ஆரம்ப, உயர்நிலை மற்றும் மருத்துவ கல்வி மீது கவனம் செலுத்தி, கல்வித்துறையில் வேகமான மாற்றத்தை, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு வலியுறுத்துகிறது. புதிய ஐஐடிக்கள், ஐஐஎம்.கள், ஐஐஐடிக்கள், என்.ஐ.டி. மற்றும் என்ஐடிக்கள் ஏற்படுத்துவதை கடந்த 2014ம் ஆண்டிலிருந்து மோடி அரசு அறிவித்து வருகிறது.
இப்போதைக்கு, நாடு முழுவதும் 23 ஐஐடிக்கள் மற்றும் 20 ஐஐஎம்கள் உள்ளன. கடந்த 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய பல்கலைக்கழகமும், ஒவ்வொரு நாளும் 2 புதிய கல்லூரிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, உயர் கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
இது மட்டும் அல்லாமல், வடகிழக்கு பகுதியில் 22 புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. லடாக் பகுதி தனது முதல் மத்திய பல்கலைக்கழகம், முதல் தடயவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றை பெற்றுள்ளது மற்றும் ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசை பட்டியலில், 71 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பெற்று சாதனை படைத்துள்ளன. கடந்தாண்டில் இந்த எண்ணிக்கை 63 ஆக இருந்தது. ‘க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலின் முதல் 200 இடங்களில் 3 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளன.
கடந்த 7 ஆண்டுகளில் ஆரம்ப கல்வியை மேம்படுத்த முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. 21ம் நூற்றாண்டுக்கு மாணவர்களை தயார்படுத்த வலியுறுத்தப்படுகிறது. உயர் கல்வியில் மாணவிகள் சேர்க்கை 2015 முதல் 2020 வரை 18 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற தொலைநோக்கு நனவாகி வருகிறது. ஆசிரியர் - மாணவர் விகிதம் மேம்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கு தரமான கல்வி உறுதி செய்யப்படுகிறது. இத்துடன், பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முதல் 8,700 அடல் டிங்கரிங் பரிசோதனை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகளில் மின்சாரம், நூலகம், பெண்கள் கழிப்பறை, மருத்துவ பரிசோதனை ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
மருத்துவ கல்வி வேகமான முன்னேற்றத்தை கண்டுள்ளது. மருத்துவ கல்வி எளிதாக கிடைக்க, எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 53 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புக்கான இடங்கள் 80 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 6 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.