பின்லாந்து பிரதமர் திருமிகு சன்னா மரின் உடனான காணொலி உச்சி மாநாட்டை 2021 மார்ச் 16 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி நடத்தவிருக்கிறார்.
ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சர்வதேச நெறிமுறைகள் சார்ந்த விதிகள் போன்ற பொதுவான மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்தியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையே சிறப்பான நட்புறவு நிலவி வருகிறது.
வர்த்தகம் மற்றும் முதலீடு, கல்வி, புதுமை கண்டுபிடிப்புகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் இரண்டு நாடுகளும் நெருங்கி பணியாற்றி வருகின்றன.
சமுதாய சவால்களை எதிர்கொள்வதற்காக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி குவாண்டம் கணினி ஒன்றை இணைந்து உருவாக்குவதில் இருதரப்பும் ஈடுபட்டுள்ளது.
தொலைதொடர்பு, மின் தூக்கிகள், இயந்திரவியல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சாரம் போன்ற பல்வேறு துறைகளில் சுமார் நூறு பின்லாந்து நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன.
தகவல் தொழில்நுட்பம், வாகன உதிரி பாகங்கள் மற்றும் உபசரிப்பு துறையில் சுமார் 30 இந்திய நிறுவனங்கள் பின்லாந்தில் செயல்பட்டு வருகின்றன.
2021 மார்ச் 16 அன்று நடக்கவிருக்கும் உச்சி மாநாட்டின் போது இருதரப்பு உறவு குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதிக்க உள்ளனர்.
பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்த கருத்துகளையும் அவர்கள் பரிமாறிக் கொள்ளவிருக்கிறார்கள். இந்திய-பின்லாந்து கூட்டின் எதிர்கால விரிவாக்கம் குறித்த திட்டத்தை இந்த காணொலி மாநாடு வழங்கும்.