மேதகு அமைச்சர்களே, சீமான்களே, சீமாட்டிகளே வணக்கம்!
உங்கள் அனைவரையும் இந்தியாவிற்கு வரவேற்கிறேன். மனித நாகரிகத்தின் இதயமாக இருப்பது வேளாண்மை. எனவே, வேளாண் அமைச்சர்களாக, உங்கள் பணி பொருளாதாரத்தின் ஒரு துறையை கையாளுவது மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான மிகப்பெரிய பொறுப்பை நீங்கள் சுமக்கிறீர்கள். உலகளவில், வேளாண்மை இரண்டரை பில்லியன் மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. உலகளாவிய தெற்கில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மை கிட்டத்தட்ட 30 சதவிகிதமாக உள்ளது. 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக வேலை வழங்குகிறது. இன்று, இந்தத் துறை பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. பெருந்தொற்றால் ஏற்பட்ட விநியோகச் சங்கிலி இடையூறுகள், புவிசார் அரசியல் பதற்றங்களின் தாக்கத்தால் மேலும் மோசமடைந்துள்ளன. பருவநிலை மாற்றத்தால், மென்மேலும் ஏற்படும் தீவிர வானிலை உச்ச நிகழ்வுகள் பெரும் சவால்களை ஏற்படுத்துகிறது. இந்த சவால்களால் உலகளாவிய தெற்கு அதிகமாக பாதிக்கப்படுகிறது.
நண்பர்களே,
இந்த மிக முக்கியமான துறையில் இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எங்களின் கொள்கை 'அடிப்படைகளுக்குத் திரும்புதல்' 'எதிர்காலத்தை நோக்கி முன்னேறுதல்' என்பதை உள்ளடக்கியதாகும். இயற்கை வேளாண்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வேளாண்மையை நாங்கள் ஊக்குவிக்கிறோம். தற்போது இந்தியா முழுவதும் விவசாயிகள் இயற்கை வேளாண்மையை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் செயற்கை உரங்களையோ பூச்சிக்கொல்லிகளையோ பயன்படுத்துவதில்லை. அன்னை பூமிக்கு புத்துயிர் அளிப்பது, மண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது, 'ஒவ்வொரு துளியிலும், அதிக விளைச்சல்' என்ற வகையில் உற்பத்தியைப் பெருக்குதல், கரிம உரங்கள் மற்றும் பூச்சி மேலாண்மை தீர்வுகளை ஊக்குவிப்பதில் அவர்களின் கவனம் உள்ளது. அதே நேரத்தில், நமது விவசாயிகள் உற்பத்தியை அதிகரிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் தங்கள் பண்ணைகளில் சூரிய சக்தியை உற்பத்தி செய்து பயன்படுத்துகின்றனர். அவர்கள் பயிர்த் தேர்வை மேம்படுத்த மண் வள அட்டைகளை பயன்படுத்துவதுடன், ஊட்டச்சத்துக்களை தெளிக்கவும், பயிர்களைக் கண்காணிக்கவும் ட்ரோன்களைப் பயன்படுத்துகின்றனர். வேளாண்மையில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்த "இணைவு அணுகுமுறை" சிறந்த வழி என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுவதை நீங்கள் அறிவீர்கள். ஹைதராபாத்தில் உங்களது உணவு தட்டுகளில், சிறுதானியங்கள் அல்லது இந்தியாவில் நாங்கள் அழைப்பது போல் ஸ்ரீ அன்னா அடிப்படையிலான பல உணவுப்பொருட்கள் பரிமாறப்பட்டு இதன் பிரதிபலிப்பைக் காணலாம். இந்த சுவையான உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியமானது மட்டுமல்லாமல், குறைந்த தண்ணீரைப் பயன்படுத்துவதன் மூலமும், குறைந்த உரம் தேவைப்படுவதன் மூலமும், அதிக பூச்சிகளை எதிர்க்கும் தன்மையினாலும் நமது விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் உதவுகின்றன. உண்மையில், சிறுதானியங்கள் புதியவை அல்ல. அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகின்றன. ஆனால் சந்தைகளும், சந்தைப்படுத்தலும் நமது தேர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் பாரம்பரியமாக விளையும் உணவுப் பயிர்களின் மதிப்பை நாம் மறந்துவிட்டோம். ஸ்ரீ அன்னாவை நம் விருப்ப உணவாக ஏற்றுக்கொள்வோம். எங்களின் சொந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, சிறுதானியங்களின் சிறந்த நடைமுறைகள், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, இந்தியா ஒரு சிறந்த சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கி வருகிறது.
நண்பர்களே,
உலகளாவிய உணவுப் பாதுகாப்பை அடைவதற்கான கூட்டு நடவடிக்கையை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். விளிம்புநிலை விவசாயிகளை மையமாகக் கொண்டு, நிலையான மற்றும் உள்ளடக்கிய உணவு முறைகளை உருவாக்குவதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். உலகளாவிய உர விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். அதே நேரத்தில், சிறந்த மண் வளம், பயிர் வளம் மற்றும் மகசூல் ஆகியவற்றிற்கான வேளாண் முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறைகள், வேளாண்மைக்கு புத்துயிர் ஊட்ட மாற்று வழிகளை உருவாக்க நம்மை ஊக்குவிக்கும். நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் நமது விவசாயிகளை மேம்படுத்த வேண்டும். உலகளாவிய தெற்கில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மலிவு விலையில் தீர்வுகளை உருவாக்க வேண்டும். வேளாண்மைக் கழிவு மற்றும் உணவுக்கழிவுகளை குறைக்கவும், அதற்கு பதிலாக, கழிவுகளிலிருந்து செல்வத்தை உருவாக்குவதில் முதலீடு செய்யவும் அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.
நண்பர்களே,
வேளாண்மையில் இந்தியாவின் ஜி20 முன்னுரிமைகள் நமது 'ஒரு பூமியை' குணப்படுத்துவதில் கவனம் செலுத்தி, நமது 'ஒரு குடும்பத்தில்' நல்லிணக்கத்தை உருவாக்கி, பிரகாசமான 'ஒரு எதிர்காலத்திற்கான' நம்பிக்கையை அளிக்கிறது. நீங்கள் இரண்டு உறுதியான முடிவுகளில் செயல்படுகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். ''உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான டெக்கான் உயர்நிலைக் கோட்பாடுகள்''; சிறுதானியங்கள் மற்றும் பிற தானியங்களுக்கான ''மகரிஷி'' முன் முயற்சி ஆகிய இந்த இரண்டு முன்முயற்சிகளுக்கான ஆதரவு, உள்ளடக்கிய, நிலையான மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன்கூடிய வேளாண்மைக்கு ஆதரவான நடவடிக்கை ஆகும். உங்களது ஆலோசனைகள், விவாதங்கள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
நன்றி.