தமிழக ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்களே, தமிழக முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களே, மத்திய அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா அவர்களே, எனது சக அமைச்சர்கள் திரு எல். முருகன் அவர்களே, திருமதி. பாரதி பவார் அவர்களே, தமிழக அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களே,
தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளே, வணக்கம்! உங்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று புகழ்பெற்ற பாடல் ஒன்று சொல்கிறது.
இன்று நாம் இரண்டு சிறப்புக் காரணங்களுக்காக சந்திக்கிறோம்: 11 மருத்துவக் கல்லூரிகளின் திறப்பு விழா மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டிட திறப்பு விழா. இதன் மூலமாக, நமது சமூகத்தின் ஆரோக்கியத்தை நாம் மேம்படுத்தி, நமது கலாச்சாரத்துடனான தொடர்பை பலப்படுத்துகிறோம்.
நண்பர்களே,
மருத்துவக் கல்வி என்பது மிகவும் விரும்பப்படும் படிப்புகளில் ஒன்றாகும். மருத்துவர்களுக்கான பற்றாக்குறை இந்தியாவில் நிலவுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண போதிய முயற்சிகள் எடுக்கப்படவில்லை. சுயநல சக்திகள் முந்தைய அரசுகளை சரியான முடிவுகளை எடுக்க விடாமல் செய்திருக்கலாம். மேலும், மருத்துவக் கல்விக்கான அணுகலும் பிரச்சினையாகவே இருந்தது. நாங்கள் பதவியேற்றது முதல், இந்த இடைவெளியை நிவர்த்தி செய்ய எங்கள் அரசு பாடுபட்டு வருகிறது. 2014-ல் நம் நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் இந்த எண்ணிக்கை 596 மருத்துவக் கல்லூரிகளாக உயர்ந்துள்ளது. இது 54 சதவீதம் அதிகமாகும். 2014-ம் ஆண்டில், நம் நாட்டில் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கை 82 ஆயிரம் இருந்தது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சுமார் 1 லட்சத்து 48 ஆயிரம் இடங்களாக உயர்ந்துள்ளது. இது சுமார் 80 சதவீதம் அதிகமாகும். 2014-ம் ஆண்டில், நாட்டில் ஏழு எய்ம்ஸ் அமைப்புக்கள் மட்டுமே இருந்தன. ஆனால் 2014-க்குப் பிறகு, ஒப்புதல் அளிக்கப்பட்ட எய்ம்ஸ்களின் எண்ணிக்கை இருபத்தி இரண்டாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மருத்துவக் கல்வித் துறையை வெளிப்படைத் தன்மையுடன் மாற்றும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தரத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைப்பதற்கான விதிமுறைகள் தாராளமயமாக்கப்பட்டுள்ளன.
நண்பர்களே,
ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவது இதுவே முதல் முறை என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, உத்தரப்பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 9 மருத்துவக் கல்லூரிகளை நான் திறந்து வைத்தேன். எனவே, எனது சாதனையை நானே முறியடிக்கிறேன். பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வது முக்கியம். அந்த வகையில், ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வளர்ச்சித் தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாவட்டங்கள் இவை. தொலைதூர மலை மாவட்டமான நீலகிரியில் ஒரு கல்லூரி அமைந்துள்ளது.
