இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிரிசேனா இன்று பிரதமர் திரு. மோடியை தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.
இலங்கை அதிபரையும் அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புச் செயலரையும் படுகொலை செய்ய தீட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் திட்டத்தில் இந்தியாவிற்கும் பங்கிருப்பதாக அவர் கூறியதாக ஊடகங்களில் ஒரு பிரிவிலிருந்து வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் தவறானது என்று இலங்கை அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
உள்நோக்கங்கம் கொண்ட இதுபோன்ற செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்பதோடு பொய்யானவை என்றும், இந்த இரண்டு அண்டை நாடுகளுக்கிடையே நிலவி வரும் சுமுகமான உறவுகளுக்கு சேதம் ஏற்படுத்தி, இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையே தவறான புரிதலை உருவாக்கும் நோக்கம் கொண்டதாகத் தோன்றுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் செய்திகளை மறுக்கும் வகையில் தனிப்பட்ட முறையில் தானும் இலங்கை அரசும் மேற்கொண்ட அவசர நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் இலங்கை அதிபர் விளக்கம் அளித்துள்ளார். இந்தப் பின்னணியில் இன்று காலை இலங்கைக்கான இந்திய தூதருடன் நடைபெற்ற தனது சந்திப்பையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இந்தியப் பிரதமரை இலங்கையின் உண்மையான நண்பராகவும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பராகவும் தாம் கருதுவதாகவும் இலங்கை அதிபர் தெரிவித்தார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான பரஸ்பர உறவுகளை தாம் பெரிதும் மதிப்பதாகவும், பிரதமருடன் இணைந்து அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்த பாடுபடப் போவதகவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்திகளை உறுதியாக மறுத்து இதுகுறித்த விஷயங்களில் தெளிவு ஏற்படுத்தும் வகையில் இலங்கை அதிபரும் அவரது அரசும் எடுத்த உடனடியான நடவடிக்கைகளையும் இந்தியப் பிரதமர் பாராட்டினார். இந்திய அரசின் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்’என்ற கொள்கையையும் முன்னுரிமையையும் வலியுறுத்திய பிரதமர் இரு நாடுகளுக்கும் இடையே முழு அளவிலான ஒத்துழைப்பை வளர்ப்பதில் தாம் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.