உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று செமிகான் இந்தியா 2024-ஐ தொடங்கி வைத்தார். செமிகான் இந்தியா 2024 செப்டம்பர் 11 முதல் 13 வரை 'குறைகடத்தி எதிர்காலத்தை வடிவமைத்தல்' என்ற கருப்பொருளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று நாள் மாநாடு இந்தியாவின் குறைகடத்தி உத்திகளையும் கொள்கையையும் வெளிப்படுத்துகிறது. இது இந்தியாவை குறைகடத்திகளுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகளாவிய செமிகண்டக்டர் ஜாம்பவான்களின் உயர்நிலைத் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இது உலகளாவிய தலைவர்கள், நிறுவனங்கள் மற்றும் குறைகடத்தி துறையைச் சேர்ந்த நிபுணர்களை ஒன்றிணைக்கும். இந்த மாநாட்டில் 250-க்கும் அதிகமான கண்காட்சியாளர்களும், 150-க்கும் அதிகமான பேச்சாளர்களும் பங்கேற்கின்றனர்.
செமிகான் இந்தியா 2024-ல் பெறப்பட்ட வரவேற்பை செமி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அஜித் மனோச்சா பாராட்டினார். 'முன்னோடியில்லாதது' 'அதிவேகமானது' ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களையும் எடுத்துரைத்தார். செமிகண்டக்டர்களுக்கான மொத்த மின்னணு விநியோகத் தொடரைப் பிரதிநிதித்துவம் செய்யும் 100-க்கும் அதிகமான தலைமை நிர்வாக அதிகாரிகள், தலைமை அனுபவ அதிகாரிகள் ஒன்றிணைந்ததையும் அவர் குறிப்பிட்டார். நாடு, உலகம், தொழில் மற்றும் மனிதகுலத்தின் நலனுக்காக ஒரு குறைகடத்தி மையத்தை உருவாக்கும் பயணத்தில் இந்தியாவின் நம்பகமான பங்காளியாக மாறுவதற்கான தொழில்துறையின் அர்ப்பணிப்பு குறித்து அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவின் அதிவேக வளர்ச்சி மாதிரியை பிரதமர் மோடியின் விதி என்று குறிப்பிட்ட திரு மனோச்சா, செமிகண்டக்டர் தொழில், உலகின் ஒவ்வொரு தொழில்துறைக்கும், மிக முக்கியமாக மனிதகுலத்திற்கும் அடித்தளமாக உள்ளது என்று கூறினார். இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்காகவும், உலகின் 8 பில்லியன் மக்களுக்காகவும் பணியாற்ற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் ரந்தீர் தாக்கூர், இந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டை சாத்தியமாக்கியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்ததோடு, குறைகடத்தி தொழிலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான அவரது தொலைநோக்கு பார்வையையும் பாராட்டினார். அசாமின் ஜாகிரோட்டில் இந்த ஆண்டு மார்ச் 13 அன்று தோலேராவில் இந்தியாவின் முதலாவது வர்த்தக வளாகம் மற்றும் முதலாவது உள்நாட்டு ஓசாட் தொழிற்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதை நினைவுகூர்ந்த டாக்டர் தாக்கூர், இந்த இரண்டு திட்டங்களுக்கும் அரசு குறிப்பிட்ட காலக்கெடுவிலேயே ஒப்புதல் அளித்துள்ளது என்றார். அவசர உணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற பிரதமரின் செய்திக்கு இணங்க, இந்தியாவின் குறைகடத்தி இயக்கம் வெளிப்படுத்திய ஒத்துழைப்பு சிறப்பாக இருந்ததற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். சிப் தயாரிப்புக்கு முக்கியமான 11 சூழல் பகுதிகள் குறித்து டாக்டர் தாக்கூர், அரசின் முயற்சிகள் இந்த சூழல் அமைப்புகள் அனைத்தையும் செமிகான் 2024-ல் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்துள்ளன என்றார். செமிகண்டக்டர் தொழில்துறை வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ன் தொலைநோக்கு பார்வையின் அடித்தளமாக மாறும் என்றும், இது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பன்மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதமரிடம் அவர் உறுதியளித்தார். பிரதமரை மேற்கோள் காட்டி, "இது தருணம், சரியான தருணம்" என்று கூறிய அவர், இந்தியாவின் குறைகடத்தி கனவை நனவாக்குவதில் பிரதமரின் தலைமை மற்றும் பார்வைக்கு நன்றி தெரிவித்தார்.
