QuoteAatmanirbhar Bharat has become a mantra for 130 crore Indians: PM Modi
QuoteThe government is making every possible effort to ensure 'Ease of Living' for the middle-class households in India: PM
QuoteIn order for India to become Aatmanirbhar, the country has initiated major reforms in the defence sector: PM

எனது நாட்டு மக்களே, இந்தப் புனிதமான சுதந்திர தினத்தில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று, நாம் சுதந்திர இந்தியாவில் வசிப்பதற்கு , அன்னை இந்தியாவின் லட்சக்கணக்கான புதல்வர்கள், புதல்விகளின் தியாகமே காரணமாகும். விடுதலைப் போராட்ட வீரர்கள், தியாகிகள், தீரர்களுக்கும், அன்னை இந்தியா விடுதலை பெறுவதற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடிய அவர்களது எழுச்சிக்கும் மரியாதை செலுத்த வேண்டிய தருணமாகும் இது.

நமது ஆயுதப் படைகளின் தீரமிக்க வீரர்கள், துணை ராணுவப் படையினர், நமது காவல் துறையினர், நமது பாதுகாப்பு படையினர் என ஒவ்வொருவரும் நமது அன்னை இந்தியாவைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சாதாரண மனிதர்களையும் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது தியாகங்களையும், தவத்தையும் முழுமனதுடன் நினைவு கூரக்கூடிய நாள் இதுவாகும்.
புரட்சியாளராக இருந்து ஆன்மீகவாதியாக மாறிய அரவிந்த கோஷ் என்ற மகானின் பிறந்த நாளாகும். அவரது ஆசிகளைப் பெற பிரார்த்திப்போம், அப்போதுதான், அவரது நோக்கங்களை நிறைவேற்ற முடியும்.

நாம் அசாதாரணமான காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவின் பிரகாசமான எதிர்காலமாகிய குழந்தைகளை நான் என் முன்னால் இன்று காண இயலவில்லை. ஏன்? ஏனென்றால் கொரோனா ஒவ்வொருவரையும் தடுத்து நிறுத்தி விட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் என லட்சக்கணக்கான கொரோனா வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.

சேவையே சிறந்த மதம் என்ற தாரக மந்திரத்துடன் பணியாற்றி வரும் கொரோனா முன்களப் பணியாளர்களை நான் வணங்குகிறேன். முழுமையான அர்ப்பணிப்புடன் அவர்கள் அன்னை இந்தியாவின் குழந்தைகளுக்கு சேவை புரிகின்றனர்.
இந்தக் கொரோனா காலத்தில், நமது ஏராளமான சகோதர, சகோதரிகள் இந்தக் கொடிய தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஏராளமானோர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 130 கோடி மக்களின் மன உறுதி மற்றும் திட சிந்தனை நம்மை கொரோனாவுக்கு எதிராக வெற்றி பெறச்செய்யும் என நான் திடமாக நம்புகிறேன். நாம் நிச்சயம் வெல்வோம்.

அண்மையில் நாம் பல்வேறு சிக்கல்களைக் கடந்து வந்திருக்கிறோம் என்பதை நான் அறிவேன். குறிப்பாக, இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கில் வெள்ளம், மேற்கு இந்தியாவில் பல இடங்களில் நிலச்சரிவு என மக்கள் பல பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது. பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கும் நான் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பிரச்சினைகளில் மாநில அரசுகளுக்கு நாடு உறுதுணையாக உள்ளது.

தேவையானவர்களுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மத்திய , மாநில அரசுகள் உறுதியுடன் செயல்படும்.

எனதருமை நாட்டு மக்களே, சுதந்திர தினம் விடுதலையைக் கொண்டாடும் விழாவாகும். நமது விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூர்வதன் மூலம், புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் நாம் பெறும் தருணம் இது. புதிய உத்வேகத்தை தூண்டும் தினம். இது புதிய உற்சாகம் மற்றும் உத்வேகத்தை வெளிப்படுத்துகிறது. இது போன்ற நேரத்தில், நாம் மேலும் உறுதியுடன் இருக்க வேண்டிய ,ஒரு புனிதமான நாள் இது. ஏனெனில், அடுத்த ஆண்டு, இதே நாளில் நாம் மீண்டும் கூடும்போது, சுதந்திரமடைந்து 75-வது ஆண்டில் அடியெடுத்து வைப்போம். எனவே, இது முக்கியமான சந்தர்ப்பம். 130 கோடி இந்தியர்களாகிய நாம் இன்று அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான முக்கியமான உறுதிமொழியை எடுத்துக் கொள்ளவேண்டும். நாம் நமது சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, நம்மால் இந்த உறுதிமொழியை நிறைவேற்ற முடியும்.
எனதருமை நாட்டு மக்களே, நமது முன்னோர்கள் அதீதமான உறுதிப்பாடு, மிகுந்த ஒருமைப்பாடு, உண்மையான ஈடுபாடு, ஆசாபாசங்களை துறந்த, தியாக மனப்பான்மையுடன் இந்த விடுதலைக்காக போராடினார்கள். தாய் நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த விதத்தை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. இருள் சூழ்ந்த அந்த நீண்ட அடிமை நாட்களை நாம் மறந்துவிடலாகாது. ஒரு கணத்தைக் கூட வீணாக்காமல், அவர்கள் வேட்கையுடன் போராடினர். போராட்டத்தின் மூலம் நாட்டின் அடிமை விலங்கை முறிக்கப் பாடுபட்டிருக்காவிட்டால், தியாகம் செய்திராவிட்டால், இந்த நாளை நம்மால் கொண்டாடியிருக்க முடியாது. பலர் தங்கள் இளைஞர்களை சிறையில் தியாகம் செய்தனர். பலர் தங்களது வாழ்க்கை கனவுகளை இழந்து தூக்குமேடையை முத்தமிட்டனர். தங்களையே நாட்டுக்கு பிரசாதமாக அர்ப்பணித்த தியாகிகளை வணங்குகிறேன். ஒரு புறம் நாடு மக்கள் திரளாக கூடிய போராட்டத்தையும், மறுபுறம் ஆயுதமேந்திய புரட்சியின் குரலும் ஒலித்தது வியப்புக்குரியதாகும்.

|

மகாத்மாவின் தலைமையின் கீழ், மக்கள் இயக்கங்கள் மூலம் தேசிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டது. இது விடுதலைப் போராட்டத்தில் புதிய உத்வேகத்தை அளித்தது. அதனால்தான் இன்று தாம் மிகுந்த உற்சாகத்துடன் நமது சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறோம்.

இந்த விடுதலைப் போராட்டத்தின் போது, கிளர்ச்சித் தீயை அணைப்பதற்கும், தாய்நாட்டின் எழுச்சியை அடக்குவதற்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், பழக்க, வழக்கங்கள், தொன்மை ஆகியவற்றை அழிக்க முயற்சிகள் நடந்தன. பல நூற்றாண்டுகள் கடந்து, சாம, தான, பேத, தண்டத்தின் மூலம் அதை மேற்கொள்ள முயற்சிகள் உச்சத்தில் இருந்த காலம் அது. சூரிய , சந்திரர்கள் இருக்கும் வரை இந்த உலகத்தை ஆளலாம் என்ற நம்பிக்கையுடன் பலர் இங்கு வந்தனர். அந்த நம்பிக்கையை திடமான உறுதிப்பாடு பொடிப்பொடியாக்கி விட்டது. பல்வேறு அடையாளங்கள், சமஸ்தானங்கள், மொழிகள், கிளை மொழிகள், உணவுகள், உடைகள், கலாச்சாரம் ஆகியவற்றால் இந்தியா பிளவுபட்டிருப்பதாக அவர்கள் நம்பினர். பல்வேறு வேறுபட்ட பிரிவை உடைய நாடு ஒன்றுபட்டு ஒரே சக்தியாக நிற்க முடியாது என்ற தவறான எண்ணத்தை அவர்கள் கொண்டிருந்தனர். அவர்கள் நம்மை ஒன்றாக இணைக்கும் இந்த நாட்டின் ஆன்மாவையும், நாடியையும், ஆற்றலையும் புரிந்து கொள்ள தவறி விட்டனர். இந்த ஆற்றல் சுதந்திரப் போராட்டத்தில் முழுவேகத்துடன் வெடித்துக் கிளம்பிய போது, அடிமை விலங்கொடித்து இந்தியா வெற்றி பெற்றது.

நாடு பிடிக்கும் வேட்கையுடன், பூகோள எல்லைகளைக் கடந்து மேலாதிக்கமும் , சக்தியும் எற்று திகழ்ந்த ஒரு காலம் இருந்தது என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்தியாவின் விடுதலைப் போராட்டம், உலகின் பல பகுதிகளில் இந்த ஆதிக்க சக்திகளை எதிர்க்கும் துணிவை ஏற்படுத்தியது. இந்தியா உலகம் முழுவதும் விடுதலைப் போராட்ட தீயை ஏற்றியதுடன், ஒரு தூண் போன்று அதில் உறுதியாக நின்றது.

கண்மூடித்தனமான நாடு பிடிக்கும் போட்டியில் ஈடுபட்டவர்கள் உலகில் இரண்டு உலகப் போர்களைத் திணித்து, மனித நேயத்தை அழித்து, உயிர்களைக் கொன்றழித்து, அவர்களது தீய இலக்குகளை அடைவதற்காக உலகத்தை சிதைத்தனர்.

|

ஆனால், அந்த மோசமான காலத்திலும், அழிவை ஏற்படுத்தும் பயங்கரமான போருக்கு மத்தியிலும், இந்தியா தனது விடுதலை வேள்வியைக் கைவிடவில்லை. அதிலிருந்து பின்வாங்கவோ, தனது தீரத்தைக் குறைத்துக்கொள்ளவோ இல்லை.
எப்போதெல்லாம் தேவை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம், நாடு தியாகங்களைச் செய்து வருகிறது. மக்கள் இயக்கங்களை முன்னெடுக்கிறது. இந்தியாவின் போராட்டம் உலகில் சுதந்திரச் சூழலை ஏற்படுத்தியது. நாடு பிடிக்கும் ஆசைக்கு இந்தியா சவாலாக உருவெடுத்து தனது ஆற்றலை உலகுக்கு காட்டியது. வரலாறு இதை ஒருபோதும் மறுக்க முடியாது.

என் அன்பான நாட்டு மக்களே,

முழு உலகிலும், சுதந்திரத்திற்கான அதன் போரில், இந்தியா அதன் ஒற்றுமை, கூட்டுத்திறன், அதன் பிரகாசமான எதிர்காலத்திற்கான தீர்மானம், அதன் அர்ப்பணிப்பு மற்றும் உத்வேகம் ஆகியவற்றைக் கொண்டு தலை நிமிர்ந்து நடை பயிலுகிறது.
என் அன்பான நாட்டு மக்களே,

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், 130 கோடி இந்தியர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க தங்களுக்குள்ளாகவே உறுதிமொழி எடுத்தனர். இன்று ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் தன்னம்பிக்கை பொதிந்துள்ளது. சுயசார்பு இந்தியாவின் (“சுயசார்பு”) கனவை நனவாக்குவதையும் நாம் காண்கிறோம். “தற்சார்பு இந்தியா” என்பது ஒரு சொல் மட்டுமல்ல, இது 130 கோடி நாட்டு மக்களுக்கான ஒரு மந்திரமாக மாறியுள்ளது.

நான் தற்சார்பு பற்றி பேசும் போது, இப்போது 25-30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் நிச்சயமாக நம்முடைய 20 – 21 வயதில், நம் பெற்றோர்களும் பெரியவர்களும் எவ்வாறு தற்சார்பு அடைய வேண்டும் என்று தூண்டினார்கள் என்பதை நினைவில் கொள்கிறோம். ஒவ்வொரு குடும்பமும் 20-21 வயதுடைய குழந்தைகள் தற்சார்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவின் போதும், நாம் அதிலிருந்து ஒரு படி தூரத்தில் இருப்பதால், இந்தியா போன்ற ஒரு நாடு சொந்தமாக நின்று, தன்னம்பிக்கை அடைவது அவசியம். ஒரு குடும்பத்திற்குத் தேவையானது ஒரு நாட்டிற்கும் அவசியம். இந்த கனவை இந்தியா நனவாக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதற்குக் காரணம், எனது நாட்டு மக்களின் வலிமையாகும், அதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, அவர்களின் திறமை குறித்து நான் பெருமைப்படுகிறேன், நமது இளைஞர்கள் மற்றும் நாட்டின் இணையற்ற பெண்கள் சக்தி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தியாவின் அணுகுமுறையில், சிந்தனையில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தியா ஏதாவது செய்யத் தீர்மானிக்கும் போதெல்லாம் அதைச் செய்கிறது என்பதற்கு வரலாறு சாட்சி.

எனவே, நாம் தற்சார்பு பற்றிப் பேசும்போது, இது உலகம் முழுவதும் ஆர்வத்தை மட்டுமல்ல, இந்தியாவிலேயே எதிர்பார்ப்புகளையும் தூண்டுகிறது. எனவே, அந்த எதிர்பார்ப்பை நனவாக்குவதற்கு நாம் நம்முடைய திறமைகளை அதிகரித்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும். நம்மை தயார்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம்.
இந்தியா போன்ற ஒரு பெரிய நாடு இளைஞர் சக்தியின் ஆற்றல் நிறைந்தது. ஒரு தற்சார்பு இந்தியாவுக்கான முதல் நிபந்தனை என்பது தன்னம்பிக்கை அடித்தளமாகும்.
மேலும் இது ஒரு புதிய பார்வை என்பதுடன் வளர்ச்சிக்கு ஒரு புதிய ஆற்றலைக் கொடுக்கும் சக்தியைக் கொண்டுள்ளது.

‘முழு உலகமும் ஒரே குடும்பம்’ என்ற பழமொழியை இந்தியா எப்போதும் பின்பற்றி வருகிறது. வேதத்தில் ” வசுதேவக் குடும்பகம்” (உலகமே குடும்பம்) என்றும், வினோபா ஜி “ ஜெய் ஜகத்’ அதாவது உலகத்தை வணங்குங்கள் என்றும் கூறியிருந்தார். எனவே உலகம் நமக்கு ஒரு குடும்பம். எனவே, பொருளாதார வளர்ச்சியுடன், மானுடத்திற்கும், மனிதகுலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தக் கட்டளையை நாம் பின்பற்றுகிறோம்.

|

இன்று உலகம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியா போன்ற ஒரு பரந்த நாடு உலகப் பொருளாதாரத்தில் தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பது காலத்தின் தேவை. இது உலக நலனுக்கான இந்தியாவின் கடமையாகும். இந்தியா தனது பங்களிப்பை அதிகரிக்க விரும்பினால், அவளுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்; அவள் தன்னம்பிக்கை அல்லது ‘சுயசார்பு” மிக்கவளாக இருக்க வேண்டும். உலக நலனுக்காக பங்களிக்கும் திறன் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். நமது வேர்கள் வலுவாக இருந்தால், நாம் போதுமான திறன் கொண்டவர்களாக இருந்தால் தான் உலக நலனை நோக்கி நாம் காலடி எடுத்து வைக்கமுடியும்.

நம் நாட்டில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. இந்த இயற்கை வளங்கள் மற்றும் மனித வளங்களின் மதிப்பை உணர்ந்து பயன்படுத்த தொடங்குவதுடன், நாட்டையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வது காலத்தின் கட்டாயம். மூலப்பொருளை உலகுக்கு எவ்வளவு காலம் ஏற்றுமதி செய்வோம்? மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்வதும், சரக்குகளை இறக்குமதி செய்வதும் எவ்வளவு காலம் தொடரும்? எனவே, நாம் தற்சார்புடன் இருக்க வேண்டும். உலகின் தேவைகளுக்கு ஏற்ப நமது திறன்களின் மதிப்புக் கூட்டலை நாட வேண்டியிருக்கும். அது நமது பொறுப்பு. உலக நலனுக்கு பங்களிக்க நமது திறனை அதிகரித்து முன்னேற வேண்டும். இதேபோல், நாம் வெளிநாட்டிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் ஒரு காலம் இருந்தது; ஆனால் நமது விவசாயிகள் ஒரு அற்புதமான வேலையைச் செய்தனர். அதனால், இப்போது இந்தியா விவசாயத் துறையில் தன்னிறைவு அடைந்துள்ளது. இன்று இந்தியாவின் விவசாயிகள் இந்திய குடிமக்களுக்கு உணவு தானியங்களை வழங்குவது மட்டுமல்லாமல், இந்தியாவும் தேவைப்படும் மற்ற நாடுகளுக்கு உணவு தானியங்களை வழங்கும் நிலையில் உள்ளது.
இது நமது பலம் என்றாலும் – விவசாயத்தில் தன்னம்பிக்கையின் வலிமை- திறன்கள் அதிகரித்தல் இந்தத் துறையிலும் அவசியம். நமது விவசாயத் துறை உலகின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக வேண்டும்; நமது விவசாய துறைக்கு அதிக திறன்கள் தேவை.

இன்று, நாடு பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. நாம் விண்வெளித் துறையைத் திறந்து வைத்திருக்கிறோம். நம் நாட்டு இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. வேளாண் துறையை சட்டத்தின் பிடியில் இருந்து விடுவித்து, அதை தற்சார்புடையதாக முயற்சித்தோம். விண்வெளித் துறையில் இந்தியா சக்தி வாய்ந்ததாக மாறும்போது, அண்டை நாடுகளும் அதன் நன்மைகளைப் பெறுகின்றன. எரிசக்தித் துறையில் நாம் சக்தி வாய்ந்தவர்களாக மாறினால், இருளை விரட்ட விரும்பும் பிற நாடுகளுக்கு இந்தியா உதவ முடியும். நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு தற்சார்பாக மாறும்போது, சுகாதாரச் சுற்றுலாவுக்கு விருப்பத்தக்க நாடாக இந்தியா மாறிவிடும். எனவே, ‘மேக் இன் இந்தியா’ தயாரிப்புகள் உலகளவில் பாராட்டுகளைப் பெற வேண்டியது அவசியம். நமது திறமையான மனித வளத்தால் நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டதற்கு வரலாறு சாட்சி.

நாம் தற்சார்பு அடைவது பற்றி பேசும்போது, இறக்குமதி பொருள்களைக் குறைப்பதை மட்டும் குறிக்கவில்லை. நாம் தற்சார்பு பற்றி பேசும்போது, அது நமது திறமைகள் மற்றும் மனித வளங்களை பற்றியது. நாம் வெளிநாட்டிலிருந்து பொருள்களை பெறத் தொடங்கும் போது, நமது திறன்கள் குறையத் தொடங்கி பின் சில தலைமுறைகள் கடந்ததும் அது முற்றிலும் அழிந்துவிடுகிறது. நாம் அதிலிருந்து நம்மைப் பாதுகாத்து, நம்முடைய திறனை மேம்படுத்த வேண்டும். நம்முடைய திறமைகளையும், படைப்பாற்றலையும் நாம் வலியுறுத்துவதோடு, அதனைக் கொண்டு புதிய உயரங்களை எட்ட வேண்டும். திறனை மேம்படுத்துவதற்காகவும், தற்சார்பு இந்தியாவை உருவாக்கவும் நாம் நமது திறன் மேம்பாட்டை வலுப்படுத்த வேண்டும்.
என் அன்பான குடிமக்களே, நான் தற்சார்பு பெறுவது பற்றிப் பேசும் போது மக்கள் பல சந்தேகங்களை எழுப்புகிறார்கள் என்பதை நான் அறிவேன். நாம் தற்சார்பு அடைவதற்கான பாதையில் பயணிக்கும்போது லட்சக் கணக்கான சவால்கள் இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன், போட்டி மிக்க உலகில் இந்த சவால்கள் மேலும் அதிகரிக்கின்றன. நாம் எதிர்கொள்ளும் லட்சக் கணக்கான சவால்களுக்கு, கோடிக் கணக்கான தீர்வுகளை வழங்கும் திறன் நம் தேசத்திற்கு உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். நமது நாட்டு மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனுடன் உள்ளனர்.
கொரோனாவின் சவாலான காலங்களில், நாம் இறக்குமதி செய்ய பல பொருள்கள் தேவைப்பட்டதை நீங்கள் காணலாம், ஆனால் அவற்றை உலகத்தால் வழங்க முடியவில்லை. நமது தேசத்தின் இளைஞர்கள், தொழில் முனைவோர், நிறுவனங்கள் சவாலை ஏற்றுக்கொண்டனர். N-95 ஐ ஒரு போதும் தயாரிக்காத நாடு, அவ்வாறு செய்யத் தொடங்கியது. நாம் முன்னர் தயாரிக்காத தனி நபர் பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியைத் தொடங்கினோம், இதேபோல் இந்தியாவில் இதற்கு முன்னர் தயாரிக்கப்படாது இருந்த வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யத் தொடங்கினோம். நம் சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ததோடு மட்டுமல்லாமல், இப்போது உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய போதுமான அளவில் வலிமையாகவும் இருக்கிறோம். ஒரு தற்சார்பு இந்தியா உலக நாடுகளுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதை நாம் நன்றாகக் காண முடிகிறது. எனவே உலக நலனுக்காக பணியாற்றுவது இந்தியாவின் கடமையாகும்.

சுதந்திர இந்தியாவின் மனநிலை என்னவாக இருக்க வேண்டும்? சுதந்திர இந்தியாவின் மனநிலையானது ‘உள்ளூர் தயாரிப்புகளுக்கான குரல்’ஆக இருக்கவேண்டும். நமது உள்ளூர் தயாரிப்புகளில் நாம் பெருமை கொள்ள வேண்டும். நமது நாட்டின் தயாரிப்புகளை நாம் புகழ்ந்து ஆதரிக்கவில்லை என்றால், வளரவும் மேம்படவும் அவை எவ்வாறு ஒரு வாய்ப்பைப் பெறும், அவை எவ்வாறு வலிமையைப் பெறும்? வாருங்கள், நமது சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டை நோக்கி செல்லும்போது, ‘உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல்’ என்ற பெருமையை ஏற்றுக்கொள்வதுடன், ஒன்றாக இணைந்து நம்மை நாமே பலப்படுத்திக் கொள்வோம்.

