்தியாவின் வரலாற்றைப் பார்த்தீர்களேயானால் அவரை தலைசிறந்தவராக்கும் பல வெளிப்படையான அம்சங்களை உங்களால் வரிசையாக அடுக்க முடியும். இங்கே அதிகாரமும் உத்வேகமும் நிறைந்த ஒரு தலைவர் இருக்கிறார். தொலைநோக்குடைய அரசியல் தலைவர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். விஷயங்களை குறிப்பாக அறிந்து கொள்வதில் திறமை வாய்ந்த சில தலைவர்களையும் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் திரு. நரேந்திர மோடியால் இவை இரண்டையுமே செய்ய முடியும். அவரது கண்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவரது கால்கள் நிலத்தில் அழுந்தப் பதிந்தவையாக இருக்கும். வேறுபட்டவராக அவர் இருப்பதற்கான, தனித்து நிற்பதற்கான அவரது சில தன்மைகளை இங்கு பார்ப்பதற்கான முயற்சிகளை நாம் செய்வோம்.
மக்கள் தலைவர்:
இந்தியாவில் வெகுசில தலைவர்களால் மட்டுமே செய்ய முடிந்த வகையில் மக்களை அவரால் நெருங்க முடிந்துள்ளது. அரசியல் ரீதியான உறவாக அல்லாமல் உணர்வு பூர்வமான தொடர்பின் மூலமே நரேந்திர மோடியால் சாதாரண மனிதனுடனும் நெருங்க முடிந்துள்ளது. நகர்ப்புற அறிவுஜீவிகளிலிருந்து துவங்கி, கிராமப்புற மக்கள் வரை, முதியவர்களிலிருந்து இளைஞர்கள் வரை, ஆண்கள், பெண்கள் எனவும், இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் அவருக்கு ஆதரவாளர்கள் இருக்கின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் குஜராத்திகளிடையே பெரும் எண்ணிக்கையிலானவர்கள் அவரைப் போற்றி வருகின்றனர். நவீன தொழில்நுட்பத்தை திறமையாகப் பயன்படுத்தியும், சமூக ஊடகங்களின் மூலமும் இந்தியாவின் பலபகுதிகளிலும் உள்ள விரிவான பகுதி மக்களோடு அவரால் தொடர்பு கொள்ள முடிந்துள்ளது
வளர்ச்சியின் மீதான பேரார்வம்:
நரேந்திர மோடியின் மனதில் ஒரேயொரு எண்ணமே தொடர்ந்து இருந்து வருகிறது. அதுதான் வளர்ச்சி. உதாரணம் ஒன்றைச் சொல்லவேண்டுமானால், சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் சட்டமன்றத்திற்கான தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் மாநிலத்தில் முதலீடுகளை கவர்வதற்காக அவர் சுவிட்சர்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டார். அதைப் போலவே 2012ஆம் ஆண்டில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நரேந்திர மோடி ஜப்பானுக்குப் பயணம் செய்தார். குஜராத்திற்கும் ஜப்பானுக்கும் இடையே மகத்தான பொருளாதார, கலாச்சார ஒத்துழைப்பினை இந்தப் பயணம் உருவாக்கியது. தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது, ஆட்சிக்கு வருவது என்பதே அரசியல் வாதிக்கான முன்னுரிமையாக இருக்கும் என்பது வெளிப்படை. ஆனால் திரு. நரேந்திர மோடிக்கோ தேர்தல் நடைபெறவுள்ள ஆண்டில் கூட அரசியல் வேலையை விட மாநிலத்திற்கு மேலும் அதிகமான முதலீட்டைக் கொண்டுவருவது என்பதே முக்கியமானதாக இருந்தது.
