வணக்கம்,
அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்?
நான் நேரடியாக வருகை தருவதாக இருந்தது. நான் நேரடியாக வர முடிந்திருந்தால், உங்கள் அனைவரையும் சந்தித்திருக்கலாம். இருப்பினும், நேரமின்மையாலும், தொழில்நுட்பத்தின் உதவியாலும், இந்த மங்களகரமான நிகழ்ச்சியில் இன்று பங்கேற்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. எனது பார்வையில், இந்த பணி பன்முக முக்கியத்துவம் வாய்ந்தது - ப்ருஹத் சேவா மந்திர் திட்டம், இது அனைவரின் முயற்சியால் செய்யப்படுகிறது.
நான் செங்கோட்டையின் கொத்தளத்தலிருந்து, "சப்கா பிரயாஸ்" (அனைவரின் முயற்சிகளோடு) என்றேன். மா உமியா சேவா சங்குலுடன் இணைந்து உமியா அன்னை கோவிலின் வளர்ச்சிப் பணிகளுக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும், சமய நோக்கம், ஆன்மிகம் மற்றும் அதைவிட சமூக சேவை என்ற நோக்கத்துடன் புதிய இலக்கை வகுக்க வேண்டும். மேலும், இதுதான் உண்மையான பாதை. “ நர் கர்ணி கரே தோ நாராயண் ஹோ ஜெயே” (கர்மாவின் மூலம் மனிதன் தெய்வீகத்தை அடைய முடியும்) என்று நமது பகுதியில் சொல்லப்படுகிறது. “ஜன் சேவா ஈஜ ஜக் சேவா” (மக்களுக்குச் சேவை செய்வது உலகுக்குச் சேவை செய்வதைப் போலவே நல்லது) என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு உயிரினத்திலும் இறைவனைக் காணும் மக்கள் நாம். எனவே, இளைய தலைமுறையினரை, வருங்கால சந்ததியினரை தயார்படுத்துவதற்காக, அதுவும் சங்கத்தின் ஒத்துழைப்போடு இங்கு உருவாக்கப்பட்ட திட்டமிடல் மிகவும் பாராட்டுக்குரியது மற்றும் வரவேற்கத்தக்கது. "மா உமியா ஷரணம் மமா" (உமியா அன்னையிடம் சரணடைதல்) என்ற மந்திரத்தை 51 கோடி முறை உச்சரிக்கவும் எழுதவும் நீங்கள் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளீர்கள் என்று என்னிடம் கூறப்பட்டது. அதுவே ஆற்றலின் ஊற்றாக மாறுகிறது. மா உமியாவிடம் சரணடைந்து பொது மக்களுக்கு சேவை செய்யும் பாதையை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். இன்று, பல மகத்தான சேவைப் பணிகள் இத்துடன் தொடங்கப்படுகின்றன. பரந்த சேவைப் பிரச்சாரமான மா உமியா கோவில் மேம்பாட்டுத் திட்டம் வரவிருக்கும் தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் பாராட்டுக்கு தகுதியானவர்கள்.
இளைஞர்களுக்கு நீங்கள் பல வாய்ப்புக்களை வழங்கும் போதும், அவர்களுக்காக பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும்போதும், நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அதற்குக் காரணம், திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை தற்போதைய காலம் நிரூபித்துள்ளது. உங்கள் அமைப்பின் ஒவ்வொரு அம்சத்துடனும் திறன் மேம்பாட்டை நீங்கள் தொடர்புபடுத்த வேண்டும். நீங்கள் அதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். திறன்களின் முக்கியத்துவத்தை அதிகரிப்பது காலத்தின் தேவை. நமது பழைய காலங்களில், அடுத்த தலைமுறைக்கு மரபுவழியாக திறமையை கற்றுத்தரும் கட்டமைப்பை குடும்பம் அமைப்பு கொண்டிருந்தது. இப்போது சமூக அமைப்பு நிறைய மாறிவிட்டது. எனவே, தேவையான நடைமுறையை அமைப்பதன் மூலம் இதைச் செய்ய வேண்டும். குஜராத்தில் உங்கள் அனைவருக்கும் சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்த வரையும், நாட்டுக்கு சேவை செய்ய நீங்கள் அனைவரும் வாய்ப்பளித்த போதும், தற்போது விடுதலையின் அமிர்த மஹோத்ஸவத்தை நாடு கொண்டாடும் போதும், நான் உங்களுக்கு நினைவுப்படுத்துவது “ஒரு சமூகமாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாம் பங்களிக்க வேண்டும் என்று உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்” என்பதே ஆகும். நான் உங்களிடம் வரும்போதெல்லாம் நிறைய விஷயங்களைப் பற்றி நாம் விவாதித்தோம் என்பது உண்மைதான். பல விஷயங்களில் உங்கள் ஒத்துழைப்பையும் தோழமையையும் நாடினேன். நீங்கள் அனைவரும் அதையே கொடுத்துள்ளீர்கள்.
“ பேடீ பச்சாவ்” (பெண் குழந்தையை பாதுகாத்தல்) பிரச்சாரத்தை நான் நடத்திக் கொண்டிருந்தபோது, ஒருமுறை உஞ்சாவுக்கு வந்து உங்கள் அனைவருடனும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டேன் என்பது எனக்குச் சரியாக நினைவிருக்கிறது. மா உமியா கோவில் அமைந்திருக்கும் உஞ்சா, பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் வீழ்ச்சியைக் காண்பது நமக்கு களங்கமாக இருக்கும் என்று நான் விளக்கினேன். இந்த நிலைமையை மேம்படுத்த வேண்டும் என்று உங்களிடம் வாக்குறுதி கேட்டேன். இன்று, அந்த சவாலை ஏற்றுக்கொண்டதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன். மெதுவாகவும் படிப்படியாகவும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்களுக்கு நிகரான ஒரு சூழ்நிலையை எட்டியுள்ளது. சமூகத்தில் இந்த மாற்றத்தை கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும். நீங்கள் அதை நன்றாக செய்தீர்கள்.
அதேபோல், “சுஜலாம் சுஃபலாம்” திட்டத்தின் கீழ் நர்மதா நதியில் இருந்து தண்ணீர் விநியோகத்தை தொடங்கியபோது, வடக்கு குஜராத் மற்றும் சௌராஷ்டிரா பகுதி விவசாயிகள் மற்றும் உமியா அன்னையின் பக்தர்களிடம் நான் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுத்தேன் என்பது எனக்கு சரியாக நினைவிருக்கிறது. இந்த நீரின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். மற்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு, “தண்ணீரே வாழ்க்கை” என்பது மற்றுமோர் முழக்கமாக இருக்கலாம். ஆனால், தண்ணீரின்றி நாம் எப்படி கஷ்டப்படுகிறோம் என்பது அனைவரும் அறிந்ததே. காலதாமதமான மழையால் நாட்களை அல்லது ஒரு வருடத்தை வீணடிப்பதன் வலி நமக்குத் தெரியும். எனவே, தண்ணீரை சேமிக்க நாம் முடிவு செய்தோம். வடக்கு குஜராத்தில் சொட்டு நீர் பாசன முறையை கடைப்பிடிக்க வலியுறுத்தினேன், அதை நீங்கள் அனைவரும் வரவேற்று ஏற்றுக்கொண்டீர்கள். சொட்டு நீர் பாசன முறை பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது, இதன் விளைவாக நீரைச் சேமிக்க முடிந்ததோடு பயிர்களும் நன்றாக விளைந்தன.
அவ்வாறே நமது தாய் நிலத்தின் நலன் குறித்து விவாதித்தோம். நாடு முழுவதும் தற்போது பின்பற்றப்படும் மண் ஆரோக்கிய அட்டை முறை முதலில் குஜராத்தில் நிறுவப்பட்டது. அது அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வளிக்கும் ஆதாரமான நமது தாய் மண்ணின் ஆரோக்கியத்தை பரிசோதிப்பதற்கானது. மண் ஆரோக்கிய அட்டை அமைப்பு மூலம் மண்ணின் குறைபாடுகள், நோய்கள், தேவைகள். இவற்றையெல்லாம் நாம் கண்டறிந்தோம். இருப்பினும், விளைபொருள் மீதான பேராசை, விரைவான தீர்வுகளைத் தேடுவது ஆகிய அனைத்தும் மனித இயல்பின் ஒரு பகுதியாகும். அதனால், தாய் மண்ணின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாமல் பல்வேறு வகையான ரசாயனங்கள், உரங்கள் மற்றும் மருந்துகளைப் பயன்படுத்தத் தொடங்கினோம். இன்று நான் உங்களிடம் ஒரு வேண்டுகோளுடன் வந்துள்ளேன். உமியா அன்னைக்கு சேவை செய்ய வேண்டும் என்று தீர்மானித்த பிறகு, இந்த தாய் மண்ணை மறக்க முடியாது. மேலும் உமியா அன்னையின் குழந்தைகளுக்கு தாய் மண்ணை மறக்க உரிமை இல்லை. இருவருமே நமக்கு சமமானவர்கள் தான்.. தாய் நிலம் நமது வாழ்க்கை, உமியா அன்னை நமது ஆன்மீக வழிகாட்டி. எனவே, வடக்கு குஜராத் பிராந்தியத்தில் இயற்கை விவசாயத்திற்கு மாறுவதற்கு உமியா அன்னை முன்னிலையில் சரியான நேரத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் நான் வலியுறுத்துகிறேன். இயற்கை விவசாயத்தை ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்றும் கூறலாம். மோடிக்கு விவசாயம் புரியவில்லை, இன்னும் அவர் அறிவுரை கூறிக்கொண்டே இருக்கிறார் என்று நம்மில் பலர் நினைப்போம். சரி, எனது கோரிக்கை உங்களுக்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லை என்றால், உங்களிடம் 2 ஏக்கர் விவசாய நிலம் இருந்தால், குறைந்தபட்சம் 1 ஏக்கரில் இயற்கை விவசாயத்தை செய்து பாருங்கள். ஒரு வருடம் இதையே முயற்சி செய்யுங்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், 2 ஏக்கருக்கும் இயற்கை விவசாயத்திற்கு மாறலாம். இது செலவை மிச்சப்படுத்துவதோடு, நமது தாய் மண் புத்துயிர் பெற வழிவகுக்கும். வரவிருக்கும் பல தலைமுறைகளுக்கு நீங்கள் ஒரு சிறந்த பணியை செய்வீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். இவை அனைத்தும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 16-ம் தேதி அமுல் டெய்ரி ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஒன்றில் நான் உரையாற்ற வேண்டும். இயற்கை விவசாயம் பற்றி அங்கு விரிவாக விவாதிப்பேன். இயற்கை விவசாயம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டு, அதை ஏற்றுக்கொண்டு உமியா அன்னையின் ஆசியுடன் அதை முன்னெடுத்துச் செல்லுமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். “அனைவரின் முயற்சியுடன், அனைவருடன், அனைவரின் நன்மைக்காக, அனைவரின் நம்பிக்கையுடன்” என்பது எங்களது முழக்கமாகும். தற்போது அனைவரின் முயற்சி தேவைப்படுகிறது.
அதேபோல், குறிப்பாக பனஸ்கந்தா பயிர் முறைகளிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்கள் அவதானித்திருக்க வேண்டும். பல புதிய விவசாய விளைபொருட்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கட்ச் மாவட்டத்தைப் பாருங்கள். சொட்டு நீர்ப் பாசன முறையை கட்ச் பின்பற்றத் தொடங்கியது. இன்று கட்ச் பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாமும் இதைச் செய்யலாம். அதை நாம் சிந்திக்க வேண்டும். எனவே, இன்று நீங்கள் அனைவரும் உமியா அன்னையின் சேவையில் பல பணிகளைத் தொடங்கும்போது நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்;
நாம் சொர்க்க லோகத்திற்காக மா உமியாவை வணங்குகிறோம் என்பது உண்மையாக இருப்பினும், உமியா அன்னையின் பக்தியுடன் சேவையை நீங்கள் இணைத்துள்ளீர்கள்; எனவே, சொர்க்கத்தின் மீது அக்கறை காட்டுவதுடன், இந்த உலகத்தைப் பற்றியும் அக்கறை கொண்டீர்கள். மா உமியாவின் ஆசீர்வாதத்துடன், தற்போதைய தலைமுறையினரை திறமையாகவும், அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தவும், இன்று தொடங்கப்படும் புதிய முயற்சிகள் மற்றும் திட்டங்கள் நிச்சயமாக குஜராத் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
“விடுதலையின் அமிர்த மஹோத்ஸவம்” மற்றும் உமியா அன்னையின் கோவிலின் கட்டுமானத்தை தேசம் கொண்டாடும் நேரத்தில், நாம் அனைவரும் ஒன்றாக பல புதிய தீர்மானங்களுடன் முன்னேறி செல்ல வேண்டும்.
மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், பணியின் முன்னேற்றம் குறித்து விவாதிப்போம். மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.
ஜெய் உமியா மா.