என் அன்பான நாட்டு மக்களே, நம் தேசம் எவ்வாறு அதிசயங்களைச் செய்ய முடியும் என்றும் எவ்வாறு முன்னேறுகிறது என்றும் நாம் தெளிவாகக் கண்டோம். ஏழைகளின் ஜன-தன் கணக்குகளுக்கு லட்சக் கணக்கான கோடிக் கணக்கான பணம் நேரடியாக மாற்றப்படும் என்று யார் கற்பனை செய்திருக்க முடியும்? விவசாயிகளின் நலனுக்காக வேளாண் உற்பத்தி சந்தைக் குழு சட்டத்தில் இவ்வளவு மாற்றங்கள் செய்யப்படும் என்று யார் கற்பனை செய்திருக்க முடியும்? அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் (Damocles’ sword of the) கீழ் வாழ்ந்த விவசாயிகள், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அதிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று யார் நினைத்திருக்க முடியும்? நமது தேசத்தின் இளைஞர்களுக்கு விண்வெளித் துறையில் வாய்ப்புகள் கிட்டும் என்று நாம் கற்பனை செய்திருக்க முடியுமா? தேசிய கல்விக் கொள்கை, ஒரு தேசம்-ஒரு ரேஷன் கார்டு, ஒரு தேசம்-ஒரு கட்டுப்பாடு, ஒரு தேசம்-ஒரு வரி, நொடித்துப்போதல் மற்றும் வங்கி திவால்நிலைக் குறியீடு மற்றும் வங்கிகளை இணைப்பதற்கான முயற்சி- இவை அனைத்தும் தேசத்தின் யதார்த்தமாகிவிட்டன என்பதை இன்று நாம் காண்கிறோம்.

|

இந்த காலங்களில் இந்தியாவில் நடைபெற்று வரும் சீர்திருத்தங்களின் விளைவுகளை உலகம் கவனித்து வருகிறது. நாம் ஒன்றன் பின் ஒன்றாக கொண்டு வரும் சீர்திருத்தங்களை உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது, அவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்தியாவில் இந்த அந்நிய நேரடி முதலீடு (FDI) கடந்த ஆண்டு அதன் முந்தைய அனைத்துப் பதிவுகளையும் முறியடித்தது.
கடந்த ஆண்டு, இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் 18 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, கொரோனா தொற்றுநோய்களின் போது கூட, உலகின் சிறந்த நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வருகின்றன. இந்த நம்பிக்கை போகிற போக்கில் உருவாக்கப்படவில்லை. ஒரு காரணமும் இல்லாமல் உலகம் இந்தியா மீது ஈர்க்கப்படவில்லை. அதன் கொள்கைகள், ஜனநாயகம் மற்றும் அதன் பொருளாதாரத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதில் இந்தியா மேற்கொண்ட கடின உழைப்பால் இந்த நம்பிக்கை வளர்ந்துள்ளது.

இன்று உலகின் பல வணிகங்கள் இந்தியாவை விநியோகச் சங்கிலியின் மையமாகப் பார்க்கின்றன. எனவே இப்போது, ‘இந்தியாவிற்காக தயாரியுங்கள்” (மேக் ஃபார் இந்தியா) உடன் இணைந்து ‘ உலகத்திற்காக தயாரியுங்கள் (மேக் ஃபார் வேர்ல்ட்) என்ற மந்திரத்துடன் முன்னேற வேண்டும்.

சமீபத்தில் நடந்ததை நினைவு கூர்ந்து 130 கோடி நாட்டு மக்களின் திறன்களைப் பற்றி பெருமிதம் கொள்ளுங்கள். இந்த கொரோனா தொற்றுநோய்களின் போது, இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைகளில் சூறாவளிகள் இருந்தன, மின்னல் மற்றும் நிலச்சரிவுகளால் ஏராளமான மக்கள் இறந்தனர், மேலும் சிறிய பூகம்பத்தின் தீவிரங்கள் மீண்டும் மீண்டும் உணரப்பட்டன. இவை போதாது என்பது போல, வெட்டுக்கிளிகளின் திரள் நம் விவசாயிகளுக்கு அழிவை ஏற்படுத்தின. தொடர்ச்சியான துன்பங்கள் ஒன்றின் பின் ஒன்றாகத் தாக்கின. ஆயினும்கூட, நாடு நம்பிக்கையை இழக்கவில்லை, தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் முன்னேறியது.
இன்று, இந்த கொரோனா தொற்றுநோய் பிடியிலிருந்து நம் நாட்டின் மக்களையும் பொருளாதாரத்தையும் ஒரு சேர மீட்டெடுப்பது நமது முன்னுரிமை. இந்த முயற்சியில் தேசிய உள்கட்டமைப்புகளின் ஒன்றான குழாய் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும். இந்த திட்டத்திற்கு ரூ. 110 லட்சம் கோடி செலவிடப்படும். இதற்காக, பல்வேறு துறைகளில் சுமார் ஏழாயிரம் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் ஒரு புதிய திசையையும் புதிய வேகத்தையும் தரும். நெருக்கடிகளின் போது, உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும், இதனால் பொருளாதார நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது, மேலும் இது ஒரு தொடர்ச்சியான சுழற்சியை உருவாக்குகிறது. இதனால் சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெருமளவில் பயனடைகிறார்கள்.

|

 

இன்று ஒரு சம்பவத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அவர் தங்க நாற்கரச் சாலை என்ற நெடுஞ்சாலைத் திட்டத்தை தொலைநோக்குத் தாக்கத்துடன் ஒரு திட்டத்தைத் தொடங்கினார். சாலைகளின் உள்கட்டமைப்பை அடுத்த தலைமுறை நிலைக்கு எடுத்துச் சென்றிருந்தார். இன்றும், நாடு ‘தங்க நாற்கரச் சாலையை “ பெருமையுடன் பார்த்து, ஆம் நம் நாடு மாற்றமடைகிறது என்று உணர்கிறது,

எனதருமை நாட்டு மக்களே

அடல் அவர்கள் இந்தப் பணியை அவரது காலத்தில் செய்தார். இப்போது நாம் இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்லவேண்டும். இதற்கு நாம் புதிய உத்வேகம் அளிக்க வேண்டும். நாம் தனித்து செயல்பட முடியாது. சாலைப்பிரிவு, சாலைப்பணிகளை மட்டுமே மேற்கொள்ளும்; இரயில்வே பிரிவு இரயில்வே பிரிவுப் பணிகளை மட்டும் தான் மேற்கொள்ளும் என்பது போன்ற நிலைமை நமக்குத் தேவை இல்லை. இரயில்வே, சாலைப் பிரிவுகள் ஆகியவற்றுக்கிடையே; விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றுக்கிடையே; ரயில் நிலையங்கள் பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றுக்கிடையே; ஒருங்கிணைப்பு இல்லை — இதுபோன்ற நிலை இருக்கக்கூடாது. கட்டமைப்புப் பிரிவு என்பது முழுமையானதாகவும், ஒருங்கிணைந்ததாகவும் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அவை ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையதாகவும் இருக்கவேண்டும். இரயில்வே, சாலைப் பிரிவுக்கும்; சாலைப்பிரிவு, கடல் துறைமுகங்களுக்கும்; கடல் துறைமுகம், விமான நிலையங்களுக்கும் ஒன்றுக்கொன்று உதவும் வகையில் இருக்கவேண்டும். புதிய நூற்றாண்டில் மல்டி மாடல் தொடர்புக் கட்டமைப்பை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இது ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும். நாம் மிகப்பெரிய கனவோடு இந்தத் திட்டத்தைத் துவக்கியுள்ளோம். தனித்தனியாக பணிகளை மேற்கொள்வது என்பதை விலக்கி விட்டால், இந்த அனைத்து அமைப்புகளுக்கும் ஒரு புதிய வலிமையை நாம் வழங்க முடியும். உலக வர்த்தகத்தில் நமது கடலோரப் பகுதிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. துறைமுகங்கள் மூலமான வளர்ச்சியை நோக்கிச் செல்கையில், இனிவரும் நாட்களில், நமது கவனம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய வசதிகளைக் கொண்ட, நவீனக் கட்டமைப்பை உருவாக்குவதாகும். அனைத்து கடலோரப் பகுதிகளையும் இணைக்கும் வகையிலான நான்கு வழிப்பாதை அமைப்பதற்கும் கவனம் செலுத்தப்படும்.

|

எனதருமை நாட்டு மக்களே

நமது வேதங்கள் ஆழமான ஒரு விஷயத்தைக் கூறுகின்றன. “சமர்த்ய மூலம் ஸ்வதந்தரியம்; ஷ்ரம் மூலம் வைபவம்” இதன் பொருள் என்னவென்றால் “விடுதலைக்கான அடிநாதம் திறமையே; வளமைக்கும், செழிப்புக்கும், எந்த ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கும் மூலக்கூறு உழைப்பே ஆகும்” என்பதாகும்.

சாதாரண மனிதனின் கடின உழைப்புடன் எதையுமே ஒப்பிட முடியாது. நகர்ப்புறத்தில் இருந்தாலும் சரி கிராமங்களில் இருந்தாலும் சரி. இன்னலுறும் சமுதாயத்திற்கு வசதிகள் கிடைக்கும் போது, வாழ்க்கைக்கான போராட்டம் எளிதாகிறது. தினசரி வாழ்விற்கான பிரச்சினைகள் குறைகின்றன. இதனால் அவர்களுடைய சக்தி அதிகரிக்கிறது. மிக நல்ல பலன்கள் கிடைக்கின்றன.

கடந்த ஆறு ஆண்டுகளில் நாட்டில் இன்னலுறும் குடிமக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக பல்வேறு இயக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒவ்வொருவரும் சொந்தமாக வங்கிகணக்கு வைத்திருத்தல்; முறையான வீடுகள் சொந்தமாக கட்டிக் கொள்ளுதல்; ஏராளமான எண்ணிக்கையில் கழிப்பறைகள் கட்டுதல்; ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார வசதி வழங்குதல்; புகை மூட்டத்தில் இருந்து நமது அன்னையரையும், சகோதரிகளையும் விடுபடச் செய்யும் வகையில் சமையல் எரிவாயு இணைப்புவழங்குதல்; வறியவருள் வறியவரான மக்களுக்கும் காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல்; நாட்டிலுள்ள மிகச்சிறந்த மருத்துவமனைகளில் ஐந்து லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை செயல்படுத்துதல்; ரேஷன் கடைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக இணைத்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வசதிகளும், ஒவ்வொரு ஏழை மனிதரையும் சென்றடைவதற்காக, திட்ட நடைமுறைகளில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை நீக்கவும், திட்டங்களில் வெளிப்படைத் தன்மையை மீண்டும் நிலைநாட்டவும், கடந்த ஆறு ஆண்டு காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, கணிசமான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

|

கொரோனா நெருக்கடிக் காலத்தின் போதும், இந்தச் சேவைகள் தங்குதடையின்றி வழங்கப்படுவதற்கு இவை உதவியாக இருந்தன.கொரோனா காலத்தின்போதும் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. குடும்ப அட்டை இருந்தாலும், இல்லாவிட்டாலும், 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கியதன் மூலம், 80 கோடிக்கும் மேற்பட்ட என் நாட்டு மக்களின் வீடுகளில் சமையல் அறையில் அடுப்பு எரிந்தது. சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய், வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டது. தில்லியிலிருந்து விநியோகிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயின் அத்தனை 100 காசுகளும் நேரடியாக ஏழை மக்களின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டு விடும் என்பது சில ஆண்டுகளுக்கு முன் வரை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாததாக இருந்திருக்கும். ஆமாம். இதுவரை அது கற்பனைக்கு எட்டாத செயலாகவே இருந்துவந்தது.

