வணக்கம்
அஸ்ஸாம் அரசில் வேலை கிடைக்கப்பெற்ற இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துகள். கடந்த மாதம் பிஹு விழாவிற்கு அஸ்ஸாம் வந்தேன். அந்த மாபெரும் நிகழ்வின் நினைவு இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. அந்த நிகழ்வு அஸ்ஸாமிய கலாச்சாரத்தை போற்றுவதற்கான அடையாளமாக இருந்தது. இன்றைய ‘ரோஸ்கர் மேளா’ (வேலைவாய்ப்பு திருவிழா) இளைஞர்களின் எதிர்காலத்தில் அஸ்ஸாமின் பாஜக அரசு மிகவும் தீவிரமாக உள்ளது என்பதன் அடையாளம் ஆகும். அஸ்ஸாமில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழா மூலம் 40,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இன்று சுமார் 45,000 இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
அஸ்ஸாம், இன்று பாஜக அரசின் மூலம் அமைதி மற்றும் வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை காண்கிறது. வளர்ச்சியின் இந்த வேகம் அசாமில் நேர்மறை உத்வேகத்தை பரப்பியுள்ளது. அரசு பணியமர்த்தலை இன்னும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதற்கு அஸ்ஸாம் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல்வேறு துறைகளில் செயல்முறையை மேற்கொள்வதற்காக 'அஸ்ஸாம் நேரடி பணியமர்த்தல் ஆணையம்' உருவாக்கப்பட்டது. முந்தைய செயல்பாட்டில், ஒவ்வொரு துறைக்கும் வெவ்வேறு விதிமுறைகள் இருந்தன. இதனால், பல முறை பணி நியமனங்களை குறித்த நேரத்தில் முடிக்க முடியவில்லை. விண்ணப்பதாரர்கள் வெவ்வேறு துறைகளின் பதவிகளுக்கு வெவ்வேறு தேர்வுகளை எழுத வேண்டியிருந்தது. இப்போது இந்த செயல்முறைகள் அனைத்தும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அசாம் அரசு உண்மையிலேயே வாழ்த்துக்களுக்கு தகுதியானது.
நண்பர்களே,
சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்துள்ளோம். ‘அமிர்த காலத்தின்’ அடுத்த 25 ஆண்டுகளும் உங்கள் சேவைக்காலத்தைப் போலவே முக்கியமானது. நீங்கள் இப்போது ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கும் அசாம் அரசின் முகமாக இருப்பீர்கள். இப்போது உங்கள் நடத்தை, சிந்தனை, வேலை செய்வதற்கான அணுகுமுறை மற்றும் பொது மக்களுக்கு உங்கள் சேவை உணர்வு ஆகியவற்றின் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும். எனவே, நீங்கள் சில பிரச்சினைகளில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். இன்று நமது சமூகம் வேகமும் ஆர்வமும் கொண்டதாக மாறி வருகிறது. அடிப்படை வசதிகளுக்குக் கூட மக்கள் பல ஆண்டுகளாகக் காத்திருந்த காலம் கடந்துவிட்டது. இப்போது எந்தவொரு குடிமகனும் வளர்ச்சிக்காக இவ்வளவு காத்திருக்கும் அவசியமில்லை. இந்த இருபதுக்கு 20 கிரிக்கெட் சகாப்தத்தில், நாட்டு மக்கள் உடனடி முடிவுகளை விரும்புகிறார்கள். எனவே, அரசு இயந்திரமும் அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். நாட்டின் குடிமக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் மிகப்பெரிய பொறுப்பு அரசு ஊழியர்களுக்கு உள்ளது. உங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்த அதே கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பின்பற்றி முன்னேற வேண்டும். நீங்கள் எப்போதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களால் சமூகம் மற்றும் அமைப்பு இரண்டையும் மேம்படுத்த பங்களிக்க முடியும்.
