பிரதமர் உரையின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு

1.பொது

  • நமக்கு ஒரே ஒரு தீர்மானம்தான் உள்ளது - தேசம் முதலில். எங்களைப் பொறுத்தவரை தேச நலனே முதன்மையானது.
  • உலக அளவில் பாரதத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது, பாரதத்தைப் பற்றிய உலகின் பார்வை மாறியுள்ளது.
  • எனது நாட்டின் 140 கோடி மக்கள், எனது 140 கோடி குடும்ப உறுப்பினர்கள், ஒரு தீர்மானத்துடன் புறப்பட்டால், ஒரு திசையை நிர்ணயித்து, படிப்படியாக, தோளோடு தோள் நின்று நடைபோட்டால், எவ்வளவு பெரிய சவால்களையும், எவ்வளவு தீவிரமான பற்றாக்குறையையும் அல்லது வளங்களுக்கான போராட்டத்தையும் பொருட்படுத்தாமல், நாம் அனைத்து சவாலையும் சமாளித்து, வளமான பாரதத்தை உருவாக்கி, 2047ம் ஆண்டுக்குள் “வளர்ச்சியைடைந்த பாரதம்” என்ற இலக்கை அடைய முடியும்.
  • நாட்டுக்காக வாழ்வதற்கான அர்ப்பணிப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க முடியும்.
  • ஒவ்வொரு குடிமகனின் கனவும் -தீர்மானமும் வளர்ச்சியடைந்த பாரதம் 2047-ன் உறுதிப்பாட்டில் தெளிவாகத் தெரிகிறது.
  • இன்றைய இந்தியாவில், எவரையும் சார்ந்திருக்கும் கலாச்சாரத்திற்கு இடமில்லை.
  • இந்த நாட்டின் மக்கள் பரந்த சிந்தனையுடனும், மகத்தான கனவுகளுடனும் இருக்கும்போது, அவர்களின் மனவுறுதி வார்த்தைகளில் பிரதிபலிக்கும்போது, அது நம்மிடையே ஒரு புதிய உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
  • தேசப் பாதுகாப்புக்காகவும் தேசத்தைக் கட்டியெழுப்பு வதற்காகவும் முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் மகத்தான மனிதர்களுக்கு மிகுந்த மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • ஜனநாயகத்தின் மீதான நமது தேசபக்த ஆர்வமும், நம்பிக்கையும் உலகிற்கு உத்வேகம் அளிப்பதாக மாறியுள்ளது.
  • தேங்கிக் கிடக்கும் பழைய நிலையிலிருந்து வளர்ச்சி மற்றும் சீர்திருத்தங்கள் என்ற நிலைக்கு நாம் முன்னேறியுள்ளோம்.
  • எங்களது சீர்திருத்தப் பாதை வளர்ச்சிக்கான மூலவரைபடமாக மாறியுள்ளது.
  • உலகளாவிய நிலைமைகள் இருண்டதாக, இருந்தபோதிலும், வாய்ப்புகளைப் பொறுத்தவரை இது 'பாரதத்திற்கு' ஒரு பொற்காலம்.
  • இந்த வாய்ப்பை நாம் நழுவ விடக்கூடாது. இந்தத் தருணத்தை நாம் பயன்படுத்திக் கொண்டு, நமது கனவுகளுடனும்  தீர்மானங்களுடனும் முன்னேறிச் சென்றால், 'பொன்னான இந்தியா' என்ற தேசத்தின் விருப்பங்களை நாம் நிறைவேற்றுவோம், 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது இலக்கை அடைவோம்.
  • சுற்றுலாத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம் அல்லது விவசாயத் துறை என ஒவ்வொரு துறையிலும் புதிய மற்றும் நவீன அமைப்பு நிறுவப்பட்டு வருகிறது.
  • உலகெங்கிலும் உள்ள சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றும் அதே வேளையில், நம் நாட்டின் தனித்துவமான நிலைமைகளுக்கு ஏற்ப முன்னேறுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
  • தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன் ஒவ்வொரு துறையிலும் நவீனமயமாக்கலும், புதுமையும் தேவைப்படுகிறதுஇ
  • சாதாரண குடிமக்களின் வாழ்க்கையில் குறைவான அரசுத் தலையீடு என்பது வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற நமது தொலைநோக்குப் பார்வையின் ஒரு முக்கிய பகுதியாகும்.
  • நாடு முழுவதும் செயல்படும் 3 லட்சம் நிறுவனங்களில் ஒவ்வொன்றிலும் குறைந்தது இரண்டு வருடாந்தர சீர்திருத்தங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன, இது ஆண்டுதோறும் சுமார் 25-30 லட்சம் சீர்திருத்தங்களை விளைவிக்கும், இது சாமானிய மனிதனின் நம்பிக்கையை அதிகரிக்கும்.
  • மூன்று முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தி, ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதே எங்கள் நோக்கம். முதலாவதாக, அனைத்துத் துறைகளிலும் புதிய வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும். இரண்டாவதாக, அமைப்புகளை உருவாக்குவதற்குத் தேவையான உள்கட்டமைப்பை வலுப்படுத்த நாம் பணியாற்ற வேண்டும். மூன்றாவதாக, நமது குடிமக்களுக்கான அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து மேம்படுத்த வேண்டும்.

