பிரதமர் திரு.நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோசப் ஆர்.பைடனுடன் 11, ஏப்ரல் 2022 அன்று காணொலி வாயிலாக கலந்துரையாட உள்ளார். இரு தலைவர்களும், தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்புகளை ஆய்வு செய்வதுடன் தெற்காசியா, இந்தோ - பசிபிக் பிராந்திய மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்தும் கருத்துக்களை பரிமாற உள்ளனர். காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கலந்துரையாடல், இருதரப்பு விரிவான சர்வதேச ராணுவ ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இரு நாடுகளும் தங்களது வழக்கமான மற்றும் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகளை தொடர வழிவகுக்கும்.
இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்த காணொலி கலந்துரையாடல், இந்திய தரப்பில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு.லாய்ட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.ஆன்டனி பிளிங்கன் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ள இந்தியா – அமெரிக்கா 2+2 அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக அமையும்.