வணக்கம்
இந்தியாவின் 140 கோடி மக்களின் சார்பாக ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சிமாநாட்டிற்கு வருகை தந்த பிரமுகர்களை வரவேற்கிறேன். இந்த உச்சிமாநாடு உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடாளுமன்ற நடைமுறைகளின் 'மகா கும்பமேளா' ஆகும். இன்று கலந்து கொண்டுள்ள அனைத்துப் பிரதிநிதிகளும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்றக் கட்டமைப்பின் அனுபவத்தைக் கொண்டுள்ளனர். இன்றைய நிகழ்வு மிகுந்த திருப்தி அளிக்கிறது.
நண்பர்களே,
இது இந்தியாவின் பண்டிகைக் காலமாகும். இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஜி20 தொடர்பான நிகழ்வுகள், ஜி20 கொண்டாட்டங்கள், பல நகரங்களில் நடைபெற்றது. ஜி20 தொடர்பான நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் பண்டிகை உற்சாகத்தை அளித்தன. வெற்றிகரமான ஜி 20 உச்சி மாநாடு, பி 20 உச்சி மாநாடு சந்திரயான் நிலவில் தரையிறங்கியது போன்ற நிகழ்வுகளால் இந்தக் கொண்டாட்டங்கள் அதிகரித்தன. ஒரு நாட்டின் மிகப்பெரிய பலம் என்பது அதன் மக்களும் அவர்களின் மன உறுதியும்தான்.
நண்பர்களே,
ஜனநாயகத்தின் தாய் என்பது மட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் அறியப்படும் நாட்டில் பி20 உச்சிமாநாடு நடைபெறுகிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடாளுமன்றங்களின் பிரதிநிதிகள் என்ற முறையில், விவாதங்கள் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. வரலாற்றில் விவாதங்கள் தொடர்பான துல்லியமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. பழமையான இந்தியாவின் வேதங்களில் பல குறிப்புகள் உள்ளன. அவற்றில் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக கூட்டு முடிவுகள் எடுக்கப்பட்டதை அறிய முடிகிறது. இந்தியாவின் பழைய வேதமான ரிக்வேதத்தில் நாம் ஒன்றாக நடக்க வேண்டும், ஒன்றாகப் பேச வேண்டும், நம் மனம் ஒன்றிணைய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கிராம அளவிலான பிரச்சனைகள், விவாதங்கள் மூலம் தீர்க்கப்பட்டன.
நண்பர்களே,
தமிழ்நாட்டில் உள்ள 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் கிராமச்சபை விதிகள் மற்றும் நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. 1200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டில் ஒரு உறுப்பினரை தகுதி நீக்கம் செய்வதற்கான விதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு, அனைத்து சாதி, மற்றும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களும் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த விவாதங்கள் ஊக்குவிக்கப்பட்டன.
நண்பர்களே,
ஜகத்குரு பசவேஸ்வரரால் தொடங்கப்பட்ட அனுபவ் மந்தப்பா இன்றும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது. 5000 ஆண்டுகள் பழமையான வேதங்களில் இருந்து இன்று வரையிலான இந்தியாவின் நாடாளுமன்றப் பாரம்பரியப் பயணம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் வழிகாட்டியாகும். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் 17 பொதுத் தேர்தல்களும், 300-க்கும் மேற்பட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் நடந்துள்ளன. இந்த மிகப்பெரிய தேர்தல் நடவடிக்கையில் மக்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நண்பர்களே,
2019 பொதுத் தேர்தல் மனித வரலாற்றின் மிகப்பெரிய தேர்தல் நடைமுறையாகும். அதில் 600 மில்லியன் வாக்காளர்கள் பங்கேற்றனர். அந்த நேரத்தில், 910 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தனர். இது முழு ஐரோப்பாவின் மக்கள்தொகையை விட அதிகமாகும். இவ்வளவு பெரிய வாக்காளர்கள் நாடாளுமன்ற நடைமுறைகள் மீது ஆழமான நம்பிக்கை வைத்துள்ளனர். 2019 தேர்தலில் பெண்களின் பங்களிப்பு சாதனையாக இருந்தது. கடந்த பொதுத் தேர்தலில் 600-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்றனர். 10 மில்லியன் அரசு ஊழியர்கள் தேர்தல்களை நடத்துவதில் பணியாற்றினர். வாக்களிப்பதற்காக 1 மில்லியன் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
நண்பர்களே,
தேர்தல் நடைமுறைகள் நவீனப்படுத்தப்படுகின்றன. கடந்த 25 ஆண்டுகளாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையையும் செயல்திறனையும் கொண்டு வந்துள்ளது. ஏனெனில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களுக்குள் தேர்தல் முடிவுகள் வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 1 பில்லியன் மக்கள் பங்கேற்பார்கள்.
நண்பர்களே,
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கும் சமீபத்திய முடிவு சிறப்பு வாய்ந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மில்லியனுக்கும் அதிகமான பிரதிநிதிகளில், சுமார் 50 சதவீதம் பேர் பெண்கள். இந்தியா இன்று ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பை ஊக்குவித்து வருகிறது. நமது நாடாளுமன்றம் அண்மையில் எடுத்த முடிவு நமது நாடாளுமன்ற பாரம்பரியத்தை மேலும் செழுமைப்படுத்தும்.
நண்பர்களே,
இந்தியாவின் நாடாளுமன்ற மரபுகள் மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். அது பன்முகத்தன்மை, உயிர்ப்பு ஆகியவற்றைக் கொண்டது. இங்கு அனைத்து மதத்தினர், நூற்றுக்கணக்கான உணவு வகைகள், வாழ்க்கை முறைகள், மொழிகள், பேச்சுவழக்குகள் உள்ளன. மக்களுக்கு உடனடியாக செய்திகளை வழங்க இந்தியாவில் 28 மொழிகளில் 900-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளன. சுமார் 200 மொழிகளில் 33,000-க்கும் அதிகமான செய்தித்தாள்கள் வெளியிடப்படுகின்றன. மேலும் பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் சுமார் 3 பில்லியன் பயனர்கள் உள்ளனர். இந்தியாவில் பெருமளவிலான தகவல் பரிமாற்றம் மற்றும் பேச்சு சுதந்திரம் உள்ளது.
நண்பர்களே,
உலகின் பல அம்சங்கள் ஒன்றோடொன்று தொடர்புடையவை. மோதல் நிறைந்த உலகம் யாருடைய நலனுக்கும் உகந்ததல்ல. பிளவுபட்ட உலகம், மனிதகுலம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுக்குத் தீர்வுகளை வழங்க முடியாது. இது அமைதி மற்றும் சகோதரத்துவத்துக்கான தருணம். ஒன்றிணைந்து செல்ல வேண்டிய தருணம். இது அனைவரின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கான தருணம். உலகளாவிய நம்பிக்கையுடன் நெருக்கடியை சமாளித்து, மனித நலனை மையமாகக் கொண்ட சிந்தனையுடன் நாம் முன்னேற வேண்டும். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற உணர்வில் நாம் உலகைப் பார்க்க வேண்டும்.
நண்பர்களே,
ஆப்பிரிக்க யூனியனை ஜி-20 அமைப்பில் சேர்த்ததற்கான முன்மொழிவின் பின்னணியில் இந்த அம்சமே உள்ளது. இது அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பி20 மன்றத்தில் ஆப்பிரிக்கா பங்கேற்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
நண்பர்களே,
ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா பல ஆண்டுகளாக எதிர்கொள்கிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இந்திய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதன் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் மோசமானது. இதுபோன்ற பல பயங்கரவாத சம்பவங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று இந்தியா இந்த நிலையை அடைந்துள்ளது. பயங்கரவாதத்தின் மிகப்பெரிய சவாலை உலகமும் உணர்ந்துள்ளது. பயங்கரவாதம் எங்கு நடந்தாலும், எந்தக் காரணத்திற்காக எந்த வடிவத்தில் நடந்தாலும், அது மனிதகுலத்திற்கு எதிரானது. அத்தகைய சூழ்நிலையைக் கையாளும் போது சமரசமின்றி செயல்பட வேண்டியது அவசியம். பயங்கரவாதத்தின் வரையறை தொடர்பாக உலக நாடுகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாதது வருத்தம் அளிக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச உடன்படிக்கை ஐ.நா.வில் ஒருமித்த கருத்துக்காக இன்றும் காத்திருக்கிறது. மனிதகுலத்தின் எதிரிகள் உலகின் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் உலகெங்கிலும் உள்ள நாடாளுமன்றங்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வழிகளைக் கொண்டுவர வேண்டும்.
நண்பர்களே,
உலகின் சவால்களை எதிர்கொள்ள பொதுமக்களின் பங்களிப்பை விட சிறந்த ஊடகம் எதுவும் இருக்க முடியாது. அரசுகள் பெரும்பான்மையால் அமைக்கப்படுகின்றன. ஆனால் நாடு ஒருமித்த கருத்தால் நடத்தப்படுகிறது. நமது நாடாளுமன்றங்களும் இந்த பி20 மன்றமும் இந்த உணர்வை வலுப்படுத்த முடியும். விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் இந்த உலகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நிச்சயமாக வெற்றியடையும்.
மிக்க நன்றி