நண்பர்களே,
வாழ்நாளில் ஒருமுறை மட்டும் நிகழும் கொவிட்-19 பெருந்தொற்று சுகாதாரத் துறையின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சுகாதாரத்தில் முதலீடு செய்யும் சமூகங்களுக்கு எதிர்காலம் சொந்தமானது. இந்திய அரசு இத்துறையில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. ஆயுஷ்மான் பாரத்தின் காரணமாக, ஏழைகளுக்கு உயர்தர மற்றும் மலிவு விலையில் மருத்துவ வசதி கிடைக்கிறது. முழங்கால் மாற்று மற்றும் ஸ்டென்ட்களின் விலை முன்பு இருந்ததை விட மூன்றில் ஒரு பங்காகிவிட்டது. பிரதமரின் மக்கள் மருந்துகள் திட்டம் மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதில் புரட்சியைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் இதுபோன்ற 8000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த திட்டம் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவியாக உள்ளது. மருந்துகளுக்கு செலவிடும் பணம் வெகுவாக குறைந்துள்ளது. பெண்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்த, 1 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தை தமிழக மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு இயக்கமானது, குறிப்பாக மாவட்ட அளவில் சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார ஆராய்ச்சியில் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகத்திற்கு மூவாயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள், மாவட்ட பொது சுகாதார ஆய்வகங்கள் மற்றும் தீவிர சிகிச்சை வளாகங்களை மாநிலம் முழுவதும் நிறுவ இது உதவும். இதனால் தமிழக மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் அளப்பரியவை.
நண்பர்களே,
வரவிருக்கும் ஆண்டுகளில், தரமான மற்றும் குறைந்த செலவிலான மருத்துவ சேவைக்கான இடமாக இந்தியா உருவாகும் என நான் நம்புகிறேன். மருத்துவ சுற்றுலாவின் மையமாக திகழ்வதற்கு தேவையான அனைத்தையும் இந்தியா கொண்டுள்ளது. இதை நமது மருத்துவர்களின் திறமையின் அடிப்படையில் சொல்கிறேன். தொலைதூர மருத்துவத்தின் மீதும் கவனம் செலுத்துமாறு மருத்துவத் துறையினரை நான் கேட்டுக்கொள்கிறேன். ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்திய நடைமுறைகளின் மீது உலகமே இன்று கவனம் செலுத்துகிறது. யோகா, ஆயுர்வேதம் மற்றும் சித்தா ஆகியவை இதில் அடங்கும். உலகம் புரிந்து கொள்ளும் மொழியில் இவற்றை பிரபலப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
நண்பர்களே,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டடம் தமிழ்ப் படிப்புக்களை மேலும் பிரபலப்படுத்தும். மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் பரந்த பரப்பை இது கொடுக்கும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க திட்டமிட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல முயற்சியாகும். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் செழுமையால் நான் எப்போதும் ஈர்க்கப்படுகிறேன். ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் மிகப் பழமையான மொழியான தமிழில் சில வார்த்தைகள் பேசும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. பண்டைய காலத்தின் வளமான சமுதாயம் மற்றும் கலாச்சாரத்திற்கான நமது சாளரமாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. தமிழ் படிப்புகளுக்கான சுப்பிரமணிய பாரதி இருக்கையை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நிறுவிய பெருமையும் எங்கள் அரசுக்கு உண்டு. எனது நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்திருக்கும் இந்த இருக்கை தமிழ் மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும். திருக்குறளின் மொழிபெயர்ப்பை குஜராத்தியில் நான் அறிமுகப்படுத்திய போது, காலத்தால் அழியாத படைப்பின் செழுமையான சிந்தனைகள் குஜராத் மக்களுடன் இணைந்திருப்பதையும், பண்டைய தமிழ் இலக்கியங்களில் அதிக ஆர்வத்தை இது ஏற்படுத்தும் என்பதையும் அறிந்து கொண்டேன்.
நண்பர்களே,
நமது தேசியக் கல்விக் கொள்கை 2020-ல் இந்திய மொழிகள் மற்றும் இந்திய அறிவு அமைப்புகளை மேம்படுத்துவதற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். பள்ளிக் கல்வியில் இடைநிலை அல்லது நடுத்தர அளவில் தமிழை இப்போது செம்மொழியாகப் படிக்கலாம். மொழிகள் சங்கத்தில் உள்ள மொழிகளில் தமிழும் ஒன்று, ஒலி/ஒளி பதிவுகள் மூலம் பல்வேறு இந்திய மொழிகளில் 100 வாக்கியங்களை பள்ளி மாணவர்கள் இங்கு நன்கு அறிந்திருக்கிறார்கள். பாரதவாணி திட்டத்தின் கீழ் தமிழின் மிகப்பெரிய மின்-உள்ளடக்கம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
பள்ளிகளில் தாய்மொழி மற்றும் உள்ளூர் மொழிகளில் கல்வி கற்பதை ஊக்குவிக்கிறோம். பொறியியல் போன்ற தொழில்நுட்பப் படிப்புக்களை இந்திய மொழிகளில் மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் பணியை எங்கள் அரசு தொடங்கியுள்ளது. பல பிரகாசமான பொறியாளர்களை தமிழ்நாடு உருவாக்கியுள்ளது. அவர்களில் பலர் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிகத் தலைவர்களாக மாறியுள்ளனர். ஸ்டெம் என அழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் படிப்புகளில் தமிழ் மொழி உள்ளடக்கத்தை வளர்க்க உதவுமாறு இந்த திறமையான தமிழ் புலம்பெயர் மக்களை நான் அழைக்கிறேன். ஆங்கில மொழி ஆன்லைன் படிப்புகளை தமிழ் உட்பட பன்னிரண்டு வெவ்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மொழிபெயர்ப்புக் கருவியையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம்.
நண்பர்களே,
இந்தியாவின் பன்முகத்தன்மையே நமது பலம். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வை மேம்படுத்தி நமது மக்களை நெருக்கமாக்க முயல்கிறது. ஹரித்வாரில் உள்ள ஒரு சிறு குழந்தை திருவள்ளுவர் சிலையைப் பார்த்து, அவரது பெருமையைப் பற்றி அறியும் போது, ஒரே பாரதம், உன்னத பாரதத்தின் விதை இளம் மனதில் பதிகிறது. ஹரியானாவைச் சேர்ந்த ஒரு குழந்தை கன்னியாகுமரியில் உள்ள நினைவிடத்திற்குச் செல்லும் போதும் இதேபோன்ற உணர்வு காணப்படுகிறது. தமிழ்நாடு அல்லது கேரளாவைச் சேர்ந்த குழந்தைகள் வீர் பால் திவாஸ் பற்றி அறிந்து கொள்ளும்போது, சாஹிப்ஜாதேஸின் வாழ்க்கை மற்றும் செய்தியுடன் அவர்கள் தொடர்பு கொள்கிறார்கள். தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த இந்த மண்ணின் மகத்தானவர்கள் தங்கள் லட்சியத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாதவர்கள். பிற கலாச்சாரங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்வோம். நீங்கள் அதை ரசிப்பீர்கள் என்று நான் உறுதியளிக்கிறேன்.
நண்பர்களே,
உரையை நிறைவு செய்வதற்கு முன், கொவிட்-19 தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் குறிப்பாக முக கவசம் அணிவதை பின்பற்றுமாறு, உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தடுப்பூசி எடுக்க ஆரம்பித்துள்ளனர். முதியோர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான முன்னெச்சரிக்கை டோஸ் நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அனைவருடன், அனைவரின் நன்மைக்காக, அனைவரின் நம்பிக்கை மற்றும் முயற்சியுடன் என்ற தாரகமந்திரத்தால் வழிநடத்தப்பட்டு, 135 கோடி இந்தியர்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பெருந்தொற்றிலிருந்து கற்றுக்கொண்டு, அனைவருக்கும் உள்ளடக்கிய மற்றும் தரமான சுகாதார சேவைகளை நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் உறுதி செய்ய தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். நமது வளமான கலாச்சாரத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, வருங்கால சந்ததியினருக்கு அமிர்த காலத்தின் அடித்தளத்தை உருவாக்க வேண்டும். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். அது நம் அனைவருக்கும் அமைதியையும் செழிப்பையும் தரட்டும்.
வணக்கம்,
நன்றி.