 

  • இயற்கைப் பேரழிவுகள் நமக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்துகின்றன.
  • சமீபத்திய இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த நெருக்கடியான நேரத்தில் தேசம் அவர்களுடன் நிற்கிறது என்று உறுதியளிக்கிறேன்.
  • கருணை எங்கள் அணுகுமுறையின் மையமாகும். எங்கள் பணியின் மையத்தில் சமத்துவம், கருணை ஆகிய இரண்டையும் கொண்டு நாங்கள் முன்னேறி வருகிறோம்.
  • உங்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் சேவை செய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
  • இன்று செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதை தொடர, எங்களை ஆசீர்வதித்ததற்காகவும், தேசத்திற்கு சேவை செய்ய எங்களைத் தேர்ந்தெடுத்ததற்காகவும் கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கு நன்றியுடன் தலைவணங்குகிறேன், நன்றி தெரிவிக்கிறேன்.
  • புதிய உத்வேகத்துடன், புதிய உச்சங்களை நோக்கி நாம் முன்னேறிச் செல்வோம் என்று உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்.
  • பக்கவாட்டில் இருந்து பார்த்து சின்னச் சின்ன சாதனைகளின் மகிமையைக் கண்டு மகிழ்பவர்களாக நாங்கள் இல்லை.
  • நாம் புதிய அறிவு மற்றும் உறுதியைத் தேடும் கலாச்சாரத்திலிருந்து வந்தவர்கள்; உயர்ந்த சாதனைகளை அயராது விரும்புபவர்கள்.
  • வளர்ச்சியின் புதிய உச்சங்களை எட்ட நாங்கள் விரும்புகிறோம், இந்தப் பழக்கத்தை நமது மக்களிடையே வளர்க்க விரும்புகிறோம்.
  • தங்கள் சொந்த நலனைத் தாண்டி சிந்திக்க முடியாத, மற்றவர்களின் நல்வாழ்வைப் பற்றி அக்கறை இல்லாத ஒரு குறிப்பிட்ட பிரிவினர் உள்ளனர். அவர்களின் சிதைந்த மனநிலையுடனான, இத்தகைய நபர்கள், கவலைக் குரியவர்கள். விரக்தியில் சிக்கித் தவிக்கும் இவர்களை நாடு தவிர்க்க வேண்டும்.
  • இந்த அவநம்பிக்கை கொண்டவர்கள் கூறுகள் வெறுமனே நம்பிக்கையற்றவர்கள் மட்டுமல்ல; அழிவைக் கனவு காணும் அவர்கள் நமது கூட்டு முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிக்கும் எதிர்மறை மனநிலையை வளர்த்து வருகின்றனர். இந்த அச்சுறுத்தலை நாடு அடையாளம் காண வேண்டும்.
  • நமது நல்ல நோக்கங்கள், நேர்மை, தேசத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம், நம்மை எதிர்ப்பவர்களையும் நாம் வெல்வோம் என்று எனது மக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.
  • நமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், 140 கோடி மக்களின் எதிர்காலத்தை மாற்றுவதிலும், அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதிலும், தேசத்தின் கனவுகளை நனவாக்குவதிலும் எந்தவொரு வாய்ப்பையும் நாங்கள் விட்டு வைக்க மாட்டோம்.
  • அனைத்து மட்டங்களிலும் ஊழல் என்பது அமைப்பு முறையின் மீதான சாமானிய மனிதனின் நம்பிக்கையை சிதைத்துள்ளது.
  • ஊழல்வாதிகளுக்கு அச்சமான சூழலை உருவாக்க விரும்புகிறேன், இதனால் சாதாரண குடிமகனை கொள்ளையடிக்கும் பாரம்பரியம் முடிவுக்கு வரும்.
  • சமூகத்தில் இத்தகைய விதைகளை விதைப்பது, ஊழலைப் போற்றுவது, ஊழல்வாதிகளை ஏற்றுக்கொள்வதற்கான தொடர்ச்சி முயற்சிகள் ஆகியவை ஆரோக்கியமான சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க சவாலாகவும், மிகுந்த கவலைக்குரிய விஷயமாகவும் மாறியுள்ளன.
  • கடந்த 75 ஆண்டுகளாக பாரதத்தின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அரசியலமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள், சுரண்டப்பட்டவர்கள், சமூகத்தின் உரிமைகள் மறுக்கப்பட்ட பிரிவினர் ஆகியோரின் உரிமைகளை அது பாதுகாத்துள்ளது.
  • நமது அரசியலமைப்பின் 75-வது ஆண்டுகளைக் கொண்டாடும் போது, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளில் மக்கள் கவனம் செலுத்துவது முக்கியம்.
  • கடமைகளைக் கடைப்பிடிக்கும் பொறுப்பு குடிமக்களுக்கு அப்பால் நாட்டின் பல்வேறு நிறுவனங்களுக்கும் நீண்டுள்ளது.
  • நாம் அனைவரும் கூட்டாக நமது பொறுப்புகளை நிறைவேற்றும்போது, இயல்பாகவே நாம் ஒருவருக்கொருவர் உரிமைகளின் பாதுகாவலர்களாக மாறுகிறோம்.
  • எங்கள் கடமைகளைச் செய்வதன் மூலம், கூடுதல் முயற்சி தேவையில்லாமல் இயல்பாகவே இந்த உரிமைகளைப் பாதுகாக்கிறோம்.
  • வாரிசு அரசியலும், சாதியமும் பாரத ஜனநாயகத்திற்கு பெரும் தீங்கு விளைவித்து வருகின்றன.
  • பாரதத்தின் நூற்றாண்டாக இருக்கும் 21-ம் நூற்றாண்டு, 'பொற்கால இந்தியா' ஆக மாறுவதை உறுதி செய்வதற்கும், இந்த நூற்றாண்டில் 'வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கும், அந்தக் கனவுகளை நிறைவேற்றுவதை நோக்கி முன்னேறுவதற்கும் நமது விருப்பங்களையும், முயற்சிகளையும் நாம் ஒருங்கிணைக்க வேண்டும்.
  • நான் உங்களுக்காக வாழ்கிறேன், உங்கள் எதிர்காலத்திற்காக வாழ்கிறேன், பாரத அன்னையின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக வாழ்கிறேன்.

