என் அமைச்சரவை தோழர் திரு.ராம்விலாஸ் பஸ்வான், திரு.சி.ஆர்.சவுத்ரி, UNCTADயின் முதன்மை செயலாளர் முனைவர். முகிஷா கிடுயி மற்றும் இங்கு வீற்றிருக்கும் அனைத்து முக்கியமானவர்களுக்கும் என் வணக்கங்கள்.
நுகர்வோர் பாதுகாப்பு எனும் மிக முக்கியமான விஷயத்திற்காக கூட்டப்பட்டிருக்கும் இந்த மாநாட்டிற்கு முதற்கண் என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தெற்காசியா, தென்கிழக்காசியா மற்றும் கிழக்காசிய நாடுகள் பலவும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் சூழலில் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
தெற்காசியாவில் இப்படியோர் நிகழ்ச்சி நடப்பது இதுவே முதல்முறை. இந்தியாவின் முன்னெடுப்புகளை ஆதரித்ததற்காகவும், இந்த மேடையில் இந்தியாவும் முக்கியப் பங்காற்ற ஆவண செய்ததற்காகவும் UNCTADயிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
.
உலகின் மிகச்சில இடங்களே இவ்விடத்தைப் போன்ற வரலாற்றுத் தொன்மையோடு விளங்குகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் வணிகம், கலாச்சாரம், மதம் போன்ற கூறுகளால் ஒருவரோடு ஒருவர் இணைந்திருக்கிறோம். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மக்கள் பயணப்படுவதும், அதன்மூலம் எண்ணங்களும், சிந்தனைகளும் பகிரப்படுவதும் பல்வழி பரிமாற்றமாக இருப்பதால் இப்பகுதியில் உள்ள அனைத்து நாடுகளும் நன்மையடைந்திருக்கின்றன. இன்று நம் அனைவரும், நம் நாடுகளுக்கிடையில் பொருளாதாரம் மட்டுமல்ல, பாரம்பரியமும் பகிரப்பட்டிருப்பதின் சின்னமாகவே இங்கே வீற்றிருக்கிறோம்.
நண்பர்களே இன்றைய நவீன யுகத்தில் பாரம்பரிய உறவு என்பது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. ஆசிய நாடுகள் தத்தமது சந்தைகளில் மட்டும் சரக்கு மற்றும் சேவைகளை வழங்காமல் பல்வேறு கண்டங்களின் நாடுகளுக்கும் வழங்குகின்றன. இப்படியொரு சூழலில் நுகர்வோர் பாதுகாப்பு என்பது இப்பகுதியின் வணிகத்தை பலப்படுத்துவதிலும், மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
நம் குடிமக்களின் தேவைகளை நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து புரிந்துகொள்கிறோம் என்பதற்கும், எவ்வளவு சிரத்தை எடுத்து அவர்களின் சிரமங்களை களைய முனைகிறோம் என்பதற்கும் இந்நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு. ஒவ்வொரு குடிமகனும் ஒரு நுகர்வோர்தான் எனும்போது இந்நிகழ்ச்சி நுகர்வோர் பாதுகாப்பின் மீதான நம் அனைவரின் உறுதியையும் பிரதிபலிப்பதாக இருக்கிறது.
மேலும் ஐக்கிய நாடுகள் சபை இந்த நடவடிக்கையில் முழு பங்காற்ற முன்வந்திருப்பது நம்பிக்கையளிக்கிறது. முதன்முறையாக 1985ல் ஐநாவில் நுகர்வோர் பாதுகாப்புக்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அது திருத்தியமைக்கப்பட்டது. திருத்தியமைக்கும் நடவடிக்கையில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. இவ்விதிமுறைகள் வளரும் நாடுகளில் தொடர் நுகர்வு, மின்-வணிகம், மற்றும் பொருளாதார சேவைகளுக்கு மிகவும் அத்தியாவசியமானவை.
இந்தியாவின் நிர்வாகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு என்பது வேதகாலத்தில் இருந்தே முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அதர்வண வேதத்தில், “தரம் மற்றும் அளவீட்டில் யாரும் ஏமாற்றக் கூடாது,” என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இந்த பழங்கால ஆவணங்கள் நுகர்வோர் பாதுகாப்பின் விதிமுறைகளையும், முறைகேடுகளில் ஈடுபடும் வணிகர்களுக்கு தரப்படவேண்டிய தண்டனைகளையும் குறிப்பிடுகிறது. இந்தியாவில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கவுடில்யரின் காலத்தில் வணிகம் எப்படி நடைபெற வேண்டும் என்றும் நுகர்வோரின் பாதுகாப்பு எப்படி உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதையும் வகுத்திருந்தனர். கவுடில்யரின் நிர்வாகத்தில் இருந்த பதவிகளில் இன்றைய வணிக இயக்குனர், தர ஆய்வாளர் பதவிகளுக்கு நிகரான பதவிகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நண்பர்களே நாம் நுகர்வோரை கடவுள்களாக மதிக்கிறோம். பல கடைகளில் “வாடிக்கையாளர்களே கடவுள்,” என்ற வாசகத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். வணிகம் எது என்றாலும் நுகர்வோரின் மனநிறைவே பிரதான நோக்கமாக இருத்தல் வேண்டும்.
நண்பர்களே ஐநா விதிமுறைகளை உருவாக்கிய ஒரே ஆண்டுக்குள், அதாவது 1986லேயே நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்திய மிகச்சில நாடுகளில் இந்தியாவும் உண்டு.
நுகர்வோர் நலனும், பாதுகாப்பும் அரசின் நோக்கங்களில் மிக முக்கியமான ஒன்று. எங்களின் புதிய இந்தியா கொள்கையிலும் இது பிரதிபலிக்கிறது. நுகர்வோர் பாதுகாப்பையும் தாண்டி, புதிய இந்தியாவில் மிகச்சிறந்த நுகர்வோர் நடைமுறைகளும், நுகர்வோர் செழித்தோங்கும் திட்டங்களும் இருக்கும்.
நண்பர்களே இன்று நாட்டின் தேவைகளுக்கும், வணிக நடைமுறைகளுக்கும் ஏற்ற புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறோம். முன்மொழியப்பட்டுள்ள சட்டம் நுகர்வோருக்கு முக்கியத்துவம் அளிப்பதில் முனைப்பு காட்டுவதாய் அமைந்திருக்கிறது. குறைந்த செலவில், குறிப்பிட்ட நேரத்தில் நுகர்வோரின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் வகையில் விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. தவறாக வழிநடத்தும் விளம்பரங்களுக்கெதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு உடனுக்குடன் தீர்வு கிடைக்கும் வகையில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.
வீடு வாங்குவோருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் ஒன்றை உருவாக்கியிருக்கிறோம். இதற்கு முன் நுகர்வோர் தாங்கள் வாங்கும் வீட்டில் குடியேற ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. பல முறைகேடான விற்பனையாளர்களிடம் சிக்கி ஏமாந்தார்கள். அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவதில் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் RERAவுக்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட வீட்டு விற்பனையாளர்கள் மட்டுமே நுகர்வோரிடம் முன்பதிவுகளைப் பெற முடியும். அதுவும் அனைத்து அனுமதிகளையும் பெற்ற பின்பே முடியும். மேலும் முன்பதிவு கட்டணம் 10% மட்டுமே பெறப்பட வேண்டும் எனவும் உச்சவரம்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்பு விற்பனையாளர்கள் முன்பதிவின் பேரில் பெறப்படும் பணத்தை தங்களின் மற்ற திட்டங்களில் முதலீடு செய்துவந்தார்கள். ஆனால் இப்போது அரசின் உத்தரவினால், முன்பதிவிற்கு வாங்கப்படும் பணத்தில் 70% “எஸ்க்ரோ” கணக்கில் வைக்கப்பட்டு, எந்த திட்டத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டதோ அந்த திட்டத்தில் மட்டுமே அதை செலவிடும் நிலை உருவாகியிருக்கிறது.