என்எக்ஸ்பி செமிகண்டக்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, திரு கர்ட் சீவர்ஸ் செமிகான் 2024-ன் ஒரு பகுதியாக இருப்பதில் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்வு இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தைக் குறிக்கிறது என்று கூறினார். லட்சியம், நம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகிய வெற்றிக்கான மூன்று பண்புகளை எடுத்துரைத்த அவர், இன்றைய நிகழ்ச்சி ஒத்துழைப்பின் தொடக்கம் என்று கூறினார். இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சுட்டிக்காட்டிய அவர், இந்தப் பணிகள் உலகிற்காக மட்டுமின்றி, நாட்டுக்காகவும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். குறைகடத்தி தொழில் மற்ற துறைகளில் ஏற்படுத்தும் விளைவையும் அவர் குறிப்பிட்டு, அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவை மிகவும் சக்திவாய்ந்த பொருளாதாரமாக மாற்ற இது உதவும் என்று கூறினார். என்எக்ஸ்பி-யின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை ஒரு பில்லியன் டாலருக்கு மேல் இரட்டிப்பாக்க இருப்பதாக அவர் தெரிவித்தார். வர்த்தகங்கள் நீண்டகால அடிப்படையில் செயல்படுவதற்குத் தேவையான புதிய கண்டுபிடிப்பு, ஜனநாயகம் நம்பிக்கை ஆகிய மூன்று அம்சங்களையும் இணைத்ததற்காக பிரதமருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
செமிகான் இந்தியா 2024-ல் இத்தகைய வெற்றிகரமான நிகழ்ச்சிக்காக ரெனேசாஸ் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஹிடெடோஷி ஷிபாடா பிரதமரைப் பாராட்டினார். இத்தகைய புகழ்பெற்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, இந்தியாவின் முதலாவது அசெம்பிளி மற்றும் சோதனை அமைப்புகளில் ஒன்றை குஜராத்தில் நிறுவுவது தனக்கு கிடைத்த கவுரவம் என்று அவர் கூறினார். முன்னோட்ட கட்டுமானப் பணிகள் ஏற்கனவே நடந்து வருவதாகத் தெரிவித்த அவர், பெங்களூரு, ஐதராபாத் மற்றும் நொய்டாவில் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது மற்றும் செயல்பாட்டு இருப்பு குறித்தும் பேசினார். இந்திய மற்றும் உலகளாவிய சந்தைக்கான மதிப்பு கூட்டப்பட்ட மேம்பட்ட குறைகடத்தி வடிவமைப்பு நடவடிக்கைகளுக்கு தோள்கொடுக்க அடுத்த ஆண்டு இந்தியாவில் ஊழியர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமரின் இலக்கை நனவாக்கும் வகையில் குறைகடத்தி தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஐஎம்இசி தலைமை நிர்வாக அதிகாரி திரு லுக் வான் டென் ஹோவ் செமிகான் 2024-க்காக பிரதமரை வாழ்த்தியதோடு, அவரது பார்வை மற்றும் தலைமை குறைகடத்தி உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவுக்கு ஒரு தெளிவான பாதையை வழங்குகிறது என்று கூறினார். நீண்ட கால ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உத்தியை அமைத்து அதில் முதலீடு செய்வதற்கான பிரதமரின் உறுதிப்பாட்டைக் குறிப்பிட்ட திரு ஹோவ், தொழில்துறைக்கு இது மிகவும் முக்கியமானது என்றார். பிரதமரின் லட்சிய திட்டங்களை ஆதரிக்க வலுவான மற்றும் மூலோபாய கூட்டணியை உருவாக்க ஐஎம்இசி தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார். நம்பகமான விநியோகத் தொடரின் அவசியத்தை சுட்டிக் காட்டிய திரு ஹோவ், "உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை விட சிறந்த நம்பகமான பங்காளியாக யார் இருக்க முடியும்" என்றார்.