 

  1. பாதுகாப்பு அமைச்சகம்
  • பாதுகாப்புத் துறையில் நாம் தற்சார்பு அடைந்து வருகிறோம்.
  • இந்தியா படிப்படியாக உருவெடுத்து பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் நாடாகவும், உற்பத்தி செய்யும் நாடாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
  • நமது ராணுவத்தினர் துல்லியத் தாக்குதலை நடத்தும் போது, நமது இதயம் பெருமிதத்தால் நிரம்புகிறது, நமது தலை நிமிர்ந்து நிற்கிறது.
  • 140 கோடி இந்தியர்களும் இன்று நமது ஆயுதப்படைகளின் வீரம் குறித்து பெருமிதத்தையும், நம்பிக்கையையும் உணர்கிறார்கள்.

3. நிதி அமைச்சகம்

  • 'ஃபின்டெக்' துறையில் தனது வெற்றி குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது.
  • தனிநபர் வருமானத்தை வெற்றிகரமாக இரட்டிப்பாக்கியுள்ளோம்.
  • வேலைவாய்ப்பிலும் சுயவேலை வாய்ப்பிலும் புதிய சாதனைகளைப் படைப்பதில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளோம்
  • வங்கித் துறையை வலுப்படுத்த பல்வேறு சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன. இதன் விளைவாக இன்று உலகில் தேர்ந்தெடுக்கப்பட்ட வலுவான வங்கிகளில் நமது வங்கிகள் தங்கள் இடத்தை உறுதி செய்துள்ளன.
  • சாமானிய ஏழைகளின், குறிப்பாக நடுத்தர குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வலுவான வங்கி அமைப்பு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது.
  • நமது எம்.எஸ்.எம்.இ.களுக்கு வங்கிகள் மிகப்பெரிய ஆதரவாக உள்ளன.
  • கால்நடை வளர்ப்போர், மீனவர்கள், தெருவோர வியாபாரிகள் போன்ற சமுதாயத்தின் பல்வேறு பின்தங்கிய பிரிவினர் தற்போது வங்கிகளுடன் தங்களை இணைத்துக் கொண்டு, புதிய உச்சங்களை எட்டியுள்ளனர், வளர்ச்சிப் பாதையில் பங்குதாரர்களாக மாறி வருகின்றனர்.
  • தேசத்தை முன்னேற்றுவதற்காக ஏராளமான நிதிக் கொள்கைகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன, மேலும் இந்தப் புதிய அமைப்புகளில் நாட்டின் நம்பிக்கை சீராக வளர்ந்து வருகிறது.
  • உலகளாவிய கொவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் தனது பொருளாதாரத்தை விரைவாக மேம்படுத்திய ஒரு நாடு இருந்தால், அது பாரதம்தான்.
  • நவீன உள்கட்டமைப்பு மேம்பாடு, வாழ்க்கையை எளிதாக்குதல் ஆகியவற்றில் நமது பொருளாதார வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.
  • கடந்த பத்தாண்டுகளில், அதிநவீன ரயில்வே, விமான நிலையம், துறைமுகங்கள், வலுவான சாலை நெட்வொர்க் ஆகியவற்றை வழங்குவதன் மூலம், அரசு இணைப்பை உறுதி செய்வதன் மூலம் மிகப்பெரிய உள்கட்டமைப்பு வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம்.
  • கட்சி அல்லது மாநிலத்திற்கு அப்பாற்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துப் பிரதிநிதிகளும் ஒரு முடிவுக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்

4. வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்வதற்கான இயக்க முறை.

