மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லா அவர்களே, மாநிலங்களை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஸ் அவர்களே, இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு ஜெய் ராம் தாக்கூர் அவர்களே மற்றும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நாட்டின் பல்வேறு சட்டமன்ற சபாநாயகர்களே, சகோதர, சகோதரிகளே வணக்கம்!
இந்த முக்கியமான சபாநாயகர்கள் மாநாடு ஒவ்வொரு ஆண்டும் சில புதிய விவாதங்கள் மற்றும் புதிய தீர்மானங்களுடன் நடந்து வருகிறது. இன்று இந்தப் பாரம்பரியம் 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நம் அனைவருக்கும் இது நல்வாய்ப்பாகும். மேலும் இது இந்தியாவின் ஜனநாயக விரிவாக்கத்தின் அடையாளமாகும். சட்டமன்ற சபாநாயகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.
நண்பர்களே, இந்தியாவுக்கு ஜனநாயகம் வெறும் நடைமுறை அல்ல. இந்திய வாழ்க்கையின் அங்கமான ஜனநாயகம் நமது இயல்பிலேயே ஊறியது. வரும் ஆண்டுகளில், அசாதாரணமான இலக்குகளை அடையும் வகையில் நாட்டை புதிய உச்சத்திற்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும். ‘அனைவருக்குமான முயற்சி’-யின் மூலமே இந்த உறுதிப்பாட்டை நிறைவேற்ற முடியும். ஜனநாயகத்தின் கூட்டாட்சி முறையில், நாம் ‘அனைவருக்குமான முயற்சி’ பற்றி பேசும்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் பங்கு இதற்குப் பெரிய அடிப்படையாகும். வடகிழக்குப் பகுதியின் மிக நீண்டகால பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருந்தாலும் அல்லது பல பத்தாண்டுகளாக தடைப்பட்டிருந்த அனைத்துப் பெரிய மேம்பாட்டுத் திட்டங்களை முடிப்பதாக இருந்தாலும், கடந்த ஆண்டுகளில் இது போன்ற பல பணிகள் நாட்டில் முடிக்கப்பட்டுள்ளன. அனைவரது முயற்சியாலும் இது செய்து முடிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரானப் போராட்டம் ‘அனைவருக்குமான முயற்சி’ –க்கு மிகப் பெரிய உதாரணம் ஆகும்.
நமது சட்டமன்ற அவைகளின் பாரம்பரியங்களும், நடைமுறைகளும் இந்தியாவின் இயல்பாக இருக்க வேண்டும். ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இந்திய உணர்வை வலுப்படுத்த அரசு கொள்கைகளையும், சட்டங்களையும் வகுக்க வேண்டும். மிக முக்கியமாக அவையில் நமது தனிப்பட்ட நடத்தை இந்திய மாண்புகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இந்தப் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
நண்பர்களே, நமது நாடு முற்றிலும் பன்முகத்தன்மைக் கொண்டது. ஆயிரக்கணக்கான ஆண்டு வளர்ச்சியில் பன்முகத்தன்மைக்கு மத்தியில் புனிதமான உடைக்க முடியாத ஒற்றுமை என்ற உணர்வை அளிக்க வேண்டும். பிரிக்க முடியாத இந்த ஒற்றுமை, நமது பன்முகத்தன்மையை செழுமையாக்கி பாதுகாக்கிறது.
அவையில் ஆண்டுக்கு 3-4 நாட்களை ஒதுக்கி, மக்கள் பிரதிநிதிகள் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தங்கள் வாழ்க்கையின் அம்சத்தை நாட்டுக்குக் கூற முன்வர வேண்டும். இதர மக்கள் பிரதிநிதிகள், இதர சமுதாய மக்கள் ஆகியோரிடம் கற்க வேண்டியது ஏராளமாக உள்ளது.
தரமான விவாதங்களுக்காக தனி நேரத்தை ஒதுக்கலாமா என்பதை பரிசீலிக்கலாம். அத்தகைய விவாதங்களில் கண்ணியமான பாரம்பரியங்கள் மற்றும் அதன் தீவிரத்தன்மை முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும். யார் மீதும் அரசியல் ரீதியான அவதூறுகளைக் கூறக் கூடாது. ஒரு வகையில் அது அவையின் ஆரோக்கியமான நேரமாகவும், ஆக்கப்பூர்வமான தினமாகவும் இருக்க வேண்டும்.
‘ஒரே நாடு ஒரே சட்டமன்றத் தளம்’ என்ற வகையில், நமது நாடாளுமன்ற நடைமுறைக்கு தேவையான தொழில்நுட்ப ஊக்கத்தை தருவதாக மட்டுமில்லாமல் நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் இணைக்கப் பாடுபடுவதாக அந்த இணையதளம் இருக்க வேண்டும்.
நண்பர்களே, நாம் சுதந்திரத்தின் 100 ஆண்டுகளை நோக்கி வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். 75 ஆண்டுகள் என்ற உங்களது பயணம் எவ்வளவு வேகமாக காலம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கான சான்றாகும். இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. இதற்கு நாடாளுமன்றவாதிகள், கடமை கடமை கடமை என்ற ஒரே தாரக மந்திரத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். அவையில் கடமை உணர்வு இருக்க வேண்டும். உறுப்பினர்களின் விவாதங்கள் கடமை உணர்வை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் கடமைக்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும். நமது அரசியல் சாசனமும் அதைத்தான் கூறுகிறது. 2047-ல் நாம் நாட்டை எங்கு கொண்டு செல்லப்போகிறோம், அதில் உறுப்பினர்களின் பங்கு என்ன என்ற தெளிவான சிந்தனையுடன் நாம் செயல்பட வேண்டும். மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றிகள் பல!