தேர்வுகளை மனஅழுத்தமின்றி தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுமாறு பிரதமர் மோடி மாணவர்களுக்கு ஆலோசனை கூறினார். கேள்வித்தாளை பார்த்தவுடன் அனைத்தும் மறந்துவிடுவதாக கூறிய மாணவர்களுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஸ்கூட்டர்களை ஸ்டார்ட் செய்வதற்கு முன் மக்கள் அதனை பக்கவாட்டில் ஆட்டுவது குறித்து நினைவூட்டினார். “இது அறிவியல்பூர்வமானது அல்ல. ஆனால் ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் ஒவ்வொருவரும் இதையே செய்கிறார்கள். அதேபோல, டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, முன்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். ஏன் அவர்கள் இதைச் செய்கிறார்கள்? இவை அவர்களிடம் சௌகரிய மனநிலையை ஏற்படுத்துகிறது,” என்று பிரதமர் கூறினார்.
தங்களுக்கு உகந்த சௌகரிய மனநிலையை ஏற்படுத்திக் கொள்வதில் ஒவ்வொருவருக்கும் ஒரு வழிவகை உண்டு என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, கேள்வித் தாளைப் பெற்றவுடன், ஒரு நிமிட நேரம் தங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். “மிகவும் எளிதான கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதுங்கள்,” என்று ஆலோசனை கூறிய பிரதமர், இது தன்னம்பிக்கை வளர உதவும் என்றார்.