கரீப்கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டம் அவர்களது கிராமங்களிலேயே வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். நமது உழைப்பாளி நண்பர்கள் தங்களது திறன்களைப் புதுப்பித்துக் கொள்ளவும், மேலும் வளர்த்துக் கொள்ளவும் செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அவர்களது முயற்சிகளில் முழு நம்பிக்கை வைத்து, கிராமப்புற உள்நாட்டு ஆதாரங்களைச் சார்ந்து, திறனுள்ள உழைக்கும் பணியாளர்கள் மீது நம்பிக்கை கொண்டு “உள்ளூர் என்று உரக்கச் சொல்வோம்” என்றும் “திறனைப் புதுப்பித்தல் திறனை வளர்த்தல்” ஆகியவற்றுக்கும் அறைகூவல் விடுத்தோம். நமது ஏழை மக்களுக்கும், நம் நாட்டின் உழைக்கும் தொழிலாளர்களுக்கும் அதிகாரம் வழங்கச் செய்யும் முயற்சியாகும் இது.

நகரங்களே பொருளாதாரச் செயல்பாடுகளின் மையமாகத் திகழ்கின்றன. எனவே தங்களது வாழ்வாதாரத்திற்காக கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்த தெரு வியாபாரிகள் போன்ற உழைப்பாளிகளுக்கு, வங்கிகளில் நேரடியாக கடனுதவி செய்வதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா நெருக்கடி காலத்தின் போதும் மிகக்குறுகிய காலத்திலேயே லட்சக்கணக்கான மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பலனடைந்துள்ளனர். இப்போது, அவர்கள் மிக அதிக வட்டியில் கடன் வாங்கத் தேவையில்லை. உழைப்பாளிகள் கண்ணியத்துடனும்,

|

அதிகாரத்துடனும் கடன் பெற முடியும்.

இதேபோல் நமது தொழிலாளர்கள் நகரத்திற்குப் புலம்பெயர்கையில், அவர்களுக்கு தங்குவதற்கு நல்ல இடம் கிடைத்தால், அவர்களது திறனும் அதிகரிக்கும். இந்த விஷயத்தைக் கருத்தில் கொண்டு, நகரத்திலேயே அவர்களுக்கு, அவர்களால் பணம் செலுத்தக் கூடிய அளவிற்கான வீட்டுவசதி கிடைக்க ஏற்பாடு செய்வதற்கான மிகப்பெரிய திட்டமொன்றை வடிவமைத்துள்ளோம். இதனால் தொழிலாளர்கள், நகரங்களுக்கு வரும்போது முழு நம்பிக்கையோடும், உறுதியோடும் கவனத்துடன் பணியாற்றி முன்னேற்றமடைய முடியும்.

எனதருமை நாட்டு மக்களே,

சமுதாயத்தின் சில பிரிவுகள் பின்தங்கிய நிலையில் இருப்பதும், வளர்ச்சியை நோக்கிய நாட்டின் பயணத்தில் இணைய முடியாமல் ஏழ்மையில் இருப்பதும் உண்மை தான். அதே போல், சில பகுதிகள், இடங்கள், நிலப்பரப்புகள் பின்தங்கியே இருக்கின்றன. இந்தியாவை தற்சார்புடையதாக்க சீரான வளர்ச்சி மிகவும் அவசியமாகும். சராசரி மாவட்டங்களோடு ஒப்பிடும் போது பின்தங்கி இருக்கிற, அதே சமயம் வளரத் துடிக்கும் 110 மாவட்டங்களை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம். அம்மாவட்டங்களின் ஒவ்வொரு அளவுருக்களையும் நாட்டின் சராசரிக்கு இணையாக நாம் கொண்டு வரவேண்டும். பின்தங்கியுள்ள இந்த 110 மாவட்டங்களின் மக்கள் சிறந்த கல்வி, சிறப்பான சுகாதார வசதிகள் மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றைப் பெறவேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.

  

|

எனதருமை நாட்டு மக்களே,

தற்சார்பு வேளாண்துறை மற்றும் தற்சார்பு விவசாயிகளே தற்சார்பு இந்தியாவின் முன்னுரிமை ஆகும். நாம் இதைப் புறந்தள்ள முடியாது. விவசாயிகளின் நிலையை நாம் பார்க்கிறோம். சுதந்திரம் கிடைத்ததில் இருந்து பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தடைகளில் இருந்து நாம் அவர்களை மீட்க வேண்டும், நாங்கள் அதை செய்திருக்கிறோம்.

நீங்கள் இதை கற்பனை கூட செய்ய முடியாது. நாட்டின் ஒரு மூலையில் நீங்கள் சோப்பு, துணி அல்லது சர்க்கரையை உற்பத்தி செய்தால், இன்னொரு மூலையில் நீங்கள் அவற்றை விற்கலாம். ஆனால் நமது விவசாயிகள் தங்கள் விருப்பப்படி தங்களது பொருள்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்க முடியது என்பது பலருக்கு தெரியாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் அவர் தனது பொருளை விற்க வேண்டும். இந்தத் தடைகளை நாம் தகர்த்திருக்கிறோம்.

தற்போது, இந்தியாவின் விவசாயி சுதந்திரமாக சுவாசித்து நாட்டின் அல்லது உலகின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் தன்னுடைய பொருள்களை தன்னுடைய விருப்பப்படி விற்க முடியும். விவசாயியின் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு மாற்று நடவடிக்கைகளில் நாங்கள் கவனம் செலுத்தியிருக்கிறோம். விவசாயத்தின் உள்ளீட்டுச் செலவைக் குறைக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். டீசல் பம்புக்கு பதிலாக சூரிய சக்தி பம்ப்பை விவசாயிக்கு எவ்வாறு வழங்கலாம், உணவு உற்பத்தியாளர் எவ்வாறு மின்சார உற்பத்தியாளராக ஆகலாம்? தேனீ வளர்ப்பு, மீன்வளம், கோழி வளர்ப்பு போன்ற வாய்ப்புகளை எவ்வாறு அவருக்குக் கிடைக்கச் செய்து அவரது வருமானத்தை இரட்டிப்பாக்கலாம் என்னும் திசையில் நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

நமது வேளாண் துறை நவீனமாக மாறி, மதிப்புக் கூட்டல்கள், உணவுப் பதப்படுத்துதல், உணவுப் பொருள்களைப் பொதியாக்கம் செய்தல் போன்றவை நடைபெற வேண்டும் என்று காலம் கோருகிறது. சிறப்பான உள்கட்டமைப்பு இதற்குத் தேவை.

கொரோனா பெருந்தொற்றின் போது கூட வேளாண் உள்கட்டமைப்புக்காக ரூ 1,00,000 கோடியை இந்திய அரசு ஒதுக்கியிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். விவசாயிகளின் நலனுக்கான இந்த உள்கட்டமைப்பின் மூலம் அவர்கள் தங்களது பொருள்களுக்கான சிறந்த விலையைப் பெற முடியும், தங்களது பொருள்களை வெளிநாட்டுச் சந்தைகளில் விற்க முடியும். வெளிநாட்டுச் சந்தைகளுக்கு இன்னும் சிறப்பான வகையில் அவர்கள் சென்றடைவார்கள்.

ஊரகத் தொழில்களை வலுப்படுத்தும் தேவை இருக்கிறது. ஊரகப் பகுதிகளில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படும். வேளாண் மற்றும் வேளாண்-சாராத தொழில்களின் வலைப்பின்னல் உருவாக்கப்படும். அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றுவதற்காக விவசாயி உற்பத்தி சங்கத்தைத் தொடங்க நாம் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம்.

சகோதர, சகோதரிகளே,

ஜல் ஜீவன் இயக்கத்தைப் பற்றிய அறிவிப்பை கடந்த முறை நான் வெளியிட்டிருந்தேன். ஒரு வருடத்தை அது பூர்த்தி செய்கிறது. தூய்மையான குடி தண்ணீரை அனைத்து மக்களுக்கும் கிடைக்க செய்யும் நமது கனவு நிறைவேறி வருகிறது என்பதை உங்களிடம் கூற நான் பெருமையடைகிறேன். பல்வேறு சுகாதார சிக்கல்களுக்கான தீர்வுகள் தூய்மையான குடி தண்ணீருடன் நேரடியாக இணைந்துள்ளன. நாட்டின் பொருளாதாரத்துக்கும் அது பங்களிக்கிறது. அதனால் தான் ஜல் ஜீவன் இயக்கத்தை நாம் தொடங்கி இருக்கிறோம்.

தற்போது ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீரை நாம் விநியோகித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு கோடி குடும்பங்களுக்கு, குறிப்பாக காடுகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் தொலைதூர இடங்களில் வாழ்பவர்களுக்கு, கடந்த ஒரு வருடத்தில் நாம் தண்ணீரை வழங்கியிருக்கிறோம். ஒரு மிகப்பெரிய பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் இயக்கம் ஒரு ஆரோக்கியமான போட்டியை நாட்டில் இன்று உருவாக்கி இருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மாவட்டங்களுக்கிடையே, மாநகரங்களுக்கிடையே மற்றும் மாநிலங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டி நடைபெற்று வருகிறது. பிரதமரின் கனவான ‘ஜல் ஜீவன் இயக்கம்’ தங்களது பகுதிகளில் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். கூட்டுறவு மற்றும் போட்டித்திறனுடைய கூட்டாட்சியின் புதிய வலிமை ‘ஜல் ஜீவன் இயக்கத்துடன்’ இணைந்திருக்கிறது, நாம் அதை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம்.

