மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா அவர்களே, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஷ் அவர்களே, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அவர்களே, சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் அவர்களே, பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தலைவர்களே,
சகோதர, சகோதரிகளே,
அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்! இம்முறை இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது 75 வது குடியரசு தினத்திற்கு அடுத்தநாள் உடனடியாக நடத்தப்படுகிறது. இந்த ஜனவரி 26, நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததன் 75 ஆண்டுகளைக் குறிக்கிறது. அரசியல் நிர்ணய சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நாட்டின் மக்கள் சார்பாக எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
தேவையற்ற சட்டங்களின் முடிவும் ஒரு முக்கிய விஷயமாகும். கடந்த 10 ஆண்டுகளில், நமது அமைப்புக்குப் பொருந்தாத 2,000க்கும் அதிகமான சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அவை ஒரு வகையில் சுமையாக மாறியிருந்தன. சட்ட அமைப்பின் இந்த எளிமைப்படுத்தல் சாமானிய மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் குறைத்து, வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. சபாநாயகர்களாக, நீங்கள் அத்தகைய சட்டங்களை ஆய்வு செய்து, பட்டியல்களை உருவாக்கி, அந்தந்த அரசுகள், சட்டமன்ற உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தால், ஒவ்வொருவரும் அதிக உற்சாகத்துடன் பணியாற்ற முன்வருவார்கள். இது மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
நண்பர்களே,
கடந்த ஆண்டுதான் நாடாளுமன்றம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மாநாட்டில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் அவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேலும் மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். இந்தியா போன்ற இளைய நாட்டில், குழுக்களில் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிப்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். நமது இளம் பிரதிநிதிகளுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பது மட்டுமல்லாமல், சபையில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும், கொள்கை வகுப்பதில் மிகவும் தீவிரமாக பங்கேற்கவும் அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
நண்பர்களே,
2021 ஆம் ஆண்டில் நமது விவாதத்தின் போது, ஒரே நாடு-ஒரே சட்டமன்றத் தளம் பற்றி நான் குறிப்பிட்டேன். இ-விதான் மற்றும் டிஜிட்டல் சன்சாத் தளங்கள் மூலம் நமது நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் இந்த இலக்கை நோக்கித் தற்போது பணியாற்றி வருகின்றன என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தலைமை தாங்கும் அனைத்து சபாநாயகர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் நன்றி.