  • எனது மூன்றாவது பதவிக்காலத்தில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவது உறுதி, மேலும் நான் மூன்று மடங்கு கடினமாக, மூன்று மடங்கு வேகத்தில், மூன்று மடங்கு அளவில் உழைப்பேன், இதனால் தேசத்திற்காக நாம் வைத்திருக்கும் கனவுகள் விரைவில் நனவாகும்.
  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
  • வேளாண் துறையில் மாற்றம் என்பது காலத்தின் முக்கிய தேவையாகும்.
  • இயற்கை விவசாயத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்து, நமது அன்னை பூமிக்கு சேவை செய்ய உறுதிபூண்ட அனைத்து விவசாயிகளுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
  • இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கும் ஆதரிப்பதற்கும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க ஒதுக்கீடுகளுடன் கணிசமான திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
  • உலகின் ஊட்டச்சத்தை நாம் வலுப்படுத்த வேண்டும், இந்தியாவின் சிறு விவசாயிகளுக்கும் ஆதரவளிக்க வேண்டும்.
  • இந்தியாவும் அதன் விவசாயிகளும் இயற்கை உணவின் உலகளாவிய உணவுக் களஞ்சியத்தை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளனர்.
  • அறுபதாயிரம் 'அம்ரித் சரோவர்' (குளங்கள்) புதுப்பிக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன.

5. வெளியுறவு அமைச்சகம்

இதற்கு முன்பு ஜி-20 மாநாடு இவ்வளவு பிரம்மாண்டமாக நடைபெற்றது இல்லை.

  • பாரதம் முக்கிய சர்வதேச நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் திறனைக் கொண்டுள்ளது; இணையற்ற விருந்தோம்பலைக் கொண்டுள்ளது.
  • வெளிப்புற சவால்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • பாரதத்தின் வளர்ச்சி என்பது யாருக்கும் அச்சுறுத்தல் என்று அர்த்தமல்ல என்பதை அத்தகைய சக்திகளுக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
  • நம்முடையது  புத்தரின் நிலம், போர் எங்கள் பாதை அல்ல. எனவே, உலகம் கவலைப்படத் தேவையில்லை.
  • அண்டை நாடாக நமது அருகாமையைக் கருத்தில் கொண்டு பங்களாதேஷ் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று நான் நம்புகிறேன்
  • பங்களாதேஷில் உள்ள சிறுபான்மையினரான இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே நமது 140 கோடி மக்களின் முதன்மையான கவலையாகும்.
  • நமது அண்டை நாடுகள் மனநிறைவு மற்றும் அமைதியின் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்று பாரதம் எப்போதும் விரும்புகிறது.
  • அமைதிக்கான நமது உறுதிப்பாடு நமது கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளது.
  1. தகவல் தொடர்பு அமைச்சகம்
  • இரண்டு லட்சம் பஞ்சாயத்துகளில் கண்ணாடி இழை கட்டமைப்புகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன.
  • இந்தியா ஏற்கனவே 6ஜிக்காக இயக்க பயன்முறையில் செயல்பட்டு வருகிறது, மேலும் எங்கள் முன்னேற்றத்தால் உலகை ஆச்சரியப்படுத்துவோம்.
  1. விண்வெளித் துறை
  • விண்வெளித் துறை நமக்கு ஒரு புதிய எதிர்காலத்தை திறந்து விட்டுள்ளது.
  • விண்வெளித் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எழுச்சியை இந்தியா பார்த்து வருகிறது.
  • இன்று தனியார் செயற்கைக்கோள்களும், ராக்கெட்டுகளும் நமது நாட்டிலேயே செலுத்தப்படுகின்றன.
  • சந்திரயான் திட்டத்தின் வெற்றி, நமது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அறிவியல், மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தின் புதிய சூழ்நிலையைத் தூண்டியுள்ளது.

 