பிரச்சினைக்கான தீர்வில் அறிவியல்பூர்வமான அணுகுமுறை:
எந்தவொரு பிரச்சினை குறித்தும் நரேந்திர மோடியின் அணுகுமுறையில்தான் குஜராத்தின் வெற்றி அடங்கியிருந்தது. முதலில் அந்தப் பிரச்சினையை பார்ப்பார். அதை தனியாக அல்ல; அதன் ஒட்டுமொத்த தன்மையின் அடிப்படையில். அனைத்து விதமான கோணங்களிலும் அந்தப் பிரச்சினையை உணர்ந்து கொள்ள அவர் நீண்ட நேரத்தையும் செலவழிப்பார். ஏனென்றால் நன்றாகப் புரிந்து கொள்ளப்பட்ட பிரச்சினை என்பது பாதி தீர்க்கப்பட்ட பிரச்சினையாகிவிடும் என்பதை அவர் நன்றாகவே உணர்ந்திருந்தார். அவர் காதுகொடுத்துக் கேட்பதிலும் திறமை மிக்கவர். அதன்பிறகே அவர் தீர்வைப் பற்றிச் சிந்திக்கத் துவங்குவார். தற்காலிக நடவடிக்கைகள் எடுப்பதையோ அல்லது அதற்கான குறுக்கு வழிகளைத் தேடுவதையோ அல்லது மேற்பூச்சான நடவடிக்கைகளையோ அவர் எடுப்பதில்லை. எதிர்காலம் குறித்த தொலைநோக்குடன் கூடிய, நிரந்தரமான, நீண்ட நாட்களுக்கான தீர்வுகள், அடித்தளத்திலிருந்தே மாற்றங்களை ஏற்படுத்துவது ஆகியவற்றை பற்றி மட்டுமே அவர் சிந்திப்பவர். அதன் பிறகே மிகத் தெளிவாக இலக்குகளுடனும், குறிப்பிட்ட வரையறைகளுடனும், நோக்கங்களுடனும், கண்காணிக்கக்கூடிய வகையிலான அறிகுறிகளுடனும் அதை செயல்படுத்துவதற்கான திட்டத்தை, அவர் வரையறுப்பார். அதன்பிறகே அத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை அவர் தேர்ந்தெடுப்பார்.
சரியான செயல்முறையை மட்டுமே அவர் தேர்ந்தெடுப்பதில்லை; அதற்கான சரியான நிறுவனம் அதோடு மட்டுமின்றி சரியான ஆட்கள் ஆகியவற்றையும் அவர் தேர்வு செய்வார். அதுமட்டுமல்ல; அதை கண்காணிப்பது, தொடர்ந்து அதைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வது போன்றவற்றிற்கான திறனும் அவருக்கிருந்தது. அவர் ஒன்றும் மேலாண்மை குறித்துப் படித்த பட்டதாரியல்ல. ஆனல் அவரது சிந்தனைத் தெளிவும் புதிய கண்டுபிடிப்புகளும் மேலாண்மையை போதிக்கும் கல்லூரிகளிலும் சொல்லித் தருவதையும் மீறியதாகவே இருந்தது.
பொதுவாக நாட்டின் மூலை முடுக்கெங்கும், ஒரு முதல்வராக குஜராத் மாநிலத்திலும் அவர் மேற்கொண்ட தீவிரப் பயணங்களின் விளைவாக அவர் பெற்றிருந்த அனுபவம் அடிமட்டத்தில் இருக்கும் பிரச்சனைகளை அவரை உணர்ந்து கொள்ள வைத்தது. அதைப் போலவே கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் அவர் பெற்ற உலக அறிவு, விரிவான படிப்பும் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கான சரியான கண்ணோட்டத்தையும், தொலை நோக்கையும் அவருக்கு வழங்கின.
