பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, பிரிட்டிஷ் பிரதமர் திரு போரிஸ் ஜான்சன் இந்தியாவில் ஏப்ரல் 21 முதல் 22 வரை அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். இது பிரிட்டிஷ் பிரதமரின் முதலாவது இந்திய பயணம் ஆகும்.
ஏப்ரல் 22-ந்தேதி பிரதமர் ஜான்சனுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரதமர் திரு நரேந்திர மோடி அங்கு வரவேற்றார். பின்னர் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை போரிஸ் ஜான்சன் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை வரலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். முன்னதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பிரிட்டிஷ் பிரதமரைச் சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடி- போரிஸ் ஜான்சன் இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்தியா-இங்கிலாந்து இடையே இந்த ஆண்டு இறுதிக்குள் அதாவது அக்டோபர் மாதத்திற்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஒப்புக்கொள்ளப்பட்டது.
ராணுவம் ,பசுமை எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் இந்தோ-பசிபிக் பிராந்தியம், ஐநா பாதுகாப்பு சபை, ஜி-20, காமன்வெல்த், உக்ரைன் போர், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்தும் இருதலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
கடந்த ஆண்டு சிஓபி-26 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்கு பிரதமர் மோடி, பிரதமர் ஜான்சனைப் பாராட்டினார். கரியமில உமிழ்வற்ற தூய்மையான எரிசக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டை மேற்கொள்ள இருதலைவர்களும் உறுதி எடுத்துக்கொண்டனர். வரும் 2030-ஆம் அண்டுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளின் அமலாக்கம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.இதன் தொடர்ச்சியாக இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
முன்னதாக, குஜராத்தின் அகமதாபாத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமது இந்தியப்பயணத்தை துவக்கினார். சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற அவர், வதோதராவில் உள்ள மஸ்வாத் தொழிற்பேட்டையில் ஜேசிபி தொழிற்சாலையைப் பார்வையிட்டார். காந்தி நகர் கிப்ட் சிட்டியில் உள்ள குஜராத் உயிரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கும் அவர் சென்று பார்வையிட்டார்.
இந்தியாவின் தலைமையின் கீழ், 2023-ல் நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளுமாறு போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இங்கிலாந்துக்கு வருகை தருமாறு பிரிட்டிஷ் பிரதமரும், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.