எனதருமை நாட்டு மக்களே!

75-ஆவது சுதந்திர தினம், விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் இருந்து இந்தியா மீதும் ஜனநாயகத்தின் மீதும் பற்று கொண்டிருப்பவர்கள்  அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தின் புனித திருநாளான இன்று, நாட்டின் பாதுகாப்பிற்காக இரவும் பகலும் தங்களையே தியாகம் செய்யும் வீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை நாடு சிரம் தாழ்த்தி வணங்குகிறது.விடுதலையை மக்கள் இயக்கமாக மாற்றிய பாபு, சுதந்திரத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அல்லது பகத் சிங் சந்திரசேகர் ஆசாத் பிஸ்மில் மற்றும் அஸ்ஃபகுல்லா கான் போன்ற புரட்சியாளர்கள்; ஜான்சியின் ராணி லட்சுமிபாய், கிட்டுரின் ராணி சென்னம்மா அல்லது ராணி காய்டின்லியு அல்லது அசாமில் உள்ள மாதங்கினி ஹஸ்ராவின் வீரம், நாட்டின் முதல் பிரதமர் பண்டித நேரு அவர்கள், ஒருங்கிணைந்த நாடாக தேசத்தை ஒன்றிணைத்த சர்தார் வல்லபாய் படேல், வருங்கால இந்தியாவிற்கான பாதையை வழிகாட்டி, நிர்ணயித்த பாபா சாகேப் அம்பேத்கர் உள்ளிட்ட ஒவ்வொரு தலைவரையும் நாடு நினைவு கூர்கிறது. இவர்களைப் போன்ற தலைசிறந்த ஆளுமைகளுக்கு நாடு என்றும் கடமைப்பட்டுள்ளது.

இந்தியா, ரத்தினக் கற்கள் அமையப்பெற்ற நாடு. இந்தியாவை கட்டமைத்து அதன் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னெடுத்துச் சென்ற வரலாற்றில் அதிகம் பேசப்படாத இந்தியாவின் மூலை முடுக்கைச் சேர்ந்த எண்ணிலடங்காத மக்களை நான் வணங்குகிறேன்.

பல நூற்றாண்டுகளாக தாய்நாடு, கலாச்சாரம் மற்றும் சுதந்திரத்திற்காக இந்தியா போராடியுள்ளது.  அடிமைப் போக்கின் மற்றும் பல நூற்றாண்டுகளாக சுதந்திரத்திற்காக இயங்கிவந்த முயற்சியை நாடு என்றும் கைவிடவில்லை. வெற்றி மற்றும் தோல்விகளுக்கு இடையே மனதில் பொறிக்கப்பட்டிருந்த விடுதலையின் வேட்கை சிறிதும் குறையவில்லை. இதுபோன்ற போராட்டங்களின் தலைவர்கள், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளை வணங்குவதற்கான தருணம் இது. நமது பெரு மதிப்பிற்கும் அவர்கள் உரியவர்களாகிறார்கள்.

தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் ஈடுபட்ட நமது மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், விஞ்ஞானிகள், கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தின் போது பொது சேவையில் ஈடுபட்ட லட்சக்கணக்கான நாட்டு மக்களும் நம் அனைவரது பாராட்டைப பெறுவதற்கு தகுதி பெறுகிறார்கள்.

இன்று, நாட்டின் சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது, நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன. சில சோகமான செய்திகளும் கிடைக்கின்றன. பல்வேறு பகுதிகளில் மக்களின் துயரங்கள் அதிகரித்துள்ளன. இதுபோன்ற நேரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் நிலையில் உள்ளன. இளம் தடகள வீரர்களும் இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்த விளையாட்டு வீரர்களும் கூட இன்று நம்மிடையே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள்.

ஒரு சிலர் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். நமது விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் வகையில், பலத்த கரவொலியுடன் அவர்களை வணங்கி, அவர்களது பிரம்மாண்ட சாதனைக்கு மரியாதை செய்வோம் என்று இங்கு அமர்ந்துள்ளவர்களையும், இந்தியா முழுவதிலுமிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய விளையாட்டுகளுக்கும் இந்திய இளைஞர்களுக்கும் மதிப்பளித்து நாட்டிற்கு பெருமை தேடித்தந்த இந்திய இளைஞர்களை கௌரவிப்போம். கோடிக்கணக்கான நாட்டுமக்கள் இந்தியாவின் இளைஞர்களுக்கு குறிப்பாக இந்தியாவிற்கு மதிப்பை தேடித்தந்த தடகள வீரர்களுக்கு பலத்த கரகோஷத்தின் வாயிலாக தங்களது மரியாதையை தெரிவிக்கிறார்கள். அவர்கள் நமது இதயங்களை மட்டும் வென்றிடவில்லை, தங்களது பிரம்மாண்ட சாதனைகளால் இந்திய இளைஞர்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஊக்கம் அளித்துள்ளார்கள் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனதருமை நாட்டு மக்களே,

நமது சுதந்திரத்தை இன்று நாம் கொண்டாடும் வேளையில்  அனைத்து இந்தியர்களின் இதயங்களிலும் பிரிவினை ஏற்படுத்திய காயத்தை நம்மால் மறக்க இயலாது. கடந்த நூற்றாண்டில் மிகப்பெரிய பேரழிவுகளுள் இதுவும் ஒன்று. சுதந்திரம் அடைந்த பிறகு இந்த மக்களை வெகு விரைவில் மறந்து விட்டோம். நேற்றுதான் அவர்களது நினைவாக ஓர் உணர்ச்சிபூர்வமான முடிவை இந்தியா எடுத்துள்ளது. பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்களின் நினைவாக ஆகஸ்ட் 14-ஆம் தேதியை பிரிவினை கொடுமைகள் தினமாக  நாம் இனி அனுசரிப்போம். மனிதாபிமானமற்ற சூழ்நிலையால் பாதிக்கப்பட்டவர்கள், கொடுமையாக நடத்தப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகள் கூட நடத்தப்படவில்லை. அவர்கள் எப்போதும் வாழ்ந்து, நமது நினைவுகளிலிருந்து நீங்காமல் இருக்க வேண்டும். 75-வது சுதந்திர தினத்தன்று, பிரிவினை கொடுமைகள் தினத்தை அனுசரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவு ஒவ்வொரு இந்தியரும் அவர்களுக்கு செய்யும் மரியாதையாகும்.

எனதருமை நாட்டு மக்களே,

ஒட்டுமொத்த உலகில் மனிதாபிமானம் மற்றும் வளர்ச்சியின் பாதையில் பயணித்து வந்த நாட்டிற்கு கொரோனா காலகட்டம் மாபெரும் சவாலாக அமைந்தது. இந்தியர்கள் இந்தப் போரை விடாமுயற்சி மற்றும் பொறுமையினால் வென்றார்கள். நம் எதிரே ஏராளமான சவால்கள் இருந்தன. ஒவ்வொரு துறையிலும் நாட்டு மக்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். நமது தொழில்முனைவோர் மற்றும் விஞ்ஞானிகளின் சக்தியால், நம் நாடு தடுப்பூசிக்காக எவரையும், எந்த நாட்டையும் சார்ந்து இருக்கவில்லை. தடுப்பூசி இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். போலியோ தடுப்பு மருந்து கிடைப்பதற்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டது?

பெருந் தொற்று ஒட்டுமொத்த உலகை சூழ்ந்துள்ள இத்தகைய மாபெரும் நெருக்கடியின்போது தடுப்பூசிகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. இந்தியாவிற்கு தடுப்பூசி கிடைத்திருக்கலாம் அல்லது கிடைக்காமலும் இருந்திருக்கலாம். அவ்வாறு கிடைத்திருந்தாலும் உரிய நேரத்தில் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. ஆனால் இன்று உலகின் மாபெரும் தடுப்பூசித் திட்டம் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது என்பதை நாம் பெருமையுடன் கூறிக் கொள்ளலாம். 54 கோடிக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசி டோஸ்களைப் போட்டுக் கொண்டுள்ளனர். கோவின் மற்றும் மின்னணு சான்றிதழ்கள் போன்ற இணையதள முறைகள் உலகை வெகுவாக கவர்ந்து வருகிறது. பெருந்தொற்றின் போது தொடர்ந்து பல மாதங்களுக்கு 80 கோடி நாட்டு மக்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்கி ஏழைக் குடும்பங்களின் அடுப்புகள் எரிய இந்தியா வழிவகை செய்தது, உலக நாடுகளுக்கு வியப்பளித்ததுடன், விவாதப் பொருளாகவும் மாறியது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைந்த அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மை; உலகின் பிற நாடுகளின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் அதிக மக்களைப் பாதுகாக்க முடிந்தது என்பதும் உண்மை. ஆனால் இது பெருமை படக் கூடிய விஷயம் அல்ல.  இந்த வெற்றியுடன் நாம் முடங்கி விடக்கூடாது. சவால்களே இல்லை என்பது நமது வளர்ச்சிப் பாதையின் முட்டுக்கட்டையாக அமையும்.