  1. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
  • ஏழைகள், நடுத்தர வகுப்பினர், பின்தங்கியவர்கள், வளர்ந்து வரும் நகர்ப்புற மக்கள் தொகை, இளைஞர்களின் கனவுகள் மற்றும் தீர்மானங்கள் மற்றும் அவர்களின் விருப்பங்கள் ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டுவர சீர்திருத்தங்களின் பாதையை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.
  • அதிகாரமளித்தல் மற்றும் வளர்ச்சியை நோக்கி அரசியல் தலைமை உறுதியாக இருக்கும்போது, அரசு இயந்திரமும் வலுவான செயலாக்கங்களை செயல்படுத்தவும் உறுதி செய்யவும் தொடங்குகிறது.
  • அதிகாரமளித்தலையும், வளர்ச்சியையும் உறுதி செய்வதில் ஒவ்வொரு குடிமகனும் தீவிரமாக பங்கேற்கத் தொடங்கும்போது, அதன் விளைவுகள் தேசத்திற்கு மதிப்புமிக்கதாக இருக்கும்.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டங்கள் மூலம் விளிம்புநிலை மக்களுக்கு மலிவான சுகாதார சேவையை வழங்குவதற்காக தொலைதூரப் பகுதிகளில் நவீன மருத்துவமனைகள், ஆரோக்கியங்களும், கோயில்களும் கட்டப்படுவதை கடைசி மைல் இணைப்பு உறுதி செய்துள்ளது.
  • செறிவூட்டல் மந்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்போது, "அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்" என்பதன் உண்மையான சாரம் உணரப்படுகிறது.
  • 25 கோடி மக்களை நாம் வறுமையிலிருந்து உயர்த்தும்போது, நாம் நமது வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம், நமது கனவுகள் விரைவில் நனவாகும் என்ற நமது நம்பிக்கையை அது வலுப்படுத்துகிறது.
  • எனது மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள் இந்திய சைகை மொழியில் தொடர்பு கொள்ளத் தொடங்கும் போது, அல்லது சுகம்யா பாரத் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய தேசம் என்ற இயக்கத்திலிருந்து பயனடையும் போது, அவர் மதிக்கப்படுவதாகவும், நாட்டின் குடிமகனாக கண்ணியத்தை அனுபவிப்பதாகவும் உணர்கிறார்.
  • பாராலிம்பிக் போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்கள் மூவண்ணக் கொணடிகளுடன் வருவது ஆச்சரியமாக இருக்கிறது.
  • புறக்கணிக்கப்பட்ட நமது திருநங்கை சமூகத்தின் மீது அதிக உணர்திறனுடன் கூடிய சமமான முடிவுகள் எடுக்கப்பட்டன, அவர்கள் பிரதான நீரோட்டத்தில் ஊடுருவுவதற்கான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், அனைவருக்கும் கண்ணியம், மரியாதை மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதன் மூலமும் மேற்கொள்ளப்பட்டன.
  • நாம் திரிவித் மார்க்  எனும் மூன்று வழிப் பாதையில் அடியெடுத்து வைக்கிறோம், அனைவருக்கும் சேவை மனப்பான்மையின் நேரடி பலனை நாம் காண்கிறோம்.
  • புறக்கணிக்கப்பட்ட பகுதிகள், விளிம்புநிலை சமூகங்கள், நமது சிறு விவசாயிகள், வனங்களில் உள்ள பழங்குடி சகோதர சகோதரிகள், நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், நமது தொழிலாளர்கள் மற்றும் நமது பணியாளர்கள் ஆகியோரை மேம்படுத்துவதற்கும் அவர்கள் அதிகாரம் பெறுவதற்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது நமது கடமையாகும்.

8 கல்வி அமைச்சகம்

  • அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் 75,000 புதிய இடங்கள் உருவாக்கப்படும்.
  • புதிய கல்விக் கொள்கையின் மூலம், 21 ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப தற்போதைய கல்வி முறையை மாற்ற விரும்புகிறோம்.
  • பண்டைய நாளந்தா பல்கலைக்கழகத்தின் உணர்வுக்குப் புத்துயிரூட்டி, உயர்கல்வியையும், ஆராய்ச்சியையும் ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவை உலகளாவிய கல்வி மையமாக நிலைநிறுத்துவோம்.
  • வேகமான வளர்ச்சியின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில், எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் திறன் வாய்ந்த வளங்களை இந்தியாவில் நாம் தயார் செய்ய வேண்டும்.
  • நம் நாட்டு இளைஞர்கள் வெளிநாடு செல்லத் தேவையில்லாத வகையில் கல்வி முறையை உருவாக்க விரும்புகிறோம். நமது நடுத்தரக் குடும்பங்கள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவு செய்யத் தேவையில்லை. அது மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்து மக்களை பாரதத்திற்கு வரவழைக்கும் நிறுவனங்களை உருவாக்கவும் விரும்புகிறோம்.
  • மொழிக்காக இந்தியாவின் திறமை தடைபடக் கூடாது. தாய்மொழியின் வலிமை, நமது நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கும் அவர்களின் கனவுகளை நனவாக்கும் அதிகாரத்தை அளிக்கிறது.
  • 'தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை' உருவாக்கப்பட்டது, ஆராய்ச்சியை தொடர்ந்து வலுப்படுத்தும் ஒரு நிரந்தர அமைப்பை உருவாக்க ஒரு சட்ட கட்டமைப்பை வழங்கியது.
  • நமது நாட்டு இளைஞர்களின் சிந்தனைகளை நனவாக்கும் வகையில், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்காக பட்ஜெட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க நாங்கள் முடிவு செய்திருப்பது மிகவும் பெருமைக்குரியதாகும்.

10 பழங்குடியினர் நல அமைச்சகம்

  • இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், பழங்குடியினர் என அனைவரும் அடிமைத்தனத்திற்கு எதிராக தொடர்ந்து போராடினர்.
  • பிரதமரின் ஜன் மன் திட்டங்களின் பயன்கள் கிராமங்கள், மலைகள் மற்றும் வனங்களில் உள்ள தொலைதூர குடியிருப்புகளின் ஒவ்வொரு பழங்குடி சகோதரர்களையும் சென்றடைவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
  • பகவான் பிர்ஸா முண்டாவின் 150ஆவது பிறந்த நாளை நாம் நெருங்கும் வேளையில், அவரது பாரம்பரியத்திலிருந்து நாம் உத்வேகம் பெறுவோம்.

