புதிதாகப் பணியில் சேர்க்கப்பட்ட சுமார் 51,000 பேருக்கு நியமனக் கடிதங்களைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி 28 அக்டோபர் 2023 அன்று பிற்பகல் 1 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் வழங்கவுள்ளார். இந்நிகழ்வில், பணியில் புதியதாக நியமிக்கப்பட்டவர்களிடையே பிரதமர் உரையாற்றவுள்ளார்.
நாடு முழுவதும் 37 இடங்களில் வேலைவாய்ப்புத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசுத் துறைகள் மற்றும் மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்புகள் நடைபெறுகின்றன. நாடு முழுவதிலுமிருந்து தெரிவுசெய்யப்படும் புதிய நியமனதாரர்கள் மத்திய அரசின் ரயில்வேத்துறை, தபால் துறை, உள்துறை, வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளில் பணியில் சேர்வார்கள்.
வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு படிதான் வேலைவாய்ப்பு விழா. இவ்விழா மேலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஒரு ஊக்கியாக செயல்படும் என்றும், இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தேசிய வளர்ச்சியில் பங்கேற்பதற்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் ஐஜிஓடி கர்மயோகி தளத்தில் உள்ள ஆன்லைன் தொகுப்பான கர்மயோகி பிராரம்ப் மூலம் தாங்களாகவே பயிற்சி பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள். அங்கு 750 க்கும் மேற்பட்ட மின் கற்றல் படிப்புகள் 'எங்கேயும் எந்த சாதனத்திலும்' என்ற கற்றல் வடிவில் கிடைக்கின்றன.