மக்கள் மருந்தகப் பயனாளிகளில் ஒருவரிடம் கலந்துரையாடும்போது பிரதமர் மோடி உணர்ச்சி வசப்பட்டார். 2011ஆம் ஆண்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட டேராடூனை சேர்ந்த தீபா ஷா, பிரதமர் மோடியுடன் கலந்துரையாடியபோது கடவுளைப் பார்ப்பதாகத் தெரிவித்தார். மக்கள் மருந்தகத் திட்டத்துக்காகப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அவர், "கடவுளை நான் பார்த்ததில்லை, ஆனால் உங்களிடம் நான் கடவுளைப் பார்க்கிறேன்," என்றார்.
பிரதமர் மோடிக்கு உளமார்ந்த நன்றி சொன்ன அவர், "உங்களின் குரலைக் கேட்பதன் மூலமும், உங்கள் ஆசிர்வாதத்தாலும், நான் குணமடைந்து வருகிறேன். என்னால் பேசவும் முடிகிறது," என்றார். உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கும் மற்றும் தான் நோயில் இருந்து மீள உதவிய மற்றவர்களுக்கும் அந்தப் பெண் நன்றி தெரிவித்தார்.
மக்கள் மருந்தகத் திட்டத்தின் மூலம் தன்னால் மாதம் ரூ.3,500 சேமிக்க முடிகிறது என்ற தகவலையும் பிரதமர் மோடியிடம் அவர் தெரிவித்தார்.
அவரது மன உறுதியை வெகுவாக பாராட்டிய பிரதமர் மோடி, "உங்கள் மனோதிடத்தின் மூலம் உங்கள் நோயை நீங்கள் தோற்கடித்திருக்கிறீர்கள். உங்கள் தைரியமே உங்களின் கடவுள். அது தான் உங்களுக்கு சக்தி அளித்து இத்தகைய பெரிய பிரச்சினையில் இருந்து வெளிவரச் செய்துள்ளது. இந்த நம்பிக்கையை நீங்கள் எப்போதும் உங்களுடனேயே கொண்டு செல்ல வேண்டும்," என்றார்.