பிரமாண்டமான தாக்கத்தை ஏற்படுத்திய திட்டங்கள்:
போர்க்கால அடிப்படையில் திட்டமிடுபவர் என்ற வகையில் திட்டங்கள் குறித்து சிந்திப்பது அவற்றை மிக விரைவாக அமல்படுத்துவது ஆகியவற்றையும் அவரால் மேற்கொள்ள முடியும். இதன் விளைவுகளை குஜராத்தில் நம்மால் காண முடியும். சில நேரங்களில் திட்டத்தின் பயன்களை பார்ப்பதற்குப் பொறுமையிழந்தவராகவும் அவர் தோற்றமளிப்பார். நாட்டின் மற்ற பகுதிகளில் நதிகள் இணைப்பு என்பது இன்னமும் விவாதத்திற்குரிய விஷயமாக இருக்கும் நிலையில், மாநிலத்தில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட நதிகளை வெற்றிகரமாக இணைத்ததன் விளைவாக நீண்ட காலத்திற்கு முன்பே வறண்டு போன நதிகளில் தண்ணீர் பெருகியோடுவதைக் காண முடிகிறது. அதைப் போலவே, 300 கி.மீ. நீளத்திற்கு விரிந்த வாய்க்காலை சுஜலாம் சுஃபலாம் என்ற திட்டத்தின் கீழ் மூன்றே ஆண்டுகளில் உருவாக்கி மாநிலத்தில் தண்ணீர் என்பதே அரிதாக உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழிசெய்ததும், ஜோதிகிராம் திட்டத்தின் கீழ் 56,599 கி.மீ. நீளத்திற்குப் புதிய மின்கடத்தலுக்கான வழிகளை உருவாக்கி 18,000க்கும் மேற்பட்ட கிராமங்கள், 9,681 நகரின் ஒதுக்குப்புறப் பகுதிகளுக்கு மின்சாரம் கிடைக்கச் செய்ததும், மாநிலம் முழுவதிலும் தண்ணீர், இயற்கை எரிவாயு ஆகிய வசதிகளை உருவாக்கியதும், ஈ-கிராம் விஷ்வகிராம் திட்டத்தின் கீழ் மாநிலத்திலுள்ள அனைத்து கிராமங்களையும் அகண்ட அலைவரிசையுடன் இணைத்ததும் என பிரமாண்டமான அளவில் திட்டங்களை மேற்கொண்டு அமல்படுத்தியதற்கான உதாரணங்களாகும்.
பெரியதோ, சிறியதோ இரண்டுமே அழகானவை:
பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் குறித்து கனவு கண்டு, அதை நிறைவேற்றுவதில் நிபுணராக இருந்த அவர் சிறிய அளவிலான தீர்வுகள், உள்ளூர் அளவிலான தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை ஒதுக்கி விடுபவரும் அல்ல. அவர் சொல்வது: “ அறிவியல் உலகத் தரமானதாக இருக்க வேண்டும்; ஆனால் தொழில்நுட்பம் உள்ளூர் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.” தண்ணீருக்கான பிரிவில் போரி பண்ட் (நீர் ஊருக்குள் புகுந்துவிடாமலிருக்க சாக்குப்பைகளில் மணலையும் கற்களையும் நிரப்பி அடுக்கி வைப்பது) விவசாயக் குளங்கள் போன்ற உள்ளூர் அளவிலான தீர்வுகளை பரவலாக அமல்படுத்தியிருந்தார். ஒளிமிக்க குஜராத் உச்சிமாநாடுகளில் நடைபெறும் கருத்தரங்குகளில் உலகளாவிய நிபுணத்துவத்தை அவர் எதிர்பார்த்த அதே நேரத்தில், உள்ளூர் விவசாயிகளின் அனுபவத்தையும், பரிசோதனைகளையும் அவர் ஊக்குவித்து அவற்றுக்கு மதிப்பும் அளித்து வந்தார். அரசு ஊழியர்களிடமிருந்தும் கருத்துக்களை ஏற்றுக் கொண்டார். தினமும் அவருக்கு வரும் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள், கடிதங்கள் ஆகியவற்றின் மூலம் சாதாரண மனிதர்கள் வழங்கும் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் மதிப்பவர்.
நிர்வாகத்திலிருந்து அரசியலைப் பிரிப்பது:
அவர் மிகவும் நேர்மறையான முறையிலேயே முடிவெடுப்பவர். அரசியல் தேவைகளுடன் நிர்வாக வசதிகளை அவர் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை. நிர்வாக ரீதியான முடிவின் அரசியல் விளைவுகள் குறித்து அவருக்கு நினைவூட்டினாலும், நேர்மறைத்தன்மையின் பக்கமே அவர் நிற்பார். இதுதான் குஜராத் மாநில நிர்வாகம் தனது சொந்த காலில் நிற்கவும், தொழில் திறனுடன் செயல்படவும், உலகத்தின் மிகச்சிறந்த செயல் முறைகளுக்கு ஏற்ப செயல்படவும் உதவியது. மாநில அரசின் கட்டமைப்பிற்கு தேவையில்லை என்ற போதிலும் குஜராத் அரசின் பல நிறுவனங்களும் ஐ.எஸ்.ஓ. சான்றிதழை பெற்றிருந்தன.
