பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சென் இடையேயான மெய்நிகர் மாநாடு 2020 செப்டம்பர் 28 அன்று இந்தியாவால் நடத்தப்படும்.
2. தொடர் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளால் வலுவடைந்துள்ள இந்திய–டென்மார்க் இருதரப்பு உறவு, வரலாற்று தொடர்புகள், பொதுவான ஜனநாயக மரபுகள் மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான பொதுவான ஆர்வம் ஆகியவற்றல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
3. 2016-இல் 2.82 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இந்தியா மற்றும் டென்மார்க் இடையேயான இருதரப்பு சரக்கு மற்றும் சேவைகள் வர்த்தகம், 2019-இல் 30.49 சதவீதம் உயர்ந்து 3.68 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. கப்பல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுச்சூழல், வேளாண்மை, உணவுப் பதப்படுத்துதல், திறன்மிகு நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகளில் சுமார் 200 டென்மார்க் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கிழ் பல்வேறு முக்கிய டென்மார்க் நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகளை நிர்மாணித்துள்ளன. டென்மார்க்கின் தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பொறியியல் துறைகளில் சுமார் 25 இந்திய நிறுவனங்கள் செயலாற்றுகின்றன.
4. இந்தியா மற்றும் டென்மார்க் இடையே அறிவுசார் சொத்துரிமை தொடர்பான ஒப்பந்தம் ஒன்று மெய்நிகர் மாநாட்டின் போது கையெழுத்தாகிறது. சர்வதேச சூரிய சக்தி கூட்டணியில் டென்மார்க் இணைவது இன்னொரு பெரிய நிகழ்வாகும்.
5. இரு நாடுகளுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவுக்கான கட்டமைப்பை விரிவாக ஆய்வு செய்யவும், இருதரப்புக்கும் பொதுவான முக்கிய விஷயங்களில் இன்னும் வலுவான மற்றும் ஆழமான உறவுக்கான வழிகளைக் கண்டறியவும் இந்த மெய்நிகர் மாநாடு இரு தலைவர்களுக்கும் வாய்ப்பினை அளிக்கும்.