எமதருமை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள். ஆகாசவாணியில் மனதின் குரல் மூலமாக உங்களோடு பேசத் தொடங்கி 3 ஆண்டுகள் முழுமையடைந்திருக்கிறன. இன்று 36ஆம் பகுதி. ஒருவகையில் பாரதத்தின் ஆக்கப்பூர்வமான சக்தியை, தேசத்தின் அனைத்து மூலைகளிலும் நிறைந்து கிடக்கும் உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை, சில இடங்களில் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன – என்றாலும், மக்கள் மனங்களில் இருக்கும் உணர்வுகளோடு கலந்து உறவாடக் கூடிய அற்புதமான வாய்ப்பை எனக்கு மனதின் குரல் அளித்திருக்கிறது; இதை, என் மனதின் குரல் என்று நான் எப்போதுமே கூறியது கிடையாது என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
மனதின் குரல் நாட்டுமக்களோடு இணைந்தது, அவர்கள் உணர்வுகளோடு கலந்தது, அவர்களின் ஆசை அபிலாஷைகளோடு இணைந்த ஒன்று. மனதின் குரலில் நான் மிகக் குறைவான அளவிலே தான் கூற முடிகிறது,
ஆனால் எனக்கு பெருஞ்செல்வக் குவியலாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மின்னஞ்சல் ஆகட்டும், தொலைபேசியாகட்டும், mygovஆகட்டும், NarendraModiApp ஆகட்டும், இவற்றிலிருந்து எல்லாம் எனக்கு நீங்கள் அனுப்பும் தகவல்கள் கிடைக்கின்றன. இவையனைத்தும் அதிக கருத்தூக்கம் அளிப்பவையாக இருக்கின்றன. இவற்றில் பல, அரசு செயல்பாட்டில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்துவது பற்றியவையாக இருக்கின்றன. சில வேளைகளில் தனிநபர் தொடர்புடைய குறைபாடுகள், சில வேளைகளில் சமூகப் பிரச்சனைகள் போன்றவை மீது கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கின்றன.
மாதம் ஒரு முறை உங்களுடைய சுமார் அரை மணி நேரத்தை நான் எடுத்துக் கொள்கிறேன், ஆனால் மக்களோ, மாதம் 30 நாட்களும் மனதின் குரல் தொடர்பாக எனக்குத் தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இதன் விளைவாக, அரசின் செயல்பாடுகளில் புரிந்துணர்வு ஏற்பட்டு, சமூகத்தின் கோடியில் இருப்போரிடத்திலும் இருக்கும் ஆற்றல் மீது கவனம் சென்றிருக்கிறது. இது இயல்பான அனுபவமாகவே இருக்கிறது. ஆகையால் மனதின் குரலின் இந்த 3 ஆண்டுக்காலப் பயணம், நாட்டுமக்களின், அவர்கள் உணர்வுகளின், அனுபவங்களின் பயணம். இத்தனை குறைவான காலத்தில் தேசத்தின் சாதாரணக் குடிமகனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதற்கு, நான் நாட்டுமக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மனதின் குரலில் நான் எப்பொழுதும் ஆச்சார்ய விநோபா பாவேயின் சொற்களை நினைவில் இருத்திக் கொண்டு வந்திருக்கிறேன். ஆச்சார்ய விநோபா பாவே எப்போதும் கூறுவார், ‘அ-சர்க்காரீ, அசர்க்காரீ’, அதாவது அரசு சாராதது, ஆக்கப்பூர்வமான தாக்கம் நிறைந்தது என்று பொருள். நானும் தேசத்தின் மக்களை மையமாக வைத்துத் தான் மனதின் குரலை ஒலிக்க முயற்சிகள் செய்து வந்திருக்கிறேன். அரசியலின் சாயம் அதில் படியாமல் பார்த்துக் கொண்டேன். தற்போது நிலவும் சூழல், ஆக்ரோஷம் ஆகியவற்றில் நாமும் அடித்துச் செல்லப்படாமல், திடமான மனதோடு, உங்களோடு இணைந்திருக்க முயற்சி செய்திருக்கிறேன். கண்டிப்பாக, 3 ஆண்டுகளுக்குப் பிறகு சமூக விஞ்ஞானிகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஊடக வல்லுனர்கள் இதனைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதில் இருக்கும் குறை-நிறைகள் என அனைத்தையும் அலசி ஆராய்வார்கள். இந்த ஆய்வுகளும் கருத்துப் பரிமாற்றங்களும் எதிர்காலத்தில் மனதின் குரலுக்கு அதிக பயன்பாடாக இருக்கும், அதில் புதிய தெம்பு, புதிய விழிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாம் உணவு உண்ணும் வேளையில் எவ்வளவு உணவு உட்கொள்ள வேண்டும் என்பதில் தான் நமது கவனம் இருக்க வேண்டும், உணவை வீணாக்கக் கூடாது என்று, நான் முன்பு மனதின் குரலில் ஏற்கனவே கூறியிருந்தேன். இதன் பின்னர், தேசத்தின் ஒவ்வொரு இடத்திலிருந்தும் எனக்கு ஏராளமான கடிதங்கள் வந்தன, பல சமூக அமைப்புகள், பல இளைஞர்கள் எல்லாம் உணவு வீணாகாமல் இருக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதைத் தெரிவித்திருந்தார்கள். உண்ணப்படாமல் மீந்து போகும் உணவை சேகரித்து, அதை எப்படி முறையாகப் பயன்படுத்துவது என்பது தொடர்பாக பணியாற்றுபவர்கள் என் மனதில் வியாபித்தார்கள், என் மனம் குளிர்ந்த்து, மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
ஒரு முறை மகாராஷ்டிரத்தின் ஓய்வு பெற்ற ஆசிரியர் சந்திரகாந்த் குல்கர்னி அவர்கள் பற்றி மனதின் குரலில் கூறியிருந்தேன், ஓய்வூதியமாக அவருக்கு மாதம் கிடைக்கும் 16,000 ரூபாயிலிருந்து மாதம் 5,000 ரூபாய் வீதம், பின் தேதியிட்ட 51 காசோலைகளாக, தூய்மைப் பணிக்காக தானமாக அளித்திருந்தார். அதன் பின்னர், தூய்மைப்பணிக்காக இந்த வகையில் தங்கள் பங்கு பணியாற்ற எவ்வளவோ பேர் வந்தார்கள் என்பதை நான் கவனித்தேன்.