எனதருமை நாட்டு மக்களே,

வேளாண் துறை, சிறு தொழில்கள் துறை அல்லது சேவைகள் துறை போன்ற எந்தத் துறையில் இருக்கும் மக்களாக இருந்தாலும், கிட்டத்தட்ட அனைவருமே இந்தியாவின் மிகப்பெரிய நடுத்தர வர்க்கத்தின் பகுதிகளாக இருக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தின் பணியாளர்கள் தற்போது உலகம் முழுக்க நற்பெயரை ஈட்டியுள்ளார்கள். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நமது மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், விஞ்ஞானிகள் உலகம் முழுக்க தங்களது தடத்தைப் பதித்து வருகிறார்கள். எங்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கின்றனவோ, அங்கெல்லாம் நடுத்தர வர்க்கத்தினர் அவற்றை சரியாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது உண்மை. எனவே, அரசு குறுக்கீடுகளில் இருந்து அவர்களுக்கு சுதந்திரம் தேவை. புதிய வாய்ப்புகளையும், திறந்த சூழலையும் நடுத்தர வர்க்கத்தினர் பெற வேண்டும். அவர்களது இந்தக் கனவை நனவாக்க எங்களது அரசு தொடர்ந்து பணியாற்றுகிறது. அதிசயங்களைச் செய்யும் சக்தி நடுத்தர வர்க்கத்துக்கு இருக்கிறது. எனவே வாழ்க்கையை எளிமையாக்குவதின் சிறந்த பலன்களை நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் பெற வேண்டும். குறைந்த செலவில் இணைய வசதி, கட்டுப்படியாகக் கூடிய விலையில் திறன்பேசிகள் அல்லது உடான் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் விமானப் பயணச்சீட்டுகள் அல்லது நமது நெடுஞ்சாலைகள் அல்லது தகவல் தொழில்நுட்ப சாலைகள்– இவை அனைத்துமே நடுத்தர வர்க்கத்தின் பலத்தை அதிகரிக்கப் போகின்றன. ஏழ்மையில் இருந்து வெளியில் வந்த நடுத்தர வர்க்க நபரின் முக்கிய கனவாக சொந்த வீடு இருப்பதை இன்று நீங்கள் காணலாம். சமமான வாழ்க்கை முறை அவருக்குத் தேவை. நாட்டின் மாதத் தவணைகள் துறையில் நிறைய பணிகளை நாங்கள் செய்திருப்பதன் விளைவாக வீட்டுக் கடன் விகிதங்கள் குறைந்துள்ளன. வீட்டுக் கடனை ஒருவர் வாங்கினால், அதை திருப்பிச் செலுத்துவதற்குள் சுமார் ரூ 6 லட்சம் தள்ளுபடியை அவர் பெறலாம். நிறைய மத்திய வர்க்க குடும்பங்கள் வீட்டை வாங்குவதற்காக தங்கள் பணத்தை முதலீடு செய்திருப்பதாகவும், ஆனால் பணிகள் முடியாததால் வீட்டைப் பெற முடியாமல் வாடகை வீடுகளில் வாழ்ந்து வருவதாகவும் சமீபத்தில் கண்டறியப் பட்டது. மத்திய வர்க்கக் குடும்பங்கள் வீடுகளைப் பெறுவதை உறுதி செய்ய, வேலை முடியாமல் உள்ள வீடுகளில் பணிகளை முடிப்பதற்காக ரூ 25,000 கோடி சிறப்பு நிதியத்தை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் வருமான வரி விகிதங்கள் தற்போது குறைந்துள்ளன. இத்தகைய குறைந்தபட்ச நிறுவன வசதிகளுடன் நாட்டை முன்னேற்றி செல்ல நாம் இன்று முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம். கூட்டுறவு வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வைக்குள் கொண்டு வந்தது, நடுத்தர வர்க்க குடும்பங்களின் பணத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நடவடிக்கையாகும்.

குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை மற்றும் வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் கடுமையாக உழைக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு நேரடி பலனை அளிக்கும். அதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புடைய சிறப்பு நிதியத்தின் பலன்களை நமது வியாபாரிகளும், தொழில் முனைவோர்களும் பெறுவார்கள். சாதாரண இந்தியனின் வலிமையும், சக்தியுமே தற்சார்பு இந்தியாவின் மிகப்பெரிய அடித்தளமாகும். இந்த வலிமையை பராமரிக்க ஒவ்வொரு மட்டத்திலும் தொய்வில்லா பணிகள் நடைபெற்று வருகின்றன.
அன்புக்குரிய என் நாட்டு மக்களே,

தற்சார்பான, நவீன, புதிய இந்தியாவை, வளமையும் மகிழ்ச்சியும் நிறைந்த இந்தியாவை உருவாக்குவதில் நாட்டின் கல்வி மிகவும் முக்கியமானது. இதை மனதில் கொண்டு, மூன்று தசாப்த காலத்திற்குப் பிறகு புதிய தேசிய கல்விக் கொள்கையை இன்று வெற்றிகரமாக நாம் அளித்திருக்கிறோம்.

நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் வாழ்பவர்கள் புதிய உற்சாகத்துடன் இதற்கு வரவேற்பு தெரிவிக்கிறார்கள். நமது மாணவர்களை, வேர்களுடன் இணைக்கும் வகையில் இந்த தேசிய கல்விக் கொள்கை உள்ளது. அத்துடன், உலகளாவிய குடிமக்களாக உருவாக அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். இந்தியாவை வேராகக் கொண்டு, புதிய உச்சங்களைத் தொடுபவர்களாக அவர்கள் வளருவார்கள்.
முன்னேறுவதற்கு புதுமை சிந்தனை அவசியம் என்பதால் புதிய ஆராய்ச்சி அமைப்பிற்கு தேசிய கல்விக் கொள்கையில் சிறப்பு முக்கியத்துவம் தந்திருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். புதுமை சிந்தனை மற்றும் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரும்போது, போட்டிகள் நிறைந்த இந்த உலகில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்வதற்கான பலம் அதிகரிக்கும்.

கிராமப் பகுதிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும், அதற்கான வசதிகள் இவ்வளவு வேகமாக உருவாக்கப்படும் என்றும் யாரால் யோசித்திருக்க முடியும்? சிலநேரங்களில், எதிர்மறைச் சூழ்நிலைகளில், புதிய புரட்சிகரமான எண்ணங்கள் புதிய வேகத்துடன் உருவாகும். அதனால் தான் இந்த நோய்த் தொற்று சூழ்நிலையில், ஆன்லைன் வகுப்புகள் என்ற நடைமுறை உருவாகி இருப்பதை நாம் பார்த்து வருகிறோம்.

ஆன்லைன் பரிவர்த்தனைகள் எவ்வளவு வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்பதையும் நீங்கள் காண முடியும். BHIN UPI ஆப் பயன்பாட்டைப் பாருங்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தச் செயலியின் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இணையவழிப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன என்பதை அறிந்தால், யாருமே பெருமைப்படத்தான் செய்வார்கள். மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நம்மை எப்படி தகவமைப்பு செய்து கொள்கிறோம் என்பதற்கு அருமையான ஓர் எடுத்துக்காட்டாக இது உள்ளது.

2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலையைப் பார்த்தால், 5 டஜன் பஞ்சாயத்துகளில் மட்டும் கண்ணாடி இழை இணையக் கட்டமைப்பு வசதி இருந்தது. இருந்தபோதிலும் கடந்த 5 ஆண்டுகளில், 1.5 லட்சம் பஞ்சாயத்துகளுக்கு கண்ணாடி இழை இணையக் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் அது நமக்குப் பேருதவியாக இருக்கிறது. அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் இந்த வசதியைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். மீதியிருக்கும் ஒரு லட்சம் பஞ்சாயத்துகளுக்கும் இந்த வசதியை உருவாக்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மாறிவரும் இந்த காலக்கட்டத்தில், கிராமப் பகுதிகளையும் டிஜிட்டல் இந்தியா என்ற குடையின் கீழ் கொண்டு வருவது அவசியம். இதை மனதில் கொண்டு, அனைத்துப் பஞ்சாயத்துகளுக்கும் இந்த வசதியை உருவாக்க முன்னர் நாங்கள் திட்டமிட்டிருந்தோம். இப்போது நமது அனைத்து ஆறு லட்சம் கிராமங்களுக்கும் கண்ணாடி இழை இணையக் கட்டமைப்பு வசதியை உருவாக்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்று உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன். ஆறு லட்சம் கிராமங்களுக்கு, ஆயிரங்கள் மற்றும் லட்சக்கணக்கான கிலோமீட்டர் நீளத்துக்கு கண்ணாடி இழை இணையக் கேபிள்கள் பதிக்கப்படும். ஆறு லட்சம் கிராமங்களையும் கண்ணாடி இழை இணையக் கட்டமைப்பு வசதியில் சேர்க்கும் பணியை 1000 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம்.
இந்தத் தொழில்நுட்ப காலக்கட்டத்தில், இணையவெளியை நாம் சார்ந்திருக்கும் நிலை பல மடங்கு அதிகரிக்கப் போகிறது. இருந்தாலும், இணையவெளியில் ஆபத்துகளும், அச்சுறுத்தல்களும் இணைந்தே இருக்கின்றன. இதை உலகம் நன்கு அறிந்து வைத்துள்ளது. நமது நாட்டின் சமூகக் கட்டமைப்புக்கு, நமது பொருளாதாரத்துக்கு இது அச்சுறுத்தலாக இருக்கக் கூடும். நாட்டின் வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலாக இருக்கலாம்; அதுபற்றி நாம் நன்கு அறிந்திருக்கிறோம். இந்தியா மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிறது. இதுபோன்ற ஆபத்துகளை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இதுமட்டுமின்றி, புதிய நடைமுறைகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறுகிய காலக்கட்டத்தில், புதிய இணையவெளிப் பாதுகாப்புக் கொள்கை வெளியிடப்படும். வரக்கூடிய காலங்களில், நாம் அனைத்தையும் ஒருங்கிணைத்து, இந்த இணையவெளிப் பாதுகாப்பு வரம்புக்குள் செயல்பட வேண்டும். அந்த வகையில் முன்னெடுத்துச் செல்வதற்கான உத்திகளை நாம் உருவாக்குவோம்.

அன்புக்குரிய என் நாட்டு மக்களே,

இந்தியாவில் மகளிர் அதிகாரத்துக்கு எப்போது வாய்ப்பு கொடுத்தாலும், அவர்கள் நாட்டிற்குப் பெருமை சேர்த்து, நாட்டை பலப்படுத்தியுள்ளனர். இப்போது நாட்டில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம அளவிற்கு வாய்ப்பு அளிப்பதில் நாடு உறுதியாக இருக்கிறது. நிலக்கரிச் சுரங்கங்களில் பெண்கள் இப்போது வேலை பார்க்கிறார்கள். என் நாட்டு மகள்கள் போர் விமானங்களை இயக்கி விண்ணைத் தொடுகிறார்கள். கடற்படை மற்றும் விமானப் படையில் தாக்குதல் பிரிவில் பெண்களைச் சேர்க்கும் சில நாடுகளின் பட்டியலில் இப்போது இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. கர்ப்பிணிகளுக்கு 6 மாத காலம் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு அளிக்க நாங்கள் முடிவு செய்தோம். நமது முஸ்லிம் சகோதரிகளை, நம் நாட்டுப் பெண்களை முத்தலாக் முறையில் இருந்து விடுவித்தோம், பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் கிடைக்கச் செய்திருக்கிறோம்.
மொத்தம் உள்ள 40 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளில் 22 கோடி கணக்குகள் நமது சகோதரிகளின் பெயர்களில் உள்ளன. கொரோனா காலத்தில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தச் சகோதரிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. முத்ரா கடன் திட்டத்தில் 25 கோடி கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் 70 சதவீத கடன்கள் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், அதிக அளவில் பெண்களின் பெயரில் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

அன்புக்குரிய என் நாட்டு மக்களே,

ஏழை சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்பதில் இந்த அரசாங்கம் தொடர்ந்து அக்கறை கொண்டிருக்கிறது. மக்கள் மருந்தகங்களின் மூலம் ஒரு ரூபாய் விலையில் அவர்களுக்கு சானிட்டரி நாப்கின்களை பெருமளவில் வழங்கி வருகிறோம். குறுகிய காலத்தில், 6 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் மூலம் ஏழைப் பெண்களுக்கு 5 கோடிக்கும் அதிகமான சானிட்டரி நாப்கின்கள் வழங்கி இருக்கிறோம்.

நமது மகள்களுக்கு சத்துக் குறைபாடு இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதற்கு ஒரு கமிட்டியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பொருத்தமான வயதில் அவர்களுக்குத் திருமணம் செய்வதை உறுதி செய்ய அந்தக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், நமது மகள்களின் திருமண வயது பற்றி பொருத்தமான முடிவுகள் எடுக்கப்படும்.

அன்புக்குரிய என் நாட்டு மக்களே,

இந்தக் கொரோனா நோய்த் தொற்று காலத்தில் சுகாதாரத் துறையின் மீது கவனம் செலுத்தப்படுவது மிகவும் இயல்பானது தான். உண்மையில், சுகாதாரத் துறையில் தற்சார்பு அவசியம் என்ற மிகப் பெரிய பாடம் இந்த நெருக்கடி காலத்தில் நமக்கு கற்பிக்கப் பட்டிருக்கிறது. இந்த இலக்கை அடைவதற்கு நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

கொரோனா நோய் பாதிப்பைக் கண்டறிய முன்பு ஒரே ஒரு பரிசோதனை நிலையம் மட்டுமே இந்தியாவில் இருந்தது. இப்போது நாடு முழுக்க, அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக 1400 பரிசோதனை நிலையங்கள் உள்ளன. கொரோனா பிரச்சினை தொடங்கியபோது ஒரு நாளுக்கு 300 பரிசோதனைகள் மட்டுமே செய்ய முடிந்தது. இப்போது மிகக் குறுகிய காலத்தில் ஒரு நாளுக்கு 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகளைச் செய்யக் கூடிய அளவுக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியிருக்கிறோம். 300-இல் தொடங்கி 7 லட்சத்தைத் தொட்டிருக்கிறோம்!
நவீனமயமாக்கல், புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குதலில் நாம் தொடர்ச்சியாக முயற்சிகள் செய்து வருகிறோம். ஐந்தாண்டு காலத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி. படிப்புகளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆரோக்கிய மையங்கள் உள்ளன. அவற்றில் மூன்றில் ஒரு பகுதி மையங்கள் ஏற்கெனவே செயல்படத் தொடங்கி, கொரோனா நோய்த் தொற்று சூழலில் பலருக்கும் உதவிகரமாக உள்ளன. கொரோனா காலத்தில் இந்த ஆரோக்கிய மையங்கள் கிராமங்களில் மகத்தான சேவைகளைச் செய்து வருகின்றன.
இன்றில் இருந்து சுகாதாரத் துறையில் மகத்தான ஒரு திட்டம் தொடங்கப் போகிறது. அதில் தொழில்நுட்பம் மிகப் பெரிய பங்காற்றப் போகிறது.

தேசிய டிஜிட்டல் ஆரோக்கிய லட்சிய நோக்குத் திட்டம் இன்றைக்குத் தொடங்கப் படுகிறது. இந்தியாவின் சுகாதாரத் துறையில் இது ஒரு புதிய புரட்சியை உருவாக்கப் போகிறது. சிகிச்சையில் உள்ள சவால்களை ஆக்கபூர்வமான முறையில் குறைக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

ஒவ்வொரு இந்தியருக்கும் ஆரோக்கிய அடையாள அட்டை அளிக்கப்படும். இந்த அட்டையில், ஒவ்வொரு இந்தியரின் ஆரோக்கியம் குறித்த அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும். உங்களுக்கு செய்யப்பட்ட ஒவ்வொரு மருத்துவப் பரிசோதனை குறித்த தகவல்களும், ஏற்பட்ட ஒவ்வொரு நோயும், நீங்கள் சிகிச்சை பெற்ற டாக்டர்கள் பற்றிய தகவல்களும், நீங்கள் எடுத்துக் கொண்ட மருந்துகள் பற்றிய தகவல்கள், கண்டறியப்பட்ட பரிசோதனை முடிவுகள் என அனைத்து தகவல்களும் அதில் இருக்கும். எப்போது, என்ன சிகிச்சை எடுத்தீர்கள் என்ற அனைத்து தகவல்களும் ஆரோக்கிய அடையாள அட்டையில் இடம் பெற்றிருக்கும்.
டாக்டரிடம் அப்பாயின்மெண்ட் பெறுதல், சிகிச்சைக்குப் பணம் டெபாசிட் செய்தல், மருத்துவமனையில் சீட்டு வாங்குதல் போன்ற அனைத்து சிரமங்களையும் தேசிய டிஜிட்டல் ஆரோக்கிய லட்சிய நோக்குத் திட்டம் நீக்கிவிடும். நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் விஷயங்களை அறிந்து கொண்டு நல்ல முடிவு எடுப்பதற்கு உதவக் கூடிய வகையில் ஒரு நடைமுறையை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

அன்புக்குரிய என் நாட்டு மக்களே,

கொரோனா தடுப்பூசி மருந்து எப்போது தயாராகும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. இது இயல்பானது தான். இந்த ஆர்வம் உலகம் முழுக்க எல்லோரிடத்திலும் இருக்கிறது.

இதற்காக நமது விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நிலையங்களில் கடமை உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என் நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன். அவர்கள் பெருமுயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போதைக்கு நாட்டில் மூன்று தடுப்பூசி மருந்துகளுக்கான பரிசோதனைகள் வெவ்வேறு நிலைகளில் நடந்து கொண்டிருக்கின்றன. நமது விஞ்ஞானிகள் பச்சைக் கொடி காட்டியதும், பெருமளவில் தடுப்பூசி மருந்துகளை நாம் உற்பத்தி செய்யத் தொடங்குவோம். அதற்கான ஆயத்தங்கள் அனைத்தையும் நாம் செய்துவிட்டோம். தடுப்பூசி மருந்துகள் உற்பத்தியை வேகப்படுத்தி, முடிந்த அளவுக்கு குறுகிய காலத்திற்குள் அனைவருக்கும் இதை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.

அன்புக்குரிய என் நாட்டு மக்களே,

நாட்டின் வெவ்வேறு பிராந்தியங்களில், வெவ்வேறு மாதிரியான வளர்ச்சி சூழ்நிலைகள் உள்ளன. சில பிராந்தியங்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன. சில பகுதிகள் பின்தங்கியுள்ளன. இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றுவதில், இந்த சமன்நிலையற்ற தன்மை பெரிய சவாலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நான் முன்பு கூறியதுபோல, வளர்ச்சியில் உயர்விருப்பம் கொண்ட 110 மாவட்டங்கள் மீது நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த மாவட்டங்களை, வளர்ச்சி அடைந்த மாவட்டங்களுக்கு இணையாக வளர்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வளர்ச்சிக்கான சூழலை உருவாக்குதல் மற்றும் இணைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நாங்கள் முன்னுரிமை தருகிறோம்.

இப்போது பாருங்கள். நாட்டின் மேற்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் – கிழக்கு உத்தரப்பிரதேசம், பிகார், வடகிழக்கு அல்லது ஒடிசா பகுதிகள் – இயற்கை வளங்கள் அபரிமிதமாக உள்ளவையாக இருக்கின்றன. அந்தப் பகுதி மக்கள் மிகவும் திறமையானவர்களாக, பலசாலிகளாக, செயல்திறன் மிக்கவர்களாக இருக்கிறார்கள். ஆனால் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சமச்சீரற்ற நிலை இருக்கிறது. எனவே நாங்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். கிழக்குப் பகுதியில் சரக்குப் போக்குவரத்துக்காக தனி வழித்தடம் உருவாக்கும் பணியைத் தொடங்கி இருக்கிறோம். கிழக்குப் பிராந்தியப் பகுதிகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வசதியை உருவாக்குதல், புதிய ரயில்வே கட்டமைப்புகள் மற்றும் புதிய துறைமுகங்கள் இதில் உருவாக்கப்படும். முழுமையான அளவில் வளர்ச்சிக்குத் தேவையான முழு கட்டமைப்பு வசதிகளையும் நாங்கள் உருவாக்குகிறோம்.
அதேபோல லே-லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகியவை அரசியல்சட்டத்தின் 370வது பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இப்போது ஓராண்டாகிவிட்டது. ஜம்மு காஷ்மீரின் புதிய வளர்ச்சிப் பயணத்தில் இந்த ஓராண்டு காலம், முக்கிய மைல்கல்லாக உள்ளது. பெண்களுக்கும், தலித்களுக்கும் அடிப்படை உரிமையை அளிக்கும் காலக்கட்டமாக இது இருந்துள்ளது. நமது அகதிகள் கண்ணியமான வாழ்க்கை வாழ வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களைத் தொடங்கி இருக்கிறோம். இப்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் முடிந்த வரையில் அதிகமாக ஆயுஷ்மான் திட்டம் அமல் செய்யப்படுகிறது.

அன்புக்குரிய என் நாட்டு மக்களே,

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் தான் நமது ஜனநாயகத்தின் உண்மையான பலம் இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் புதிய காலக்கட்டத்துக்கான வளர்ச்சிப் பணிகளில் உணர்வுப்பூர்வமாக, தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த வளர்ச்சிப் பாதையில் தீவிரமாகப் பங்கேற்றிருப்பதற்காக, அந்த கிராமங்களின் தலைமை நிர்வாகிகளை நான் பாராட்டுகிறேன்.

உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியின் தலைமையில் ஜம்மு காஷ்மீர் எல்லை மறுவரையறை பணிகள் நடந்து வருகின்றன. சீக்கிரத்தில் இந்தப் பணிகளை முடித்து, விரைவில் தேர்தலை நடத்த நாங்கள் விரும்புகிறோம். ஜம்மு காஷ்மீரில் அதற்கான எம்.எல்.ஏ.க்கள் வந்து, முதலமைச்சர், அமைச்சரவை உருவாகி, புதிய துடிப்புடன் வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதில் இந்தியா முழுமையாக உறுதிபூண்டிருக்கிறது. அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

லடாக் மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்து, துணிச்சலான நடவடிக்கையை நாங்கள் எடுத்திருக்கிறோம். இமயமலையின் உயரமான பகுதியில் இருக்கும் லடாக், புதிய உச்சங்களைத் தொடும் பயணத்தில் முன்னேறி வருகிறது. ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் அமைக்கவும், புதிய ஆராய்ச்சி மையங்கள் அமைக்கவும், ஹோட்டல் மேலாண்மையில் புதிய படிப்புகள் தொடங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 7,500 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையம் உருவாக்கும் திட்டமும் இருக்கிறது. ஆனால் அன்புக்குரிய என் நாட்டு மக்களே, லடாக்கில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. நாம் அதைப் பாதுகாப்பது மட்டுமின்றி, பேணி வளர்க்கவும் வேண்டும். வடகிழக்கில் ஆர்கானிக் மாநிலம் என சிக்கிம் முத்திரை பதித்திருப்பதைப் போல, லடாக், லே மற்றும் கார்கில் பகுதிகள் கார்பன் உற்பத்தி இல்லாத பகுதிகளாக உருவாக வாய்ப்புகள் உள்ளன. உள்ளூர் பகுதி மக்களின் தேவைகளுக்கு ஏற்ப, வளர்ச்சிக்கான புதிய முன்மாதிரியை உருவாக்குவதற்கு இந்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது.

அன்புக்குரிய என் நாட்டு மக்களே,

சுற்றுச்சூழலை சமன்நிலை செய்வதன் மூலம் தான் வளர்ச்சியை நோக்கிய பயணம் சாத்தியமாகும் என்பதை இந்தியா காட்டியுள்ளது. இப்போது, ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே தொகுப்பு, குறிப்பாக சூரியமின் சக்தியில் ஒரே தொகுப்பு என்ற தொலைநோக்கு சிந்தனையில் ஒட்டுமொத்த உலகிற்கும் இந்தியா உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலம் மின் உற்பத்தி செய்வதில் முதல்நிலையில் உள்ள ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளை இந்தியா அறிந்துள்ளது. அதற்கான தீர்வுகளை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபாடு கொண்டிருக்கிறது. தூய்மையான பாரதம் திட்டம், புகையில்லாத சமையல் எரிவாயு திட்டம், எல்.இ.டி. மின்விளக்கு திட்டம், சி.என்.ஜி. அடிப்படையிலான போக்குவரத்து அல்லது மின்சார வாகனம் என சாத்தியமான அனைத்து வழிகளையும் இந்தியா கையாண்டு வருகிறது. பெட்ரோல் பயன்பாடு காரணமாக ஏற்படும் மாசுபாட்டைக் குறைப்பதற்கு, எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிக்க முக்கியத்துவம் அளித்து வருகிறோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எத்தனால் பயன்பாட்டில் நமது நாட்டின் நிலைமை என்ன? ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 40 கோடி லிட்டர் எத்தனால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது கடந்த ஐந்தாண்டுகளில் இதன் உற்பத்தி ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இப்போது நமது நாடு 200 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்கிறது. நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இது உதவிகரமாக உள்ளது.
அன்புக்குரிய என் நாட்டு மக்களே,

தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நகரங்களில் ஒருங்கிணைந்த அணுகுமுறை, நவீன தொழில்நுட்பத்துடன், மக்கள் பங்கேற்புடன், மாசுபாட்டைக் குறைக்க முழுமையான அணுகுமுறைகளை உருவாக்கி வருகிறோம்.

எனதருமை நாட்டு மக்களே

நாட்டில் காடுகள் உள்ள பகுதி விரிவடைந்து கொண்டே வருகிறது என்று பெருமையுடன் சொல்லக்கூடிய வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பல்லுயிர்ச் சூழலைப் பெருக்குவதிலும், பாதுகாப்பதிலும் இந்தியா உறுதிபூண்டுள்ளது. புலிகள் பாதுகாப்பு திட்டம், யானைகள் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றை நாம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இனிவரும் நாட்களில் ஆசிய சிங்கங்களைப் பாதுகாப்பதற்காக சிங்கங்கள் பாதுகாப்பு திட்டம் ஒன்றையும் தொடங்க உள்ளோம். சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இந்தியச் சிங்கங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பணிகள், குறிப்பாக சிறப்பு சுகாதாரக் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மேலும் ஒரு பணியை மேற்கொள்ளவிருக்கிறோம். அதுதான் டால்பின்கள் பாதுகாப்புத் திட்டம். ஆறுகளில் வாழும் டால்ஃபின்; கடல்களில் வாழும் டால்ஃபின்; ஆகிய இருவகை டால்பின்களைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தப்படும். இதனால் பல்லுயிர் பன்முகச் சூழல் மேம்பாடடையும். வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தலங்கள் உருவாகும். இந்தத் திசையிலும் நாம் முன்னேறிச் செல்வோம்.

எனதருமை நாட்டு மக்களே

ஒரு அசாதாரணமான இலக்கை நோக்கி, அசாதாரணமான பயணம் ஒன்றை நாம் மேற்கொள்ளும் போது, அந்தப் பாதை முழுவதும் சவால்கள் நிறைந்ததாகவும், அந்த சவால்களும் அசாதாரணமானவையாகவும் இருக்கும். சமீப காலத்தில், பல துன்பங்கள் ஏற்பட்ட போதிலும், எல்லையில் ஏற்பட்ட விபத்துக்கள் நாட்டிற்கு சவாலாக அமைந்தன. நமது நாட்டின் இறையாண்மையை அச்சுறுத்த முயற்சிப்பவர் யாராக இருந்தாலும், அது எல்லைக்கட்டுப்பாடுக் கோடான லைன் ஆஃப் கன்ட்ரோல் முதல் லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் வரை நம் நாட்டு இராணுவம், நமது துணிவுமிக்க இராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாக்க, நிலை தடுமாறா அர்ப்பணிப்புணர்வுடன் முழு நாடும், உணர்வுடனும் உறுதிப்பாட்டுடனும் தொடர்ந்து முன் செல்கிறது. நம் நாடு தனது உறுதியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக என்ன செய்யும் என்பதை லடாக்கில் நம் துணிச்சல்மிக்க ஜவான்கள் செய்த செயல்களிலிருந்து உலகம் பார்த்துக் கொண்டது. நம் தாய் நாட்டுக்காக தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த துணிவுமிக்க அனைவருக்கும், இராணுவ வீரர்களுக்கும் இந்த செங்கோட்டையிலிருந்து நான் இன்று மரியாதை செலுத்துகிறேன்.

தீவிரவாதம் / விரிவுபடுத்துவது என்று எதுவாக இருந்தாலும், அதை எதிர்த்து, இந்தியா துணிச்சலுடன் போராடும். இன்று இந்தியா மீது உலகம் வைத்திருக்கும் நம்பிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்படுவதற்கு,192 நாடுகளில் 184 நாடுகள் ஆதரவளித்தன. இது ஒவ்வொரு இந்தியனுக்கும் மிகுந்த பெருமை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகும். உலகில் நம்முடைய இடத்தை நாம் எவ்வாறு நிலைநிறுத்திக் கொண்டுள்ளோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். இந்தியா வலிமையாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இந்தியா சக்தி வாய்ந்ததாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். இந்த எண்ணங்களுடன், பல தரப்புகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனதருமை நாட்டு மக்களே

பாதுகாப்பு, வளர்ச்சி, நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், நம் அண்டை நாடுகள் நிலம் வழியாக தொடர்புள்ளவையாக இருந்தாலும், கடல் வழி தொடர்புள்ளவையாக இருந்தாலும் — நம் அண்டை நாடுகளுடன் — ஆழ்ந்த உறவுகளை ஏற்படுத்தி வருகிறோம். இந்தியா தனது அண்டை நாடுகளுடன் காலங்காலமாக கொண்டுள்ள பழைய கலாச்சார, பொருளாதார, சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்த, தொடர்ந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

உலகில் உள்ள மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் தெற்காசியாவில் வாழ்கின்றனர். ஒத்துழைப்பு, இணைந்து செயல்படுதல் ஆகியவற்றின் மூலமாக இது போன்ற மிகப்பெரிய எண்ணிக்கை கொண்ட மக்களின் நலனுக்காக, எண்ணற்ற வாய்ப்புகளை நம்மால் உருவாக்கிக் கொடுக்க முடியும். இந்த ஏராளமான எண்ணிக்கை கொண்ட மக்களின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும், இந்த மண்டலத்தில் உள்ள நாடுகளின் தலைவர்களுக்கு மிகப்பெரிய கணிசமான பொறுப்பு உள்ளது. இந்த பொறுப்பைப் பூர்த்தி செய்யுமாறு தெற்காசியாவில் உள்ள அனைத்து மக்களையும், அரசியல் தலைவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அறிவுஜீவிகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த மண்டலம் முழுமையிலும் நிலவும் அமைதியும், இசைவும், மனித சமுதாயத்தின் நலனுக்கு உதவும். முழு உலகின் நலன்களும் இதனுடன் பின்னிப் பிணைந்துள்ளன.

நம்முடைய புவியியல் எல்லைகளை நாம் நம் அண்டை நாடுகளுடன் மட்டுமல்லாமல், நம்மோடு மிக நெருங்கிய இசைவான உறவுகள் கொண்டுள்ளவர்களுடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். விரிவடைந்துள்ள அண்டைப் பகுதிகளிலுள்ள அனைத்து நாடுகளுடனும் இந்தியா கடந்த சில ஆண்டுகளில், தனது உறவை மேலும் வலுவாக்கி உள்ளது என்று கூறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேற்கு ஆசியாவில் உள்ள நாடுகளுடன் அரசியல், பொருளாதார, மனித உறவுகள், பன்மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளன. நம்பிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நாடுகளுடன் பொருளாதார உறவுகள், குறிப்பாக, எரிசக்தித் துறையில் உறவுகள் மிக முக்கியமாக உள்ளன. இந்த நாடுகள் பலவற்றில் பெரும் எண்ணிக்கையிலான இந்திய மக்கள் பணிபுரிகின்றனர். கொரோனா நெருக்கடி காலத்தின் போது இந்தியாவின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, அந்நாடுகளில் இருந்த இந்திய சமுதாயத்தினருக்கு உதவி செய்ததற்காக இந்த நாடுகள் அனைத்துக்கும் இந்தியா நன்றிக்கடன் பட்டுள்ளது. அவர்களுக்கு நான் தனிப்பட்ட முறையிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் ASEAN நாடுகள் கிழக்கு மண்டலத்தில் நம்முடைய கடல்வழி அண்டை நாடுகள் சிறப்பு முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த நாடுகளுடன் இந்தியாவிற்கு ஆயிரக்கணக்கான ஆண்டு கால பழமை வாய்ந்த மத ரீதியான, கலாச்சார ரீதியான உறவுகள் உள்ளன. புத்தமத பாரம்பரியங்கள் நம்மை அவர்களுடன் இணைக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா இந்த நாடுகளுடன் பாதுகாப்புத் துறையில் மட்டுமல்லாமல், கடல் செல்வங்கள் துறையிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளது.

எனதருமை மக்களே

அமைதியையும், இசைவையும் நிலைநாட்டுவதில் இந்தியா வலுவாக உள்ளது. அதே போல பாதுகாப்புக்கான கருவிகளையும் இராணுவத்தையும் வலுப்படுத்துவதிலும் இந்தியா உறுதி பூண்டுள்ளது. பாதுகாப்பு உற்பத்தித்துறையில் சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்காக, மாபெரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவக் கருவிகளை இறக்குமதி செய்வதற்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏவுகணைகள் முதல் இராணுவ ஹெலிகாப்டர்கள் வரை; தாக்குதல் ரைபிள்கள் முதல் போக்குவரத்து விமானங்கள் வரை; அனைத்துமே இந்தியாவில் தயாரிக்கப்படும். நம்முடைய தேஜஸ் , நவீன தேவைகளுக்கு ஏற்ப மேலும் கம்பீரமாகவும், விரைவாகவும், வலுவுள்ளதாகவும் தயார்படுத்தப்பட்டு வருகிறது. நமது எல்லைகளிலும், கடலோரப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு வசதிகள், தேசிய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் எல்லா திசைகளிலும் தொடர்புகளை ஏற்படுத்த அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அது இமயமலை சிகரமாக இருந்தாலும், இந்துமாக் கடலில் உள்ள தீவுகளானாலும், எல்லா இடங்களிலும் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு லடாக் முதல் அருணாச்சலப்பிரதேசம் வரை சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அன்புள்ள மக்களே, மிகப்பெரிய கடற்கரைப் பகுதி நம்மிடம் இருக்கிறது. 1,300-க்கும் அதிகமான தீவுகள் நம்மிடம் இருக்கின்றன. சில குறிப்பிட்ட தீவுகளின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, துரித கதியில் அவற்றை நாம் முன்னேற்றி வருகிறோம். கடந்த வாரம், ஐந்து நாட்களுக்கு முன்னர், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் கடலுக்கடியில் கண்ணடி இழை கம்பிவடத் திட்டம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தில்லி மற்றும் சென்னையைப் போலவே அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கும் தற்போது இணைய வசதி கிடைக்கும். லட்சத்தீவுகளும் இதே முறையில் இணைக்கப்படுவதை நோக்கி நாம் விரைவில் முன்னேறிச் செல்வோம்.

