ஐக்கிய நாடுகள் பொது சபையில் செப்டம்பர் 2014-ல் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, உலக நாடுகள் ஒருங்கிணைந்து சர்வதேச யோகா தினத்தை அனுசரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இதுவே, இந்தியாவில் உருவான பாரம்பரியமான யோகாவுக்கு நாம் செலுத்தும் உரிய மரியாதையாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்தப் பரிந்துரையை 177 நாடுகளின் ஆதரவுடன் டிசம்பர் 2014-ல் ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டது. ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க 177 நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. இந்த 177 நாடுகள் என்பது, உலகம் முழுமைக்கும் பரவியுள்ளவை. அனைத்து கண்டங்களிலும் உள்ளவை.
ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்ததையடுத்து, உலக அளவில் யோகாவை மிகவும் பிரபலமாக்குவதற்கு நீண்டகாலம் பயணிக்க வேண்டியுள்ளது. யோகா செய்வதில் மிகுந்த ஆர்வம்கொண்ட பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறும்போது, “அறிவு, செயல், பக்தி ஆகியவை இணைந்த அற்புதமான பயிற்சி யோகா. இதன்மூலம், நோய்களிலிருந்து விடுபடுவதுடன், பேராசைகளிலிருந்தும் விடுபட முடியும்.” என்று தெரிவித்தார். உண்மையில், குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, இளைஞர்கள் மத்தியில் யோகாவை பிரபலப்படுத்துவதற்காக யோகாவுக்கு என்றே தனியாக யோகா பல்கலைக் கழகத்தை நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.