இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு.நரேந்திரமோடி, இந்திய ராணுவத்தின் நாய்களான சோஃபி மற்றும் விடா-விற்கு ராணுவத் தலைமைத் தளபதி-யின் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். நமது ஆயுதக் காவல் படைகள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் உள்ள இதுபோன்ற ஏராளமான துணிச்சல்மிக்க நாய்கள், எண்ணற்ற குண்டுவெடிப்புகள் மற்றும் தீவிரவாத சதித் திட்டங்களை முறியடிப்பதில் மிக முக்கியப் பங்காற்றியிருப்பதாக அவர் கூறினார். வெடிப்பொருள்கள் மற்றும் கன்னிவெடிகளை மோப்பம் பிடிக்க பல்வேறு நாய்கள் உதவியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், 300-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்வு காண காவல்துறையினருக்கு உதவிகரமாக இருந்த நாய் ராக்கி-க்கு, பீட் காவல்துறையினர் அனைத்து மரியாதைகளுடன் பிரியாவிடை கொடுத்ததை நினைவுகூர்ந்தார்.
இந்திய வகை நாய்களைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்த நாய்களை உருவாக்க குறைந்த செலவே ஆகும் என்பதுடன், அவை இந்தியச் சூழல் மற்றும் சுற்றுப்புறத்திற்கு மிகவும் உகந்தவையாகவும் இருப்பதோடு, நமது பாதுகாப்புப் படையினர் இதுபோன்ற இந்திய வகை நாய்களைத் தங்களது பாதுகாப்புப் படையில் ஒரு அங்கமாகச் சேர்த்து வருவதாகவும் தெரிவித்தார். இந்திய வகை நாய்களை மேலும் திறன் பெற்றவையாகவும், அதிக பயனுள்ளவையாகவும் உருவாக்குவது குறித்து, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். நாய் வளர்க்க திட்டமிட்டுள்ள நேயர்கள், இந்திய வகை நாய்களில் ஒன்றை தத்தெடுக்குமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.