அதே போல இந்திய தர ஆணையச் சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் அல்லது நுகர்வோர் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருள் அல்லது சேவை என்றாலும் கட்டாய சான்றிதழின் கீழ் பெறமுடியும். இச்சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லாத பொருட்களை சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளமுடியும். அதேபோல நுகர்வோருக்கு ஏற்பட்ட இழப்பையும் வழங்க ஆவண செய்யப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் இந்தியா அமல்படுத்தியுள்ள சரக்கு மற்றும் சேவை வரியின் (GST) மூலம் ஏராளமான மறைமுக வரிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் எவ்வளவு வரி மாநில அரசுக்கும், எவ்வளவு வரி மத்திய அரசுக்கும் கட்டியிருக்கிறோம் என்பது நுகர்வோர்க்கு தெரியும். சரக்கு லாரிகள் மாநில எல்லைகளில் வரிசையாக நிற்பது இப்போது தேவைப்படவில்லை.
ஜி.எஸ்டி.யின் மூலம் புதிய வணிக கலாச்சாரம் உருவாகி வருகிறது. தொலைநோக்கில் பார்க்கும்போது இதன்மூலம் நுகர்வோர்கள் மிகுந்த பலனை அடைய இருக்கிறார்கள். மிகவும் வெளிப்படையான அமைப்பு என்பதால் நுகர்வோரை ஏமாற்றும் வழிகள் இதில் எதுவும் இல்லை. GSTயின் மூலம் விற்பனையாளர்களிடையே கூடியுள்ள போட்டி மனப்பான்மை விலை குறைப்பை ஏற்படுத்தும். இதன்மூலம் ஏழைகளும், நடுத்தரமக்களும் பயனடைவார்கள்.
நண்பர்களே சட்டங்களின் மூலம் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்தது மட்டுமல்லாது, மக்களின் குறைகளை சரியான முறையில் களைய வேண்டியதும் அவசியம். கடந்த மூன்றாண்டுகளில் எங்கள் அரசு தொழில்நுட்பத்தின் உதவியுடன் நுகர்வோரின் குறைகளை களைவதற்கு ஏற்ற புதிய எளிமையான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
தேசிய நுகர்வோர் உதவி எண்களின் அழைப்பு உள்வாங்கும் திறன் நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான சமூகவலைத்தளங்களும், போர்ட்டல்களும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போர்ட்டல்களுடன் ஏராளமான தனியார் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. வரும் புகார்களில் 40% நேரடியாக நிறுவனங்களுக்கே செல்லும் வகையிலும், அதன்மூலம் உடனடி தீர்வு கிடைக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், “ஜாகோ கிரஹக் ஜாகோ” (விழித்திடுங்கள் வாடிக்கையாளரே விழித்திடுங்கள்) பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த அரசு நுகர்வோர் பாதுகாப்புக்காக சமூக வலைதளங்களை சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியும்.
நண்பர்களே எனது பார்வையிலும், எங்கள் அரசின் தொலைநோக்குப் பார்வையிலும் நுகர்வோர் பாதுகாப்பு என்பது விசாலமானது. ஒரு நாடு முன்னேறும்போது நுகர்வோர் பாதுகாப்பு என்பதும் அதனுடன் தானாக சேர்ந்துகொள்ளும். நல்ல நிர்வாகம் என்பது நாட்டின் முன்னேற்றத்தை ஒவ்வொரு குடிமகனும் அனுபவிக்கும் வகையில் கடைக்கோடிக்கும் கொண்டு சேர்ப்பதேயாகும்.
உரிமைகள் மற்றும் சேவைகளை எளியோருக்கும் சென்று சேர்க்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. அப்பொறுப்பு கூட நுகர்வோர் பாதுகாப்பாகவே பார்க்கப்படும். சுத்தமான ஆற்றலுக்கு உஜ்வாலா யோஜனா, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்கு ஸ்வச் பாரத் அபியான், பொருளாதார முன்னேற்றத்திற்கு ஜன்-தன் யோஜனா என இவ்வரசின் அனைத்து திட்டங்களும் இதை நோக்கியே இருக்கின்றது. அதேபோல நாட்டின் அனைத்து குடிமகனுக்கும் 2022க்குள் சொந்தமாக வீடு இருக்கவேண்டும் என்கிற கொள்கையுடன் அரசு செயல்படுகிறது.
நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார வசதி வழங்கும் வகையில் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற முயற்சிகள் மக்களின் அடிப்படை தேவையை தீர்ப்பதுடன் அவர்கள் வாழ்க்கையை வசதியானதாகவும் மாற்றுகிறது.
நுகர்வோர் பாதுகாப்பு அவர்களுக்கு உரிமைகளை வழங்குவதன் மூலம் மட்டும் வந்துவிடாது. இந்தியாவில் நுகர்வோர் தங்களின் பணத்தை சேமிக்கும் வகையிலும் நாங்கள் திட்டங்களை தீட்டி வருகிறோம். அத்தகைய திட்டங்களின் மூலம் ஏழைகளும், நடுத்தர மக்களும் பலனடைகிறார்கள்.
சமீபத்தில் யூனிசெஃப் இந்தியாவில் மேற்கொண்ட கணக்கெடுப்பு முடிவுகளை அறிவித்திருக்கிறது. திறந்தவெளியில் மலம் கழிக்கத் அவசியமில்லாத குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் நடத்தப்பட்ட அந்த கணக்கெடுப்பின்படி மருத்துவ செலவில் சேமிப்பு, நேர செலவழிப்பில் சேமிப்பு, இறப்பு சதவிகித குறைப்பு, பொருளாதார சேமிப்பு என ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு 50,000ரூபாய் சேமிப்பில் சேர்கிறது.
நண்பர்களே, பாரதிய ஜன் அவுஷாதி பரியோஜனா எனும் திட்டம் ஏழைகளுக்கு குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் பொருட்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம் 500க்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதயத்தில் பொறுத்தும் கருவிகளுக்கு விலை உச்சவரம்பை நிர்ணயம் செய்ததன் மூலம் அவற்றின் விலை 85% வரை குறைந்துள்ளது. செயற்கை மூட்டுகளின் விலையும் இதன்மூலம் கட்டுப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தரமக்களின் பணம் கோடிக்கணக்கில் மிச்சப்படுகிறது.
நுகர்வோர் பாதுகாப்பு எனும் எல்லையைத் தாண்டி நுகர்வோர் நலன் குறித்து சிந்தித்து நடவடிக்கை எடுப்பதே நம் நோக்கமாகும்.
உஜாலா எனும் நமது மற்றொரு திட்டமும் நுகர்வோரின் பணத்தை மிச்சப்படுத்தும் திட்டமாகும். எல்.இ.டி. விளக்குகளை விநியோகிக்கும் இத்திட்டம் பிரமிக்கத்தக்க பலன்களை கொடுத்துள்ளது. நம் அரசு ஆட்சிக்கு வந்தபோது ஒரு எல்.இ.டி. விளக்கின் விலை 350ரூபாயாக இருந்தது. அரசின் முயற்சிகளுக்குப் பின் அதே விளக்கு இப்போது ரூ.40ல் இருந்து ரூ.45க்குள் கிடைக்கிறது. எனவே இத்திட்டம் மட்டுமே நமக்கு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் நுகர்வோர் பணத்தை மிச்சப்படுத்திக் கொடுத்திருக்கிறது. மேலும் மின்சார செலவும் கணிசமாக குறைந்துள்ளது.
நண்பர்களே நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் மிகுந்த பொருளாதார பலன்களை அளித்துள்ளது. மற்றபடி சென்ற ஆட்சியில் பணவீக்கம் அதிகரித்து வந்த அதே வேகத்தில் இப்போதும் தொடர்ந்திருக்குமேயானால் ஒவ்வொரு குடிமகனையும் அது நேரடியாக பாதித்திருக்கும்.
