வணக்கம். எனதருமை நாட்டுமக்களே! இன்று மீண்டும் ஒருமுறை மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் பேறு எனக்குக் கிட்டியிருக்கிறது. சில நாட்கள் முன்பு பெங்களூரூவில் வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் ஆட்டம் நடந்தது. இந்தியாவுக்கும் ஆஃப்கனிஸ்தானுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி பற்றி நான் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள். இது ஆஃப்கனிஸ்தான் பங்கேற்கும் முதல் சர்வதேச டெஸ்ட் பந்தயம், ஆஃப்கனிஸ்தானின் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் பந்தயம் இந்தியாவுடன் நிகழ்ந்திருக்கிறது என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை அளிக்கும் விஷயம். இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே மிகச் சிறப்பாக ஆடினார்கள். ஆஃப்கனிஸ்தானின் பந்து வீச்சாளர் ரஷீத் கான் ஏற்கனவே இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பாக ஆடியிருந்தார், ஆஃப்கனிஸ்தானத்தின் குடியரசுத் தலைவர் அஷ்ரஃப் கனி அவர்களும் கூட என்னை டேக் (tag) செய்து ட்விட்டரில், “ஆஃப்கனிஸ்தான் மக்கள் தங்கள் ஹீரோ ரஷீத் கான் குறித்து மிகுந்த பெருமிதம் கொள்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். நமது விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்ட ஒரு தளம் அமைத்துக் கொடுத்தமைக்கு நான் நமது இந்திய நண்பர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆஃப்கனிஸ்தானின் சிறப்பான அம்சங்களின் பிரதிநிதியாக ரஷீத் விளங்குகிறார். அவர் கிரிக்கெட் உலகின் சொத்து என்பதோடு கூடவே, – “நாங்கள் அவரை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை” என்று நகைச்சுவையோடு அவர் எழுதியிருந்தார். இந்த ஆட்டம் அனைவருக்குமே மறக்கமுடியாத ஒன்றாக இருக்கும். முதல் ஆட்டம் என்பதாலேயே, இது நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், வேறு ஒரு காரணத்துக்காகவும் இதை நான் சிறப்பான ஒன்றாக கருதுகிறேன். இந்திய அணி, உலகம் முழுவதுக்கும் எடுத்துக்காட்டான ஒன்றைச் செய்து காட்டியது. வெற்றி பெற்ற அணியினர் என்ன செய்யலாம் என்பதைச் செய்து காட்டினார்கள். வெற்றிக் கேடயத்தைப் பெறும் வேளையில் நமது அணியினர், முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் பங்கெடுக்கும் ஆஃப்கனிஸ்தானின் அணியினரை அழைத்து, இரு அணிகளும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். விளையாட்டு வீரர்களின் தன்மையைப் பற்றி நாம் இந்த நிகழ்விலிருந்து புரிந்து கொள்ள முடியும். விளையாட்டு என்பது உலகை இணைக்கவும், நமது இளைஞர்களிடம் இருக்கும் திறன்கள், திறமைகள் ஆகியவற்றை வெளிக் கொண்டுவரும் அருமையான வழி என்பதையே இது காட்டுகிறது. பாரத-ஆஃப்கானிஸ்தான் இரு அணிகளுக்கும் என் நல்வாழ்த்துகள். இனிவருங்காலத்தில் இதைப் போலவே ஒருவரோடு ஒருவர் விளையாட்டு உணர்வு உடனேயே நாம் விளையாடுவோம், வளர்ச்சி அடைவோம் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே! கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நாம் நான்காவது சர்வதேச யோகக்கலை தினத்தைக் கொண்டாடிய வேளையில், ஒட்டுமொத்த உலகமும் இதில் இணைந்தது. உலகெங்கிலும் மக்கள் முழு உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் யோகம் பயின்றார்கள். பிரேசில் நாடாகட்டும், ஐரோப்பிய நாடாளுமன்றமாகட்டும், நியூயார்க்கில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிடமாகட்டும், ஜப்பானின் கடற்படையின் போர்க்கப்பலாகட்டும், அனைத்து இடங்களிலும் யோகக்கலை பயின்றதை நம்மால் காண முடிந்தது. சவுதி அரேபியாவில் முதன்முறையாக யோகக்கலையின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மிகப்பெரிய அளவில் ஆசனங்களைப் பெண்கள் செய்து காட்டினார்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. லடாக்கின் மிக உயரமான சிகரங்களில் பாரதம் மற்றும் சீனாவின் இராணுவ வீரர்கள் ஒன்றாக இணைந்து யோகம் பயின்றார்கள். யோகம் அனைத்து எல்லைகளையும் தாண்டி, இணைக்கும் செயலைப் புரிகிறது. பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உற்சாகமிக்க மக்கள் சாதி, சமயம், பிராந்தியம், நிறம், பாலினம் என அனைத்து வகையான வேற்றுமைகளைக் களைந்து, இந்த வேளையில் மிகுந்த உற்சாகத்தோடு பங்கெடுத்து இதை ஒரு கொண்டாட்டமாகவே ஆக்கியிருந்தார்கள். உலகெங்கிலும் இருக்கும் மக்கள் இத்தனை உற்சாகத்தோடு ‘யோகக்கலை தின’ நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் போது, பாரதம் இந்த உற்சாக வெளிப்பாட்டில் பலமடங்கு முன்னணி வகித்தது.
நமது தேசத்தின் இராணுவ வீரர்கள், தரை, வானம், கடல் என மூன்று இடங்களிலும் யோகக்கலையைப் பயில்வதைப் பார்க்கும் நமது தேசத்தின் 125 கோடி நாட்டுமக்களுக்கும் பெருமிதம் பொங்குகிறது. சில வீரர்கள் நீர்மூழ்கிக் கப்பலிலும் யோகம் பயின்றார்கள்; இதைப் போலவே சில வீரர்கள் சியாச்சினின் பனிநிறைந்த மலை உச்சிகளில் யோகம் பயின்றார்கள். விமானப்படையின் நமது வீரர்கள், நடுவானத்தில், பூமியிலிருந்து 15,000 அடி உயரத்தில் யோகாஸனம் செய்து காட்டி, அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார்கள். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர்கள் விமானத்தில் அமர்ந்தபடி இதைச் செய்யவில்லை, வானில் மிதந்தபடி இதைச் செய்தார்கள் என்பது தான். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், பூங்காக்கள், உயரமான கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள் என அனைத்து இடங்களிலும் யோகாஸனப் பயிற்சி நடைபெற்றது. அகமதாபாதின் ஒரு காட்சி மனதைத் தொட்டது. அங்கே சுமார் 750 மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகள் ஓரிடத்தில் குழுமினார்கள், ஒன்றாக இணைந்து யோகப் பயிற்சி மேற்கொண்டு உலகப்புகழ் பெற்றார்கள். சாதி, சமயம், புவியியல் வரையறை என எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் உலக மக்கள் அனைவரையும் இணைக்கும் பணியை யோகம் செய்திருக்கிறது. வசுதைவ குடும்பகம், உலகனைத்தும் ஓரினம் என்ற உணர்வோடு நாம் பல நூற்றாண்டுகளாகவே வாழ்ந்து வந்திருக்கிறோம். நமது ரிஷி-முனிகள், புனிதர்கள் ஆகியோர் எதை முன்னிறுத்தி வந்திருக்கிறார்களோ, அதை யோகக்கலை செய்து காட்டியிருக்கிறது. இன்று நலவுணர்வு என்பது புரட்சிகரமான பணியைப் புரிந்து கொண்டிருக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். யோகமானது முடுக்கி விட்டிருக்கும் இந்த நலவுணர்வு இயக்கம், மேலும் முன்னேறும் என்று நான் நம்புகிறேன். மேலும் மேலும் மக்கள் இதைத் தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்வார்கள்.
என் பிரியம்நிறை நாட்டுமக்களே! மைகவ் மற்றும் நரேந்திர மோடி செயலியில் பலர், இந்த முறை மனதின் குரலில் ஜூலை மாதம் முதல் தேதி கடைப்பிடிக்கப்படும் மருத்துவர்கள் தினம் பற்றி நான் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், சரியான விஷயம் தான். சங்கடங்கள் ஏற்படும் வேளையில் தான் மருத்துவர்களைப் பற்றிய நினைவு நமக்கு வருகிறது; ஆனால் மருத்துவர்களின் சேவைகள், அர்ப்பணிப்பு உணர்வு, சாதனைகள் ஆகியவற்றை நாம் கொண்டாடும் இந்த நாளில், நான் அவர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். நாம் பெற்ற தாயை தெய்வமாகப் பூஜிப்பவர்கள், ஏனென்றால் தாய் தானே நமக்கெல்லாம் உயிரளித்தவர்!! அதே வேளையில் மருத்துவர்கள் தான் பலமுறை நமக்கெல்லாம் மறுபிறப்பு அளிப்பவர்கள். நோய்க்கான தீர்வைக் கண்டறிதலோடு மருத்துவர்களின் பணி நின்று போய் விடுவதில்லை. பல நேரங்களில் மருத்துவர்கள் குடும்பத்தின் நண்பரைப் போலத் திகழ்கிறார்கள், நமது வாழ்க்கைமுறையை வழிநடத்துகிறார்கள் அவர்கள் நோய்க்கு சிகிச்சை அளிப்பதுடன், நம்மை குணமடையவும் செய்கிறார்கள். இன்று மருத்துவர்களிடம் மருத்துவத் திறன் என்னவோ இருக்கிறது என்றாலும், நமது பொதுவான வாழ்க்கை முறை போக்குகள் பற்றியும், அவை நமது உடல் நலத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் ஆழமான அனுபவம் மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள். நம் நாட்டு மருத்துவர்கள் தங்கள் திறமைகள் காரணமாக உலகம் முழுவதிலும் தங்களின் முத்திரையைப் பதித்திருக்கிறார்கள். மருத்துவத் தொழிலில் திறமைசாலிகளாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருக்கும் அதே வேளையில், நமது மருத்துவர்கள் சிக்கலான மருத்துவ பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் பெயர் பெற்றவர்கள். மனதின் குரல் வாயிலாக நாட்டு மக்கள் தரப்பிலிருந்து நமது அனைத்து மருத்துவ நண்பர்களுக்கும், ஜூலை முதல் தேதி வரவிருக்கும் மருத்துவர்கள் தினத்திற்கான ஏராளமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே! பாரத பூமியில் பிறப்பெடுத்த நாமனைவருமே பெரும்பேறு பெற்றவர்கள். வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடக்காத ஒரு நாளோ, மாதமோ இல்லை எனும் அளவுக்கு பாரதம் செறிவான வரலாறுமிக்க ஒரு தேசம். பாரதத்தின் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அந்த இடங்களோடு தொடர்புடைய யாராவது ஒரு புனிதரோ, மாமனிதரோ, பிரபலமானவரோ இருப்பார்கள், அவர்கள் அனைவருமே தங்களுடைய பங்களிப்பை நல்கியிருப்பார்கள், அவர்களுக்கென ஒரு வரலாறும் இருக்கும்.
”பிரதமர் அவர்களே! வணக்கம்!! நான் டாக்டர். சுரேந்த்ர மிஷ்ரா பேசுகிறேன். நீங்கள் ஜூன் மாதம் 28ஆம் தேதியன்று மக்ஹர் வருகிறீர்கள் என்று அறிகிறேன். நான் மக்ஹருக்கு அருகே உள்ள ஒரு சிறிய கிராமமான டட்வாவில் வசிக்கிறேன், இது கோரக்பூரில் இருக்கிறது. மக்ஹர் கபீர்தாசரின் சமாதி அமைந்திருக்கும் இடம், கபீர்தாசரை மக்கள் சமூக நல்லிணக்கத்திற்காக நினைவில் கொள்கிறார்கள், கபீர்தாசரின் கருத்துகள் தொடர்பான கலந்துரையாடல்கள் ஒவ்வொரு மட்டத்திலும் நடக்கிறது. உங்களின் செயல்திட்டம் வாயிலாக சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் கணிசமான தாக்கம் ஏற்படும். தயவுசெய்து பாரத அரசின் செயல்திட்டங்களின் வாயிலாக கபீர்தாசர் பற்றி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்”.
தங்களின் தொலைபேசி அழைப்பிற்கு மிக்க நன்றி. 28ஆம் தேதியன்று நான் மக்ஹர் வருகிறேன் என்பது உண்மை தான். குஜராத்தின் கபீர்வட் என்ற விருக்ஷம் பற்றி நீங்கள் நன்கறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்; நான் குஜராத்தில் பணியாற்றிய வேளையில், குஜராத்தின் கபீர்வடில், புனிதர் கபீர்தாசரது பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஒரு பெரிய தேசிய அளவிலான மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தேன். கபீர்தாசர் மக்ஹருக்கு ஏன் சென்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்ஹரில் காலமானவர்கள் சொர்க்கம் போக மாட்டார்கள், மாறாக காசியில் காலமானால் அவர்கள் சொர்க்கம் புகுவார்கள் என்று அந்த காலகட்டத்தில் ஒரு நம்பிக்கை நிலவியது. மக்ஹர் புனிதமற்றதாக கருதப்பட்டது; ஆனால் புனிதர் கபீர்தாசர் இதன்மீது நம்பிக்கை கொள்ளவில்லை. தனது காலத்தில் நிலவிய மூடநம்பிக்கைகளையும், தவறான கருத்துக்களையும் தகர்க்கும் வேலையை அவர் புரிந்தார், ஆகையால் தான் அவர் மக்ஹர் சென்றார், அங்கேயே சமாதி அடைந்தார். புனிதர் கபீர்தாசர் தனது சாகீக்கள், தோஹாக்கள் என்ற கவிதை வடிவங்கள் வாயிலாக சமூக ஒற்றுமை, அமைதி, சகோதரத்துவம் ஆகியவை மீது அழுத்தமளித்தார். இதுவே அவரது குறிக்கோளாக இருந்தது. அவரது படைப்புக்களில் இந்தக் குறிக்கோளே நமக்குக் காணக் கிடைக்கிறது, இன்றைய உலகிலும் இது அதே அளவுக்குக் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது. இதோ, அவரது தோஹா ஒன்றைக் கேளுங்கள் -
கபீர் சோயீ பீர் ஹை, ஜோ ஜானே பர் பீர்,
ஜோ பர பீர் ந ஜானஹீ, சோ கா பீர மேன் பீர்.
அதாவது, மற்றவர்களின் துன்பங்களைப் புரிந்து கொள்பவரே, மெய்யான புனிதர்; யார் மற்றவர்களின் துயரங்களைப் புரிந்து கொள்வதில்லையோ, அவர்கள் கொடூரமானவர்கள். கபீர்தாஸர் சமூக நல்லிணக்கம் மீது சிறப்பான அழுத்தம் அளித்தார். அவர் தான் வாழ்ந்த காலத்திற்கு அப்பால் சிந்தித்தார். அந்தக் காலகட்டத்தில் கொந்தளிப்பும், போராட்டமும் நிறைந்திருந்தன, அப்போது அவர் அமைதியையும், நல்லிணக்கத்தையும் செய்தியாக அளித்தார், மக்களின் மனங்களை ஒன்றிணைத்து, வேறுபாடுகளைக் களையும் பணியை ஆற்றினார்.
இன்னொரு தோஹாவில் அவர் என்ன குறிப்பிடுகிறார்…..
ஜஹான் தயா தஹம் தர்ம ஹை, ஜஹான் லோப் தஹம் பாப்.
ஜஹான் க்ரோத் தஹம் கால் ஹை, ஜஹான் க்ஷமா தஹம் ஆப்.
அதாவது எங்கே கருணை இருக்கிறதோ, அங்கே அறம் இருக்கிறது. எங்கே பேராசையும் கருமித்தனமும் இருக்கிறதோ, அங்கே பாவம் இருக்கிறது. எங்கே வன்மம் இருக்கிறதோ அங்கே காலன் அல்லது மரணம் இருக்கிறது. எங்கே சகிப்புத்தன்மை-மன்னித்தல் இருக்கிறதோ, அங்கே இறைவனே வாசம் செய்கிறான். அவர் மேலும்,
ஜாதி ந பூச்சோ சாதூ கீ, பூச் லீஜியே ஞான்.
துறவிகளிடத்தில் அவர்களின் சாதி என்ன என்று கேட்காதீர்கள், அவர்களிடத்தில் ஞானம் வேண்டிப் பெறுங்கள். மக்களிடத்தில் அவர் விடுத்த வேண்டுகோள் – சாதி சமயம் ஆகியவற்றைத் தாண்டி, மக்களை அவர்களின் ஞானத்தைக் கொண்டு ஏற்றுக் கொண்டு, மதிப்பளிக்க வேண்டும் என்பது தான். அவரது கருத்துக்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும், இன்றும்கூட தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இன்று நாம் அவரது கருத்துக்களைப் பார்க்கும் போது, அவர் இன்றைய அறிவுசார் உலகம் பற்றிக் கூறுவதாகப் படுகிறது.
இப்போது கபீர்தாசர் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும் போது, அவரது இன்னொரு தோஹா என் மனதில் நிழலாடுகிறது. இதில் அவர் கூறுகிறார் -
குரு கோவிந்த் தோஊ கடே, காகே லாகூன் பாயம்.
பலிஹாரீ குரு ஆபனே, கோவிந்த் தியோ பதாய.
இது குருவின் மஹிமை பற்றி உரக்கப் பேசுகிறது, இது உலகிற்கே குருவாக விளங்கிய, கோடானுகோடி மக்களுக்கு நல்வழி காட்டிய குரு நானக் தேவ் அவர்களைப் பற்றியது, அவர் பல நூற்றாண்டுகளாக உத்வேகம் அளித்து வருகிறார். குருநானக் தேவ் அவர்கள் சமூகத்தில் நிலவிய சாதிரீதியிலான வேற்றுமைகளை வேறருக்க, ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் ஒன்றெனக் கருதி அரவணைக்க வேண்டும் என்று புகட்டினார். குருநானக் தேவ் அவர்கள்– ஏழைகளுக்கும், தேவை இருப்பவர்களுக்கும் செய்யப்படும் சேவையே இறைவனுக்கு ஆற்றப்படும் தொண்டாகும் என்று கூறுவார். அவர் எங்கே சென்றாலும், சமூக நன்மைக்காகப் புரிந்த தொண்டுகள் ஏராளம். சமூக வேற்றுமைகளைக் களைய சமையல்முறையை உருவாக்கினார்; இங்கே அனைத்து சாதியினரும், அனைத்துப் பிரிவினரும், அனைத்து சமயங்கள்-வழிமுறைகளைச் சேர்ந்தவர்களும் வந்து உணவு உண்ண முடியும். குருநானக் தேவ் அவர்கள் தான் லங்கர் என்ற சமையல் முறையை அறிமுகப்படுத்தியவர். 2019ஆம் ஆண்டு குருநானக் தேவ் அவர்களின் 550ஆவது பிறந்த ஆண்டு கொண்டாடப்படவிருக்கிறது. நாமனைவரும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் இதில் பங்கெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். குருநானக் தேவ் அவர்களின் 550ஆவது பிறந்த ஆண்டினை சமூகம் முழுவதிலும், உலகெங்கிலும் நாம் எப்படிக் கொண்டாடலாம், இது குறித்த புதியபுதிய எண்ணங்கள் என்ன, புதிய ஆலோசனைகள் என்ன, புதிய கற்பனைகள் என்ன என்பது குறித்து நீங்கள் சிந்தியுங்கள், தயாரிப்புகளில் ஈடுபடுங்கள், மிகுந்த பெருமிதத்தோடு நாம் அனைவரும் குருநானக் தேவ் அவர்கள் பிறந்த இந்த ஆண்டை உத்வேகம் அளிக்கும் காலமாகக் கொண்டாடுவோம், என்று நான் உங்கள் அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே! பாரத சுதந்திரப் போர் மிகவும் நீண்டது, பரந்துபட்டது, மிகவும் ஆழமானது, பல தியாகங்கள் நிறைந்தது. பஞ்சாப் மாநிலத்தோடு இணைந்த மேலும் ஒரு வரலாறு இருக்கிறது. 2019ஆம் ஆண்டு ஜலியான்வாலாபாக் படுகொலை அரங்கேறி 100 ஆண்டுகள் ஆகவிருக்கின்றது, இது மனித சமுதாயத்தை வெட்கத்திலாழ்த்தும் கோர சம்பவமாகும். 1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் நாள்… அந்த கருமைபடிந்த நாளை யாரால் மறக்க முடியும்?? அதிகார துஷ்பிரயோகம் வாயிலாக, கொடுமையான வகையிலே, அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி, அப்பாவிகள், நிராயுதபாணிகள், ஏதுமறியா பொதுமக்கள் ஆகியோர் குண்டுகளுக்கு இரையான நாள் அது. இந்தச் சம்பவம் நடந்து 100 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. இதை நாம் எவ்வாறு நினைவில் கொள்வது என்பது குறித்தும் நீங்கள் சிந்திக்கலாம்; ஆனால் இந்த துயரம் நமக்களித்த, காலத்தால் அழிக்கமுடியாத செய்தியை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும். வன்முறையும் கொடூரமும் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகிவிட முடியாது. வெற்றி என்றுமே அமைதிக்கும் அகிம்சைக்கும் கிடைக்கும், தியாகத்துக்கும் அர்ப்பணிப்புக்குமே உரித்தாகும்.
என் மனதில் நிறைந்த நாட்டுமக்களே, தில்லியின் ரோஹிணி பகுதியைச் சேர்ந்த ரமண் குமார் அவர்கள், நரேந்திர மோடி செயலியில், வரவிருக்கும் ஜூலை மாதம் 6ஆம் தேதியன்று டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாள் என்று கூறியிருப்பதோடு, இந்த நிகழ்ச்சியின் போது, டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களைப் பற்றி நாட்டுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ரமண் அவர்களே, முதலில் நான் எனது நன்றிகளை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரத சரிதத்தில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து எனக்கு உவப்பாக இருக்கிறது. நேற்றுத்தான் டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்கள் காலமான தினம், அதாவது ஜூன் மாதம் 23ஆம் தேதி. டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்கள் பல துறைகளோடு இணைந்தவர் என்றாலும், அவருக்கு மிக நெருங்கிய துறைகள் என்றால் அது கல்வி, நிர்வாகம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் ஆகும். கோல்காத்தா பல்கலைக்கழகத்தின் மிகக்குறைந்த வயதுடைய துணைவேந்தராக அவர் இருந்தார் என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கும். அவர் துணை வேந்தராக இருந்த வேளையில், அவருடைய வயது வெறும் 33 மட்டுமே. 1937ஆம் ஆண்டு டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்கள் விடுத்த அழைப்பின் பேரில் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வங்காள மொழியில் உரையாற்றினார் என்பதும்கூட வெகுசிலருக்கே தெரிந்திருக்கும். ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் வங்காள மொழியில் உரையாற்றியது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 1947 முதல் 1950 வரை டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்கள் பாரத நாட்டின் முதல் தொழில்துறை அமைச்சராக இருந்தார்; இன்னும் சொல்லப் போனால் அவர் பாரதத்தின் தொழில் வளர்ச்சிக்கான அடிக்கல் நாட்டினார், பலமான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் என்றால் அது மிகையல்ல. 1948ஆம் ஆண்டு வெளிவந்த சுதந்திர பாரதத்தின் முதல் தொழில்துறைக் கொள்கையில் அவரது கருத்துகள், தொலைநோக்கு ஆகியவற்றின் அழிக்கமுடியாத முத்திரை வெளிப்பட்டது. டாக்டர். முகர்ஜி அவர்களின் கனவு, பாரதத்தை ஒவ்வொரு துறையிலும் தொழில்சார் சுயசார்புடையதாக ஆக்க வேண்டும், தன்னிறைவு உடையதாக மாற்ற வேண்டும் என்பது தான். பாரதம் பெரிய தொழில்களை மேம்படுத்தும் அதே வேளையில், நடுத்தர மற்றும் சிறுகுறு தொழில்கள், கைத்தொழில்கள், நெசவு மற்றும் குடிசைத் தொழில்கள் ஆகியவை மீதும் தனது முழு கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். சிறு, குறு தொழில்களின் முழுமையான மேம்பாட்டிற்காக நிதி மற்றும் அமைப்புரீதியிலான தளம் கிடைக்க வேண்டும் என்பதற்காக 1948 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் அவர் அனைத்திந்திய கைவினைஞர்கள் வாரியம், அனைத்திந்திய கைத்தறி வாரியம், கதராடைகள் மற்றும் கிராமப்புறத் தொழில்கள் வாரியம் ஆகியவற்றை நிர்மாணித்தார். டாக்டர். முகர்ஜி அவர்கள் பாரதத்தின் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியை சுதேசிமயமானதாக ஆக்க சிறப்பு கவனம் அளித்தார். சித்தரஞ்ஜன் ரயில் எஞ்ஜின் தொழிற்சாலை, இந்துஸ்தான் விமானங்கள் தொழிற்சாலை, சிந்த்ரியில் உரத்தயாரிப்பு ஆலை, தாமோதர் பள்ளத்தாக்கு நிறுவனம் ஆகிய இந்த நான்கு பெரும் திட்டங்களும், பிற ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களின் நிர்மாணமும் டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் பங்களிப்பே ஆகும். மேற்கு வங்காளத்தின் வளர்ச்சி தொடர்பாக அவர் பேரார்வம் கொண்டவராக விளங்கினார். அவரது புரிதல், புத்திகூர்மை, ஆக்கப்பூர்வமான செயல்பாடு ஆகியவற்றின் விளைவாகவே வங்காளத்தின் ஒரு பெரிய பகுதி காப்பாற்றப்பட்டு, பாரதத்தின் பகுதியானது. பாரதத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு தான் டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களுக்கு மிக முக்கியமானதாக இருந்தது. இதன் பொருட்டு குறைவான 52 வயதுக் காலத்திலேயே அவர் தனது உயிரையும் துறக்க நேர்ந்தது. வாருங்கள்! நாம் டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் ஒற்றுமைச் செய்தியை என்றும் நினைவில் கொண்டு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் என்ற உணர்வை மனதில் தாங்கி, பாரதத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதில் முழுமுனைப்போடு ஈடுபடுவோம்.