மக்களின் இதயத் துடிப்பை அறிந்தவர்:
பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் திரு. மோடி. அவரது மாநிலமான குஜராத்தில் மிகவும் பின் தங்கிய பகுதியிலிருந்தே அவர் வந்திருந்தார். மிகச் சிறுவயதிலேயே சாதாரண மக்கள் எதிர்கொள்கின்ற எண்ணற்ற பிரச்சினைகளை அவரும் எதிர் கொண்டவர்தான். அதிலும் குறிப்பாக தண்ணீர், மின்சாரம் பற்றிய பிரச்சினைகள். இத்துறைகளில் ஏதாவது செய்வதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தபோது, அவர் மிகவும் தீவிரமாக திட்டங்களை வகுத்து, வடிவமைத்து இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டார்.
அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி:
மிகப்பெரும் தொழில் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறார்; பின்தங்கிய பகுதிகள், பிற்படுத்தப்பட்ட பிரிவினரை கவனிப்பதேயில்லை என்று அவர் மீது அடிக்கடி விமர்சனம் எழுவதுண்டு. இதைவிட பெரிய பொய் எதுவுமே இருக்க முடியாது. மாநிலம் முழுவதிலும் அவர் ஜோதிகிராம் திட்டத்தை அமல்படுத்தியபோது, குறிப்பிட்ட பகுதியையோ, அல்லது குறிப்பிட்ட பிரிவினரையோ அவர் தேர்ந்தெடுக்கவில்லை. அனைவரையும் உள்ளடக்கியதாகவே அது இருந்தது. மாநிலந்தழுவிய இயற்கை எரிவாயுவிற்கான குழாய் பதிப்பை மேற்கொண்டபோது சமூகத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டுமே அவை சென்றடையவில்லை; மாறாக, அனைவரையும் உள்ளடக்கியதாகவே இருந்தது. வனபந்து திட்டம், சாகர்கேது திட்டம், கரீப்சம்ருதி திட்டம், உமீத் போன்ற பெரும் திட்டங்கள் அனைத்துமே சமூகத்தில் மிகவும் பாதிப்பிற்கு ஆளான மக்களை நோக்கியதாகவே இருந்தனர். எனினும் இந்தத் திட்டங்களும் கூட இப்பகுதிகளின் சமூகத்தின் இதர பகுதியினரை ஒதுக்கியதாக இருக்கவில்லை. ஐந்தரை கோடி குஜராத்திகளுக்காகவே அவர் பாடுபட்டார்.
நிர்வாகத்திலும் வளர்ச்சியிலும் மக்கள் பங்கேற்பு:
மக்களிடையே வளர்ந்து, செயல்பட்டவர் என்ற வகையில் மக்களே மாற்றத்தை உருவாக்குவதற்கான உண்மையான கருவிகள் என்பதை அவர் உறுதியாக நம்பி வநதார். எந்தவொரு வளர்ச்சித் திட்டத்தின் உண்மையான பலன்கள், அரசின் வளர்ச்சித் திட்டம் என்பதாக இல்லாமல், அது மக்களின் இயக்கமாக மாற்றப்படும்போதே போற்றிப் பாதுகாக்கப்படும் என்று அவர் கூறுவதுண்டு. “ஜன்மாஷ்டமி (கிருஷ்ணரின் பிறந்த நாள்) அன்று நள்ளிரவில் கோயில்களில் அனைவரும் திரள வேண்டும் என்று மக்களுக்கு அரசாங்கம் ஏதாவது உத்தரவிடுகிறதா என்ன?” என்றும் அவர் வேடிக்கையாக கூறியதுண்டு.