அடுத்த 1000 நாட்களில் லட்சத்தீவுகளுக்கு அதிவேக இணைய இணைப்பை வழங்க நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியுடன், கடற்கரைப் பகுதிகள் மற்றும் எல்லையோரத்தில் வாழ்ந்து வரும் இளைஞர்களை மனதில் கொண்டு, வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து, பெரிய பிராச்சாரத்தை தொடங்குகிறோம்.

நமது எல்லைப்புறங்களில் மற்றும் கடற்கரையோரங்களில் உள்ள 173 மாவட்டங்கள் இன்னொரு நாட்டின் எல்லையுடனோ அல்லது கடற்கைரையுடனோ தங்களது எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. வரும் நாட்களில், இந்த எல்லையோர மாவட்டங்களில் உள்ள இளைஞர்களுக்காக தேசிய மாணவர் படை விரிவுபடுத்தப்படும். எல்லையோரப் பகுதிகளில் இருக்கும் சுமார் ஒரு லட்சம் தேசிய மாணவர் படை உறுப்பினர்களுக்கு நாங்கள் பயிற்சி அளிப்போம். அதில் மூன்றில் ஒரு பங்கு நமது மகள்களாக இருக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் நாங்கள் செயல்படுவோம். இந்த எல்லையோர உறுப்பினர்களுக்கு ராணுவம் பயிற்சி அளிக்கும். கடற்கையோர மாணவர்களுக்கு கடற்படை பயிற்சி அளிக்கும், மற்றும் எங்கெல்லாம் விமானப்படைத் தளம் இருக்கிறதோ, அங்கு மாணவர்களுக்கு விமானப்படைப் பயிற்சி அளிக்கும். எல்லைப்புற மற்றும் கடற்கையோர மாவட்டங்களுக்கு பேரிடர் மேலாண்மையில் பயிற்சி பெற்ற மனித சக்தி கிடைப்பதோடு, பாதுகாப்புப் படைகளில் தங்களது பணியை அமைத்துக் கொள்ள இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி கிடைக்கும்.

அன்புள்ள மக்களே, செங்கோட்டையில் கடந்த ஆண்டு நான் ஆற்றிய உரையின் போது, ஏற்கனவே தேவைப்பட்ட விஷயங்களை நிறைவேற்றுவதற்காக கடந்த ஐந்து ஆண்டுகள் சென்றது போல், லட்சியங்களை நிறைவேற்ற அடுத்த ஐந்து ஆண்டுகள் செலவிடப்படும் என்று தெரிவித்திருந்தேன். கடந்த ஒரு வருடத்திலேயே, பல்வேறு பெரிய மற்றும் முக்கிய மைல்கற்களை நாடு சாதித்துள்ளது. காந்தியடிகளின் 150-வது பிறந்த ஆண்டில், திறந்தவெளி மலம் கழித்தலில் இருந்து தனது கிராமங்களுக்கு இந்தியா விடுதலை அளித்தது. தங்களது நம்பிக்கைகளின் காரணமாக அவதியுறும் அகதிகளுக்கான குடியுரிமை திருத்த சட்டமாக இருக்கட்டும், தலித்துகள்/பிற்படுத்தப்பட்டோர்/பட்டியல் வகுப்பினர்/பழங்குடியினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு உரிமைகளாக இருக்கட்டும், அஸ்ஸாம் மற்றும் திரிபுராவுடனான வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தமாக இருக்கட்டும், பாதுகாப்புப் படைகளின் ஒருங்கிணைந்த சக்தியை இன்னும் செயல்திறன் மிக்கதாக ஆக்க முப்படைகளின் தலைமைத் தளபதி நியமனமாகட்டும், அல்லது மிகக் குறுகிய காலத்தில் கர்தார்பூர் சாகிப் நெடுஞ்சாலையைக் கட்டமைத்ததாகட்டும், வரலாறுகள் எழுதப்படுவதை, செயற்கரிய சாதனைகள் செய்யப்படுவதை கடந்த ஒரு வருடம் பார்த்தது.
பத்து நாட்களுக்கு முன்னர், பகவான் ராமருக்காக அற்புதமான ஆலயம் கட்டுவதற்கான வேலை தொடங்கியது. பல காலமாக நீடித்த ராம ஜென்மபூமி பிரச்சினைக்கு சுமூக முடிவு எட்டப்பட்டது. இந்திய மக்கள் முன்மாதிரியான கட்டுப்பாடையும், ஞானத்தையும் பொறுப்பான முறையில் வெளிப்படுத்தினர். இது முன்னெப்போதும் நடக்காததும், வருங்காலத்துக்கான உத்வேகக் காரணியும் ஆகும். அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம்- தற்சார்பு இந்தியாவின் வலிமைகளாக இவை தான் இருக்கப் போகின்றன. இந்த நல்லிணக்கம் மற்றும் நன்மதிப்பு வளமிக்க எதிர்கால இந்தியாவுக்கான உத்தரவாதமாகும். இதே நல்லிணக்கத்தோடு நாம் முன்னேறி செல்ல வேண்டும். வளர்ச்சிக்கான இந்த மாபெரும் வேள்விக்காக ஒவ்வொரு இந்தியரும் ஏதாவது ஒன்றை தியாகம் செய்ய வேண்டும்.

புதிய கொள்கையுடனும், புதிய செயல்முறைகளுடனும் இந்த தசாப்தத்தில் இந்தியா பயணம் செய்யும். சாதாரணமான விஷயங்கள் இனி உதவாது. சராசரி எண்ணம் போதுமானதாக இருந்த காலம் கடந்துவிட்டது. உலகில் உள்ள யாருக்கும் நாம் சளைத்தவரில்லை. சிறந்தவர்களாகத் திகழ நாம் பாடுபடுவோம். இதற்காக, உற்பத்திகளில் சிறந்தவர்களாகத் திகழ, மனித வளத்தில் சிறந்தவர்களாகத் திகழ, ஆளுகையில் சிறப்பானவர்களாக இருக்க நாம் பணியாற்ற வேண்டும். இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்துக்குள் அனைத்து துறைகளிலும் சிறந்ததை சாதிக்கும் லட்சியத்துடன் நாம் முன்னேற வேண்டும்.

நமது கொள்கைகள், செயல்முறைகள், பொருள்கள்- அனைத்துமே தரம் வாய்ந்ததாக, சிறந்தவையாக இருந்தால் தான் ‘ஒரே இந்தியா, சிறந்த இந்தியா’ லட்சியத்தை நாம் அடைய முடியும். நமது சுதந்திரத்திற்காக தங்களது இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களின் கனவுகளை நனவாக்க நாம் இன்று மீண்டுமொருமுறை சபதமெடுத்துக்கொள்ள வேண்டும். நமது வருங்கால சந்ததியினருக்காக, அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக, தற்சார்பு இந்தியாவுக்காக இந்த உறுதிமொழியை 1.3 பில்லியன் மக்களும் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதை குறைத்துக் கொள்வோம் என்றும், சிறு தொழில்களை முன்னேற்றுவோம் என்றும், உள்ளூர் பொருள்களுக்கு ஆதரவளிப்போம் என்றும் நாம் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும், சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும். புதுமைகளை அதிக அளவில் புகுத்தி, நமது இளைஞர்கள், பெண்கள், பழங்குடியினர், பட்டியல் பிரிவினர், குறிப்பாக மாற்றுத் திறனாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோர், கிராமங்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஒவ்வொருவருக்கும் நாம் அதிகாரமளிப்போம்.

செய்ய முடியாத விஷயங்களை அசாத்திய வேகத்தில் இந்தியா சாத்தியமாக்கியுள்ளது. இதே மனோபலம், அர்ப்பணிப்பு, வேட்கையோடு ஒவ்வொரு இந்தியரும் முன்னேறிச் செல்ல வேண்டும்.

நமது விடுதலையின் 75-வது வருடத்தை நாம் விரைவில், 2022-இல் கொண்டாடப் போகிறோம். நாம் அதற்கு வெகு அருகில் இருக்கிறோம். நாம் கடுமையாக உழைக்க வேண்டும். 21-ஆம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தம் நமது கனவுகளை நாம் நனவாக்கும் தசாப்தமாக இருக்க வேண்டும். கொரோனா பெரிய தடை தான், ஆனால் தற்சார்பு இந்தியாவுக்கான வெற்றிப் பாதையில் நாம் முன்னேறி செல்வதைத் தடுக்கும் அளவுக்கு அது அவ்வளவு பெரியது ஒன்றும் அல்ல.

இந்தியாவுக்கான புதிய யுகத்தின் விடியலை, புதிய தன்னம்பிக்கையின் உதயத்தை, தற்சார்பு இந்தியாவுக்கான பெரிய எதிரொலியை நான் காண்கிறேன். எனது மனமார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளை அனைவருக்கும் நான் மீண்டுமொருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நமது கைகளை உயர்த்தி, நமது சக்தியை ஒன்று திரட்டி சொல்லுவோம்:-

பாரத மாதாவுக்கு வணக்கம், பாரத மாதாவுக்கு வணக்கம், பாரத மாதாவுக்கு வணக்கம்

வந்தே மாதரம், வந்தே மாதரம், வந்தே மாதரம்

ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த்!

 

  • krishangopal sharma Bjp January 07, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌹🌷
  • krishangopal sharma Bjp January 07, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌹🌷🌷
  • krishangopal sharma Bjp January 07, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌹🌷🌷🌷
  • Jitender Kumar BJP Haryana State President December 22, 2024

    Police Station Jatusana Haryana
  • Reena chaurasia August 28, 2024

    जय हो
  • krishangopal sharma Bjp May 29, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏 जय हरियाणा 🙏 हरियाणा के यशस्वी जनप्रिय मुख्यमंत्री श्री नायब सैनी जिन्दाबाद 🙏🚩
  • krishangopal sharma Bjp May 29, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏 जय हरियाणा 🙏 हरियाणा के यशस्वी जनप्रिय मुख्यमंत्री श्री नायब सैनी जिन्दाबाद 🙏🚩
  • krishangopal sharma Bjp May 29, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏 जय हरियाणा 🙏 हरियाणा के यशस्वी जनप्रिय मुख्यमंत्री श्री नायब सैनी जिन्दाबाद 🙏🚩
  • krishangopal sharma Bjp May 29, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏 जय हरियाणा 🙏 हरियाणा के यशस्वी जनप्रिय मुख्यमंत्री श्री नायब सैनी जिन्दाबाद 🙏🚩
  • krishangopal sharma Bjp May 29, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏 जय हरियाणा 🙏 हरियाणा के यशस्वी जनप्रिय मुख्यमंत्री श्री नायब सैनी जिन्दाबाद 🙏🚩
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
What Is Firefly, India-Based Pixxel's Satellite Constellation PM Modi Mentioned In Mann Ki Baat?

Media Coverage

What Is Firefly, India-Based Pixxel's Satellite Constellation PM Modi Mentioned In Mann Ki Baat?
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 20, 2025
January 20, 2025

Appreciation for PM Modi’s Effort on Holistic Growth of India Creating New Global Milestones