உலகின் பலமிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது அமைப்பு முறைகள் போதுமானதாக இல்லை, பணக்கார நாடுகளில் உள்ளவை நம்மிடையே இல்லை. மேலும் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது மக்கள் தொகை எண்ணிக்கை மிகவும் அதிகம். நமது வாழ்க்கை முறையும் வேறுபட்டுள்ளது. நமது பல்வேறு முயற்சிகளாலும் பல்வேறு மக்களை நம்மால் காப்பாற்ற இயலவில்லை. ஏராளமான குழந்தைகள் ஆதரவின்றி உள்ளனர். இந்த தாங்கொண்ணா துயரம் என்றும் நினைவில் இருக்கும்.

எனதருமை நாட்டு மக்களே,

ஒரு நாடு தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு புதிய தீர்வுகளுடன் முன்னேறும் சூழல் ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப்பாதையிலும் கடந்து செல்லும். இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் அந்தத் தருணம் தற்போது வந்துள்ளது. இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு ஒரே ஒரு நிகழ்ச்சியோடு முற்று பெறக்கூடாது. புதிய தீர்வுகளுக்கு நாம் அடித்தளமிட்டு, புதிய தீர்வுகளுடன் நாம் முன்னேற வேண்டும். இன்று தொடங்கி அடுத்த 25 ஆண்டுகளில் நாம் சுதந்திரத்தின் நூற்றாண்டை கொண்டாடும் தருணம் வரை புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான அம்ருத் காலமாக விளங்கும். இந்த அம்ருத் காலகட்டத்தில் நமது தீர்வுகளை நாம் அடைவதன் வாயிலாக இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டை பெருமையுடன் நாம் கொண்டாட முடியும்.

இந்தியாவின் வளர்ச்சி மற்றும் இந்திய மக்களின் புதிய உச்சத்தை அடைவதே ‘அம்ருத் காலத்தின்’ இலக்காகும். கிராமங்கள் மற்றும் நகரத்தை இணைக்காத வகையிலான வசதிகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே ‘அம்ருத் காலத்தின்’ இலக்காகும். நாட்டு மக்களின் வாழ்வில் தேவையில்லாமல் அரசு தலையிடாமல் இருக்கும் வகையிலான இந்தியாவை கட்டமைப்பதே ‘அம்ருத் காலத்தின்’ இலக்காகும். உலகின் ஒவ்வொரு நவீன உள்கட்டமைப்பும் இடம் பெறும் வகையிலான இந்தியாவை உருவாக்குவதே ‘அம்ருத் காலத்தின்’ இலக்காகும்.

நாம் எவரையும் விட குறைந்தவர்களாக இருக்கக்கூடாது. இதுதான் கோடிக்கணக்கான நாட்டு மக்களின் உறுதியாகும். ஆனால் கடுமையான உழைப்பு மற்றும் துணிச்சல் இல்லாமல் இந்த உறுதித்தன்மை பூர்த்தியடையாது. எனவே கடின உழைப்பு மற்றும் துணிச்சலுடன் நமது அனைத்து உறுதிகளையும் நாம் நிறைவேற்ற வேண்டும். இந்த கனவுகளும் தீர்வுகளும் எல்லைகளுக்கு அப்பால் பாதுகாப்பான, வளமான உலகிற்கும் சிறந்த பங்களிப்பாக விளங்கும்.

அம்ருத் காலம் என்பது 25 ஆண்டுகள் ஆகும். ஆனால் நமது இலட்சியங்களை அடைவதற்கு அவ்வளவு காலம் நாம் காத்திருக்க தேவையில்லை. நாம் தற்போதே தொடங்க வேண்டும். நாம் காலதாமதம் செய்யக்கூடாது. இதுதான் சரியான தருணம். நமது நாடும் மாற வேண்டும், நாட்டு மக்களான நாமும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரும் வளர்ச்சி அடைவோம்’ என்ற தாரக மந்திரத்துடன் நாம் தொடங்கியுள்ளோம். ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரும் வளர்ச்சி அடைவோம்’ ஆகியவற்றுடன் ‘அனைவரும் முயற்சிப்போம்’ என்பதும்  நமது இலக்குகளை அடைய மிகவும் அவசியம் என்று இன்று செங்கோட்டையிலிருந்து நான் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்களால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உஜ்வாலா முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டங்கள் வரை அவற்றின் முக்கியத்துவத்தை  அறிவர். இன்று அரசு திட்டங்களின் வேகம் துரிதப்படுத்தப்பட்டிருப்பதுடன், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து வருகின்றன. முன்பைவிட வேகமாக நாம் வளர்ச்சி அடைந்து வருகிறோம். ஆனால் இத்துடன் அது நிற்பதற்கில்லை. போதும் என்ற எல்லையை நாம் அடைய வேண்டும். அனைத்து கிராமங்களிலும் சாலை வசதிகள் வழங்கப்பட வேண்டும், அனைத்து வீடுகளுக்கும் வங்கிக்கணக்குகள் இருக்க வேண்டும், அனைத்து பயனாளிகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் கிடைக்க வேண்டும், தகுதி வாய்ந்த அனைவரும் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயன்களைப் பெற்று சமையல் எரிவாயு இணைப்புகளைப் பெறவேண்டும்.  தகுதிவாய்ந்த ஒவ்வொரு நபரையும் அரசின் காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் வீட்டு வசதி திட்டங்கள் உடன் இணைக்க வேண்டும். 100% இலக்கை அடையும் மன நிலையோடு நாம் முன்னேற வேண்டும். இதுவரை தெருக்களிலும் வண்டிகளிலும் நடைபாதைகளிலும் பொருட்களை விற்பவர்கள் குறித்து யாரும் சிந்தித்தது இல்லை. இவர்களைப் போன்ற சக நண்பர்கள் அனைவரும் நிதி திட்டத்தின் வாயிலாக வங்கி அமைப்பு முறையுடன் இணைக்கப்படுகிறார்கள்.

100% வீடுகளுக்கு மின்சார இணைப்புகளை வழங்கியுள்ளதைப் போல, 100% வீடுகளுக்கு கழிவறைகளை கட்டமைப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டதைப் போல, திட்டங்களை முழுமை பெறும் இலக்கை அடைவதை நோக்கி நாம் முன்னேற வேண்டும். அதற்காக நீண்டகால கால வரம்பை நிர்ணயிக்கத் தேவையில்லை. ஒரு சில ஆண்டுகளிலேயே நமது உறுதித் தன்மையை நாம் மெய்யாக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இயக்கத்தை விரிவுபடுத்தும் பணியில் நாடு ஈடுபட்டுள்ளது. ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளிலேயே நான்கரை கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் வரத் தொடங்கி விட்டது. கோடிக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஆசீர்வாதங்களைப் பெறுவதே உண்மையான மூலதனம். இந்த இலக்கை 100% அடைவதன் பலன்,   அரசின் பயன்களைப் பெறுவதிலிருந்து ஒருவரும் விடுபட மாட்டார்கள் என்பதே. வரிசையில் கடைசியில் இருக்கும் நபரை சென்றடைய அரசு இலக்கை நிர்ணயிக்கும் போது மட்டுமே, பாகுபாடு என்பது இல்லாமல் ஊழலுக்கு வாய்ப்பு இல்லாமல் போகும்.

எனதருமை நாட்டு மக்களே,

ஒவ்வொரு ஏழை நபருக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்குவதும் இந்த அரசின் முன்னுரிமை. ஏழைப் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதிய ஊட்டச்சத்து கொடுக்கப்படாமல் இருப்பது அவர்களது வளர்ச்சியில் தடைக்கற்களாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசியை ஏழைகளுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஏழைகளுக்கு ஊட்டச்சத்துடன் கூடிய செறிவூட்டப்பட்ட  அரிசி வழங்கப்படும். ரேஷன் கடைகளில் உள்ள அரிசி ஆகட்டும் அல்லது சத்துணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் அரிசி ஆகட்டும் அல்லது ஒவ்வொரு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியாகட்டும், வரும் 2024-ஆம் ஆண்டிற்குள் இவை அனைத்தும் செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றப்படும்.

எனதருமை நாட்டு மக்களே,

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சிறந்த சுகாதார வசதிகளை வழங்குவதற்கான பிரச்சாரமும் இன்று விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவக் கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நோய் தடுப்பு வழிமுறைகளுக்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதேவேளையில் நாட்டில் மருத்துவ இடங்களுக்கான எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் தரமான மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. அவுஷாதி திட்டத்தின் வாயிலாக மலிவு விலையில் ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் மருந்துகள் கிடைக்கிறது. இதுவரை 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் ஆரோக்கிய மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. வட்டார அளவில் கூட மருத்துவமனைகள் மற்றும் நவீன ஆய்வகங்களில் பிரத்தியேகமாக நவீன உள் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படுகிறது. வெகுவிரைவில் நாட்டில் ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளில் பிராணவாயு ஆலைகள் உருவாக்கப்படும்.

எனதருமை நாட்டு மக்களே,

21-ஆம் நூற்றாண்டில் புதிய உச்சத்திற்கு இந்தியாவை அழைத்துச் செல்வதற்கு இந்தியாவில் திறமைகளை சரியான வழியில் பயன்படுத்துவது அவசியமாகிறது.

இது, மிகவும் முக்கியம். இதற்காக பின்தங்கிய பிரிவுகள் மற்றும் துறைகளுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், தலித்துகள், பின்தங்கிய வகுப்பினர், மலைவாழ் மக்கள் மற்றும் ஏழை மக்களுக்கு பொது பிரிவிலிருந்து இட ஒதுக்கீடும் உறுதி செய்யப்படுகிறது. அண்மையில், மருத்துவ கல்வித்துறையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டதன் வாயிலாக மாநிலங்களுக்கு  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான பட்டியலை தயாரிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

எனதருமை நாட்டு மக்களே,

சமூகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் எந்த ஒரு நபரோ அல்லது பிரிவோ விடுபட்டு விடக்கூடாது என்பதை நாம் உறுதி செய்யும் வேளையில், அதேபோல நாட்டின் எந்த பகுதியும் எந்த இடமும் பின்தங்கி விடக்கூடாது. வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த மானதாக, அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பின்தங்கிய பகுதிகளை முன்னிற்கு கொண்டு வருவதற்காக கடந்த ஆண்டுகளில் நாம் மேற்கொண்ட முயற்சிகளை தற்போது விரைவு படுத்துகிறோம். கிழக்கு இந்தியா, வட கிழக்கு, ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட ஒட்டுமொத்த இமாலய பகுதி, கடலோர பகுதிகள், மலைவாழ் இடங்கள் உள்ளிட்ட பகுதிகள் இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில், இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு மாபெரும் அடித்தளமாக மாறப்போகிறது.

இன்று வடகிழக்கு பகுதிகளில் புதிய இணைப்பிற்கான அத்தியாயம் உருவாக்கப்பட்டுள்ளது. இதயங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் இணைப்பாகும். வடகிழக்கு மாகாணங்களில் அனைத்து தலைநகரங்களிலும் ரயில் சேவை இணைப்பு பணிகள் விரைவில் நிறைவடையும். கிழக்கை நோக்கி கொள்கையின் கீழ், வடகிழக்கு, வங்கதேசம், மியான்மர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவும் இணைக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் உன்னத பாரதம் மற்றும் அமைதிக்கான நடவடிக்கைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் வடகிழக்குப் பகுதிகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

வடகிழக்கில் சுற்றுலா, சாகச விளையாட்டு, இயற்கை வேளாண்மை, இயற்கை மருத்துவம் முதலியவற்றில் மிகப் பெரும் வாய்ப்புகள் உள்ளன. இந்த சாத்தியக்கூறுகளை நாட்டின் வளர்ச்சிப் பாதையில் முழுமையாக பயன்படுத்த வேண்டும். அமருத் காலத்தின் ஒரு சில தசாப்தங்களுக்குள் இதனை நாம் நிறைவு செய்ய வேண்டும். அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதே ஜனநாயகத்தின் உண்மையான மனப்பான்மை. ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சியின் சமநிலையைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

ஜம்மு காஷ்மீரில் எல்லை வரையறை ஆணையம் நிறுவப்பட்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. லடாக்கும் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கிறது. நவீன உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுகிறது மறுபுறத்தில், சிந்து மத்திய பல்கலைக்கழகம் உயர்கல்வியின் மையமாக லடாக்கை மாற்றி வருகிறது.

21-ஆம் நூற்றாண்டின் இந்த தசாப்தத்தில் கடல்சார் பொருளாதாரத்தை நோக்கிய நடவடிக்கைகளையும் இந்தியா மேலும் துரிதப்படுத்தும். மீன் வளர்ப்பு கடல் பாசியின் புதிய சாத்தியக்கூறுகளையும் நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடலின் எல்லையற்ற வளங்களை ஆராய்வதற்கு ஆழ்கடல் இயக்கம் தகுந்த பயனை அளிக்கும். கடலில் ஒளிந்துள்ள தாது வளங்கள், கடல் நீரில் உள்ள அனல் எரி சக்தி ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உச்சத்தை வழங்கும்.

வளர்ச்சி குறைவாக இருந்த மாவட்டங்களின் லட்சியங்களையும் நாம் தட்டி எழுப்பி உள்ளோம். கல்வி சுகாதாரம் ஊட்டச்சத்து சாலைகள் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவை சம்பந்தமான திட்டங்கள் 110 லட்சியம் மிக்க மாவட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான மாவட்டங்கள் நமது பழங்குடி பகுதிகளில் உள்ளன. இந்த மாவட்டங்களிடையே வளர்ச்சிக்கான ஆரோக்கியமான போட்டியை நாம் உருவாக்கியுள்ளோம். இந்தியாவின் இதர மாவட்டங்களுக்கு இணையாக இந்த லட்சியமிக்க மாவட்டங்களும் பயணிக்கும் வகையில் வலுவான போட்டி நடைபெற்று வருகிறது.

எனதருமை நாட்டு மக்களே,

பொருளாதார உலகில், முதலாளித்துவம் மற்றும் சமத்துவமும் பலவற்றை விவாதித்துள்ளது, ஆனால் கூட்டுறவையும் இந்தியா வலியுறுத்துகிறது. கூட்டுறவு, நமது பாரம்பரியம் மற்றும் மதிப்புகளுடன் ஒத்துப்போகிறது.  கூட்டுறவில், மக்களின் ஒட்டு மொத்த சக்தி, பொருளாதாரத்தின் உந்து சக்தியாக மாறுகிறது. இது நாட்டின் அடிதட்டு பொருளாதாரத்துக்கு முக்கியமானதாக உள்ளது. கூட்டுறவு முறைகள், சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுடன் கூடிய முறையல்ல. கூட்டுறவு என்பது, உணர்வு, கலாச்சாரம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி மனநிலையுடன் கூடியது. அதற்கு அதிகாரம் அளிக்க, தனி அமைச்சகத்தை உருவாக்க, நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். மாநிலங்களில் கூட்டுறவு துறைக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எனதருமை நாட்டுமக்களே,

இந்த தசாப்தத்தில், கிராமங்களில் புதிய பொருளாதாரத்தை உருவாக்க நாம் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். இன்று, நமது கிராமங்களில் வேகமான மாற்றம் ஏற்படுவதை நாம் பார்க்கிறோம். கடந்த சில ஆண்டுகளில், கிராமங்களுக்கு சாலைகள் மற்றும் மின்சாரத்தை நமது அரசு வழங்கியுள்ளது. தற்போது, இந்த கிராமங்கள், கண்ணாடியிழை கேபிள் நெட்வொர்க் மற்றும் இணையதளம் மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்முனைவோர்கள், கிராமங்களிலும் உருவாகின்றனர். கிராமங்களில், 8 கோடிக்கும் மேற்பட்ட சகோதரிகள், சுய உதவிக் குழுக்களுடன் இணைந்து, உயர்ந்த தயாரிப்புகளை வடிவமைக்கின்றனர்.  அவர்களின் தயாரிப்புகளுக்கு, அரசு தற்போது மின்னணு-வர்த்தக தளத்தையும் உருவாக்கும். அப்போதுதான், அவற்றுக்கு நமது நாட்டிலும், வெளிநாடுகளிலும் மிகப் பெரிய சந்தை கிடைக்கும். உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுக்கும் மந்திரத்துடன், இன்று நாடு முன்னோக்கி செல்லும்போதும், டிஜிட்டல் தளம், சுயஉதவிக் குழு பெண்களின் தயாரிப்புகளை, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இணைக்கும். இதன் மூலம் அவர்களின் எல்லை மேம்படும்.

கொரோனா காலத்தில், தொழில்நுட்பம்,  நமது விஞ்ஞானிகளின் உறுதி மற்றும் திறன்களின் சக்தியை நாடு கண்டது. நமது விஞ்ஞானிகள், நாடு முழுவதும் விடா முயற்சியுடனும், யுக்தியுடனும் செயலாற்றுகின்றனர்.  நமது வேளாண் துறையிலும், விஞ்ஞானிகளின் திறன்களை ஒன்றிணைக்கும் நேரம் தற்போது வந்து விட்டது. தற்போது, நம்மால் காத்திருக்க முடியாது. இந்த பலத்தை நாம் அதிகரிக்க வேண்டும். நாட்டுக்கு உணவு பாதுகாப்பு அளிப்பதுடன், பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியை அதிகரிப்பதும் முக்கியமானது. அவ்வாறு, உலக அரங்கில் நாம் வலுவாக செல்ல வேண்டும்.

இந்த ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு இடையே, நமது வேளாண் துறையில் உள்ள முக்கிய சவால்களையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். மக்கள் தொகை அதிகரிப்பால், நிலத்தின் அளவு குறைகிறது மற்றும் குடும்பத்தில் நடைபெறும் பிரிவால் நிலங்களும் சிறிதாகும் சவால்களும் உள்ளன. எச்சரிக்கை விடுக்கும் வகையில், விவசாய நிலம், சுருங்கிவிட்டது.  80 சதவீதத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தை வைத்துள்ளனர். 100க்கு 80 சதவீத விவசாயிகள், இரண்டு ஹெக்டேருக்கு குறைவான நிலம் வைத்திருப்பதால்,  அவர்கள் சிறு விவசாயிகள் பிரிவில் உள்ளனர். துரதிருஷ்டமாக, இப்பிரிவினர் கடந்தாண்டுகளின் கொள்கைகளின் பயன்களை பெறமுடியாமல் போனது. அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. தற்போது, நாட்டில் உள்ள சிறு விவசாயிகளை  மனதில் வைத்து, அவர்கள் பயன் அடைவதற்காக,  வேளாண் சீர்திருத்தங்கள் மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

பயிர் காப்பீடு திட்டத்தின்  முன்னேற்றமாக இருக்கட்டும் அல்லது குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றரை மடங்கு அதிகரிக்கும் முக்கிய முடிவு;   விவசாய கடன் அட்டை மூலம் வங்கி கடன் அளிக்கும் முறை; சூரிய மின்சக்தி திட்டங்களை விவசாயத்துக்கு கொண்டு செல்வது, விவசாய சங்கங்களை ஏற்படுத்துவது போன்ற முயற்சிகள் சிறு விவசாயிகளின் சக்தியை அதிகரிக்கும்.  வரும்காலங்களில், வட்டார அளவில், கிடங்கு வசதியை ஏற்படுத்தும் பிரச்சாரமும் தொடங்கப்படும்.

சிறு விவசாயிகளின், சிறு செலவுகளை மனதில் வைத்து, பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை, ரூ.1.5 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட தொகை, 10 கோடி விவசாய குடும்பங்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.  சிறு விவசாயிதான் தற்போது நமது தீர்வு மற்றும் மந்திரம். சிறு விவசாயி நாட்டின் கவுரவமாக மாறுகிறார்...  இதுதான் நமது கனவு. வரும் காலங்களில், நாம் நாட்டின் சிறு விவசாயிகளின் கூட்டு சக்தியை அதிகரிக்க வேண்டும். புதிய வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

நாட்டில் 70க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், தற்போது, கிசான் ரயில் இயக்கப்படுகிறது. கிசான் ரயில், சிறு விவசாயிகளுக்கு இந்த நவீன வசதியை அளித்து அவர்களின் தயாரிப்புகளை குறைந்த செலவில் நீண்ட தூரங்களுக்கு கொண்டு செல்ல உதவுகிறது.  கமலம், ஷாஹி லிச்சி, பூட்ஜோலோகியா மிளகாய், கருப்பு அரிசி அல்லது மஞ்சள் போன்றவை பலநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இன்று, இந்திய மண்ணில் விளையும் பொருட்களின் மனம், உலகின் பல பகுதிகளில் வீசுவதால், நாடு மகிழ்ச்சியடைகிறது. இன்று உலக நாடுகள், இந்தியாவில் விளையும் காய்கறிகள் மற்றும் உணவு தானியங்களின் சுவையை அறியத் தொடங்கியுள்ளன. 

எனதருமை நாட்டு மக்களே,

இன்று கிராமங்களின் திறனை ஊக்குவிக்கும் நடவடிக்கைளின் ஒன்றின் உதாரணமாக ஸ்வமித்வா திட்டம் உள்ளது.  கிராமங்களில் உள்ள நிலங்களுக்கு என்ன மதிப்பு என்பது நம் அனைவருக்கும் தெரியும். நிலத்தின் உரிமையாளராக இருந்தும் நிலம் அடிப்படையில் அவர்கள் எந்த வங்கி கடனும் பெறுவதில்லை. ஏனென்றால், அவற்றுக்கு பல ஆண்டுகாலமாக ஆவணமே இல்லை. இந்த நிலையை மாற்ற ஸ்வமித்வா திட்டம் முயற்சிக்கிறது.  இன்று ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு நிலமும் ட்ரோன் மூலம் படம் பிடிக்கப்படுகிறது. கிராம நிலங்களின் சொத்து ஆவணங்கள் மற்றும் தரவு ஆகியவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதன் மூலம், கிராமங்களில் நிலம் தொடர்பான பிரச்சினைகள் மட்டும் முடிவுக்கு வரவில்லை, கிராம மக்கள் வங்கிகளில் இருந்து எளிதாக கடன் பெறும் முறையும் உருவாக்கப்பட்டுள்ளது. கிராம ஏழை மக்களின் நிலங்கள், பிரச்சினைகளாக இருப்பதைவிட,  வளர்ச்சியின் அடித்தளமாக இருக்க வேண்டும். இந்த நோக்கில்தான் நாடு இன்று சென்று கொண்டிருக்கிறது. 

எனதருமை நாட்டு மக்களே,

இந்தியாவின் எதிர்காலத்தை பற்றி சுவாமி விவேகானந்தர் பேசும்போதும், பாரத தாயின் மகத்துவத்தை அவர் தன் கண் முன் கண்டபோதும், கடந்த காலத்தை பற்றி முடிந்தவரை பாருங்கள். அங்கே புதிய நீருற்றின் நீரை பருகி அதன்பின் முன்னோக்கி பார்க்கவும். முன்னோக்கி சென்று இந்தியாவை எப்போது இல்லாத அளவில் சிறப்பாகவும், பிரகாசமாகவும் மாற்றவும் என அவர் கூறுவார்.  இந்த 75வது சுதந்திர தினத்தில், நாட்டின் ஆற்றலில் நம்பிக்கை வைத்து முன்னோக்கி செல்வது நமது கடமை. புதிய தலைமுறை கட்டமைப்புக்கு நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். உலகத்தரத்திலான தயாரிப்புக்கு நாம் பணியாற்ற வேண்டும். நவீன புத்தாக்கத்துக்கு நாம் பணியாற்ற வேண்டும். புதிய கால தொழில்நுட்பத்துக்கு நாம் பணியாற்ற வேண்டும்.

எனதருமை நாட்டு மக்களே,

நவீன உலகின் முன்னேற்றத்தின் அடித்தளம் நவீன கட்டமைப்பில் உள்ளது.  இது நடுத்தர மக்களின் தேவைகள் மற்றும் ஆசைகளை நிறைவேற்றுகிறது. பலவீனமான கட்டமைப்பு, வளர்ச்சியின் வேகத்தை குறைக்கிறது மற்றும் நகர்ப்புற நடுத்தர வர்க்கமும் கஷ்டப்படுகிறது.

எனதருமை நாட்டு மக்களே,

இந்த தேவையை உணர்ந்து, நாடு அசாதாரண வேகத்தையும், நிலம், கடல், வானம் என ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்தை  காட்டியுள்ளது. புதிய நீர்வழி போக்குவரத்தை உருவாக்குவதாக இருக்கட்டும் அல்லது புதிய இடங்களை,  கடலில் தரையிறங்கும் விமானங்கள் மூலம் இணைப்பதாக இருக்கட்டும், விரைவான முன்னேற்றம் நடந்து வருகிறது. இந்திய ரயில்வேயும், நவீன அவதாரத்துக்கு வேகமாக மாறுகிறது. சுதந்திரத்தின் அம்ரித் மகோத்சவத்தை கொண்டாட நாடு தீர்மானித்துள்ளது. இந்த அம்ரித் மகோத்சவத்தை 75 வாரங்கள் கொண்டாட நாங்கள் தீர்மானித்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது கடந்த மார்ச் 12ம் தேதி தொடங்கியது மற்றும் 2023 ஆகஸ்ட் 15ம் தேதி வரை தொடரும். புதிய உற்சாகத்துடன் நாம் முன்னோக்கி செல்ல வேண்டும் என்ற முக்கிய முடிவை நாடு எடுத்துள்ளது.

சுதந்திரத்தின் அம்ரித் மகோத்சவத்தின்  75 வாரங்களில், 75 வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும். நாட்டில் புதிய விமான நிலையங்கள் கட்டும் வேகம், நாட்டின் தொலைதூர பகுதிகளை இணைக்கும் உடான் திட்டம் இதற்கு முன் இல்லாதது.  சிறந்த விமான இணைப்பு, எப்படி மக்களின் கனவுகளுக்கு புதிய விமானங்களை அளிக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

எனதருமை நாட்டுமக்களே,

நவீன உள்கட்டமைப்புடன், கட்டுமானத்தில், முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. எதிர்காலத்தில், பிரதமரின் ‘வேக சக்தி’ என்ற தேசிய மாஸ்டர் திட்டத்தை நாங்கள் தொடங்கவுள்ளோம். இது கோடிக்கணக்கான நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றும் மிகப் பெரிய திட்டமாக இருக்கும். ரூ. 100 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட இந்த திட்டம், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை அளிக்கும்.

வேக சக்தி திட்டம், நமது நாட்டுக்கு தேசிய உள்கட்டமைப்புக்கான மாஸ்டர் திட்டமாக இருக்கும். இது முழுமையான உள்கட்டமைப்புக்கு அடித்தளம் அமைக்கும் மற்றும் நமது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான வழியை ஏற்படுத்தும். தற்போது, நமது போக்குவரத்து முறையில் ஒருங்கிணைப்பு இல்லை. வேக சக்தி திட்டம் அனைத்து குறைபாடுகளையும், தடைகளையும் அகற்றும்.  இது சாதாரண மக்களின் பயண நேரத்தை குறைக்கும் மற்றும் நமது தொழில்துறையின் உற்பத்தி அதிகரிக்கும். வேக சக்தி திட்டம், நமது உள்நாட்டு உற்பத்தியாளர்கள், உலகளாவிய போட்டியை சந்திப்பதில் முக்கியமானதாக இருக்கும் மற்றும் எதிர்காலத்தில் பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதில் புதிய சாத்தியங்களை ஏற்படுத்தும். இந்த தசாப்தத்தில், வேகத்தின் சக்தி, இந்தியாவின் மாற்றத்தின் அடிப்படையை உருவாக்கும். 

எனதருமை நாட்டு மக்களே,

இந்தியா வளர்ச்சி பாதையில் முன்னேறும்போது,  தனது உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். இந்தியா தனது முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்ஸ் விக்ராந்தின்  கடல் பரிசோதனையை சில நாட்களுக்கு முன் தொடங்கியதை நீங்கள் கண்டீர்கள். இன்று, இந்தியா தனது போர் விமானம், நீர் மூழ்கி கப்பலை உள்நாட்டில் தயாரிக்கிறது. விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டம், விண்வெளியில் இந்திய கொடியை நாட்டும். இதுவும், உள்நாட்டு தயாரிப்பில், நமது ஆழ்ந்த திறன்களுக்கு உதாரணமாக இருக்கிறது.

கொரோனா காரணமாக எழுந்த புதிய பொருளாதார சூழ்நிலையை முன்னிட்டு, மேக் இன் இந்தியா பிரச்சாரத்தை ஒருங்கிணைக்க, உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தை நாடு அறிவித்தது. இத்திட்டத்தின் மூலம் மாற்றம் பெற்ற துறைக்கு உதாரணமாக மின்னணு உற்பத்தி துறை உள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்பு, 8 பில்லியன் டாலர்கள் மதிப்பில், நாம் செல்போன்களை இறக்குமதி செய்து வந்தோம். ஆனால், தற்போது இறக்குமதி கணிசமாக குறைந்துள்ளது. 3 பில்லியன் டாலர் அளவுக்கு நாம் செல்போன்களை ஏற்றுமதி செய்கிறோம்.

இன்று, நமது உற்பத்தி துறை வேகம் எடுத்து வருகிறது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் எல்லாம், உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும் என்பதில் நமது கவனம் இருக்க வேண்டும். அப்போதுதான் உலகளாவிய போட்டியில் நாம் நிலைத்திருக்க முடியும். முடிந்தால், ஒரு படி முன்னேறி, உலக சந்தைக்கு நம்மை தயார்படுத்தும் நடவடிக்கையை நாம் எடுக்க வேண்டும். அதுதான் நமது இலக்காக இருக்க வேண்டும்.  நீங்கள் உலக சந்தையில் விற்கும் பொருள் உங்கள் நிறுவனத்தின் தயாரிப்பாக மட்டும் அல்ல. இது நமது நாட்டின் அடையாளம். இந்தியாவின் கவுரவம், நமது நாட்டு மக்களின் நம்பிக்கை என்பதை நீங்கள் மறக்க கூடாது. இதைத்தான், நாட்டின் தயாரிப்பாளர்களுக்கு நான் அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன். 

எனதருமை நாட்டு மக்களே,

அதனால்தான், நமது தயாரிப்பாளர்களிடம் நான் சொல்கிறேன், உங்களின் ஒவ்வொரு தயாரிப்பும் இந்தியாவின் தூதர். யாரோ ஒருவர், உங்கள் தயாரிப்பை வாங்கி பயன்படுத்தும்போது, ‘‘இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’’ என வாடிக்கையாளர் கவுரவத்துடன் கூற வேண்டும். அந்த மனநிலைதான் நமக்கு தேவை. நீங்கள் அனைவரும் உலக சந்தையை வெல்ல ஆசைப்பட வேண்டும். இந்த கனவு, நனவாக, அரசு உங்களுக்கு முழு ஆதரவாக உள்ளது.

எனதருமை நாட்டு மக்களே,

இன்று, பல புதிய தொடக்க நிறுவனங்கள் பல துறைகளில், நாட்டின் சிறு நகரங்களில் கூட  உருவாக்கப்படுகின்றன. அவர்களும் தங்கள் தயாரிப்புகளை மாநிலங்களுக்கு இடையிலான சந்தைக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்ற வேண்டும். இந்த தொடக்க நிறுவனங்களுக்கு அரசு துணை நிற்கிறது. நிதியுதவி அளிப்பதாக இருக்கட்டும், ரொக்க தள்ளுபடி அளிப்பதாக இருக்கட்டும், விதிமுறைகள் எளிமைப்படுத்துவதாக இருக்கட்டும், அரசு அவர்களுக்கு முழு ஆதரவாக உள்ளது. இந்த கொரோனா காலத்தில், பல புதிய தொடக்க நிறுவனங்கள் உருவாகியுள்ளதை நாம் பார்க்கிறோம். அவைகள் வெற்றியுடன் முன்னேறுகின்றன. கடந்தகால தொடக்க நிறுவனங்கள் எல்லாம் இன்றைய பிரபல நிறுவனங்களாக மாறியுள்ளன. அவர்களின் சந்தை மதிப்பு பல ஆயிரம் கோடியை எட்டிவிட்டது. 

அவர்கள் நாட்டில் இன்று, புதிய வகை சொத்தை உருவாக்குபவர்களாக உள்ளனர். அவர்களின் தனிச்சிறப்பான யோசனைகளின் சக்திகளால், அவர்கள் சொந்த காலில் நிற்கின்றனர், உலகை வெல்லும் கனவோடு அவர்கள் முன்னேறுகின்றனர்.  இந்த தசாப்தத்தில், இந்தியாவின் தொடக்க நிறுவனங்களை, உலகின் சிறந்ததாக மாற்றுவதை நோக்கி நாம் அயராது உழைக்க வேண்டும்.

எனதருமை நாட்டு மக்களே,

பெரிய அளவிலான மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள, அரசியல் துணிவு தேவை.  தற்போது, இந்தியாவில் அரசியல் துணிவுக்குப் பற்றாக்குறை இல்லை என்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.  சீர்திருத்தங்களை  நடைமுறைப்படுத்த சிறந்த மற்றும்  மிடுக்கான ஆளுகை தேவை.    ஆளுகையில் இந்தியா எவ்வாறு புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது என்பதை உலகம் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறது.  இந்த ‘அமிர்த கால‘ யுகத்தில், அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் … சேவை வழங்குவது போன்ற அனைத்து வசதிகளும், கடைக்கோடியில் உள்ள மக்களையும் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும்;  இந்த சேவைகள் கடைசி நபர் வரை தடையின்றி, தயக்கமின்றி அல்லது எவ்வித சிரமமுமின்றி சென்றடைவது அவசியம்.  நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு,  அரசின் தேவையற்ற தலையீடுகள் மற்றும் மக்களின் வாழ்க்கையில் தலையிடும் அரசாங்க நடைமுறைகளுக்கு முடிவுகட்டப்பட வேண்டும்.  

இதற்கு முன்பு, அரசாங்கமே ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தது.  அந்த காலகட்டத்தில், இது தான் மக்களின் கோரிக்கையாகவும் இருந்தது.   ஆனால், தற்போது அத்தகைய காலகட்டம் மாறிவிட்டது.   கடந்த ஏழு ஆண்டுகளில்,  தேவையற்ற சட்டப் பின்னல்கள் மற்றும் நடைமுறைகளிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் நாட்டில் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.    இதுவரை, நூற்றுக்கணக்கான பழங்கால சட்டங்கள் ஒழிக்கப்பட்டுள்ளது.   தற்போதைய கொரோனா பெருந்தொற்று காலத்திலும், 15,000-க்கும் மேற்பட்ட உடன்பாடுகளை அரசு ஒழித்துள்ளது.   அரசாங்கத்தில் நடைபெற வேண்டிய சிறிய வேலைகளுக்குக் கூட, பல்வேறு சிரமங்களையும், காகிதவேலைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.   இதுவரை அத்தகைய நிலைமை தான் இருந்து வந்தது.  நாங்கள், 15,000 நடைமுறைகளை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளோம். 

சற்று நினைத்துப் பாருங்கள் ….. நான் உங்களுக்கு ஒரு உதாரணத்தைக் கூற விரும்புகிறேன்.   இந்தியாவில் ஒரு சட்டம் 200 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது,  200 ஆண்டுகள் என்றால், அதாவது 1857-க்கு முன்பிலிருந்தே இருந்து வந்தது.  இந்த சட்டத்தின்படி, இந்த நாட்டு மக்கள் யாருக்கும் வரைபடம் தயாரிக்க உரிமை இல்லை.    1857 முதல் இது நடைமுறையில் இருந்ததை நினைத்துப் பாருங்கள்.   நீங்கள் ஒரு வரைபடத்தைத் தயாரிக்க விரும்பினால், அதற்கு நீங்கள் அரசாங்க அனுமதியைப் பெற வேண்டும்,  ஒரு புத்தகத்தில் ஒரு வரைபடத்தை அச்சிட விரும்பினாலும், அதற்கும் அரசாங்க அனுமதியைப் பெற வேண்டியிருந்தது;   ஒரு வரைபடம் காணாமல் போனால், அதற்கு பொறுப்பானவரை கைது செய்யும் நிலையும் இருந்தது.  தற்காலத்தில், அனைத்து செல்போன்களிலும் வரைபட செயலி உள்ளது.  செயற்கைக் கோள்கள் அவ்வளவு வலிமைவாய்ந்தவை!  இதுபோன்ற சட்ட சுமைகளைச் சுமந்துகொண்டு நாட்டை எவ்வாறு நாம் முன்னேற்ற முடியும்?   இதுபோன்ற நடைமுறைச் சுமைகளிலிருந்து விடுதலைபெறுவது மிகவும் முக்கியம்.   வரைபடம் தயாரிப்பு, விண்வெளி, தகவல் தொழில்நுட்பம் மற்றும்  பிபிஓ-க்கள் தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளை நாம் ஒழித்து விட்டோம். 

எனதருமை நாட்டுமக்களே,

தேவையற்ற சட்டங்களின் பிடியிலிருந்து விடுதலைபெறுவது,  வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கும் மிகவும் முக்கியம்.   நம் நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், தற்போது இந்த மாற்றத்தை அனுபவித்து வருகின்றன.  

ஏராளமான தொழிலாளர் சட்டங்கள், தற்போது 4 சட்டங்களாக குறைக்கப்பட்டுள்ளன.   வரி தொடர்பான நடைமுறைகளும் எளிமையாக்கப்பட்டு, முக அறிமுகமற்ற வகையில் மாற்றப்பட்டுள்ளன.  நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான், இதுபோன்ற சீர்திருத்தங்கள், அரசாங்க அளவில் மட்டுமின்றி, கிராமப் பஞ்சாயத்துகள், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் வரை சென்றடையும்.   தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை மறுஆய்வு செய்வது குறித்து, மத்திய – மாநில அரசுகளின் அனைத்துத் துறைகளும்,  ஒரு இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற பனிவான வேண்டுகோளை நான் விடுக்கிறேன்.   நாட்டு மக்களுக்கு சுமையாகவும், தடையாகவும் உள்ள அனைத்து விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.   70-75 ஆண்டுகளாக குவிந்து கிடப்பனவற்றை, ஒரு நாளிலோ அல்லது ஒரே ஆண்டிலோ ஒழித்துவிட முடியாது.  ஆனால், நாம் ஒரு குறிக்கோளுடன் பணியாற்றத் தொடங்கினால், நம்மால் அதனை செய்துமுடிக்க முடியும். 

எனதருமை நாட்டுமக்களே,

இதனை மனதிற்கொண்டு தான் அரசு, கர்மயோகி இயக்கத்தைத் தொடங்கி இருப்பதோடு, அரசு நிர்வாகத்தில் மக்கள்-சார்ந்த அணுகுமுறையை அதிகரித்து, அவர்களது திறமையை மேம்படுத்துவதற்கென, திறன் உருவாக்க ஆணையத்தையும் ஏற்படுத்தியுள்ளோம். 

எனதருமை நாட்டுமக்களே,

நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வுள்ள, திறமையும், தகுதியும் உடைய இளைஞர்களை தயார்படுத்துவதில் நமது கல்வி,  கல்விமுறை, கல்விப் பாரம்பரியம் ஆகியவை, முக்கியப் பங்கு வகிக்கின்றன.   21-ம் நூற்றாண்டில் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏதுவாக, நாட்டில் தற்போது, புதிய தேசிய கல்விக் கொள்கை நடைமுறையில் உள்ளது.  இதன் காரணமாக நமது குழந்தைகள், தற்போது திறமைக் குறைவு அல்லது மொழிப் பிரச்சினை காரணமாக கல்வியை நிறுத்துவதில்லை.   துரதிருஷ்டவசமாக, நம் நாட்டில் மொழிப் பிரச்சினையில் பெரும் பிளவு காணப்படுகிறது.   நாட்டிலுள்ள அபரிமிதமான செயல்திறனை, மொழி என்ற கூண்டுக்குள் அடைத்து வைத்துள்ளோம்.   தாய்மொழியில் கற்றால், உறுதியான திறமைகளை அடையாளம் காண முடியும்.  வட்டார மொழிகளைக் கற்றறிந்த மக்களிடையே, தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  தாய்மொழியில் கல்விபயின்று, வல்லுநர்களாக வரக்கூடிய ஏழைக் குழந்தைகளுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.  

புதிய தேசிய கல்விக் கொள்கையில், வறுமையை எதிர்த்துப் போரிடுவதற்கு மொழி ஒரு பெரும் சாதனமாகத் திகழும் என்று நான் நம்புகிறேன்.   இந்த புதிய தேசிய கல்விக் கொள்கை, வறுமைக்கு எதிரான போரில் சிறந்த சாதனமாகத் திகழும்.   வறுமைக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கு, கல்வி, கவுரவம் மற்றும் வட்டார மொழியின் முக்கியத்துவமே அடிப்படை.   நாடு இதனை விளையாட்டு மைதானத்தில் கண்டது…  மொழி எந்த வகையிலும் தடையாக இருக்காது என்பதையும், இதன் காரணமாக இளைஞர்கள் சிறப்பாக விளையாடி, மலர்வதையும் நாம் பார்த்திருக்கிறோம்.   தற்போது வாழ்க்கையின் பிற துறைகளிலும் இதே நிலைமையைக் காண முடிகிறது.  

புதிய தேசிய கல்விக் கொள்கையின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், விளையாட்டு கூடுதல் பாடத்திட்டமாக அல்லாமல், பிரதானக் கல்விமுறையின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளது.   வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வலுவான ஒரு வழியாகவும் விளையாட்டு திகழ்கிறது.   வாழ்க்கையில் முழுநிறைவு அடைவதற்கு, விளையாட்டையும் வாழ்க்கையில் ஒரு அம்சமாகக் கொள்வது மிகவும் முக்கியமானது.    விளையாட்டை கல்வியின் பிரதான முறைகளில் ஒன்றாகக் கருதாத காலமும் இருந்தது.   விளையாட்டுகளில் நேரம் செலவிடுவது, வாழ்க்கையை வீணாக்குவது என பெற்றோரும் கருதினர்.   தற்போது,  கட்டுடல் மற்றும் விளையாட்டு குறித்து புதிய விழிப்புணர்வு  ஏற்பட்டுள்ளது.   ஒலிம்பிக் போட்டியில் இதனை நம்மால் காண முடிந்தது.   இந்த மாற்றம் தான் நமக்குப் பெரிய திருப்புமுனை ஆகும்.   எனவே, விளையாட்டில் திறமை, தொழில்நுட்பம் மற்றும் தொழில்வல்லமையைப் புகுத்துவதற்கான பிரச்சார இயக்கத்தை நாம் விரைவுபடுத்தி, விரிவுபடுத்த வேண்டியுள்ளது. 

கல்வி, விளையாட்டு, பொதுத்தேர்வு முடிவுகள் அல்லது ஒலிம்பிக் போன்றவற்றில், இதுவரை இல்லாத வகையில்  நமது புதல்விகள் சிறந்து விளங்குவது, நாட்டிற்கு பெருமையளிக்கிறது.   தற்போது நமது புதல்விகள், அவர்களுக்கான இடங்களைப் பிடிக்கத் தொடங்கிவிட்டனர்.   அனைத்து வேலை மற்றும் பணியிடங்களிலும் பெண்கள் சம பங்குதாரர்களாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.   சாலைகள் முதல் பணியிடங்கள் வரை மற்றும் அனைத்து இடங்களும் பாதுகாப்பானது என்று அவர்கள் உணர்வதை உறுதி செய்ய வேண்டும்.   அவர்கள் மரியாதையாக நடத்தப்படுகிறோம் என்று உணர்வதை உறுதி செய்வதோடு, இதற்காக, அரசாங்கம், நிர்வாகம், காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகியவை தங்களது கடமையை நூறு சதவீதம் நிறைவேற்ற வேண்டும்.  75-வது சுதந்திரதின உறுதியாக, நாம் இந்த உறுதியை ஏற்க வேண்டும்.  

நாட்டு மக்களுடன் நான் இன்று ஒரு நல்ல செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.   நமது பெண் குழந்தைகள் சைனிக் பள்ளிகளில் படிக்க விரும்புகிறார்கள் என்ற லட்சக்கணக்கான தகவல்கள் எனக்கு கிடைக்கப் பெற்றது.    அந்தப் பள்ளிகளின் கதவுகள், அவர்களுக்கும் திறந்துவிடப்பட உள்ளது.   ஒரு முன்னோடித் திட்டமாக, மிசோரம் மாநில சைனிக் பள்ளியில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே, பெண் குழந்தைகள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.    சைனிக் பள்ளிகளை  சிறுமிகளுக்காக திறந்துவிட அரசு தற்போது முடிவு செய்துள்ளது.   நாட்டிலுள்ள அனைத்து சைனிக் பள்ளிகளிலும் நமது புதல்விகளும் இனி படிக்கலாம். 

தேசப் பாதுகாப்பைப் போன்றே,  சுற்றுச்சூழல் பாதுகாப்பும் தற்போது முககியத்துவம் பெற்றுள்ளது.   சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இந்தியா தற்போது வலுவான குரல் கொடுத்து வருகிறது, உயிரிப் பன்முகத்தன்மை அல்லது நிலச் சமன்பாடு, பருவநிலை மாற்றம் அல்லது கழிவு மறுசுழற்சி, இயற்கை விவசாயம் அல்லது உயிரிஎரிவாயு, எரிசக்தி பாதுகாப்பு  அல்லது தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்காக இந்தியா வலுவான குரல்  கொடுத்து வருகிறது.   சுற்றுச்சூழல் தொடர்பான இந்தியாவின் முயற்சிகள், தற்போது பயனளிக்கத் தொடங்கியுள்ளன.   வனப்பரப்பு, தேசியப் பூங்காக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, புலிகள் மற்றும் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவை நாட்டுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியது. 

இந்த வெற்றிகள் அனைத்திற்கும், ஒரு உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.  இந்தியா, இதுவரை எரிசக்தி தன்னிறைவுபெற்ற நாடாக இல்லை.   இந்தியா, தற்போது எரிசக்தி இறக்குமதிக்காக, ஆண்டுக்கு 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், செலவழித்து வருகிறது.  இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சுயசார்பு-இந்தியாவை உருவாக்க, இந்தியா எரிசக்தியில் தன்னிறைவு பெறுவது காலத்தின் கட்டாயம்!  எனவே, நூறாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு முன்பாக, எரிசக்தித் துறையில் தன்னிறைவு பெறுவதற்கு இந்தியா தற்போது உறுதியேற்க வேண்டும், இதற்கான நமது செயல்திட்டமும் மிகத் தெளிவானதாக உள்ளது.   இது, எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக அமைய வேண்டும்.    20 சதவீதம் எத்தனால் கலந்த எரிபொருள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   இந்த இலக்கை அடைய, இந்தியா முயற்சித்து வருகிறது.   மின்னணு வாகனப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்தை 100% மின்சாரமயமாக்கவும் இந்தியா முயற்சித்து வருகிறது.   2030-ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றம் இல்லாத நிலையை உருவாக்கவும், இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது.   இந்த முயற்சிகள் தவிர, சுற்றுப் பொருளாதார இயக்கத்தையும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.    நமது வாகனக் கழிவுக் கொள்கை, இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.  ஜி-20 நாடுகளிலேயே, பருவநிலை மாற்ற இலக்குகளை அடைய வேகமாக பணியாற்றும் நாடாக,  இந்தியா தற்போது உருவெடுத்துள்ளது.  

இந்த தசாப்தத்திற்குள்ளாக, அதாவது 2030-ம் ஆண்டுக்குள்ளாக 450 கிகாவாட் அளவிற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.  இதில்,  100 கிகாவாட் உற்பத்திக்கான இலக்கை, திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே இந்தியா எட்டியுள்ளது.  இதுபோன்ற முயற்சிகள், உலகில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.   சர்வதேச சூரியசக்திக் கூட்டணி உருவாக்கப்பட்டிருப்பது, இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.  

தற்போது, இந்தியா மேற்கொண்டு வரும் ஒவ்வொரு முயற்சியும், பருவநிலையைப் பொறுத்தவரை பசுமை ஹைட்ரஜைன் துறையில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.  பசுமை ஹைட்ரஜன் இலக்கை எட்டுவதற்கு,  தேசிய ஹைட்ரஜன் இயக்கம் ஒன்றை, இந்த மூவர்ணங்களின் சாட்சியாக நான் அறிவிக்கிறேன்.   பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான மையமாக இந்தியாவை மாற்ற நாம் பாடுபடுவதுடன், ‘அமிர்த காலத்தில்‘ ஏற்றுமதியும் செய்ய வேண்டும்.   இது, எரிசக்தித் துறையில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியாவை மாற்றுவதோடு மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் பசுமை எரிசக்தி மாற்றத்தை ஏற்படுத்தவும் புதிய உத்வேகத்தை அளிக்கும்.   பசுமை வளர்ச்சி முதல் பசுமை  வேலைவாய்ப்பு வரை, தற்போது புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள் மற்றும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளது.  

எனதருமை நாட்டு மக்களே, இன்று, 21-ம் நூற்றாண்டு இந்தியா பெரிய இலக்குகளை உருவாக்கி அடையும் திறனைப் பெற்றுள்ளது. இன்றைய இந்தியா பல நூற்றாண்டுகளாக, பல பத்தாண்டுகளாக பற்றி எரிந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகிறது. அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்த வரலாற்று சிறப்புமிக்க முடிவாக இருந்தாலும், வரி வலையிலிருந்து நாட்டை மீட்கும் முறையான ஜிஎஸ்டி வரிவிதிப்பை அறிமுகப்படுத்தியதாக இருந்தாலும், நமது ராணுவ நண்பர்களுக்கு ஒரே பதவி-ஒரே ஓய்வூதியம் தொடர்பான முடிவாக இருந்தாலும், ராமர் கோயில் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு கண்டதாக இருந்தாலும், சில ஆண்டுகளில் நடந்திருப்பதை நாம் கண்டுள்ளோம்.

திரிபுராவில் பல பத்தாண்டுகளுக்குப் பின்னர் ப்ரூ-ரீங் உடன்பாடு ஆன போதிலும், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அந்தஸ்து அல்லது சுதந்திரத்துக்கு பின்னர் முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில் பிடிசி, டிடிசி தேர்தல்கள் நடத்தியது என அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் திடமான உறுதி இந்தியாவுக்கு உள்ளது.

இந்தக் கொரோனா காலத்திலும், சாதனை அளவாக வெளிநாட்டு முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பும் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. துல்லிய தாக்குதல்கள் மற்றும் வான் தாக்குதல்களை நடத்தி நாட்டின் எதிரிகளுக்கு  புதிய இந்தியாவின் ஆற்றலை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. இது இந்தியா மாறிவருகிறது என்பதைக்காட்டுகிறது. இந்தியாவால் மாறமுடியும். இந்தியாவால் மிகக்கடினமான முடிவுகளை எடுக்க முடியும். மேலும் கடுமையான முடிவுகளை எடுக்க அது தயங்காது என்பதுடன்  நின்றுவிடாது.

எனதருமை நாட்டு மக்களே, இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலக உறவுகளின் இயல்பு மாறிவிட்டது. கொரோனாவுக்குப்பின்னர் புதிய உலக அமைப்புக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் இந்தியாவின் முயற்சிகளை உலகம் கண்டு, பாராட்டியுள்ளது. இன்று உலகம் இந்தியாவை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்த்து வருகிறது. இந்தப்பார்வையில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன. ஒன்று தீவிரவாதம், மற்றொன்று ஆதிக்கவாதம். இந்தியா இந்த இரண்டு சவால்களையும் எதிர்த்து போராடி வருகிறது. கட்டுப்பாட்டுடன் அதேசமயம் உரிய முறையில் இதற்கு பதிலடியும் கொடுத்து வருகிறது. நமது பாதுகாப்பு முன்னேற்பாடுகள் வலுவாக உள்ளது. தேவைப்பட்டால் உரிய முறையில் பதிலை இந்தியா அளிக்கும்.

நமது கைவினை தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை வழங்க நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். பாதுகாப்பு துறையில் நாடு தன்னிறைவை அடைவதற்கு இந்திய நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள நமது படைகளின் கரத்தை வலுப்படுத்த நாடு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என நான் உறுதியளிக்கிறேன்.

எனதருமை நாட்டு மக்களே, இன்று நாட்டின் சிறந்த சிந்தனாவாதியான ஶ்ரீஅரவிந்தரின் பிறந்தநாளும் ஆகும். அவரது 150-வது பிறந்த நாள் 2022-ல் கொண்டாடப்படவுள்ளது. இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தை கனவுகண்டவர் அரவிந்தர். நாம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவானவர்களாக இருக்க வேண்டும் என அவர் கூறுவது வழக்கம். நாம் நமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளவேண்டும். நமக்குநாமே விழிப்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஶ்ரீ அரவிந்தரின் இந்தக்கூற்று நமக்கு நமது கடமைகளை நினைவூட்டுகின்றன. குடிமகன் என்ற வகையிலும், சமுதாயம் என்ற வகையிலும் நாட்டுக்கு நாம் என்ன கொடுத்தோம் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். உரிமைகளுக்கு நாம் எப்போதும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அந்தக்காலத்தில் அவை தேவைப்பட்டன. ஆனால், இப்போது நமது கடமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாட்டின் முடிவுகளை நனவாக்குவதில் ஒவ்வொருவரும் தங்கள் பங்கைச் செலுத்த வேண்டும். ஒவ்வொருவரும் இதற்கு பொறுப்பு எடுத்துகொள்ள வேண்டும்.

நமது நாடு தண்ணீர் சேமிப்பு இயக்கத்தை முன்னெடுத்துள்ளது. எனவே, தண்ணீரை சேமிப்பதை நமது கடமையாகக் கொள்ள வேண்டும். நாடு டிஜிட்டல் பரிவர்த்தனையை வலியுறுத்தி வருவதால், குறைந்தபட்ச ரொக்கப் பரிவர்த்தனையை மேற்கொள்வது அவசியமாகும். உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுக்கும் பிரச்சாரத்தை நாடு முன்னெடுத்துள்ளது. எனவே, முடிந்தவரை உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டியது நமது கடமையாகும். பிளாஸ்டிக் இல்லாத இந்தியா என்னும் நடைமுறையை வலுப்படுத்த, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக கைவிடுவது நமது கடமையாகும். நமது ஆறுகளில் குப்பைகளை வீசாமல் இருப்பதும், கடற்கரைகளை தூய்மையாக வைத்திருப்பதும் நமது கடமையாகும். தூய்மை இந்தியா இயக்கத்தை புதிய மட்டத்துக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும்.

இன்று, 75-வது ஆண்டு சுதந்திர தினத்தின் அமிர்த பெருவிழாவை நாடு கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, நமது தீர்மானங்களை மீண்டும், மீண்டும் புதுப்பித்துக்கொள்வது  நம் அனைவரின் கடமையாகும். விடுதலைப் போராட்டத்தை நமது நினைவில் கொண்டு, மிகச்சிறிய அளவு பங்களிப்பாக  இருந்தாலும், இந்த அமிர்த விழாவை ஏராளமான இந்தியர்களின் தூய்மையான முயற்சியாக மாற்றி, நாடு முழுவதையும் வரும் ஆண்டுகளிலும் ஊக்குவிக்க முன்வரவேண்டும்.

எனதருமை நாட்டு மக்களே, நான் ஆருடம் கூறுபவரல்ல. நான் நடவடிக்கையில் நம்பிக்கை வைத்துள்ளேன். நாட்டின் இளைஞர்களிடம் எனக்கு நம்பிக்கை உள்ளது. எனது நாட்டின் சகோதரிகள், பெண்மக்கள், நாட்டின் விவசாயிகள், வல்லுநர்கள் ஆகியோரை நான் நம்புகிறேன். உன்னால் முடியும் என்ற தலைமுறை கற்பனையில் உள்ளதையும் சாத்தியப்படுத்தும்.

நாடு சுதந்திரத்தின் நூறாவது ஆண்டைக் கொண்டாடும் 2047-ல், யார் பிரதமராக இருந்தாலும், இன்றிலிருந்து 25 ஆண்டுகளில் யார் பிரதமராக இருந்தாலும், அவர் தேசியக்கொடியை பறக்கவிடும்போது, இன்று நாடு எடுத்துக்கொண்டுள்ள உறுதிமொழியை நிறைவேறுவதை

 அவர் தமது உரையில் குறிப்பிடுவார் என இதை இன்று நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன். இது எனது வெற்றிகரமான நம்பிக்கையாகும்.

இன்று தீர்மானம் என்ற வடிவில் நான் பேசிக்கொண்டிருப்பதை, 25 ஆண்டுகளுக்குப் பின்னர் யார் கொடியேற்றினாலும், அவர் இதனை நிறைவேற்றியது பற்றி பேசுவார். இது நிறைவேறுவதை நாடு பெருமையுடன் பாடும். நாட்டின் இன்றைய இளைஞர்கள் இந்தப் பெருமையை எப்படி அடைந்தது என்பதை அப்போது காண்பார்கள்.

21-ம் நூற்றாண்டில், இந்தியாவின் அபிலாசைகளையும், கனவுகளையும் நிறைவேற்றுவதை எந்தத் தடையும் தடுத்து நிறுத்தமுடியாது. நமது உயிர்ப்பே நமது வலிமையாகும்.நமது ஒற்றுமையே நமது வலிமையாகும். நமது உயிர்ப்பு சக்தி, நாடு முதலில் –எப்போதும் முதலில் என்ற உணர்வாகும். கனவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான நேரம் இது. உறுதியைப்பகிர்ந்து கொள்வதற்கும் இதுவே சரியான தருணம். முயற்சிகளைப் பகிர்வதற்கும் இதுவே உரிய நேரம். வெற்றியை நோக்கி நகர்வதற்கும் இதுவே உரிய தருணம்.

எனவே, மீண்டும் ஒருமுறை நான் கூறுகிறேன்-

இதுதான் நேரம்,

இதுதான் நேரம்- சரியான நேரம்!

இந்தியாவின் மதிப்புமிக்க நேரம்!

இதுதான் நேரம்- சரியான நேரம்! இந்தியாவின் மதிப்புமிக்க நேரம்!

எண்ணற்ற தோள்களின் சக்தி,

எண்ணற்ற தோள்களின் சக்தி,

எங்கும் தேசபக்தி!

எண்ணற்ற தோள்களின் ஆற்றல், எங்கு நோக்கினும் தேசபக்தி…

வாருங்கள், மூவர்ணக்கொடியை ஏற்றுங்கள்!

வாருங்கள், மூவர்ணக்கொடியை ஏற்றுங்கள்!

இந்தியாவின் விதியை மாற்றுங்கள்,

இந்தியாவின் விதியை மாற்றுங்கள்,

இதுதான் நேரம், சரியான நேரம்! இந்தியாவின் மதிப்புமிக்க நேரம்!

ஒன்றுமில்லை…

ஒன்றுமில்லாவிட்டால் நீங்கள் செய்யமுடியாது,

ஒன்றுமில்லாவிட்டால் நீங்கள் அடையமுடியாது,

நீங்கள் எழுங்கள்….

நீங்கள் எழுங்கள், தொடங்குங்கள்,

உங்கள் திறமைகளை அறியுங்கள்,

உங்கள் திறமைகளை அறியுங்கள்,

உங்கள் கடமைகள் அனைத்தையும் புரிந்துகொள்ளுங்கள்,

உங்கள் கடமைகள் அனைத்தையும் புரிந்துகொள்ளுங்கள்!

இதுதான் நேரம்- சரியான நேரம்! இந்தியாவின் மதிப்புமிக்க நேரம்!

நாடு சுதந்திரத்தின் நூறு ஆண்டுகளை நிறைவு செய்யும்போது, நாட்டு மக்களின் குறிக்கோள்கள் நனவாக வேண்டும்.இதுதான் எனது விருப்பமாகும். எனது சிறப்பான வாழ்த்துகளுடன், நான் மீண்டும் ஒருமுறை எனது நாட்டு மக்கள் அனைவரையும் இந்த 75-வது சுதந்திர தினத்தில் வாழ்த்துகிறேன்! உங்கள் கைகளை உயர்த்தி உரத்த குரலில் கூறுங்கள்-

ஜெய் ஹிந்த்,

ஜெய் ஹிந்த்,

ஜெய் ஹிந்த்!

வந்தே மாதரம்,

வந்தே மாதரம்,

வந்தே மாதரம்!

இந்திய தாய்த்திருநாடு நீடுழி வாழ்க,

இந்திய தாய்த்திருநாடு நீடுழி வாழ்க,

இந்திய தாய்த்திருநாடு நீடுழி வாழ்க!

நன்றி!

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...

Prime Minister Shri Narendra Modi paid homage today to Mahatma Gandhi at his statue in the historic Promenade Gardens in Georgetown, Guyana. He recalled Bapu’s eternal values of peace and non-violence which continue to guide humanity. The statue was installed in commemoration of Gandhiji’s 100th birth anniversary in 1969.

Prime Minister also paid floral tribute at the Arya Samaj monument located close by. This monument was unveiled in 2011 in commemoration of 100 years of the Arya Samaj movement in Guyana.