தொழில்நுட்பத்தின் மூலம் பொது விநியோகத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகள், பலன்களும், தானியங்களும் சேர வேண்டியவர்களுக்கு முறையாக சேர்வதை உறுதிப்படுத்தியுள்ளது.
நேரடி பலன் திட்டத்தின் மூலம் பயனாளர்களுக்கு பணத்தை அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்துவதன் மூலம் அரசு பணத்தில் வீணாகி வந்த ரூ.57,000 கோடி மிச்சமாகியுள்ளது.
நண்பர்களே நுகர்வோரும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுதல் அவசியம். அதன்மூலம் மட்டுமே நீண்டகால வளர்ச்சிக் குறிக்கோள்களை நம்மால் எட்ட முடியும்
இத்தருணத்தில் ஏனைய நாடுகளில் இருந்து இங்கு வந்திருக்கும் நண்பர்களுக்கு எங்களது, “விட்டுக்கொடுங்கள்,” பிரச்சாரத்தைப் பற்றி விளக்க கடமைப்பட்டிருக்கிறேன். எங்கள் நாட்டில் வீட்டு சமையல் எரிவாயுவிற்கு மானியம் வழங்கப்படுகிறது. என் கோரிக்கையை ஏற்று ஒரு கோடி மக்களுக்கும் மேல் தங்கள் மானியத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் சேமித்த பணத்தில் 3கோடி புதிய எரிவாயு இணைப்புகள் தேவையானவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
நுகர்வோர் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதின் மூலம் எப்படி நல்லதொரு ஆக்கப்பூர்வமான சூழலை உருவாக்க முடியும் என்பதற்கும், தேவையான நுகர்வோர் அதன்மூலம் எப்படி பயன்பெற முடியும் என்பதற்கும் இது ஒரு உதாரணம்
பிரதமர் ஊரக டிஜிட்டல் கல்வியறிவு திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வாழும் நுகர்வோரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கற்றுணர வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 6 கோடி வீடுகளில், வீட்டிற்கு ஒருவர் என்ற கணக்கில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த கற்றுத்தரப்படுகிறது. இதன்மூலம் கிராமவாசிகள் மின் பரிவர்த்தனைகளையும், அரசு சேவைகளையும் பெற முடியும்.
இந்திய கிராமங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு வருங்காலத்தில் மின்-வணிக சந்தை பிரம்மாண்டமாக வளர வழி செய்கிறது. பீம் எனும் செயலியின் மூலம் செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண வசதி, அதாவது யூ.பி.ஐ., நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் இணைய பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கிறது.
நண்பர்களே மக்கள் தொகையை வைத்துப் பார்க்கையில் 125 கோடி மக்களுடன், உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. அத்தோடு வேகமாக முன்னேறும் நடுத்தர வர்க்கத்தையும் இந்தியா கொண்டிருக்கிறது. நம் நாட்டு பொருளாதாரத்தில் இருக்கும் வெளிப்படைத்தன்மை இந்திய நுகர்வோரை சர்வதேச சந்தைக்கு மிக நெருக்கமாக கொண்டு செல்கிறது. அதுமட்டுமல்லாது, மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் சர்வதேச தயாரிப்பாளர்களை இந்தியாவில், இந்திய மனித வளத்தை பயன்படுத்தி அவர்களின் பொருட்களை தயாரிக்க ஊக்குவிக்கிறோம்.