 

  1. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
  • வளர்ச்சியடைந்த பாரதத்தின் முதல் தலைமுறை மீது சிறப்பு கவனம் செலுத்தி தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம்.
  • கடந்த பத்தாண்டுகளில் 10 கோடி பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களின் ஒரு பகுதியாக மாறியுள்ளனர்.
  • பெண்கள் நிதி ரீதியாக அதிகாரம் பெறும்போது சமூக மாற்றத்திற்கான உத்தரவாதம் அளிப்பவர்களாகவும், பாதுகாவலர்களாகவும் மாறுகிறார்கள்.
  • ஒரு கோடி தாய்மார்களும், சகோதரிகளும் மகளிர் சுய உதவிக் குழுக்களில் இணைந்து, 'லட்சபதி சகோதரிகள்' ஆகி வருகிறார்கள்.
  • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்.
  • இதுவரை, மொத்தம் ஒன்பது லட்சம் கோடி நிதி வங்கிகள் வழியாக இந்த சுய உதவிக் குழுக்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
  • பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக எங்கள் அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • பெண்கள் தலைமைப் பொறுப்புகளை ஏற்று வருகின்றனர். இன்று, பாதுகாப்புத் துறையாகட்டும், விமானப்படை, ராணுவமாகட்டும், கடற்படையாகட்டும், நமது விண்வெளித் துறையாகட்டும், பல துறைகளில் நாம் நமது பெண்களின் வலிமையையும் திறன்களைகளையும் காண்கிறோம்.
  • ஒரு சமூகமாக நாம் நமது தாய், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும்.
  • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தாமதமின்றி விசாரணை நடத்த வேண்டும். அரசு, நீதித்துறை, சிவில் சமூகத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட இதுபோன்ற அரக்கத்தனமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது முதல் பார்வையில் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • தண்டிக்கப்படும் குற்றவாளிகள் குறித்து ஒரு பரந்த விவாதம் இருக்க வேண்டும், இதனால் அத்தகைய பாவங்களைச் செய்பவர்கள் கூட தூக்கிலிடப்படுவது உள்ளிட்ட விளைவுகளுக்கு அஞ்சுகிறார்கள். இந்த பயத்தை உருவாக்குவது மிகவும் முக்கியம் என்று நான் உணர்கிறேன்.

12 சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

  • இந்தியா 'ஆரோக்கிய பாரதம்' பாதையில் செல்ல வேண்டும்.
  • கொரோனாவுக்கு எதிராக கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் அதிவேக இயக்கத்தை இந்தியா சாதித்துள்ளது.
  1. சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம்
  • இந்தியாவின் கவனம் இப்போது பசுமை வளர்ச்சி மற்றும் பசுமைப் பணிகள் மீது உள்ளது
  • பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் முயற்சிகளில் பசுமைப்பணிகள் இன்றியமையாதவை.
  • பசுமை ஹைட்ரஜன் மிஷன் மூலம் உலகளாவிய மையமாக மாற இந்தியா உறுதிபூண்டுள்ளது.
  • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வதிலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளை கணிசமாக முன்னேற்றுவதிலும் இந்தியா முன்னோடியாக உள்ளது.
  • ஜி20 நாடுகளில், பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை முன்கூட்டியே அடைந்த ஒரே நாடு இந்தியா மட்டுமே.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை நாங்கள் எட்டியுள்ளோம். 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்ற இலக்கை எட்ட வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறோம்.

14.வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

  • "உள்ளூர் தயாரிப்புக்கு ஆதரவு" பொருளாதார வளர்ச்சிக்கான புதிய தாரக மந்திரமாக மாறியுள்ளது.
  • "ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு"என்பது இப்போது புதிய அலை.
  • பாரதம் ஒரு தொழில்துறை உற்பத்தி மையமாக மாறும், அதை உலகம் காணும்.
  • "இந்தியாவில் வடிவமைப்பு" என்ற அறைகூவலை நாம் ஏற்றுக்கொண்டு, "இந்தியாவில் வடிவமைப்பு, உலகத்திற்கே வடிவமைப்பு" என்ற கனவுடன் முன்னேறிச் செல்ல வேண்டும்.
  • முதலீடுகளை ஈர்ப்பதற்கும், நல்லாட்சிக்கான உத்தரவாதங்களை வழங்குவதற்கும், சட்டம் ஒழுங்கு நிலைமையில் நம்பிக்கையை உறுதி செய்வதற்கும் மாநில அரசுகள் தெளிவான கொள்கைகளை வகுக்க வேண்டும்.
  • செமிகண்டக்டர் உற்பத்தியில் உலகளாவிய தலைவராக மாற இந்தியா உறுதிபூண்டுள்ளது
  • ‘மேட் இன் இந்தியா கேமிங்­’ தயாரிப்புகளைக் கொண்டு வர இந்தியா தனது வளமான பண்டைய பாரம்பரியம் மற்றும் இலக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.
  • இந்திய வல்லுநர்கள் உலகளாவிய கேமிங் சந்தையை வழிநடத்த வேண்டும், விளையாடுவதில் மட்டுமல்ல, கேம்களை தயாரிப்பதிலும் முன்னிலை வகிக்க வேண்டும்.
  • இந்திய தரநிலைகள் சர்வதேச அளவுகோல்களாக மாற ஆர்வம் காட்ட வேண்டும்.
  • உலகளாவிய வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பு கணிசமாக உள்ளது, நமது ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது, நமது அந்நியச் செலாவணி கையிருப்பு இரட்டிப்பாகியுள்ளது, உலகளாவிய நிறுவனங்கள் பாரதத்தின் மீது அதிக அளவில் நம்பிக்கை வைத்துள்ளன.
  • நமது பொம்மைத் தொழில்துறையும் உலகச் சந்தையில் ஆற்றல்மிக்க ஒரு பெயராக மாறியுள்ளது என்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். பொம்மைகளை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளோம்.
  • ஒரு காலத்தில் மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன, ஆனால் இன்று இந்தியாவில் மொபைல் போன்களின் உற்பத்தி சூழல் அமைப்பின் ஒரு பெரிய மையம் உள்ளது, அவற்றை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளோம். இதுதான் இந்தியாவின் வலிமை.