ஒரு முறை அரியானாவின் பஞ்சாயத்துத் தலைவர் மகளோடு செல்ஃபி எடுத்துக் கொண்டதை கவனித்தேன், அதை மனதின் குரலில் சொல்லவும் செய்தேன். பார்த்துக் கொண்டே இருந்த வேளையில் பாரதத்தில் மட்டுமல்லாமல், உலகெங்கிலுமிருந்தும் மகளுடன் செல்ஃபி என்பது மிகப்பெரிய இயக்கமாகவே பரிமளித்து விட்டிருந்தது. இது சமூக ஊடகங்களின் பிரச்சினை அல்ல. ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் புதிய தன்னம்பிக்கை, புதிய பெருமிதம் ஏற்படுத்தக் கூடிய நிகழ்வாக மாறிப் போனது. ஒவ்வொரு தாய் தகப்பனுக்கும், தனது மகளுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஒவ்வொரு பெண்ணிடமும் தனக்கென்று மகத்துவம் இருக்கிறது என்ற உணர்வு உண்டானது.
கடந்த நாட்களில் பாரத அரசின் சுற்றுலாத் துறையின் அமர்வு ஒன்றில் கலந்து கொண்டேன். நீங்கள் எங்கே சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், அங்கே நீங்கள் வியக்கத்தக்க இந்தியா (incredible india) பற்றிய புகைப்படங்களை எனக்கு அனுப்பி வையுங்கள் என்று பயணம் மேற்கொள்வோரிடம் கேட்டுக் கொண்டேன். லட்சக்கணக்கான படங்கள், பாரதத்தின் மூலை முடுக்கெங்கிலுமிருந்தும் வந்தன, ஒருவகையில் இது சுற்றுலாத் துறையில் பணிபுரிவோருக்கு பெரும் சொத்தாக மாறியது. சின்ன சின்ன விஷயம் கூட எப்படி மிகப் பெரிய இயக்கமாக உருமாறுகிறது பாருங்கள்; இதை நான் மனதின் குரலில் நன்கு அனுபவித்து உணர்ந்தேன். இன்று என் மனதில் பட்டது, கூறினேன்; ஏனென்றால், 3 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்ந்த பல நிகழ்வுகள் என் மனதில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. தேசம் சரியான பாதையில் பயணிக்க ஒவ்வொரு கணமும் முனைப்போடு இருக்கிறது. தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் மற்றவர்கள் நலனுக்காக, சமுதாயத்தின் நன்மைக்காக, தேசத்தின் முன்னேற்றத்திற்காக, ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய விழைகிறார். மனதின் குரலின் இந்த மூன்றாண்டுகால இயக்கத்தில், நான் தேச மக்களிடமிருந்து தெரிந்து கொண்டேன், புரிந்து கொண்டேன், கற்றுக் கொண்டேன். எந்த தேசத்திற்கும் இது மிகப்பெரிய மூலதனம், மிகப்பெரிய சக்தி. நான் இதயப்பூர்வமாக தேச மக்களுக்கு என் வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன்.
ஒருமுறை மனதின் குரலில் கதராடைகள் விஷயம் பற்றிக் கூறியிருந்தேன். கதராடை என்பது வெறும் துணியல்ல, கருத்து. இப்போதெல்லாம் கதராடைகள்பால் கணிசமான அளவு ஆர்வம் அதிகரித்திருப்பதை என்னால் காண முடிகிறது, நான் யாரையும் கதராடைகளை மட்டுமே அணியுங்கள் என்று கூறவில்லை, ஆனால் பலவகையான துணிகள் அணிகையில், கதராடையையும் அணியலாமே என்று தான் கூறுகிறேன். அது வீட்டில், விரிப்பு, கைக்குட்டை, திரைச்சீலைகள் ஆகிய எதுவாகவும் இருக்கலாம்.
இளைய சமுதாயத்தினரிடையே இப்போதெல்லாம் கதராடைகள் மீதான ஈர்ப்பு அதிகரித்திருப்பதை என்னால் காண முடிகிறது. கதராடைகள் விற்பனை அதிகரித்திருக்கிறது, இதன் காரணமாக ஏழைகளின் இல்லங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறது. அக்டோபர் 2ஆம் தேதி முதல் கதராடைகளில் தள்ளுபடி அளிக்கப்படுகிறது, கணிசமான அளவுக்கு இந்தத் தள்ளுபடி இருக்கிறது. நான் மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன், கதராடைகள் தொடர்பான இயக்கத்தை நாம் முன்னெடுத்துச் செல்வோம், அதை மேலும் வலிமைப்படுத்துவோம்.
கதராடைகளை நாம் வாங்கும் போது ஏழையின் இல்லங்களில் தீபாவளி தீபங்கள் ஒளிவிடும் என்ற உணர்வை நாம் மனதில் தாங்கிச் செயல்பட வேண்டும். இந்தச் செயல்பாட்டால் நம் தேசத்தின் ஏழைகளுக்கு சக்தி பிறக்கிறது, இதற்காகவே நாம் இதைச் செய்தாக வேண்டும். கதராடைகள் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதன் காரணமாக, கதராடைகள் துறையில் பணியாற்றுவோரிடத்திலும், பாரத அரசில் கதராடைகள் தொடர்பானவர்களிடத்திலும், புதிய வகையில் சிந்திக்கும் ஊக்கமும் உற்சாகமும் ஏற்பட்டிருக்கிறது. புதிய தொழில்நுட்பத்தை எப்படிப் புகுத்துவது, உற்பத்தித் திறனை எவ்வாறு அதிகரிப்பது, சூரியசக்திக் கருவிகளை எப்படி அறிமுகப்படுத்துவது என்ற சிந்தனை ஏற்பட்டிருக்கிறது. 20-30 ஆண்டுகளாக வழக்கத்திலிருந்து மறைந்து போயிருந்த பழம்பாரம்பரியத்துக்கு எப்படி புத்துயிர் அளிப்பது என்று எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்.
உத்தர பிரதேசத்தில், வாராணசியின் சேவாபூரில், சேவாபுரீ காதி ஆசிரமம் 26 ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடந்தது, அது இப்போது புதுத் தெம்போடு செயல்படத் தொடங்கியிருக்கிறது. பலவகையான செயல்பாடுகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. பலருக்கு வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. காஷ்மீரத்தின் பம்போரில் மூடப்பட்டுக் கிடந்த காதி மற்றும் கிராமோத்யோக்கின் பயிற்சி மையம், இப்போது மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது, இந்தத் துறையில் கஷ்மீரத்தால் ஏராளமான அளவு பங்களிப்பு நல்க இயலும். இந்தப் பயிற்சி மையம் மீண்டும் திறக்கப் பட்டிருப்பதன் காரணமாக, புதிய தலைமுறையினருக்கு நவீன முறையில் உற்பத்தி, நெசவு, புதிய பொருட்களை உருவாக்கல் ஆகியவற்றில் உதவி கிட்டும். பெரிய பெரிய நிறுவனங்களும் தீபாவளியின் பொருட்டு பரிசுகள் அளிக்கும் வேளையில், அவர்களும் கதராடைப் பொருட்களையே அளிக்கிறார்கள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மக்களும் ஒருவருக்கு ஒருவர் கதராடைப் பொருட்களை பரிசாக அளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இயல்பான வகையில் எவ்வாறு ஒரு விஷயம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்பதை நம்மால் நன்றாக உணர முடிகிறது.
எமதருமை நாட்டுமக்களே, கடந்த மாத மனதின் குரலிலேயே நாமனைவரும் ஒரு உறுதிப்பாட்டை மேற்கொண்டிருந்தோம்; அதாவது, காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2ஆம் தேதிக்கு 15 தினங்கள் முன்பாகவிருந்தே, நாம் நாடுமுழுவதிலும் தூய்மைக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவோம் என்று தீர்மானித்திருந்தோம். தூய்மை மூலமாக மக்கள் மனங்களை ஒன்றிணைப்போம். நமது மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் இந்தப் பணியைத் தொடங்கி வைத்தார், தேசம் இதில் ஒன்றிணைந்தது. பெரியோர்-குழந்தைகள், ஆண்-பெண், நகரம்-கிராமம் என அனைவரும் இன்று இந்த தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக, தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் உறுதிப்பாடு மேற்கொண்டு, வெற்றி கொள்வோம் என்று கூறியிருந்தேன், இந்த தூய்மை இயக்கம், நம் உறுதிப்பாட்டின் துணையோடு வெற்றி பெறும் திசை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பது, நம் கண்களின் முன்னே விரிந்திருக்கிறது. அனைவரும் இதை தங்களுக்கு உரியதாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள், உதவி புரிகிறார்கள், இதை சாதித்துக் காட்ட தங்களாலான பங்களிப்பை அளிக்கிறார்கள். நான் மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவருக்கு என் நன்றியை வெளிப்படுத்தும் அதே வேளையில், இந்த இயக்கத்தோடு இணைந்திருக்கும் தேசத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் இதோடு தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள், திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அதிகாரிகள், பணியாளர்கள், காவல்துறையினர், இராணுவ வீரர்கள் என அனைவரும் தங்களை இந்த இயக்கத்தோடு இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவிடங்களில் அசுத்தப்படுத்தினால் மக்கள் தட்டிக் கேட்கிறார்கள், அங்கே பணியாற்றுவோரிடத்திலும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதில் ஒரு வகை அழுத்தம் உணரப்பட்டு வருகிறது. இதை நல்ல விஷயமாகவே நான் உணர்கிறேன்; தூய்மையே சேவை இயக்கம் தொடங்கி நான்கே நாட்களில், சுமார் 75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், 40,000த்திற்கும் அதிகமான முன்னெடுப்புகளில் பங்கெடுத்தார்கள், சிலர் இன்னும் விடாது பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து பணியாற்றும் உறுதி மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த முறை நான் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க நேர்ந்தது –தூய்மைப்படுத்துவது என்பது ஒரு விஷயம், நாம் விழிப்போடு இருந்து அசுத்தம் செய்யாமல் இருப்பது என்பது இன்னொரு விஷயம்; அதே நேரத்தில் தூய்மை என்பதே நமது இயல்பாக மாற, ஓர் சிந்தனை இயக்கத்தைச் செயல்படுத்துவது முக்கியமான ஒன்று. இந்த முறை தூய்மையே சேவை தொடர்பான பல போட்டிகள் நடைபெற்றன. 2 ½ கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் கட்டுரைப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டார்கள். ஆயிரக்கணக்கான பிள்ளைகள் தங்களுடைய கற்பனைத் திறனைக் கொண்டு ஓவியங்களை வரைந்தார்கள். பலர் கவிதைகள் இயற்றினார்கள். சமூக ஊடகங்களில் நமது சின்னஞ்சிறு குழந்தைகள் அனுப்பும் ஓவியங்களை நான் தரவேற்றம் செய்கிறேன், அவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறேன். தூய்மை பற்றி நாம் பேசும் வேளையில், ஊடகத் துறையினருக்கு என் நன்றிகளைத் தெரிவிப்பதை நான் மறப்பதே இல்லை. இந்த இயக்கத்தை அவர்கள் மிகுந்த தூய்மை உணர்வோடு முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள். அவரவருக்கு உரிய பாணியில், இதோடு தங்களை இணைத்துக் கொண்டு, ஆக்கப்பூர்வமான சூழலை ஏற்படுத்த அவர்கள் மிகப்பெரிய பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள். இன்று அவர்கள், அவரவருக்கு உரிய வகையில் தலைமையேற்றுச் செயல்படுத்தியும் வருகிறார்கள். நமது தேசத்தின் மின்னணு ஊடகங்கள், பத்திரிக்கைகள் ஆகியன தூய்மையே சேவை இயக்கத்துக்கு எத்தனை பெரிய சேவை செய்து வருகின்றன என்பதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். சில நாட்கள் முன்பாக, ஸ்ரீநகரைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளைஞர் பிலால் டார் தொடர்பாக, ஒருவர் என்னிடம் தெரிவித்தார். ஸ்ரீநகர் நகராட்சி, பிலால் டாரை தூய்மை இயக்கத்துக்கான தூதுவராக ஆக்கியது; இயக்கத் தூதுவர் என்றால் திரையுலகத்தைச் சேர்ந்தவராகவோ, விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவராகவோ இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கலாம், அப்படி அல்ல. பிலால் டார் தனது 12-13 வயதிலிருந்தே, கடந்த 5-6 ஆண்டுகளாக தூய்மைப் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆசியாவின் மிகப்பெரிய ஏரி ஸ்ரீநகருக்கருகே இருக்கிறது, அதில் பிளாஸ்டிக், பாலித்தீன், பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள், குப்பைக் கூளங்கள் ஆகியவற்றை இவர் அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தார். இதிலிருந்து வருமானத்தையும் ஈட்டி வந்தார். இவரது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனதால், இவர் தனது வாழ்வாதாரத்துடன் தூய்மைப் பணியை இணைத்துக் கொண்டார். ஆண்டுதோறும் சுமார் 12,000 கிலோவுக்கும் அதிகமான குப்பைக் கூளங்களை இவர் அகற்றியிருக்கிறார் என்று அனுமானம் கூறுகிறது. தூய்மையின் பொருட்டு இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இவரை இயக்கத் தூதுவராக ஆக்கியதற்காக, நான் ஸ்ரீநகர் நகராட்சிக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீநகர் சுற்றுலாத் தலமாக இருப்பதால், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் ஸ்ரீநகர் செல்ல விழைகிறான். இத்தகைய ஓரிடத்தில் தூய்மைக்கு வலு சேர்ப்பது என்பது மிகப்பெரிய விஷயம். அவர்கள் பிலாலை இயக்கத் தூதுவராக ஆக்கியதோடு, தூய்மைப்பணியில் ஈடுபட்டிருக்கும் அவருக்கு வாகனம், சீருடை ஆகியவற்றை அளித்திருக்கிறார்கள் என்பது பாராட்டுக்குரியது. மேலும் இவர் மற்ற இடங்களுக்கும் சென்று தூய்மை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி, உத்வேகம் அளிப்பதோடு, நல்ல பலன்கள் கிடைக்கும் வரை ஓய்வதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிலால் டார், வயதில் சிறியவரானாலும், தூய்மை மீதான ஆர்வம் கொண்ட அனைவருக்கும் ஊக்கந்தரும் காரணியாகவும் விளங்குகிறார். நான் பிலால் டாருக்கு பலபல பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எமதருமை நாட்டுமக்களே, வரலாற்றின் இன்றைய பக்கங்களிலிருந்து தான் வருங்கால சரிதம் பிறக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்; வரலாறு பற்றிப் பேசும் வேளையில், மாமனிதர்கள் பற்றிய நினைவு வருவது மிகவும் இயல்பான விஷயம் தானே. இந்த அக்டோபர் மாதம் நமது ஏராளமான மாமனிதர்களை நினைவுகூரும் மாதமாக மிளிர்கிறது. காந்தியடிகள் தொடங்கி, சர்தார் படேல் வரை, இந்த அக்டோபர் மாதத்தில் தான் ஏராளமான மாமனிதர்கள் நம் கண் முன்னே விரிகிறார்கள். இவர்கள் 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டில் நமக்கு திசை காட்டினார்கள், தலைமை தாங்கினார்கள், தேசத்திற்காக பல துயரங்களை அனுபவித்தார்கள். அக்டோபர் மாதம் 2ஆம் தேதி, காந்தியடிகள், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள், அக்டோபர் மாதம் 11 ஜெயப்பிரகாஷ் நாராயண், நானாஜி தேஷ்முக் ஆகியோரின் பிறந்த நாள், செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி பண்டித தீன் தயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த நாள். நானாஜி, தீன் தயாள் ஆகியோருக்கு இந்த ஆண்டு நூற்றாண்டாக அமைந்திருக்கிறது. இந்த அனைத்து மாமனிதர்களின் மையக்கருவுமாக எது இருந்தது தெரியுமா? தேசத்திற்காக வாழ்தல், தேசத்தின் பொருட்டு சாதித்துக் காட்டுதல், வெறும் உபதேசங்களோடு நிற்காமல், தங்கள் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுதல் ஆகியவை தான் இவர்களுக்கிடையே பொதுவான விஷயமாக இருந்தது. காந்தியடிகள், ஜெயப்பிரகாஷ் நாராயண், தீன் தயாள் போன்ற மாமனிதர்கள், அதிகார மையங்களிலிருந்து விலகியே இருந்தாலும், மக்களின் வாழ்வோடு கலந்து வாழ்ந்தார்கள், அவர்களுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்தார்கள், அனைவரின் நலனுக்காகவும், சந்தோஷத்திற்காகவும் ஏதாவது ஒரு செயல்பாட்டில் ஈடுபட்டு வந்தார்கள். நானாஜி தேஷ்முக் அவர்கள் அரசியல் வாழ்வைத் துறந்து கிராமோதய் இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார், அவரது நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த வேளையில், நாம் கிராமோதய் தொடர்பான அவரது பணிக்கு மதிப்பளித்து அணுகுவது முக்கியமானது. பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களோடு பேசும் போது, எப்போதும் நானாஜி தேஷ்முக் அவர்களின் கிராமப்புற முன்னேற்றம் பற்றிய விஷயங்களை முன்வைப்பார். மிக்க மரியாதையோடு இதை விவரிப்பார், அவரே கூட நானாஜியின் இந்தப் பணிகளைப் பார்க்க கிராமங்களுக்குச் சென்றார்.
காந்தியடிகளைப் போலவே, தீன் தயாள் உபாத்யாயா அவர்களும் சமுதாயத்தின் கடைக்கோடியில் இருக்கும் மனிதன் பற்றியே விரித்துப் பேசுவார். தீன் தயாள் அவர்கள் சமூகத்தில் இருக்கும் ஏழைகள், பாதிக்கப் பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் வாழ்வினில், கல்வி, வேலைவாய்ப்பு என எந்த வகையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது பற்றிய நினைவாகவே இருப்பார். இந்த அனைத்து மாமனிதர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பது, அவர்களுக்கு நாம் ஆற்றும் உபகாரம் அல்ல, இந்த மாமனிதர்களை நாம் ஏன் நினைத்துப் பார்க்கிறோம் என்றால், அப்படி நினைக்கும் போது, முன்னே நாம் செல்ல வேண்டிய பாதை துலங்குகிறது, வழி புலப்படுகிறது.
அடுத்த மனதின் குரலில் நான் கண்டிப்பாக சர்தார் வல்லபபாய் படேல் அவர்களைப் பற்றிக் கூறுவேன், ஆனால் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தேசத்தில், ஒற்றுமைக்கான ஓட்டம், ஒன்றுபட்ட பாரதம் ஒப்பற்ற பாரதம் ஆகியன நடைபெறவிருக்கின்றன. தேசத்தின் ஒவ்வொரு நகரிலும் பெரிய அளவில் இந்த ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற வேண்டும், வானிலையும் இதற்கு ஏற்றபடி சுகமாக இருக்கிறது. சர்தார் அவர்களைப் போல இரும்புத் தன்மை வாய்க்கப் பெறவும், இது தேவையாக இருக்கிறது. சர்தார் அவர்கள் அல்லவா தேசத்தை ஒருமைப்படுத்தினார்!! நாமும் ஒற்றுமைக்காக இந்த ஓட்டத்தில் பங்கெடுத்து, ஒற்றுமை மந்திரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை, இந்தியாவின் சாதனை என்று மிக இயல்பாக நாம் கூறுகிறோம். பன்முகத்தன்மை பற்றி நாம் பெருமைப்படும் அதே வேளையில், நீங்கள் இந்தப் பன்முகத்தன்மையை அனுபவித்து உணரும் முயற்சியில் ஈடுபட்டதுண்டா? நாட்டு மக்களிடம், குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் நான் மீண்டும் மீண்டும் கூற விரும்புவது என்னவென்றால், நாம் உயிர்ப்புடன் இருக்கிறோம் என்பது தான். நமது பாரதத்தின் பன்முகத்தன்மையை அனுபவித்துப் பாருங்கள், அதை உணருங்கள், அதன் வாசத்தை முகர்ந்து பாருங்கள். உங்களுக்குள்ளே இருக்கும் தனித்தன்மையின் மலர்ச்சிக்காக, நமது தேசத்தின் இந்தப் பன்முகத்தன்மை ஓர் பள்ளிக்கூடமாக அமையும் என்பதை நீங்களே காண முடியும். விடுமுறைக்காலம், தீபாவளி நேரம், நமது தேசத்தின் நாலாபுறத்திலும், எங்காவது செல்ல வேண்டும் என்ற மனோநிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நாம் நமது தேசத்தைச் சுற்றிப் பார்க்காமல், தேசத்தின் பன்முகத்தன்மையைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல், பகட்டுகளால் ஈர்க்கப்பட்டு அயல்நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதை விரும்புகிறோம் என்பது சற்று கவலையளிப்பதாக இருக்கிறது. நீங்கள் உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் பாதகமில்லை, ஆனால் நம் வீட்டையும் சுற்றிப் பார்க்கலாமே!! வட இந்தியாவிலிருப்பவர்களுக்கு, தென்னிந்தியாவில் என்ன இருக்கிறது என்பது தெரியாமலிருக்கிறது. மேற்கிந்தியாவில் இருப்பவருக்கு, கிழக்கிந்தியாவில் என்ன இருக்கிறது என்பது தெரியாமலிருக்கிறது. நமது தேசத்தில் எத்தனை பன்முகத்தன்மை கொட்டிக் கிடக்கிறது தெரியுமா?
காந்தியடிகள், லோக்மான்ய திலகர், சுவாமி விவேகானந்தர், நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோரின் உரைகளை நீங்கள் கவனித்தீர்கள் என்று சொன்னால், ஒரு விஷயம் நன்கு புலப்படும் – அவர்கள் பாரதத்தைச் சுற்றிப் பார்த்த போது, பாரதத்தை பார்க்கவும் புரிந்து கொள்ளவும், அதற்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கவும் புதிய உத்வேகம் பிறந்தது. இந்த மாமனிதர்கள் அனைவரும் பாரதத்தை முழுமையாகச் சுற்றிப் பார்த்தார்கள். தங்கள் செயல்பாட்டிற்கு முன்பாக, அவர்கள் பாரதத்தைத் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். பாரதத்தை தங்களுக்குள்ளே வாழ்ந்து பார்க்க முயன்றார்கள். நமது பல்வேறு மாநிலங்கள், பல்வேறு சமூகங்கள், குழுக்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், அவர்களின் பாரம்பரியம், அவர்களின் ஆடையணிகள், அவர்களின் உணவு முறைகள், அவர்களின் நம்பிக்கைகள் ஆகியவற்றை மாணவன் என்ற வகையில் கற்றுக் கொள்ள, புரிந்து கொள்ள, வாழ்ந்து பார்க்கும் முயற்சியில் ஈடுபட முடியுமில்லையா?
சென்று பார்ப்பதோடு நின்று விடாமல், நாம் மாணவனாக புரிந்து கொண்டு மாறுவதில் தான் சுற்றுலாவின் மதிப்புக்கூட்டு இருக்கிறது. இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது. 450க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இரவில் தங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, பாரதத்தின் இந்தப் பொறுப்பை என்னால் தாங்க முடிகிறது என்றால், நான் மேற்கொண்ட சுற்றுப்பயணங்கள் எனக்களித்த அனுபவம் எனக்குக் கைகொடுக்கிறது என்பது தான் காரணம். விஷயங்களைப் புரிந்து கொள்வதால் பெரும் வசதியாக இருக்கிறது. நீங்களும் இந்த விசாலமான பாரதத்தைச் சுற்றிப் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்; வேற்றுமையில் ஒற்றுமை என்பது வெறும் கோஷமாக மட்டும் நின்று விடக் கூடாது, இது நமது மகத்தான சக்தியின் களஞ்சியம், இதை அனுபவித்துப் பாருங்கள். ஒன்றுபட்ட பாரதம் ஒப்பற்ற பாரதம் என்ற கனவு இதில் பொதிந்திருக்கிறது. உணவு முறைகளில் தான் எத்தனை வகைகள்! உங்கள் வாழ்க்கை முழுவதிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை உணவை நீங்கள் உண்டு வந்தால், அதே உணவை மறுமுறை உண்ண வாய்ப்பே இருக்காது, அந்த அளவு வகைகள் உள்ளன. நமது சுற்றுலாவின் இது மிகப்பெரிய பலம். இந்த விடுமுறை நாட்களில் நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்பதோடு நின்று விடாமல், மாற்றத்திற்காக செல்கிறோம் என்று இல்லாமல், விஷயங்களை அறிந்து-புரிந்து-அடையும் நோக்கத்தோடு வெளியே செல்லுங்கள். பாரதத்தை உங்களுக்குள்ளே கரைத்துக் கொள்ளுங்கள். கோடானுகோடி மக்களின் பன்முகத்தன்மையை உங்களுக்குள்ளே ஐக்கியப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த அனுபவங்கள் வாயிலாக உங்கள் வாழ்க்கை நிறைவு பெறும். உங்களின் கண்ணோட்டம் விசாலப்படும். உங்கள் அனுபவங்களை விட பெரிய ஆசான் வேறு யார் இருக்க முடியும், சொல்லுங்கள்!! பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் பெருமளவு சுற்றுலாவுக்கானதாக இருக்கிறது. இந்த முறையும் நீங்கள் சென்றால், எனது இந்த இயக்கத்தை நீங்கள் மேலும் முன்னெடுத்துச் சென்றவர்களாவீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும், உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். #incredibleindiaவில் உங்கள் புகைப்படங்களைக் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள். அங்கிருக்கும் மக்களைச் சந்திக்க நேர்ந்தால், அவர்களின் புகைப்படங்களையும் அனுப்பி வையுங்கள். வெறும் கட்டிடங்களோடு நின்று போகாமல், இயற்கை வனப்புகளை மட்டும் படம் பிடிக்காமல், அங்கே வாழும் மக்களின் வாழ்க்கைமுறை பற்றி சில விஷயங்களைப் பதிவு செய்யுங்கள். உங்கள் பயணம் பற்றிய நல்ல கட்டுரை வரையுங்கள். Mygovஇல், NarendraModiAppஇல் அனுப்புங்கள். என் மனதில் ஓர் எண்ணம் எழுகிறது - பாரதத்தில் சுற்றுலாத் துறைக்கு ஊக்கம் அளிப்பதற்காக, நீங்கள் உங்கள் மாநிலத்தில் இருக்கும் 7 மிகச் சிறப்பான சுற்றுலாத் தலங்கள் என்னவாக இருக்கும் – ஒவ்வொரு இந்தியனும் உங்கள் மாநிலத்தின் அந்த 7 இடங்கள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், முடிந்தால், அந்த 7 இடங்களுக்குச் செல்ல வேண்டும். இதற்கு உதவியாக, நீங்கள் இது பற்றி ஏதேனும் தகவல்கள் அளிக்க முடியுமா? NarendraModiAppஇல் இதை வெளிப்படுத்தலாமா? #IncredibleIndiaவில் இதை தெரியப்படுத்தலாமா? ஒரு மாநிலத்தைச் சேர்ந்த பலர் இப்படித் தெரிவித்தால், இதை ஆராய்ந்து பார்த்து, பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த 7 இடங்கள் கூறப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து அவற்றைப் பற்றிய விளம்பரக் கையேடுகளை வெளியிட நான் அரசிடம் கூறுவேன். அதாவது ஒரு வகையில் மக்களின் கருத்துகளைக் கொண்டு சுற்றுலாத் தலங்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும்? இதே போல, நாடெங்கிலும் நீங்கள் பார்த்த இடங்கள், அவற்றில் எவை உங்களுக்கு மிகச் சிறப்பான 7 இடங்களாக இருக்குமோ, மற்றவர்களும் இதைப் பார்க்க வேண்டும், இங்கே செல்ல வேண்டும், இவை பற்றித் தகவல்கள் பெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம், அப்படிப்பட்ட உங்களுக்குப் பிடித்தமான 7 இடங்கள் பற்றியும் நீங்கள் MyGovஇல், NarendraModiAppஇல் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள். பாரத அரசு இதன் மீது செயல்படும். இப்படிப்பட்ட மிகச் சிறப்பான இடங்கள் பற்றிய படங்கள் தயாரிப்பது, வீடியோ உருவாக்குவது, விளம்பரக் கையேடுகள் ஏற்படுத்துவது, அவற்றுக்கு ஆதரவு அளிப்பது – நீங்கள் தேர்ந்தெடுத்த விஷயங்களை அரசு ஏற்றுச் செயல்படும். வாருங்கள், என்னோடு இணையுங்கள். இந்த அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், தேசத்தின் சுற்றுலாத் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நீங்கள் வினையூக்கியாக ஆகலாம். நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
எமதருமை நாட்டுமக்களே, ஒரு மனிதன் என்ற முறையில் பல விஷயங்கள் என் மனதைத் தொடுகின்றன. என் மனதில் அதிர்வலைகளை உருவாக்குகின்றன. என் மனதில் ஆழமான தாக்கத்தை உருவாக்கி விடுகின்றன. நானும் உங்களைப் போன்ற மனிதன் தானே! கடந்த நாட்களில் நிகழ்ந்த சம்பவம், ஒருவேளை உங்கள் கவனத்தையும் இது வந்து எட்டியிருக்கும் – இதிலே பெண்கள் சக்தி மற்றும் தேசபக்தியின் அற்புதமான எடுத்துக்காட்டை நாட்டுமக்கள் பார்த்திருப்பார்கள். இந்திய ராணுவத்திற்கு இரண்டு வீராங்கனைகள் - லெஃப்டினன்ட் சுவாதியும், நிதியும் கிடைத்திருக்கிறார்கள், இவர்கள் அசாதாரணமான வீராங்கனைகள். ஏன் அசாதாரணமானவர்கள் என்று கூறுகிறேன் என்றால், பாரதமாதாவின் சேவையில் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள் சுவாதி, நிதி இருவரின் கணவர்கள். இந்தச் சிறிய வயதில் அவர்கள் உலகம் உதிர்ந்து விடும் போது, அவர்கள் மனோநிலை எப்படி இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்!! ஆனால் தியாகி கர்னல் சந்தோஷ் மஹாதிக்கின் மனைவி சுவாதி மஹாதிக், இத்தகைய கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, தனது மனதை திடமாக்கிக் கொண்டார். அவர் இந்திய இராணுவத்தில் பணிக்குச் சேர்ந்தார். 11 மாதங்கள் வரை கடினமான பயிற்சி மேற்கொண்டு அவர் இராணுவத்தில் இணைந்தார், தனது கணவரின் கனவை நனவாக்க அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதே போல நிதி துபேயின் கணவர் முகேஷ் துபே, இராணுவத்தில் நாயக்காகப் பணிபுரிந்து வந்தார், தாய்நாட்டுப் பணியில் உயிர் துறந்தார், அவரது மனைவியான நிதி, தான் இராணுவத்தில் சேருவது என்ற விரதத்தைப் பூண்டார், இராணுவத்தில் சேர்ந்தார். ஒவ்வொரு குடிமகனுக்கும் நமது இந்த தாய்மை சக்தி மீது, நமது இந்த வீராங்கனைகள் மீது மரியாதை ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. நமது இந்த இரண்டு சகோதரிகளுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள் பலவற்றைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் தேசத்தின் கோடானுகோடி மக்களுக்காக புதிய உத்வேகம், புதிய உயிர்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நமது இந்த சகோதரிகள் இருவருக்கும் மீண்டும் பலபல வாழ்த்துகள்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நவராத்திரி உற்சவம், தீபாவளிக்கு இடையே, நமது தேசத்தின் இளைய சமுதாயத்தினருக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கிறது. ஃபிஃபா (FIFA). 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை இங்கே நடைபெறவிருக்கிறது. நாலாபுறத்திலும் கால்பந்தாட்டத்தின் எதிரொலியாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒவ்வொரு தலைமுறைக்கும் கால்பந்தாட்டம் மீதான ஆர்வம் அதிகரிக்கும். இந்தியாவின் எந்த பள்ளி-கல்லூரியின் மைதானத்திலும் கால்பந்தாட்டம் விளையாடாத இளைஞர்களே இல்லை எனும் அளவிற்கு அனைவரும் இந்த விளையாட்டில் ஈடுபட வேண்டும். வாருங்கள், உலக நாடுகள் அனைத்தும் இந்திய மண்ணில் விளையாட வரும் வேளையில், நாமும் விளையாட்டை நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்வோம்.
என்னுயிர் நாட்டுமக்களே, நவராத்திரி நடைபெற்று வருகிறது. அன்னை துர்க்கையை பூஜிக்க வேண்டிய தருணம் இது. சூழல் முழுக்க புனிதமான சுகந்தத்தால் வியாபித்திருக்கிறது. நாலாபுறத்திலும் ஒருவகை ஆன்மிகச் சூழல், உற்சவச் சூழல், பக்திச் சூழல் நிலவுகிறது; மேலும் இவை அனைத்தும் சக்தியின் சாதனை புரிவதற்கான காலமாக கருதப்படுகிறது. இது சாரதா நவராத்திரியாக அறியப்படுகிறது. இதிலிருந்து தான் சரத்காலம் தொடங்குகிறது. நவராத்திரியின் இந்தப் புனிதமான வேளையில், நான் நாட்டுமக்களுக்கு பலபல நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், தேசத்தின் சாதாரணக் குடிமகனின் வாழ்க்கையின் ஆசைகள்-அபிலாஷைகள் நிறைவேற வேண்டும், தேசம் புதிய புதிய சிகரங்களை எட்டிப் பிடிக்க வேண்டும் என்று அன்னை பராசக்தியிடம் வேண்டிக் கொள்கிறேன். ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன் தேசத்துக்கு வாய்க்கப் பெற வேண்டும். தேசம் துரித கதியில் முன்னேற வேண்டும், 2022இல் பாரதம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், சுதந்திரத் தாகம் கொண்டோரின் கனவுகளை நிறைவேற்றும் முயற்சி, 125 கோடி நாட்டுமக்களின் மனவுறுதி, இடையறாத உழைப்பு, அசகாய சக்தியும் மனோதிடமும் கிட்ட, புதிய இந்தியாவுக்கான 5 ஆண்டுகாலத் திட்டங்களைத் தீட்டிக் கொண்டு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும், அன்னை பராசக்தி நமக்குத் தன் ஆசிகளை அளிக்கட்டும். உங்கள் அனைவருக்கும் பலபல நல்வாழ்த்துகள். கொண்டாட்டங்களில் ஈடுபடுங்கள், குதூகலத்தை பரப்புங்கள்.
மிக்க நன்றி.
Prime Minister Shri Narendra Modi spoke with the President of the United States of America, H.E. Donald J. Trump, today and congratulated him on his historic second term as the 47th President of the United States of America.
The two leaders reaffirmed their commitment for a mutually beneficial and trusted partnership. They discussed various facets of the wide-ranging bilateral Comprehensive Global Strategic Partnership and measures to advance it, including in the areas of technology, trade, investment, energy and defence.
The two leaders exchanged views on global issues, including the situation in West Asia and Ukraine, and reiterated their commitment to work together for promoting global peace, prosperity and security.
The leaders agreed to remain in touch and meet soon at an early mutually convenient date.