மேன்மையுடையவர்களே,
ஜி20 கூட்டத்திற்கு வருகை தந்துள்ள நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கு எனது கனிவான வணக்கம். இந்தக் கூட்டம் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான முதல் பேச்சுவார்த்தையைக் குறிக்கும் விதமாக அமைகின்றது. இந்தக் கூட்டம் சிறந்த முறையில் நடைபெறுவதற்கு நான் எனது நல்வாழ்த்துக்களை கூறும் அதே வேளையில், நீங்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் நான் அறிவேன். உலகளவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், நீங்கள் நிதி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு தலைமைப் பொறுப்பு ஏற்றியிருக்கிறீர்கள். உலகப் பொருளாதாரத்திற்கு நூறாண்டுகளுக்கு ஒருமுறை மிகப் பெரிய பின்னடைவை கொவிட் பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகள் குறிப்பாக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகள் அதன் தாக்கத்திலிருந்து தற்போது வரையில் மீள்வதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் புவி - பொருளாதார பிரச்சனைகள் நிலவி வருவதையும் நாம் உணர்ந்து வருகிறோம். உலக விநியோகத் தொடர் சங்கிலியில் பல இடையூறுகள் உள்ளன. விலைவாசி உயர்வின் காரணமாக பல்வேறு சமூக அமைப்புகள் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளன. உலகளவில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்புத் துறையில் மிகப் பெரிய பிரச்சனை உருவாகி உள்ளது. நிலையற்ற கடன்களின் விளைவாக பல்வேறு நாடுகள் தனது நிதி ஆதாரங்களில் கேள்விக்குறி ஏற்படும் நிலை உள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்களின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. ஏனெனில் சீர்திருத்த நடவடிக்கைகளில் மிகுந்த மெத்தனப் போக்கு நிலவுகிறது. தற்போது தங்களால் மட்டுமே உலகளவில் முக்கியப் பொருளாதார மற்றும் நிதி அமைப்புகளுக்குப் பாதுகாவலர்களாக இருந்து உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மை, நம்பிக்கை, வளர்ச்சி போன்றவற்றை ஏற்படுத்த முடியும். அது அவ்வளவு எளிதான காரியமல்ல.
இந்தியப் பொருளாதாரம் மீண்டு, எழுச்சிப் பெற்றதிலிருந்து தாங்கள் உத்வேகத்தைப் பெறுவீர்கள் என்று நான் நம்புகிறேன். எதிர்காலத்தைப் பற்றிய இந்திய நுகர்வோர்களும், உற்பத்தியாளர்களும் நேர்மறை சிந்தனையோடு இருக்கின்றனர். இந்த நேர்மறை உணர்வுகள் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மடைமாற்றி விடுவீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்தக் கூட்டத்தில் நடைபெறும் ஆலோசனைகள் உலகின் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் நலன் சார்ந்து அமைய வேண்டும் என்று நான் நம்புகிறேன். உலகப் பொருளாதார தலைமைகளின் ஒட்டு மொத்த நோக்கமும், உலகத்திற்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைய வேண்டும். நமது ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருளானது “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்”.
மேன்மையுடையவர்களே,
உலக மக்கள் தொகை 8 பில்லியனைத் தாண்டிய நிலையில், ஒட்டு மொத்த மேம்பாட்டு இலக்குகள் குறித்த முன்னேற்ற நடவடிக்கைகள் குறைந்துள்ளது. பல்முனை வளர்ச்சி வங்கிகளின் செயல்பாடுகளை நாம் ஒருங்கிணைந்து வலுப்படுத்த வேண்டும். அதன் மூலமே உலகளாவிய சவால்களான பருவநிலை மாற்றம் மற்றும் உயர் வட்டி போன்றவைகளை எதிர்கொள்ள முடியும்.
மேன்மையுடையவர்களே,
உலகளாவிய நிதித் துறையில் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கொவிட் பெருந்தொற்று காலத்தில் டிஜிட்டல் முறையில் மக்களுக்கு இடையே தொடர்பற்ற பணபரிமாற்றங்கள் நடைபெற்றது. எனினும் நிதித்துறையில் டிஜிட்டல் முறையிலான புத்தாக்க நடவடிக்கைகள், நிதி ஆதாரங்களை சீர்குலைக்கும் மற்றும் தவறாக பயன்படுத்தும் விதமாக பல்வேறு சவால்கள் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் எவ்வாறு சிறப்பாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என்பது குறித்து, தாங்கள் பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்தியாவின் அனுபவங்கள் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளில் சிறந்த, மிகுந்த நம்பிக்கையுடைய, மிகவும் பாதுகாப்பான முறையை நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். நமது டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்ற முறைகள் மூலம் பொதுமக்கள் எவ்வித சிரமமுன்றி பயன்படுத்தும் வகையில் அமைத்துள்ளோம். இதன் விளைவாக ஆட்சிமுறை, நிதிஆதாரங்கள் மற்றும் சிரமமின்றி வாழும் நிலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. நீங்கள் பெங்களூருவில் (இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரம்) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ளும்போது, இந்திய நுகர்வோர்கள் எவ்விதம் டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்ற முறைகளுக்கு மாறியுள்ளனர் என்ற அனுபவத்தை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். நமது ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நாங்கள் இதற்கென புதிய முறையை உருவாக்கியிருக்கிறோம். இதன் மூலம் ஜி20 உறுப்பு நாடுகள் எங்களது முன்னோடி முறையிலான டிஜிட்டல் பணப்பரிமாற்ற தளமான யுபிஐ-ஐ பயன்படுத்த முடியும். நீங்கள் இதனைப் பயன்படுத்தி, அதன் மூலம் ஏற்படக் கூடிய அனுபவங்களின் விளைவாக, ஏன் இந்திய நுகர்வோர்கள் இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள் என்பதை உணர்வீர்கள். தற்போது யுபிஐ பல்வேறு நாடுகளில் பயன்படுத்தும் அமைப்பாக மாறியுள்ளது. இதற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
நாங்கள் எங்களது அனுபவங்களை உலகத்தோடு பகிர்ந்து கொள்கிறோம். அதற்கு ஜி20 தலைமைத்துவம் ஒரு தளமாக அமைந்துள்ளது.
மேன்மையுடையவர்களே,
இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மீண்டும் ஒருமுறை நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கூட்டத்தின் மூலம் ஆக்கப்பூர்வமான மற்றும் வெற்றிகரமான ஆலோசனைகள் மேற்கொள்வதற்கு உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.