எனவே செயல்தந்திரம் என்ற வகையில் வளர்ச்சித் திட்டங்களில் மக்களை அவர் ஈடுபடுத்துவார். மாநிலம் முழுவதிலும் லட்சக்கணக்கான நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கிய வெற்றிகரமான செயல், விவசாயிகள் திருவிழா, குஜராத்தில் உள்ள சிறுமிகளின் கல்விக்காக கன்யா கேல்வாணி யாத்ரா போன்றவை மக்களின் பங்கேற்போடு, மக்கள் அணிதிரளும் இயக்கங்களாக அரசின் திட்டங்களை மாற்றியமைப்பதற்கான அவரது திறமைக்கான உதாரணங்களாகத் திகழ்கின்றன
நிர்வாகத்தை எளிமையாகவும், சிறப்பாகவும், வெளிப்படையாகவும் மாற்றுவது:
“குறைவான நிர்வாகமே சிறப்பான நிர்வாகம்” என்று அவர் அடிக்கடி கூறுவதுண்டு. இந்த நோக்கத்துடன் தகவல் தொழில்நுட்பத்தை அவர் பயன்படுத்திக் கொண்டு நிர்வாகச் செயல்பாடுகளை எளிமையாகவும் சிறப்பாகவும் மாற்றினார். 2001ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத்துறையிலும், இணையவழி நிர்வாகத்திலும் எங்குமே இல்லாத இந்த மாநிலம் இப்போது மிகச் சிறப்பான வகையில் இணைய வழி நிர்வாகத்தின் மூலம் நடைபெறுகிறது என்று தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. இது தகவல் தொழில்நுட்பத் துறை பயன்பெறுவதற்காக அல்ல; மாறாக அரசுடன் தொடர்பு கொள்ளும் சாதாரண மக்களின் வாழ்வை எளிதாக்குவதற்காகவே ஆகும். மாநிலத்தின் முக்கிய அலுவலகங்கள் பெரும்பாலானவற்றிலும் ஒருநாள் நிர்வாக மையங்கள் நிறுவப்பட்டன. கற்பனைக்கெட்டாத வகையில் விரைவாக ஆவணங்களையும் சான்றிதழ்களையும் அவை வழங்கின. இப்போது அவர் கிராமப் பஞ்சாயத்துகள் அனைத்தையும் விரிவான அலைக்கற்றை தொடர்பின் மூலம் கணிணி மயப்படுத்தலை நோக்கி அடுத்த அடி எடுத்து வைத்திருக்கிறார். இணையம் மூலமான நிர்வாகம் என்பது வெளிப்படைத் தன்மையையும் கொண்டு வருகிறது.
கொள்கை சார்ந்த நிர்வாகம்:
“எந்தவொரு தனிமனிதனின் விருப்பத்தின்படியும் எனது அரசு செயல்படுவதில்லை. எங்களது முன்னேற்றம் சீர்திருத்தங்களின் அடிப்படையில் அமைந்தது; எங்கள் சீர்திருத்தங்கள் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்தவை; எங்கள் கொள்கைகள் மக்களால் உந்தப்படுபவை” என்று திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார். இந்த அணுகுமுறையானது அவரது அதிகாரிகளுக்குத் தெளிவான வழிமுறையைக் காண்பித்ததோடு, அவர்கள் தன்னம்பிக்கையோடு பொருத்தமான, உடனடி முடிவுகளை எடுக்க உதவியதோடு, இந்த அரசு செயல்முறையில் வெளிப்படைத்தன்மை, ஒரே மாதிரியான தன்மை ஆகியவற்றையும் கொண்டு வந்தது.
குறைகளுக்கான தீர்வு:
சாதாரண மக்களின் குறைகள் மிகுந்த தன்முனைப்புடன் கவனிக்கப்படுகின்றன. குஜராத் மாநிலத்தின் ‘ஸ்வாகத்’ திட்டத்தின் மூலம் இத்தகைய குறைகளை கேட்பதில் அவரது தனிப்பட்ட ஈடுபாடானது அரசு இயந்திரத்திற்குள் சரியான உணர்வையும் செய்தியையும் கொண்டு சென்றது. இத்தகைய குறைகளை நேர்மறையாகவும், ஈடுபாட்டுடனும் அரசியல் இயந்திரமானது கையாள வேண்டும் என்பதை அவர் உறுதிப்படுத்தியதோடு, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய வகையில் இதற்கான செயல்முறைகள் நடைமுறையில் செயல்படுவதையும் அவர் உறுதிப்படுத்தினார். மக்களின் இத்தகைய குறைகளுக்கு உரிய தீர்வு காண்பது; அதற்கான பொறுப்பை ஏற்பது ஆகியவை முதல் அமைச்சருக்கு மட்டுமேயானதல்ல; அரசாங்க இயந்திரம் முழுமைக்குமே உண்டு என்பதே இதன் அடிநாதமாக அமைந்திருந்தது.
