அமெரிக்கா-இந்தியா பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் புதுதில்லியில் பிரதமர் திரு.நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தனர். இந்த அமைப்பின் தலைவர் திரு.ஜான் சேம்பர்ஸ் இந்தக் குழுவுக்கு தலைமை ஏற்றார்.
இந்தியப் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை வைத்ததற்காக பிரதமர் இந்தக் குழுவைப் பாராட்டினார். நாட்டில் ஸ்டார்ட்அப்-க்கு உரிய சுற்றுச்சூழல் ஏற்பட்டுள்ளது பற்றியும், இந்திய இளைஞர்களின் திறமையைக் கொண்டு தொழில் தொடங்குவது பற்றியும் அவர் குறிப்பிட்டார். அடல் டிங்கரிங் பரிசோதனைக் கூடங்கள், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக ஹேக்கத்தான் போட்டிகளை நடத்துவது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது உள்பட அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பிரதமர் எடுத்துரைத்தார்.
கார்ப்பரேட் வரிகளை குறைத்ததுடன், தொழிலாளர் நல சீர்திருத்தங்களை மேற்கொண்டது சுலபமாக தொழில் நடத்துவதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்று பிரதமர் தெரிவித்தார். எந்தவித இடையூறுமின்றி சுலபமான வாழ்க்கையை உறுதி செய்வதே அரசின் இலக்கு என்று அவர் குறிப்பிட்டார். ஜனநாயகம், மக்கள்தொகை, அறிவாற்றல் ஆகியவற்றை உள்ளடக்கியதே இந்தியாவின் தனித்துவமான வலிமை என்று அவர் கூறினார்.
பிரதமரின் நாட்டுநலனுக்கான தொலைநோக்குப் பார்வை குறித்து குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். இந்தியாவின் அடுத்த 5 ஆண்டுகள் உலகின் அடுத்த 25 ஆண்டுகளை வரையறுக்கக் கூடியதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
யுஎஸ்ஐஎஸ்பிஎப் பற்றி
அமெரிக்கா-இந்தியா பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு (யுஎஸ்ஐஎஸ்பிஎப்) ஒரு லாபம் கருதாத அமைப்பாகும். பொருளாதார வளர்ச்சி, தொழில் தொடங்குதல், வேலைவாய்ப்பு உருவாக்கம், புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளின் கொள்கை ஆலோசனை வழியில் இந்திய-அமெரிக்க இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.