வணக்கம் நண்பர்களே!
இன்று 70,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்கான நியமனக் கடிதங்களைப் பெறுகின்றனர். நீங்கள் அனைவரும் கடின உழைப்பால் இந்த வெற்றியை அடைந்துள்ளீர்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சில நாட்களுக்கு முன்பு, குஜராத்தில் இதேபோன்ற ஒரு வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது, இது ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியது. இதே போன்று இந்த மாதம் அஸ்ஸாமில் ஒரு மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசும், பாஜக ஆளும் மாநில அரசுகளும் நடத்தும் இத்தகைய வேலை வாய்ப்பு முகாம்கள் இளைஞர்கள் மீதான அரசின் அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன.
நண்பர்களே,
மத்திய அரசு கடந்த ஒன்பது ஆண்டுகளில் அரசுப்பணிக்கு தேர்வு செய்யும் செயல்முறையை விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், நியாயமானதாகவும் மாற்றுவதற்கு முன்னுரிமை அளித்துள்ளது. முன்னதாக, பணியாளர் தேர்வு வாரியம் இந்த செயல்முறைகளை முடிக்க சுமார் 15 முதல் 18 மாதங்கள் ஆகும், அதாவது சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகும். இன்று இந்த செயல்முறைகள் ஆறு முதல் எட்டு மாதங்களில் முடிவடைகின்றன. முன்பு அரசு வேலைக்கு விண்ணப்பிப்பது மிகவும் கடினமாக இருந்தது. விண்ணப்பப் படிவத்தைப் பெறுவதற்கும், அரசு அதிகாரிகளைக் கண்டறிந்து ஆவணங்களுக்குச் சான்று பெறவும், பின்னர் விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்பவும் மணிக்கணக்கில் வரிசையில் நிற்கவும் வேண்டியிருந்தது. இன்று விண்ணப்பிப்பது முதல் முடிவுகளை அறிவது வரை முழு செயல்முறையும் ஆன்லைனில் மாறிவிட்டது. இன்று ஆவணத்தை சுய சான்றளிப்பதே போதுமானது. குரூப்-சி மற்றும் குரூப்-டி பதவிகளுக்கான நேர்காணல் சுற்றுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் அனைத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், ஊழல் அல்லது வாரிசு முறையின் சாத்தியக்கூறுகள் முடிந்துவிட்டன.
நண்பர்களே,
கடந்த ஒன்பது ஆண்டுகளில் வேலையின் தன்மையும் மிக வேகமாக மாறிவிட்டது. இப்படி மாறிவரும் சூழ்நிலையில் இளைஞர்களுக்கு புதிய துறைகள் உருவாகியுள்ளன. இந்தப் புதிய துறைகளுக்கும் மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இந்த ஒன்பது ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தில் புதிய புரட்சியை நாடு கண்டுள்ளது. 2014-ல் நாட்டில் சில நூறு ஸ்டார்ட் அப்கள் இருந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் இந்த ஸ்டார்ட்-அப்கள் குறைந்தது 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நண்பர்களே,
கடந்த ஒன்பது ஆண்டுகளில் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் இந்திய அரசு ரூ.23 லட்சம் கோடியை நாட்டின் இளைஞர்களுக்கு வழங்கியுள்ளது. முத்ரா திட்டத்தின் உதவியுடன் முதன்முறையாக தங்கள் சொந்த தொழிலைத் தொடங்கிய சுமார் எட்டு முதல் ஒன்பது கோடி மக்கள் உள்ளனர்.
நண்பர்களே,
இந்திய இளைஞர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இதன் ஒரு பகுதியாக, உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களும் நாட்டில் போர்க்கால அடிப்படையில் கட்டப்பட்டு வருகின்றன. 2014 மற்றும் 2022-க்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய ஐஐடி மற்றும் ஐஐஎம்-கள் கட்டப்பட்டுள்ளன. சராசரியாக, ஒவ்வொரு வாரமும் ஒரு பல்கலைக்கழகம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் இரண்டு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. நமது அரசு அமைவதற்கு முன்பு நாட்டில் சுமார் 720 பல்கலைக்கழகங்கள் இருந்தன. இப்போது இந்த எண்ணிக்கை 1100-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. ஏழுபது ஆண்டுகளில் ஏழு எய்ம்ஸ் மட்டுமே நாட்டில் கட்டப்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், 15 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை கட்டும் நோக்கில் நகர்ந்துள்ளோம். இந்த மருத்துவமனைகளில் பலவும் தங்கள் சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளன. 2014ஆம் ஆண்டு நிலவரப்படி, நாடு முழுவதும் 400க்கும் குறைவான மருத்துவக் கல்லூரிகளே இருந்தன. இன்று அவற்றின் எண்ணிக்கை ஏறக்குறைய 700 ஆக உயர்ந்துள்ளது.கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், இயல்பாகவே இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, இளைஞர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகளும் அதிகரித்தன. 2014-க்கு முன் நம் நாட்டில் 80 ஆயிரம் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்கள் மட்டுமே இருந்தன. இப்போது நாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை இடங்கள் 1.70 லட்சத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
இன்று, இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் உங்கள் வாழ்க்கையில் ஒரு மிக முக்கியமான கட்டத்தில் உங்கள் புதிய பயணத்திற்கு நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஒளிமயமான எதிர்காலத்திற்காக நான் மீண்டும் ஒருமுறை பிரார்த்திக்கிறேன். நன்றி!