நண்பர்களே,
இன்று இந்தியா தனது உள்கட்டமைப்பை வேகமாக நவீனப்படுத்தி வருகிறது. புதிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகள், புதிய ரயில் பாதைகள், புதிய துறைமுகங்கள், விமான நிலையங்கள், நீர்வழிப் பாதைகள் என பல லட்சக்கணக்கான கோடிகள் திட்டங்களுக்குச் செலவிடப்படுகிறது. ஒவ்வொரு உள்கட்டமைப்புத் திட்டத்திற்கும் அரசு செலவிடும் தொகை வேலைவாய்ப்பையும் சுயவேலைவாய்ப்பையும் அதிகரித்து வருகிறது. உதாரணமாக, ஒரு விமான நிலையம் கட்டப்பட வேண்டும் என்றால், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கணக்காளர்கள், தொழிலாளர்கள், பல்வேறு வகையான உபகரணங்கள், இரும்பு மற்றும் சிமெண்ட் ஆகியவை தேவை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு திட்டத்தால் பல துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. ரயில் பாதைகளின் விரிவாக்கம் மற்றும் அவற்றின் மின்மயமாக்கல் ஆகியவற்றால் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன.
இந்தியா அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்துவதில் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை வலியுறுத்துகிறது. 2014ஆம் ஆண்டு முதல், நாட்டில் உள்ள ஏழைகளுக்கு குறைவற்ற வகையில் சுமார் நான்கு கோடி வீடுகளை நமது அரசு கட்டிக் கொடுத்துள்ளது. இந்த வீடுகளுக்கு கழிவறை, எரிவாயு இணைப்பு, குழாய் நீர், மின்சாரம் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. உற்பத்தி மற்றும் தளவாடத்துறை, திறமையான தொழிலாளர்கள் இந்த வீடுகளைக் கட்டுவதற்கும், இந்த வசதிகளை உறுதி செய்வதற்கும் அதிகமான கடின உழைப்பை மேற்கொண்டுள்ளனர். அதாவது, பல்வேறு துறைகளில் பல்வேறு நிலைகளில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டமும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் பல புதிய மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. சில வாரங்களுக்கு முன், எய்ம்ஸ் கெளகாத்தி மற்றும் மூன்று மருத்துவக் கல்லூரிகளை அர்ப்பணிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. கடந்த சில ஆண்டுகளில் அஸ்ஸாமில் பல் மருத்துவக் கல்லூரிகளும் விரிவடைந்துள்ளன. இதன் விளைவாக, மருத்துவத் தொழிலுடன் தொடர்புடைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நண்பர்களே,
இன்று இளைஞர்கள் இதுபோன்ற பல துறைகளில் முன்னேறி வருகிறார்கள், இதைப் பற்றி 10 ஆண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்பு நாட்டில் லட்சக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கியுள்ளது. விவசாயம், சமூக நிகழ்வுகள், ஆய்வுகள் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ட்ரோன்களுக்கான தேவை அதிகரித்து வருவது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. நாட்டில் நடந்து வரும் தற்சார்பு இந்தியா இயக்கம் பல புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது. இன்று கோடிக்கணக்கான மொபைல் போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இணைய இணைப்பு ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைகிறது. இது பெரிய அளவில் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில்களை ஊக்குவித்துள்ளது. அரசுப் பணியில் இருக்கும்போது, ஒரு திட்டம் அல்லது ஒரு தீர்மானத்தின் தாக்கம் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
நண்பர்களே,
பாஜக அரசின் கொள்கைகளால் இன்று வடகிழக்கில் ஏராளமான இளைஞர்கள் வளர்ச்சியின் பிரதான நீரோட்டத்திற்கு வருகிறார்கள். இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்ற பாஜக அரசு உறுதி பூண்டுள்ளது. புதிய இந்தியாவைக் கட்டியெழுப்பும் நோக்கில் வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மீண்டும் ஒருமுறை, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி!