பிரதமர் திரு நரேந்திர மோடி கம்போடிய பிரதமர் மேதகு சாம்டெக் அக்கா மோஹா சேனா படேய் டெக்னோ ஹூன் சென்-ஐ இன்று காணொலி வாயிலாக சந்தித்துப் பேசினார்.
வர்த்தகம் மற்றும் முதலீடு, மனிதவள மேம்பாடு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, மேம்பாட்டு ஒத்துழைப்பு, இணைப்பு, பெருந்தொற்றுக்குப் பிறகான பொருளாதார மீட்சி மற்றும் மக்கள் இடையேயான உறவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு போன்ற இரு தரப்பு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இரு தரப்பு செயல்பாடுகளில் இருவரும் திருப்தி தெரிவித்தனர்.
இந்தியாவுடனான உறவின் முக்கியத்துவத்தை கம்போடிய பிரதமர் திரு ஹுன் சென் வலியுறுத்தினார். பிரதமர் திரு மோடியும் பரஸ்பர உணர்வை வெளிப்படுத்தியதுடன், இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையில் கம்போடியாவின் மதிப்புமிக்க பங்கை வலியுறுத்தினார். மீகாங்-கங்கா ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ் திறன் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் விரைவான தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்கள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான வளர்ச்சி கூட்டாண்மையை தலைவர்கள் ஆய்வு செய்தனர்.
இரு நாடுகளுக்கு இடையே உள்ள வரலாறு மற்றும் நாகரிக இணைப்பு எடுத்துரைத்த பிரதமர், இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சாரம் மற்றும் மொழியியல் இணைப்பை எடுத்துரைக்கும் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் மற்றும் பிரியார் விகார் ஆலயங்களின் மீட்புப் பணிகளில் இந்தியாவின் பங்களிப்பிற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
குவாட் தடுப்பூசி முன்முயற்சியின் கீழ் 3.25 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை வழங்கியதற்காக கம்போடிய பிரதமர் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் கம்போடியாவுக்கும் இடையே தூதரக உறவுகள் தொடங்கப்பட்டதன் 70-வது ஆண்டு விழா இந்த வருடம் கொண்டாடப்படுவதையொட்டி இரு தலைவர்களும் பரஸ்பரம் பாராட்டு தெரிவித்தனர்.