புதுமையான அணுகுமுறை:
மக்களும் அரசு நிர்வாகமும் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான பிரச்சினைகளையும் சமாளிக்க, இத்தனை ஆண்டுகளாக நிர்வாகத்தில் இருந்த நிபுணர்களும், மேல்மட்டத்தில் உள்ள நிர்வாகமும் சிந்திக்க முடியாத பல்வேறு புதுமையான வழிகளையும் நரேந்திர மோடி எடுத்துக் காட்டியிருந்தார்.
பூகம்பத்திற்குப் பிந்தைய மறுகட்டுமானத்தை மேற்கொள்வதில் மக்கள் குழுக்களை ஈடுபடுத்துவது; விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்ட அதிகாரிகளாக இல்லாமல் உணர்வு பூர்வமான தனிநபர்களாக அதிகாரிகளை பூகம்பத்திற்குப் பிந்தைய மறுகட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்துவது ஆகிய அவரது நவீன அணுகுமுறை இந்த மாநிலம் சந்தித்த முதல் உதாரணம் ஆகும். நீதிமன்றங்களுக்கும் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கும் இடையே காணொளிக் காட்சியின் மூலமும், மாலை நேர நீதிமன்றங்கள், மகளிர் தீர்ப்பாயங்கள் போன்றவற்றை நிறுவுவது ஆகியவற்றின் மூலமும் நீதி நிர்வாகத்தை துரிதப்படுத்துவது; குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் ஒதுக்கப்பட்ட நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்ய மக்கள் குழுக்களை உருவாக்குவது; (வறுமைக்கோட்டிற்குக் கீழேயுள்ள பெண்களின் பிரசவத்திற்கென தனியார் மகப்பேறு நிபுணர்களுடன் இணைத்து வைக்கும்) சிரஞ்சீவி திட்டம், சுழல் குடிமைப்பொருள் வழங்கல் அட்டைகள், நிலத்தடி வளம் குறித்த அட்டை போன்ற பலவும் இதற்கான உதாரணங்களாக அமையும்.
தனக்கென்று எதுவுமில்லாமல்:
அதிகாரத்தில் இருப்பவர்கள் பலரும் தன் உறவினர்களுக்கு சலுகைகள் வழங்குவது, தன்னைச் சேர்ந்தவர்களுக்கு சலுகைகள் வழங்குவது போன்ற பழிகளை அவர்களின் உறவினர்களின் செயல்களால் ஏற்க வேண்டியிருக்கும். ஆனால் நரேந்திர மோடி அத்தகைய புகார்களிலிருந்து வெகுதூரத்தில் இருந்தார். நேர்மை, நம்பகத்தன்மை ஆகிய உருவத்தையும் அவர் பெற்றவராக இருந்ததன் விளைவாக தனது தனிப்பட்ட நலன்களையும், தனக்கு நெருக்கமானவர்களின் நலன்களையும் பொருட்படுத்தாத நிலைக்கு அவரை இட்டுச் சென்றது. சாதாரண மனிதரின் தனித்தன்மையில் இது எதிர்மறையான ஒன்றாகவும் கூட கருதப்படலாம். ஆனால் அரசியல் நிபுணரைப் பொறுத்தவரையில் அது சமூகத்திற்கான பங்களிப்பாக மாறுகிறது. மாநிலத்தின் அரசு இயந்திரத்தில் இருந்து வந்த ஊழலின் அளவு அனைத்து மட்டங்களிலும் கணிசமான அளவிற்குக் குறைந்துள்ளது என அவரது மோசமான விமர்சகர்களும் கூட ஏற்றுக் கொள்கின்றனர்.
தற்போதைய அரசு விதிமுறைகளின்படி, முதலமைச்சர் என்ற முறையில் நரேந்திர மோடி பெறுகின்ற பரிசுகள் அரசின் கருவூலத்தில் சேர்க்கப்படுகின்றன. பின்னர் அவை ஏலத்தில் விடப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் தொகை அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல; இந்த நிதியை பயன்படுத்துவதற்கான புதுமையான வழியையும் அவர் கண்டறிந்தார். பெண் குழந்தைகளுக்கான கல்விக்காகவே உருவாக்கப்பட்ட கன்யாகல்வாணி நிதியில் இவ்வாறு ஏலத்திலிருந்து பெறப்படும் தொகை செலுத்தப்படுகிறது. இதன் விளைவாக் தங்கள் மனம்கவர்ந்த தலைவரின் இத்தகைய அர்ப்பணிப்பு உணர்வினால் உந்தப்பட்டு இந்த நிதிக்காக லட்சக்கணக்கில் மதிப்புள்ள காசோலைகளைக் கொண்டு அவருக்கு பாராட்டு விழாக்களை நடத்துகின்றனர்.