 

15 ரயில்வே அமைச்சகம்

  • 2030-க்குள் தனது ரயில்வேயை கரியமில வாயு வெளியிடாததாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது.

16 ஜல் சக்தி அமைச்சகம்

  • இன்று ஒவ்வொரு குடும்பமும் தூய்மையான சுற்றுச்சூழலை தழுவி வருகிறது, தூய்மை குறித்த உரையாடலை ஊக்குவித்து வருகிறது.
  • ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள்; தூய்மையான பழக்கவழக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழலை நோக்கி சமூக மாற்றத்தை உறுதி செய்கிறார்கள்.
  • இன்று, ஜல் ஜீவன் இயக்க மூலம் 12 கோடி குடும்பங்கள் குறுகிய காலத்தில் சுகாதாரமான குழாய் நீர் விநியோகத்தைப் பெறுகின்றன.

17.  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

  • நான்கு கோடி உறுதிமிக்க வீடுகள் ஏழைகளுக்கு புதிய வாழ்க்கையை அளித்துள்ளன.
  • இந்த தேசிய செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக மூன்று கோடி புதிய வீடுகளுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

18.கால்நடை பராமரிப்பு அமைச்சகம்

  • விரிவான வளர்ச்சிக்குப் பாடுபடுவதுடன், நமது மீனவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பவர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதும் நமது கொள்கைகள், நமது நோக்கங்கள், நமது சீர்திருத்தங்கள், நமது திட்டங்கள் மற்றும் நமது பணி முறைகளின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

19 கலாச்சார அமைச்சகம்

  • இன்று, நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய துணிச்சலான சுதந்திர போராட்ட வீரர்களை நாம் கௌரவிக்கிறோம். அவர்களின் தியாகம் மற்றும் சேவைக்கு நம் நாடு என்றென்றும் கடன்பட்டுள்ளது.
  • சுதந்திர தினம் என்பது அவர்களின் மனவுறுதி, தீர்மானமும் மற்றும் தேசபக்தி மாண்புகளை நினைவுகூரும் ஒரு பண்டிகை. இந்த சுதந்திர தின விழாவில் நாம் சுதந்திரமாக சுவாசிக்கும் நல்வாய்ப்பைப் பெற்றிருப்பது இந்த துணிச்சலான இதயங்களால்தான். இந்த நாடு அவர்களுக்கு மிகவும் கடன்பட்டுள்ளது.
  • இன்று, முழு தேசமும் மூவண்ணக் கொடியின் கீழ் ஒன்றுபட்டுள்ளது - ஒவ்வொரு வீடும் அதனால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, சாதி, இனம், மேல், கீழ் என்ற பாகுபாடுகள் இல்லை; நாம் அனைவரும் இந்தியர்கள். இந்த ஒற்றுமை நமது திசையின் வலிமைக்கு ஒரு சான்றாகும்.
  • 20. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஜி 20 நாடுகளை விட இந்தியா அதிகம் சாதித்துள்ளது.
  • எரிசக்தித் துறையில் தற்சார்பு அடைய இந்தியா கடுமையாக உழைத்து வருகிறது.
  • பிரதமரின் சூரிய சக்தி இலவச மின்சாரத் திட்டம் புதிய பலத்தை அளிக்க உள்ளது, மேலும் அதன் பலன்கள் நம் நாட்டில் உள்ள சராசரி குடும்பங்களால், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரால் அவர்களின் மின்சாரக் கட்டணங்கள் இலவசமாகும்போது உணரப்படும். பிரதமரின் சூரிய சக்தி திட்டத்தின் கீழ் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்பவர்கள், தங்கள் எரிபொருள் செலவுகளையும் குறைக்க முடியும்.
  • மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

20 மின்சக்தி அமைச்சகம்

  • பாரதத்தின் 18,000 கிராமங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மின்சாரம் வழங்கப்படும் என்றும், அந்த வாக்குறுதி நிறைவேறும் என்றும் செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து ஒரு சாதாரண மனிதன் கேள்விப்படும் போது, அவர்களின் நம்பிக்கை வலுப்பெறுகிறது.
  • இன்னும் 2.5 கோடி இந்திய குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் வாழ்கின்றன.