இத்தகைய தலைப்பில் உலகின் இப்பகுதியில் நடைபெறும் முதல் மாநாடு இது. இதில் பங்குபெறும் ஒவ்வொரு நாடும் அதன் தனித்தன்மையோடு நுகர்வோர் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளது. அதேநேரம் உலகமயமாக்கல் அதிகரித்துவரும் இச்சூழலில் உலகமே ஒரு பெரும் சந்தையாக மாறி வருவதையும் நாம் உணர வேண்டும். அதனால் ஒவ்வொருவரின் அனுபவத்தில் இருந்தும் மற்றவர் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது. இதன்மூலம் பொதுவான புரிதலை ஏற்படுத்தி, நுகர்வோர் நலன் சார்ந்து இயங்கும் பிராந்திய கூட்டணியை இதுபோன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
நண்பர்களே ஆசிய நாடுகளின் ஜனத்தொகை 4 பில்லியன்களுக்கும் மேல் இருப்பதால் அவை ஏராளமான வணிக வாய்ப்புகளை வழங்குகின்றன. அதிகரித்துவரும் வாங்கும் திறன் மற்றும் மிக அதிகமான இளைஞர் ஜனத்தொகை இவ்வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கிறது. மின்-வணிக பெருக்கத்தாலும், நாடு விட்டு நாடு பயணிக்கும் திறன் மக்களுக்கு பெருகியிருப்பதாலும் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பரிவர்த்தனைகள் அதிகமாகியிருக்கிறது. இச்சூழலில் எல்லா நாடுகளிலும் பலமான ஒழுங்குமுறை சட்டங்களும், தகவல் பரிமாற்றமும் இருந்தால்தான் நுகர்வோரின் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள முடியும். நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பிற்கு ஒரு வரைவு இருந்தால்தான் பிறநாட்டு நுகர்வோர் குறித்த பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும். இருதரப்பு நம்பிக்கையையும், வணிகத்தையும் இது ஊக்குவிப்பதாகவும் அமையும்.
தகவல் பரிமாற்றத்திற்கு ஏதுவான ஒரு கட்டுமானம், பயன்பாட்டில் இருக்கும் பலன்தரவல்ல நடைமுறைகளை பரஸ்பரம் பகிர்தல், திறன் மேம்பாட்டில் அக்கறை காட்டும் புதிய முன்னெடுப்புகளை உண்டாக்குதல், கூட்டு திட்டங்களை துவங்குதல் போன்ற விஷயங்களை நாடுகள் தங்களுக்கும் செய்துகொள்ளலாம்.
நண்பர்களே நம் உணர்வுபூர்வமான உறவை பலப்படுத்துவதின் மூலம், நம்முள் பொதுவாக இருக்கும் கலாச்சார மற்றும் பாரம்பரிய உறவையும் நம்மால் பலப்படுத்திக்கொள்ள முடியும். மற்ற கலாச்சாரங்களை மதிக்கும் அதே சமயம், நம் கலாச்சாரத்தில் பெருமை கொள்வதும் நம் பாரம்பரியத்தில் ஒன்று. பல நூற்றாண்டுகளாக ஒருவரிடம் இருந்து ஒருவர் வணிகத்தையும், நுகர்வோர் பாதுகாப்பையும் நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதும் நம் உறவில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
வருங்காலத்தில் நாம் சந்திக்க இருக்கும் சவால்களை எல்லாம் மனதில் வைத்து ஒரு வரைவுத்திட்டம் இம்மாநாட்டில் உருவாக்கப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பிராந்திய ரீதியிலான ஒத்துழைப்பை நிறுவனமயமாக்கும் முயற்சியும் இம்மாநாட்டில் சாத்தியப்படும் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.
மீண்டுமொருமுறை இம்மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி!
This conference is important because it seeks to discuss how we understand and try to fulfil the aspirations of the consumers: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 26, 2017
In our vision for a new India, we want to move ahead from only consumer protection towards best consumer practices and consumer prosperity. The focus is on consumer empowerment and ensuring consumer faces no difficulties: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 26, 2017
We have recently implemented GST. Due to GST, the various indirect and hidden taxes have ceased to exist. The biggest beneficiaries of GST will be the consumers, middle class: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 26, 2017
Effective grievance redressal systems are vital for a democracy. We are integrating technology and ensuring stronger grievance redressal mechanisms: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 26, 2017
The Government's efforts ensured inflation has been kept under check and the consumer saves money: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 26, 2017
The Government has devoted effort and resources towards digital empowerment of the rural consumer: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 26, 2017