மாறுபட்ட வகையில் செயல்படுவது:
குஜராத் மாநிலத்தில் திரு. நரேந்திர மோடி உருவாக்கிய நிர்வாகம் குறித்த முன்மாதிரி என்பது செயல்பாட்டின் அடிப்படையில் அமைந்ததே தவிர எவரையும் திருப்திப்படுத்துவதற்காக அல்ல. அறிவுபூர்வமான மின்சாரக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டியிருந்தபோது, அவர் மின்சக்தி ஒழுங்கமைப்பு குழுவின் தொழில்முறையிலான ஆலோசனையையே பின்பற்றினார். இதை எதிர்த்து விவசாயிகள் போராடியபோதும் கூட அவர் சற்றும் பின்வாங்கவில்லை. அதற்குப் பதிலாக அவர்களின் தேவைகள் குறித்து தான் நன்றாக அறிந்தவன் என்றே அவர் விவசாயிகளிடன் உறுதியளித்தார். அவர்களுக்கு மின்சாரம் மட்டுமல்ல; தண்ணீரும் தேவை. அதற்கடுத்த ஆண்டுகளில் சுஜலாம் சுஃபலாம் போன்ற மேல்மட்ட தண்ணீர் திட்டங்களை அவர் அமல்படுத்தினார். இப்போது மிகக் குறைந்த செலவில் விவசாயிகள் தங்களுக்கான தண்ணீரைப் பெற முடிகிறது. ஏனென்றால் தண்ணீர் மட்டம் பெருமளவிற்கு உயர்ந்துள்ளது. நகர்புற ஆண்டின்போது பெரும் எண்ணிக்கையிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான மின்சாரத் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் மீது வழக்குகள் போடப்பட்டன. இதற்கான கிளர்ச்சிகளும் இல்லை; மனவருத்தமும் இல்லை. தங்கள் நன்மைக்காகவே இவையெல்லாம் என்பதை மக்கள் காலப்போக்கில் உணரத் தலைப்பட்டனர். இதைப்போன்று ஏராளமான உதாரணங்கள் உள்ளன. அவரது வெளிப்படையான தன்மை, செயல்திறன், தனிப்பட்ட நம்பகத்தன்மை, சாதாரண மக்களின் மீதான கரிசனம் ஆகியவை நாட்டிலுள்ள, உலகத்திலுள்ள இதர அரசியல்வாதிகளிடமிருந்து அவரைத் தனித்துக் காட்டுகிறது. தனது நோக்கம் குறித்த உறுதிப்பாடு, செயலூக்கம் ஆகியவை குஜராத் மாநிலத்தில் மட்டுமல்ல; நாடு முழுவதிலும் அவரை புகழ்பெற்றவராக மாற்றியுள்ளது. கடந்த நான்காண்டுகளாக தொடர்ந்து நாட்டின் மிகச்சிறந்த முதலமைச்சர் என்ற பெருமையையும் குஜராத் மாநிலத்தில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த முதல்வர் என்ற பெருமையையும் பெற்றவராக உள்ள அவர் “சிறந்த நிர்வாகம் என்பது சிறந்த அரசியலும் கூட” என்பதையும் நிரூபித்துள்ளார். அதுமட்டுமல்ல; மக்களை திருப்திப்படுத்துவதற்கான அரசியலிலிருந்து வளர்ச்சிக்கான அரசியல் என்பதாக அரசியலில் தலைகீழ் மாற்றத்தை உருவாக்கியவராகவும் அவர் விளங்குகிறார்.
நரேந்திர மோடியை மற்றவர்களிலிருந்து மாறுபட்டவராக ஆக்கும் தனிப்பட்ட தன்மைகளில் ஒரு சிலவே இவை. இந்த மாற்றத்தையே இந்தியா ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது!