


பிரதமர் திரு நரேந்திர மோடி 12 பிப்ரவரி 2024 அன்று காலை 10:30 மணிக்கு, அரசுத் துறைகளில் புதிதாக பணியமர்த்தப்படவுள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குக் காணொலிக் காட்சி மூலம் நியமனக் கடிதங்களை வழங்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின்போது, புதுதில்லியில் கட்டப்படும் ஒருங்கிணைந்த வளாகமான "கர்மயோகி பவன்" கட்டடத்தின் முதல் கட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த வளாகம் கர்மயோகி இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும்.
நாடு முழுவதும் 47 இடங்களில் வேலைவாய்ப்புத் திருவிழா எனப்படும் ரோஜ்கர் மேளா நடைபெற உள்ளது. இதன் ஒருபகுதியாக மத்திய அரசுத் துறைகள் மற்றும் மாநில யூனியன் அரசுகள் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. மத்திய அரசில், வருவாய்த் துறை, உள்துறை அமைச்சகம், உயர் கல்வித் துறை, அணுசக்தித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், நிதி சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகம் உள்ளிட்டவற்றில் பல்வேறு பதவிகளுக்குப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் இணையவுள்ளனர்.
நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வகையில் வேலைவாய்ப்புத் திருவிழா (ரோஜ்கர் மேளா) அமைந்துள்ளது. வேலைவாய்ப்புத் திருவிழா மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தேசிய வளர்ச்சியில் நேரடியாக பங்கேற்பதற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் ஐஜிஓடி கர்மயோகி (iGOT Karmayogi) தளத்தில் உள்ள இணையதளப் பயிற்சித் தொகுப்பான கர்மயோகி பிரரம்ப் மூலம் தங்களுக்குத் தாங்களே பயிற்றுவித்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். அதில் 880-க்கும் மேற்பட்ட மின்-கற்றல் படிப்புகள் எந்த இடத்தில் இருந்தும் எந்த சாதனத்தின் மூலமும் கற்கலாம் என்ற வடிவத்தில் உள்ளன.