21.சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்

  • தொலைதூர கிராமங்கள் மற்றும் எல்லைகளை இணைக்கும் சாலைகளை நாங்கள் அமைத்து இந்த பகுதிகளை பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வருகிறோம்.
  • இந்த வலுவான உள்கட்டமைப்பு மூலம், தலித்துகள், பாதிக்கப்பட்டவர்கள், சுரண்டப்பட்டவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள், பின்தங்கியவர்கள், பழங்குடியினர், பூர்வகுடிகள் மற்றும் காடுகள், மலைகள் மற்றும் தொலைதூர எல்லைப் பகுதிகளில் வசிப்பவர்களின் தேவைகளை நிறைவேற்ற முடிந்தது.

22. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

  • இந்தியாவின் இளைஞர்களுகளை பயிற்சி அளித்து, உலகின் திறன் தலைநகராக மாறுவதே இதன் நோக்கமாகும்.
  • 1 லட்சம் இளைஞர்கள், குறிப்பாக தங்கள் குடும்பங்களில் அரசியல் வரலாறு இல்லாதவர்களை அரசியல் அமைப்பில் சேர்க்க வேண்டும்.
  • சிறிய துண்டு நிலங்களில் ஒரு முழு குடும்பத்தையும் பராமரிப்பதில் உள்ள சவால்களைக் கருத்தில் கொண்டு, புதிய வேலைகளைப் பெறுவதற்கும் கூடுதல் வருமான ஆதாரங்களை உருவாக்குவதற்கும் தேவையான திறன்களுடன் இளைஞர்களைத் தயார் செய்ய நாங்கள் விரிவான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
  • நான் 140 கோடி மக்களின் தரப்பிலிருந்து, பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பாரதத்தின் சார்பில் பங்கேற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • நான் பாராலிம்பிக் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்திய மண்ணில் நடத்த வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இதற்காக நாங்கள் தயாராகி வருகிறோம், அதை நோக்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறோம்.

23. வடகிழக்குப் பிராந்திய அமைச்சகம்

வடகிழக்கு இந்தியா தற்போது மருத்துவ உள்கட்டமைப்பின் மையமாக உள்ளது, இந்த மாற்றம் கடைசி மைல் வரை அணுகக்கூடிய சுகாதார சேவையை வழங்குவதன் மூலம் வாழ்க்கை மாற்றத்திற்கு உதவியுள்ளது.

24 திறன் மேம்பாட்டு அமைச்சகம்

  • நமது இளைஞர்களின் திறனை மேம்படுத்த அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • இந்த ஆண்டு பட்ஜெட்டில் திறன் இந்தியா திட்டத்திற்காக பெரும் நிதியை ஒதுக்கியுள்ளோம்.
  • இந்த பட்ஜெட்டில் வலியுறுத்தப்பட்ட இளைஞர்களுக்கான தொழில் பயிற்சி, அனுபவத்தைப் பெறவும், அவர்களின் திறனை வளர்க்கவும், சந்தையில் தங்கள் திறன்களை வெளிப்படுத்தவும் உதவும்.
  • பாரதத்தின் திறமையான மனிதவளம் உலகளாவிய வேலைவாய்ப்பு சந்தையில் தங்கள் அடையாளத்தை உருவாக்கும். அந்தக் கனவுடன் நாம் முன்னேறி வருகிறோம்.

25. சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்

  • தற்போதைய குடிமைச் சட்டம் ஒரு வகுப்புவாத குடிமைச் சட்டம் போன்றது, இது பாரபட்சமானது.
  • மதத்தின் அடிப்படையில் நமது தேசத்தைப் பிளவுபடுத்தும், பாகுபாட்டை வளர்க்கும் சட்டங்களுக்கு நவீன சமூகத்தில் இடமில்லை.
  • வகுப்புவாத குடிமைச் சட்டம் 75 ஆண்டுகளுக்குப் பின், மதச்சார்பற்ற குடிமைச் சட்டத்தை நோக்கி நகர்வது முக்கியம்.
  • நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவது நமது கூட்டுப் பொறுப்பாகும்.
  • மதச்சார்பற்ற குடிமைச்சட்டம் குறித்து மாறுபட்ட கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் நாம் வரவேற்க வேண்டும்.
  • "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள இந்தியா முன்வர வேண்டும்.
  • குடிமக்கள் சட்ட சிக்கல்களின் வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக 1,500 க்கும் மேற்பட்ட சட்டங்கள் அகற்றப்பட்டன.
  • பல நூற்றாண்டுகள் பழமையான குற்றவியல் சட்டங்களை இந்திய நியாயச் சட்டம் என்று அழைக்கப்படும் புதிய குற்றவியல் சட்டங்களால் மாற்றியமைத்துள்ளோம், குடிமக்களுக்கு நீதியை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும், இது கண்டனம், தண்டனை என்ற பிரிட்டிஷ் கருத்தியலுக்கு எதிரானது.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 21, 2024
November 21, 2024

PM Modi's International Accolades: A Reflection of India's Growing Influence on the World Stage