எனதருமை நாட்டுமக்களே! கடந்த சில வாரங்களில் காணொளி மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் பயனடைந்தவர்களுடன் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. கோப்புகளுக்கு அப்பால் சென்று, வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் குறித்து நேரடியாக அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்தது. மக்கள் தங்கள் உறுதிப்பாட்டை, தங்கள் சுக துக்கங்களை, தாங்கள் சாதித்ததைப் பற்றியெல்லாம் என்னிடத்தில் பகிர்ந்து கொண்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் இதை ஏதோ ஒரு அரசு நிகழ்ச்சியாக நான் பார்க்கவில்லை; இதை ஒருவகையில் நான் ஒரு கற்றல் அனுபவமாகவே காண்கிறேன். இதன் மூலமாக மக்கள் முகங்களில் நான் கண்ட மகிழ்ச்சி….. இதைவிட சந்தோஷம் அளிக்கும் கணம் வாழ்க்கையில் என்ன இருக்க முடியும் சொல்லுங்கள்!! ஒரு சாதாரண மனிதன் பற்றித் தெரிந்து கொண்டிருக்கும் வேளையில்… அவனது எளிய சொற்கள், அவனது அனுபவ மொழி, அவனைப் பற்றிய நிகழ்வு, மனதைத் தென்றல் போல வருடிக் கொடுத்தது. வெகு தொலைவிலிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் பொதுச்சேவை மையம் வாயிலாக கிராமங்களில் இருக்கும் மூத்த குடிமக்களின் ஓய்வூதியம் முதல் பாஸ்போர்ட் வரையிலான சேவைகளை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். சத்தீஸ்கரில் ஒரு சகோதரி சீத்தாப்பழத்தை சேகரித்து, அதைக் கொண்டு ஐஸ்க்ரீம் தயாரித்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார். ஜார்க்கண்டைச் சேர்ந்த அஞ்ஜன் பிரகாஷைப் போலவே நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்கள், மக்கள் மருந்தகங்களை நடத்துவதோடுகூட, அக்கம்பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்குச் சென்று விலைமலிவான மருந்துகளை கிடைக்கச் செய்தும் வருகிறார்கள். அதேபோல மேற்கு வங்கத்தில் ஒரு இளைஞர் 2-3 ஆண்டுகள் முன்பாக வேலை தேடிக் கொண்டிருந்தார், ஆனால் இப்போதோ வெற்றிகரமாகத் தொழில் செய்து வருகிறார், 10-15 பேர்களுக்கு வேலைவாய்ப்பையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு, பஞ்சாப், கோவா பகுதிகளின் பள்ளிக்குழந்தைகள், தங்கள் சிறுவயதிலேயே பள்ளியில் டிங்கரிங் லேபில் கழிவுப்பொருள் மேலாண்மை போன்ற முக்கியமான விஷயங்கள் மீது பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி எத்தனை எத்தனை கதைகள் இருந்தன!! வெற்றிக் கதை இல்லாத பகுதி ஏதும் இல்லை என்ற அளவுக்கு ஏகப்பட்டவை நம் நாட்டில் இருக்கின்றன. இந்த நிகழ்ச்சி முழுவதிலும், அரசின் வெற்றி என்பதை விட அதிகமாக, எளிய மக்களின் வெற்றி பற்றிய விஷயங்கள், நாட்டின் சக்தி, புதிய பாரதத்தின் கனவுகளின் ஆற்றல், புதிய பாரதத்தின் மனவுறுதியின் வல்லமை – இவற்றையே நான் கேட்டும் கண்டும் உணர்ந்தேன், உயிர்த்தேன். மாறாக, சமூகத்தில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள் – ஏமாற்றம் பற்றிப் பேசாதவரையில், இயலாமை பற்றிப் புலம்பாதவரையில், நம்பிக்கையின்மையைத் தூண்டாதவரையில், ஒற்றுமை பற்றி அல்லாது வேற்றுமைப் பாதையைத் தேடாதவரையில், அவர்களுக்கு அமைதி என்பதே இல்லாமல் போய் விடுகிறது. இந்தமாதிரியானதொரு சூழலில் எளிய மனிதர்கள், புதிய எதிர்பார்ப்பு, புதிய உற்சாகம் ஆகியவற்றுடன் தங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றிப் பேசும் போது, இது அரசுக்கு ஏற்பட்ட புகழாக, கிடைத்த வெற்றியாக நான் கருதவில்லை. வெகு தொலைவிலிருக்கும் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு சின்னப் பெண்ணின் கதை, 125 கோடி நாட்டுமக்களுக்கு உத்வேகமாக மாறி விடுகிறது. தொழில்நுட்பத்தின் துணைக் கொண்டு, வீடியோ பாலம் மூலமாக, பயனாளிகளுடன் கழித்த கணங்கள்….. மிகவும் சுகமானவை, அதிக ஊக்கம் அளிப்பவை, மேலும் அதிகப் பணிகள் ஆற்ற வேண்டும் என்ற உத்வேகம் அளிப்பவை. மிகவும் ஏழ்மை நிலையில் இருப்போரால் நல்லவிதமாக வாழ முடிகிறது எனும் போது பிறக்கும் ஆனந்தம், ஒரு புதிய உற்சாகம், மேலும் ஒரு புதிய கருத்தூக்கத்தை அளிக்கிறது.
நான் நாட்டுமக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 40-50, லட்சம் பேர் இந்த வீடியோ பாலம் நிகழ்ச்சி வாயிலாக இணைந்தார்கள், எனக்குப் புதியதொரு சக்தியை அளிக்கும் பணியை நீங்கள் ஆற்றியிருக்கிறீர்கள். நான் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
என் இனிய நாட்டுமக்களே! நாம் நம்மைச் சுற்றிலும் பார்த்தோமேயானால், எங்கேயாவது, ஏதாவது ஒரு நல்ல விஷயம் கண்டிப்பாக நம் கண்களில் படும் என்பது நான் எப்போதுமே கண்டுதெளிந்த உண்மை. நல்லவை புரியும் மனிதர்கள் இருக்கிறார்கள். நல்லனவற்றின் நறுமணத்தை நம்மாலும் முகர முடியும். கடந்த நாட்களில் ஒரு விஷயம் என் கவனத்தை ஈர்த்தது. அது மிகவும் விநோதமான ஒரு இணைவு. இதில் ஒருபுறத்தில் தொழில்வல்லுனர்களும் பொறியாளர்களும் இருக்கிறார்கள் என்றால் மற்றொருபுறத்தில் நிலங்களில் வேலை செய்யும், விவசாயத்தோடு தொடர்புடைய விவசாய சகோதர சகோதரிகளும் இருக்கிறார்கள். இவை இரண்டுமே வேறுவேறுபட்ட துறைகளாயிற்றே என்று நீங்கள் ஆச்சரியமடையலாம். இவர்களுக்கிடையே என்ன தொடர்பு இருக்க முடியும் என்று நீங்கள் எண்ணலாம். ஆனால், பெங்களூரூவில் கார்ப்பரேட்டில் பணியாற்றும் வல்லுனர்களும், தகவல்தொழில்நுட்ப பொறியாளர்களும் ஒன்றுகூடி, சஹஜ சம்ருத்தா என்ற அறக்கட்டளையை உருவாக்கினார்கள்; விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அறக்கட்டளையை செயல்படுத்தினார்கள். விவசாயிகள் இதில் தங்களை இணைத்துக் கொண்டார்கள், திட்டங்களைத் தீட்டினார்கள், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டார்கள். விவசாயத்தின் புதிய உத்திகளை கற்றுக் கொடுப்பதோடு, இயற்கை வேளாண்மையை எப்படிச் செய்ய வேண்டும், வயல்களில் ஒரு பயிருடன் சேர்த்து வேறு என்னென்ன பயிர்களை பயிர் செய்யலாம் என்பவை தொடர்பாக, இந்த அறக்கட்டளை வாயிலாக வல்லுனர்களும், பொறியாளர்களும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்கள். முன்பெல்லாம் விவசாயிகள் தங்கள் வயல்வெளிகளில் ஒரே ஒரு பயிரைத் தான் பயிர் செய்து வந்தார்கள். விளைச்சலும் சிறப்பாக இல்லாமல் இருந்து வந்தது, இலாபமும் சரியாக கிடைக்கவில்லை. இன்று இவர்கள் காய்கறிகளை மட்டும் சாகுபடி செய்யவில்லை, தங்கள் காய்கறிகளை சந்தைப்படுத்தலையும் இந்த அறக்கட்டளை மூலமாகச் செய்து நல்ல விலைக்கு விற்றும் வருகிறார்கள். தானிய உற்பத்தி செய்யும் விவசாயிகளும்கூட, இதில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள். ஒருபுறம், விளைச்சல் முதல் சந்தைப்படுத்தல் வரை ஒரு முழுமையான சங்கிலித்தொடரில் விவசாயிகள் முதன்மை பங்குதாரர்களாக இருக்கிறார்கள்; மறுபுறத்தில், இலாபத்தில் விவசாயிகளின் பங்கும், அவர்கள் உரிமையும் உறுதி செய்யப்படும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மகசூல் நல்லவிதமாக இருக்க வேண்டும், இதற்காக நல்ல வீர்யம் உள்ள விதைகள் இருக்க வேண்டும். இதற்காக பிரத்யேகமான விதை வங்கி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பெண்கள் இந்த விதை வங்கி தொடர்பான பணிகளை ஆற்றி வருகிறார்கள். இதில் பெண்களும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நூதனமான முயற்சியை மேற்கொண்டமைக்கு நான் இந்த இளைஞர்களுக்கு என் அளப்பரிய பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு இன்னொரு வகையில் என்ன சந்தோஷம் என்றால், தொழில் வல்லுனர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாரின் உலகத்தோடு தொடர்புடைய இந்த இளைஞர்கள், தங்கள் வட்டத்தை விட்டு வெளியேறி, விவசாயிகளோடு இணைந்து, கிராமங்களோடு தங்களை இணைத்துக் கொண்டு, வயல்வெளிகள், பயிர்களோடு ஒன்றாகக் கலந்து பணியாற்றும் பாதையை தங்களுடையதாக்கிக் கொண்டது தான்.
நண்பர்களே! உங்கள் இளமை உண்மையிலேயே எந்த ஒரு இளைஞனுக்கும் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது. நாட்டின் பிற இளைஞர்களும்கூட கண்டிப்பாக இவர்களது இணையதளம் சென்று, இவர்களுடைய பணிகளை உன்னிப்பாக கவனிப்பார்கள், அவர்களுமேகூட தங்கள் பகுதிகளில் சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் எப்படி செயலாற்ற முடியும் என்பது தொடர்பான உத்வேகம் அடைவார்கள். தொடர்ச்சியாக பலகோடி மக்கள் நல்லது எதையாவது செய்து கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள்.
எனதருமை நாட்டுமக்களே! சரக்கு மற்றும் சேவை வரி, ஜி.எஸ்.டி. அமல் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. நாட்டுமக்கள் அனைவருக்கும் இருந்த ஒரு கனவான, ஒரு தேசம் ஒரே வரி என்பது நனவாகி இருக்கிறது. ஒரே வரிச்சீர்திருத்த முறையை அமல் செய்தமைக்கு யாருக்காவது பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் என்றால், நான் உள்ளபடியே மாநிலங்களுக்குத் தான் அந்தப் பாராட்டுக்களைத் உரித்தாக்க விரும்புகிறேன். ஜி.எஸ்.டி. என்பது கூட்டுறவுக் கூட்டாட்சிக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, இதில் அனைத்து மாநிலங்களும் இணைந்து நாட்டுநலனுக்காக முடிவெடுத்தார்கள். பின்னரே இது நாட்டின் மிகப்பெரிய வரிச்சீர்திருத்தமாக முகிழ்த்து மலர்ந்தது. இதுவரை 27 GST கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன, பலவகைப்பட்ட அரசியல் எண்ணப்பாடுகள் கொண்டவர்கள் இதில் அமர்கிறார்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள், வேறுபட்ட முன்னுரிமைகள் கொண்ட மாநிலங்கள் பங்கெடுக்கின்றன; ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி, ஜி.எஸ்.டி. குழு இதுவரை மேற்கொண்ட முடிவுகள் அனைத்தும் அனைவரின் சம்மதத்தின் பேரிலேயே நடந்திருக்கிறது என்பதை என்னால் பெருமிதத்தோடு கூற முடியும். ஜி.எஸ்.