சார்க் நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நடந்த கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் திரு. மோடி, கொரோனா வைரஸ் தடுப்பில் இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்திக் கூறினார். ``ஆயத்தமாக இருங்கள், பதற்றம் கொள்ள வேண்டாம் என்பது எங்களுக்கு வழிகாட்டும் தாரக மந்திரமாக உள்ளது. பிரச்சினையின் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம். ஆனால் அவசரகதியில் செயலாற்றக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தோம். சாதகமான செயலாக்க நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட ஆக்கபூர்வ நடவடிக்கைகளை நாங்கள் முயற்சித்துள்ளோம்'' என்று அவர் கூறினார்.
இந்தியாவுக்குள் வருபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் நடைமுறையை ஜனவரி மாத மத்தியிலேயே இந்தியா தொடங்கிவிட்டது என்று பிரதமர் திரு. மோடி தெரிவித்தார். அதேசமயத்தில் பயணத்துக்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார். படிப்படியான நடவடிக்கை என்ற அணுகுமுறை காரணமாக, பதற்றம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதாக அவர் கூறினார். தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக அரசு மேற்கொண்டு வரும் மக்கள் விழிப்புணர்வு முயற்சிகள் பற்றி அவர் குறிப்பிட்டார்.
பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள மக்களை சென்றடைவதற்கு விசேஷ முயற்சிகளை அரசு எடுத்துள்ளது என்று பிரதமர் திரு. மோடி தெரிவித்தார். ``நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சையில் நமது திறனை உயர்த்திக் கொள்வதற்கு, விரைவாக நாம் நடவடிக்கைகள் எடுத்தோம். நாடு முழுக்க நமது மருத்துவ அலுவலர்களுக்குப் பயிற்சி அளிப்பதும் இதில் அடங்கும். நோய் கண்டறியும் திறனையும் நாம் அதிகரித்துக் கொடுத்துள்ளோம். நாடு முழுக்க ஒரு மருத்துவப் பரிசோதனை நிலைய வசதி என்பதில் இருந்து, இரண்டு மாத காலத்திற்குள், 60 பரிசோதனை நிலைய வசதிகளாக அதிகரித்துக் கொடுத்திருக்கிறோம்'' என்று பிரதமர் திரு. மோடி தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை கையாள்வதில் ஒவ்வொரு நிலையிலும் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான நடைமுறைகளை அரசு உருவாக்கியுள்ளது என்று பிரதமர் கூறினார். நாட்டுக்குள் வரும் நிலையில் மருத்துவப் பரிசோதனை செய்வது; தொற்று பரவியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை பின்தொடர்ந்து தொடர்பு கொள்வது; தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் மற்றும் அதற்கான வசதிகளை கையாளுதல் மற்றும் குணமானவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தல் என அனைத்து நிலைகளுக்கும் நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
இவை தவிர, வெளிநாடுகளில் உள்ள இந்தியக் குடிமக்களின் வேண்டுகோள்களை அரசு காதுகொடுத்து கேட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 1400 இந்தியர்களை வெளியேற்றி தாயகத்துக்கு அழைத்து வந்துள்ளது. மேலும், `அண்டை நாடுகளுக்கு முதல் முன்னுரிமை என்ற கொள்கையின்படி' அருகில் உள்ள சில நாடுகளின் குடிமக்களுக்கும் உதவிகள் செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.