உதவிச் செயலாளர்கள் பிரிவு உபசார அமர்வின் ஒரு பகுதியாக 2014 – ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னிலையில் செயல் விளக்கங்களை தாக்கல் செய்தனர்.
இந்த அலுவலர்கள் தெரிவு செய்யப்பட்ட பல மையக் கருத்துக்களைக் கொண்ட 8 செயல் விளக்கங்களை வழங்கினார்கள். பயனாளிகளுக்கு வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டம், தூய்மை இந்தியா, மின்னணு நீதி மன்றங்கள், சுகாதாரம் மற்றும் ஆட்சி முறையில் துணைக் கோள் செயலிகள் போன்ற தலைப்புகளில் இவை அமைந்திருந்தன.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் அவர்களது கருத்தாழமிக்க செயல் விளக்கங்களுக்காக அவர்களைப் பாராட்டினார்.
மத்திய அரசில் ஐ.ஏ.எஸ் அலுவலர்களை உதவிச் செயலாளர்களாக இணைப்பது இளமையும் அனுபவமும் சேர்ந்த கலவையிலிருந்து சிறப்பானவற்றை பெறுவதற்கான அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். இன்று வழங்கப்பட்ட அறிக்கைகள் தமக்கு மன நிறைவை அளித்திருப்பதாகவும் அரசின் நெடு நோக்கு வெற்றிகரமான பாதையில் சென்று கொண்டுள்ளதை இது காட்டுகிறது என்றும் பிரதமர் கூறினார்.
குழு உணர்வை உருவாக்கிக் கொள்ளுமாறு அலுவலர்களைப் பிரதமர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். அவர்கள் எந்த நிலையில் பணியாற்றினாலும் அங்குள்ள தடைகளை தகர்க்கும் வகையில் பணியாற்றுமாறு அறிவுரை கூறினார்.
அரசியல் ஒருபோதும் கொள்கைகளை முந்தக் கூடாது என்று குறிப்பிட்ட பிரதமர் இளம் அலுவலர்கள் முடிவு மேற்கொள்ளும் போது இரண்டு விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். (1) இந்த முடிவுகள் எவையும் ஒருபோதும் தேசிய நலனுக்கு எதிராக இருக்கக் கூடாது. (2) இந்த முடிவுகள் மிகவும் ஏழையாக உள்ள மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது.