இன்று, புனிதமான பவுஷ் மாதத்தில், நாம் அனைவரும் ஆயி ஸ்ரீ சோனல் மாதாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். சோனல் மாதா ஆசீர்வாதத்தின் கீழ் இந்தப் புனித நிகழ்வில் பங்கேற்பது உண்மையில் ஒரு பாக்கியம்.
சகோதர சகோதரிகளே,
சோனல் மாதா தனது முழு வாழ்க்கையையும் பொதுநலன், நாட்டு சேவை மற்றும் மதத்திற்காக அர்ப்பணித்தார். பகத் பாபு, வினோபா பாவே, ரவிசங்கர் மகராஜ், கனுபாய் லஹேரி, கல்யாண் சேத் போன்ற புகழ்பெற்ற நபர்களுடன் பணியாற்றினார். சரண் சமூகத்தின் அறிஞர்கள் மத்தியில் இவருக்கு ஒரு தனி இடம் உண்டு. பல இளைஞர்களின் வாழ்க்கையை வழிநடத்தி மாற்றினார். கல்வி, போதை ஒழிப்பு, சமூக நல்வாழ்வு ஆகியவற்றில் அவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. தீயப் பழக்கங்களிலிருந்து சமூகத்தைக் காப்பாற்ற சோனல் மாதா தொடர்ந்து பணியாற்றினார். கட்ச்சின் வோவர் கிராமத்தில் இருந்து அவர் ஒரு பெரிய உறுதிமொழிப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். கடினமாக உழைத்துத் தற்சார்பு அடைய அனைவருக்கும் கற்றுக்கொடுத்தார். கால்நடைகளுக்கு சமமான முக்கியத்துவம் கொடுத்தார். அவர் எப்போதும் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக வாதிட்டார்.
நண்பர்களே,
சோனல் மாதா தனது ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளுக்கு மேலதிகமாக, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் உறுதியான பாதுகாவலராக இருந்தார். பாரதப் பிரிவினையின் போது, ஜுனாகத்தைக் கைப்பற்றுவதற்கான சதித்திட்டங்கள் நடந்தபோது, சோனல் மாதா, சண்டி தேவியைப் போலவே உறுதியாக நின்றார்.
நண்பர்களே,
இன்றைய காலகட்டத்தில், இந்தியா வளர்ச்சி மற்றும் தற்சார்புக்காகப் பாடுபடும்போது, ஸ்ரீ சோனல் மாதாவின் உத்வேகம் நமக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. இந்த இலக்குகளை அடைவதில் சரண் சமூகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. சோனல் மாதா வழங்கிய 51 உத்தரவுகள் சரண் சமூகத்திற்கு வழிகாட்டுகின்றன. இவற்றை ஒருபோதும் மறக்காமல், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை சரண் சமூகத்தினர் தொடர வேண்டும். சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில், மாததா தாமில் சதாவ்ரத் யாகம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த முயற்சியை நானும் பாராட்டுகிறேன். எதிர்காலத்திலும் இதுபோன்ற எண்ணற்ற தேசத்தைக் கட்டியெழுப்பும் சடங்குகளுக்கு மாததா தாம் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன். ஸ்ரீ சோனல் மாதாவின் நூற்றாண்டு விழாவில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.
அனைவருக்கும் மிக்க நன்றி!