பிம்ஸ்டெக் நாடுகளின் மக்கள் தொகை மனிதகுல எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டிருப்பதாலும், கூட்டாக 3.8 டிரில்லியன் டாலர் ஜிடிபி வலிமையைப் பெற்றிருப்பதாலும், இந்த நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாக மாற்ற பிம்ஸ்டெக் நாடுகள் இடையே ஒத்துழைப்பு அவசியம் என பிரதமர் திரு நரேந்திர மோடி குறியுள்ளார். பிராரம்ப் ஸ்டார்ட்அப் இந்தியா சர்வதேச உச்சிமாநாட்டில் இன்று காணொளி காட்சி மூலம் அவர் உரையாற்றினார்.
பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேப்பாளம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து போன்ற பிம்ஸ்டெக் நாடுகளில் ஸ்டார்ட்அப் வெளியில் துடிப்புமிகு ஆற்றல் உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த நூற்றாண்டு, டிஜிடல் புரட்சி மற்றும் புதிய யுகத்தின் படைப்புகளுக்கான நூற்றாண்டு என்று பிரதமர் குறிப்பிட்டார். இது ஆசியாவின் நூற்றாண்டும் ஆகும். எனவே, நம் காலத்தின் தேவைக்கு ஏற்ற எதிர்கால தொழில்நுட்பமும், தொழில் முனைவோரும் இந்தப் பிராந்தியத்திலிருந்து வரவேண்டும். இதற்கு, ஒத்துழைப்பில் உறுதி மிக்க ஆசிய நாடுகள் பொறுப்பேற்று ஒன்று சேர வேண்டும். இந்த நாடுகளில் பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியம், நாகரிகம், தொடர்புகள் உள்ளன. நாம் நமது சிந்தனைகள், எண்ணங்கள், நலன்களைப் பகிர்ந்து கொள்கிறோம், எனவே, நமது வெற்றியும் பகிரப்படும். பிம்ஸ்டெக் நாடுகள் மனித குலத்தின் ஐந்தில் ஒரு பகுதிக்காக பாடுபட்டு வருவதால், இந்தப் பொறுப்பு நம்முடையதாக இருப்பது இயல்புதான் என்றார் பிரதமர்.
இந்தப் பிராந்தியத்தின் இளைஞர்கள் இடையே, பொறுமையின்மை, ஆற்றல், ஆர்வம் ஆகியவற்றில் புதிய வாய்ப்புகளைக் காணுவதாக பிரதமர் கூறினார். அதனால்தான், 2018-ம் ஆண்டு பிம்ஸ்டெக் உச்சிமாநாடு மற்றும் உத்தேச பிம்ஸ்டெக் மாநாட்டில், தொழில்நுட்பம் மற்றும் புதுமைப் படைப்புகளுக்கான ஒத்துழைப்பு அவசியம் என அவர் அழைப்பு விடுத்தார். அந்த உறுதிமொழியை நிறைவேற்றும் விதமாக இன்றைய ஸ்டார்ட்அப் இந்தியா சர்வதேச மாநாடு ஒரு படியாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.
பிராந்திய நாடுகள் இடையே தொடர்புகளையும், வர்த்தக உறவுகளையும் அதிகரிப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை திரு மோடி விளக்கினார். டிஜிடல் தொடர்பை மேம்படுத்த 2018-ல் நடைபெற்ற இந்தியா மொபைல் மாநாட்டில் பிம்ஸ்டெக் அமைச்சர்கள் கலந்து கொண்டதை அவர் நினைவு கூர்ந்தார். இதுபோல, பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, விண்வெளி, விவசாயம், வர்த்தகம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு நிலவுகிறது. ‘’ இந்த துறைகளில் வலுவான உறவுகள் நமது ஸ்டார்ட்அப்கள், உள்கட்டமைப்பு, விவசாயம், வர்த்தகம் போன்ற துறைகளில், மதிப்பு உருவாக்க சுழற்சி, அர்த்தமுள்ள உறவுகளை வலுப்படுத்த உதவும். இந்த துறைகளில் நமது ஸ்டார்ட்அப்களுக்கான புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, பதிலுக்கு இந்தத் துறைகள் வளர்ச்சியடைய அவை வழி ஏற்படுத்தும்’’, என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.