டி. அமல் செய்யப்படுவதற்கு முன்பாக, நாட்டில் தனித்தனி வகையான 17 வரிகள் இருந்தன ஆனால், இந்த முறையை மாற்றி இப்போது ஒரேஒரு வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. GST நாணயத்திற்குக் கிடைத்த வெற்றி, நாணயமான நடவடிக்கைகளின் கொண்டாட்டம். முன்பெல்லாம் வரி விஷயங்களில் இன்ஸ்பெக்டர் ராஜ் என்ற தண்டல்காரன் ராஜ்ஜியமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் நிலவின. ஜி.எஸ்.டி.யில் இன்ஸ்பெக்டர் இடத்தை தகவல்தொழில்நுட்பம் எடுத்துக் கொண்டது. வரிக்கணக்கு செலுத்துவது முதற்கொண்டு, பணம் திரும்பப் பெறுவது வரை அனைத்தும் இணையவழி தகவல் தொழில்நுட்பம் வாயிலாக நடக்கிறது. ஜி.எஸ்.டி. வந்ததால், சோதனைச் சாவடிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன, சரக்குப் போக்குவரத்து விரைவாக நடக்கிறது, இவற்றால் நேரம் மிச்சப்படுவதோடு, சரக்கு சேவைத் துறையிலும் கணிசமான இலாபம் கிட்டி வருகிறது. ஜி.எஸ்.டி., உலகின் மிகப்பெரிய வரிச்சீர்திருத்தமாக இருக்கலாம். இந்தியாவில் இத்தனை பெரிய வரிச்சீர்திருத்தம் வெற்றி பெற்றதற்கான காரணம் நாட்டு மக்கள் இதை ஏற்றுக் கொண்டார்கள், மக்கள் சக்தி வாயிலாகவே ஜி.எஸ்.டி.யின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பது தான். பொதுவாக, இத்தனை பெரிய சீர்திருத்தம், இத்தனை பெரிய தேசம், இத்தனை பெரிய மக்கட்தொகை எனும் போது, இதை முழுமையாக நிலைநிறுத்த 5 முதல் 7 ஆண்டுகள் காலம் பிடிக்கலாம் என்று கருதப்பட்டது; ஆனால் நாட்டில் நாணயமானவர்களின் உற்சாகம், நாணயமானவர்கள் அளித்த அளப்பரிய ஊக்கம், மக்கள்சக்தியின் பங்கெடுப்பு ஆகியவற்றின் பயனாகவே, ஒரே ஆண்டுக்குள்ளாகவே மிகப்பெரிய அளவில் புதிய வரியமைப்பு தனது இடத்தை உறுதி செய்து கொண்டிருக்கிறது. இதிலேயே பொதிந்திருக்கும் அமைப்பு வாயிலாக, இதில் தேவையான மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இது உள்ளபடியே மிகப்பெரிய வெற்றி, இந்த வெற்றியை 125 கோடி நாட்டுமக்களும் தான் ஈட்டியிருக்கிறார்கள்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே! மீண்டும் ஒருமுறை மனதின் குரலை நிறைவு செய்யும் வேளையில், அடுத்த மனதின் குரலுக்காகக் காத்திருக்கிறேன், உங்களுடன் உரையாட, உங்கள் மனங்களோடு உறவாட….. உங்களுக்கு அளப்பரிய நல்வாழ்த்துகள். மிக்க நன்றி.
A historic test match in Bengaluru. #MannKiBaat pic.twitter.com/9N9maegX3L
— PMO India (@PMOIndia) June 24, 2018
PM @narendramodi lauds the Indian cricket team for their gesture during the test match against Afghanistan. #MannKiBaat pic.twitter.com/3c0aTcZhWo
— PMO India (@PMOIndia) June 24, 2018
Sports unites people. #MannKiBaat pic.twitter.com/NmixwI2jjH
— PMO India (@PMOIndia) June 24, 2018
Great enthusiasm during this year's Yoga Day. #MannKiBaat pic.twitter.com/5hGZ25dTf3
— PMO India (@PMOIndia) June 24, 2018
Yoga unites humanity. #MannKiBaat pic.twitter.com/WEObjPT6PX
— PMO India (@PMOIndia) June 24, 2018
Sights that made 125 crore Indians proud. #MannKiBaat pic.twitter.com/PKgiWwBKuQ
— PMO India (@PMOIndia) June 24, 2018
Yoga is ushering a wellness revolution. #MannKiBaat pic.twitter.com/TpNwlDg6kG
— PMO India (@PMOIndia) June 24, 2018
The doctors of India can solve complex medical problems thanks to their diligence. #MannKiBaat pic.twitter.com/gBtGxBfvcC
— PMO India (@PMOIndia) June 24, 2018
Hear #MannKiBaat. PM is talking about the life and message of Sant Kabir Das Ji. https://t.co/zuDP05llHv
— PMO India (@PMOIndia) June 24, 2018
The thoughts and ideals of Sant Kabir Das Ji emphasize on social harmony. #MannKiBaat pic.twitter.com/eGUQmaQ8zS
— PMO India (@PMOIndia) June 24, 2018
In 2019 we mark the 550th Prakash Parv of Guru Nanak Dev Ji. Let us think about ways in which we can mark this historic occasion. #MannKiBaat pic.twitter.com/gA4o2Oo1eV
— PMO India (@PMOIndia) June 24, 2018
Remembering the martyrs of the Jallianwala Bagh massacre. #MannKiBaat pic.twitter.com/XLd5ivgxlD
— PMO India (@PMOIndia) June 24, 2018
PM @narendramodi remembers the great Dr. Syama Prasad Mookerjee during #MannKiBaat.
— PMO India (@PMOIndia) June 24, 2018
He remembers Dr. Mookerjee's role in the education sector and industrial development of India. pic.twitter.com/yt2iaMa6Hf
Over the last few days, I have been interacting with beneficiaries of various initiatives of the Government of India. I learnt a lot from their experiences and life journeys: PM @narendramodi #MannKiBaat
— PMO India (@PMOIndia) June 24, 2018
PM @narendramodi speaks about the historic GST, calls it a great example of cooperative federalism. #MannKiBaat pic.twitter.com/ciDAPfPEdr
— PMO India (@PMOIndia) June 24, 2018