மாணவர்கள் மற்றும் கல்வி நிலையத்தின் வெற்றி எம்.ஜி.ஆரை பெரிதும் மகிழ்வூட்டும்: பிரதமர்
இந்திய மருத்துவ நிபுணர்களுக்கு இங்கே மிகப் பெரிய பாராட்டும் மரியாதையும் உள்ளது: பிரதமர்
பெருந்தொற்றுக்குப் பிறகு மருத்துவர்கள் மீதான மரியாதை அதிகரித்து உள்ளது: பிரதமர்
சுய-விருப்பம் என்பதை தாண்டி செயல்படும் போது உங்களுக்கு பயம் ஏற்படாது: மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை

வணக்கம்,

தமிழக ஆளுநரும் இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான திரு. பன்வாரிலால் புரோஹித், துணைவேந்தர் சுதா சேஷையன், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் எனது அன்புக்குரிய மாணவர்களே,

இந்தப் பல்கலைக்கழகத்தின் 33 வது பட்டமளிப்பு விழாவில் நீங்கள் பல்வேறு மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் துணை மருத்துவப் பிரிவுகளில். பட்டங்கள் மற்றும் பட்டயங்களைப் பெறுகையில் உங்களுடன் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

இன்று, 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பட்டயங்கள் வழங்கப்படுகின்றன என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் குறிப்பாகச் சொல்ல விரும்பும் ஒரு விஷயம் உள்ளது. பட்டம் பெறுவோரில் சுமார் 30% ஆண்கள் என்றும் 70% பெண்கள் என்று எண்ணிக்கைகள் தெரிவிக்கின்றன. பட்டம் பெற்ற மாணவியருக்கு எனது சிறப்பு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவொரு துறையிலும் பெண்கள் முன்னணியில் இருந்து வழிநடத்துவதை பார்ப்பது எப்போதுமே சிறப்புக்குரியதாகும். இவ்வாறு நிகழும்போது அது பெருமைக்குரிய தருணம்; மகிழ்ச்சியின் தருணம்.

நண்பர்களே,

உங்கள் அனைவரின் வெற்றியும் இந்த நிறுவனத்தின் வெற்றியும் மிகச்சிறந்த எம்.ஜி.ஆரை மிகவும் மகிழ்வடையச் செய்திருக்கும்.

அவரது ஆட்சி ஆளுமை ஏழைகள் மீது கருணை நிறைந்ததாக இருந்தது. சுகாதாரம், கல்வி, பெண்களுக்கு அதிகாரம் ஆகியவற்றுக்கு அவர் மிகவும் முக்கியத்துவம் அளித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, எம்.ஜி.ஆர் பிறந்த இடமான இலங்கைக்கு நான் சென்றிருந்தேன். சுகாதாரத் துறையில், இலங்கையில் உள்ள நமது தமிழ் சகோதரிகள், சகோதரர்களுக்காக பணியாற்றுவதில், இந்தியா பெருமையடைகிறது.

இந்தியாவின் நிதியுதவியுடன் நடைபெற்று வரும் இலவச ஆம்புலன்ஸ் சேவையை, அங்குள்ள தமிழ் சமூகம் பரவலாகப் பயன்படுத்துகிறது. டிக்கோயாவில் உள்ள மருத்துவமனையின் தொடக்க விழாவை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அது பலருக்கும் உதவக்கூடிய நவீன மருத்துவமனையாகும். சுகாதாரத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சிகள், அதுவும் தமிழ் சமூகத்திற்கு பயனளிக்கும் இத்தகு முயற்சிகள், எம்.ஜி.ஆரை மிகவும் மகிழ்வுறச் செய்திருக்கும்.

மாணவ நண்பர்களே,

உங்கள் வாழ்க்கையின் முக்கியமானதொரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு நீங்கள் மாறும் காலம் இது.

நீங்கள் கற்றல் என்பதிலிருந்து, குணப்படுத்துவது என்ற கட்டத்திற்கு மாறும் நேரம் இது. தேர்வுகளில் மதிப்பெண்கள் பெறுவது என்பதிலிருந்து, சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கும் காலத்திற்கு மாறும் நேரமிது.

நண்பர்களே,

கோவிட் 19 பெருந்தொற்று உலகிற்கே, முற்றிலும் எதிர்பாராத நிகழ்வாகும். எந்த ஒரு விஷயத்திற்கும் முன்கூட்டியே அமைக்கப்பட்ட சூத்திரம் எதுவும் இருக்கவில்லை. அத்தகைய நேரத்தில், இந்தியா ஒரு புதிய பாதையை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், இப்பாதையையொட்டி மற்றவர்கள் நடக்கவும் உதவியது.

இறப்பு விகிதங்களில், இந்தியாவில் இறப்பு விகிதம் மிகவும் குறைவு. குணமடைவோர் விகிதம் அதிகம். இந்தியா, உலகிற்கு மருந்துகளை உற்பத்தி செய்கிறது. உலகிற்கு, தடுப்பூசிகளைத் தயாரிக்கிறது. இந்திய மருத்துவ வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மருந்தியல் வல்லுநர்கள் மீது மிகுந்த பாராட்டும், மரியாதையும் இருக்கும் நேரத்தில் நீங்கள் பட்டம் பெற்றிருக்கிறீர்கள்.

ஒட்டுமொத்தமாக, இந்திய சுகாதாரச்சூழல் புதிய பார்வை, புதிய மரியாதை மற்றும் புதிய நம்பகத்தன்மையுடன் பார்க்கப்படுகிறது. எனினும், உங்களிடமிருந்து உலகம் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கும் என்பதையும் இது குறிக்கிறது. உங்கள் இளமையான, வலுவான தோள்களில், இது ஒரு பொறுப்பாக உள்ளது. இந்த பெருந்தொற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் விஷயங்கள், காசநோய் போன்ற பிற நோய்களுக்கு எதிராகவும் போராட நமக்கு உதவும்.

நண்பர்களே,

நோய்வாய்ப்பட்டவர், மருத்துவர், மருந்து, நோயாளியை கவனித்துக் கொள்பவர், ஆகிய நான்கு பேரையும் உள்ளடக்கியதே சிகிச்சையளித்தல் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்: பெருந்தொற்று காலத்தின் போதும், இடையூறுகளுக்கு இடையேயும், இந்த நான்கு தூண்களும் யாதென்றே தெரியாத எதிரியுடனான போரை நடத்துவதில் முன்னணியில் இருந்தன. வைரஸை எதிர்த்துப் போராடியவர்கள் அனைவரும், மனிதகுலத்தின் கதாநாயகர்களாக வெளிப்பட்டனர்.

நண்பர்களே,

நாம், மருத்துவக் கல்வி மற்றும் சுகாதாரத் துறை முழுவதையும் மாற்றியமைத்து வருகிறோம். தேசிய மருத்துவ ஆணையம் மிகுந்த வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும். புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான விதிமுறைகளையும் இது பகுத்தாய்வு செய்யும். இந்தத் துறையில் மனித ஆற்றல் கிடைப்பதையும், மனித ஆற்றலின் தரத்தையும் இது மேம்படுத்தும். கடந்த ஆறு ஆண்டுகளில், எம்பிபிஎஸ் இருக்கைகள் 30 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளன, இந்த உயர்வு, 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 50 சதவிகிதத்துக்கும் அதிகமாகும்.

பட்ட மேற்படிப்பு இருக்கைகளின் எண்ணிக்கை 24000 அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 80% அதிகமாகும்.

2014 ஆம் ஆண்டில், நாட்டில் 6 எய்ம்ஸ் இருந்தன. கடந்த 6 ஆண்டுகளில், நாட்டின் பல்வேறு இடங்களில், மேலும் 15 எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளோம். தமிழகம், மருத்துவக் கல்விக்கு பெயர் பெற்றது. இம்மாநிலத்தின் இளைஞர்களுக்கு மேலும் உதவுவதற்காக, மாநிலத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவ எங்கள் அரசு அனுமதியளித்துள்ளது. இந்தப் புதிய மருத்துவக் கல்லூரிகள், தற்போது மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் நிறுவப்படும். இந்த ஒவ்வொரு கல்லூரிக்கும் இந்திய அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அளிக்கும்.

பட்ஜெட்டில் 64 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்து, பிரதமர் சுகாதார சுயசார்பு இந்தியா திட்டத்தை அறிவித்துள்ளோம். புதிதாக உருவாகியுள்ள நோய்கள், புதிதாக உருவாகி வரும் நோய்கள் ஆகியவற்றைக் கண்டறியவும், குணப்படுத்தவும் தேவையான ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார சிகிச்சைத் திறனை அதிகரிக்க இது உதவும். நமது ‘ஆயுஷ்மான் பாரத்’, சுமார் 1600 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் மூலம், 50 கோடி மக்களுக்கு தரமான பராமரிப்பு வழங்குவதற்கான, உலகின் மிகப்பெரிய சுகாதார உறுதித் திட்டமாகும்.

மருந்துகளை மிகவும் மலிவான விலையில் வழங்குகின்ற ஜன் அவுஷதி கேந்திரங்கள் 7000 க்கும் அதிகமாக விரிவடைந்தன. கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு உதவும் வகையில், ஸ்டென்ட் மற்றும் முழங்கால் மூட்டு மாற்று உபகரணங்கள் போன்ற மருத்துவக்கருவிகள் நம் நாட்டில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன,

நண்பர்களே,

நம் நாட்டில் மிகவும் மரியாதைக்குரிய நிபுணர்களாக மருத்துவர்கள் உள்ளனர். இன்று, பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு, இந்த மரியாதை மேலும் பெருகியுள்ளது. இந்த மரியாதை ஏனென்றால், உங்கள் தொழிலின் தீவிரத்தை மக்கள் அறிவார்கள், பல நேரங்களில் ஏதோ ஒருவரின் வாழ்வா சாவா என்ற கேள்வி எழும்., தீவிர கவனத்துடன் இருப்பது; தீவிர கவனத்துடன் இருப்பது போல் தோற்றமளிப்பது ஆகிய இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். அனைத்தையும் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் நகைச்சுவை உணர்வை கட்டுக்குலையாமல் வைத்திருக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இது உங்கள் நோயாளிகளை உற்சாகப்படுத்தவும், அவர்களின் மன உறுதியை உயர்த்தவும் உதவும்.

மருத்துவர்கள் சிலர், தங்கள் வேலையில் மிகச்சிறந்து விளங்கும் அதே சமயம், நோயாளிகளுடனும், ஊழியர்களுடனும், தங்களது நகைச்சுவையான உரையாடல்கள் மூலம் மருத்துவமனைச் சூழலை ஒளிரச் செய்வதை நான் கண்டிருக்கிறேன். நோயாளிகள் குணமடையத் தேவையான, மிகவும் முக்கியமான நம்பிக்கையையும் அது ஊட்டுகிறது. இதுபோன்ற உயர் அழுத்தம் கொண்ட தொழிலில் உங்கள் நகைச்சுவை உணர்வை ஆரோக்கியமாக வைத்திருப்பது, உங்கள் சொந்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் காக்கவும் உதவும்.

நீங்கள் நாட்டின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்பவர்கள், உங்கள் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினால் மட்டுமே நீங்கள் அவ்வாறு செய்ய முடியும். உங்கள் சொந்த உடல் நலனைப் பேணிக்காக்கும் வகையில், யோகா, தியானம், ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் போன்ற ஏதேனும் சில உடற்பயிற்சி முறைகளைத் தேர்வுசெய்து கொள்ளுங்கள்.

நண்பர்களே,

சுவாமி விவேகானந்தரின் குருவான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் “शिव ज्ञाने जीव सेवा” என்று சொல்வார் - அதாவது, மக்களுக்கு சேவை செய்வது என்பது சிவன் அல்லது கடவுளுக்கு சேவை செய்வதற்கு ஒப்பானதாகும் என்பதே இதன் பொருள். உண்மையிலேயே, இந்த உன்னதமான இலட்சியத்தை மேற்கொண்டு வாழக்கூடிய மிகப்பெரிய வாய்ப்புள்ளவர் இருந்தால், அது மருத்துவத் தொழிலில் உள்ளவர்கள் தான். வல்லுநர்கள். உங்களுடைய நீண்டகால தொழில்ரீதியான வாழ்க்கையில், தொழில் ரீதியாக வளர்ச்சி பெறுங்கள். ஆனால், அதே சமயம், உங்கள் சொந்த வளர்ச்சியை ஒருபோதும் மறக்க வேண்டாம். சுயநலத்திற்கு மேலே உயருங்கள். அவ்வாறு செய்வது உங்களை அச்சமற்றவர்களாக்கும்.

நண்பர்களே,

பட்டம் பெற்றவர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள். இந்த வார்த்தைகளுடன் எனது உரையை நிறைவு செய்கிறேன், இந்த உற்சாகமூட்டும் துறையில், நீங்கள் அனைவரும் ஒரு அர்த்தமுள்ள, அற்புதமான, சவாலான வாழ்க்கையை வாழ வாழ்த்துக்கள்.

நன்றி.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 21, 2024
November 21, 2024

PM Modi's International Accolades: A Reflection of India's Growing Influence on the World Stage