வணக்கம்!
இந்நிகழ்ச்சியில் என்னுடன் கலந்து கொள்ளும், நமது விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், அனைத்து விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், மற்றும் குறிப்பாக பெற்றோர்களுக்கு வணக்கம். உங்கள் அனைவருடனும் பேசுவது, பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலும், இந்தியா புதிய வரலாறு படைக்கப் போகிறது என்ற நம்பிக்கையை எனக்கு அளித்துள்ளது. உங்கள் வெற்றிக்காகவும், நாட்டின் வெற்றிக்காகவும், அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
எதையோ சாதிப்பதற்கான எல்லையற்ற தன்னம்பிக்கையும், மன உறுதியும் உங்களிடம் உள்ளதை என்னால் பார்க்க முடிகிறது. இது உங்களின் கடின உழைப்பின் பலன். அதனால் தான், இன்று அதிகளவிலான இந்திய விளையாட்டு வீரர்கள் பாரா ஒலிம்பிக் போட்டிக்குச் செல்ல உள்ளனர். நீங்கள் கூறியது போல, கொரோனா பெருந்தொற்று உங்கள் பிரச்சினைகளுடன் சேர்ந்து விட்டது, ஆனால், உங்கள் தயார்படுத்துதலை அது பாதிப்பதற்கு நீங்கள் விடவில்லை. அதை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை நீங்கள் செய்தீர்கள். நீங்கள் உங்கள் மனஉறுதியைக் குறையவிடவில்லை, உங்கள் பயிற்சியையும் நிறுத்தவில்லை. இது தான் உண்மையான விளையாட்டு வீரரின் உணர்வு, ஒவ்வொரு சூழ்நிலையிலும் இது நமக்கு கற்றுக்கொடுக்கிறது - ‘ஆமாம், நாம் செய்வோம்!, நம்மால் செய்ய முடியும் மற்றும் நீங்கள் அனைவரும் செய்தீர்கள்.
நண்பர்களே,
நீங்கள் உண்மையான சாம்பியனாக இருப்பதால், இந்த நிலைக்கு நீங்கள் வந்துள்ளீர்கள். வாழ்க்கை விளையாட்டில் உள்ள துன்பங்களை நீங்கள் வென்றுவிட்டீர்கள். வாழ்க்கை விளையாட்டில் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள், நீங்கள் தான் சாம்பியன். உங்களின் வெற்றி, உங்களின் பதக்கம் ஒரு விளையாட்டு வீரராக உங்களுக்கு மிக முக்கியம். ஆனால், இன்றைய புதிய இந்தியா, தனது விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்களுக்காக அழுத்தம் கொடுக்கவில்லை என்பதை மீண்டும் மீண்டும் கூறுகிறேன். எவ்வளவு வலிமையான வீரர் உங்கள் முன் இருந்தாலும், எந்த வித மனச்சுமையும் இல்லாமல், கவலையும் இல்லாமல், முழு அர்ப்பணிப்புடன் உங்களின் 100 சதவீத பங்களிப்பை அளிக்க வேண்டும். விளையாட்டுத்துறையில் இந்த நம்பிக்கையுடன் தான் நீங்கள் செயல்பட வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நான் பிரதமர் ஆன போது, உலகத் தலைவர்களை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவர்கள் நம்மை விட உயரமாக இருப்பார்கள். அந்த நாடுகளின் நிலையும் மிக உயர்ந்ததாக இருக்கும். எனக்கும் உங்களைப் போன்ற பின்னணி தான். மோடிக்கு உலகத்தைப் பற்றி எதுவும் தெரியாது, அவர் பிரதமர் ஆனால் என்ன செய்வார்? என நாட்டில் உள்ள சிலர் நினைத்தனர். உலகத் தலைவர்களுடன் நான் கை குலுக்கும் போது, நான் நரேந்திர மோடி கை குலுக்குவதாக ஒருபோதும் நினைத்ததில்லை. 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நாடு, அவர்களுடன் கை குலுக்குவதாக எப்போதும் நினைத்தேன். 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் என் பின்னால் உள்ளனர். எனக்கு இந்த உணர்வுதான் இருக்கும், அதனால் எனது நம்பிக்கை மீது எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. வாழ்க்கையில் வெற்றி பெறும் நம்பிக்கை உங்களிடம் உள்ளதை நான் பார்க்கிறேன். விளையாட்டில் வெற்றி பெறுவது உங்களுக்கு மிக சிறிய விஷயம். உங்களது கடின உழைப்பு, பதக்கங்களை உறுதி செய்யும். ஒலிம்பிக் போட்டிகளில் நமது வீரர்கள் வென்றதையும், சிலர் தவற விட்டதையும் நீங்கள் ஏற்கனவே பார்த்தீர்கள். ஆனால், நாடு அவர்கள் ஒவ்வொருவருடனும் உறுதியாக நின்றது மற்றும் அனைவரையும் ஊக்குவித்தது.
நண்பர்களே,
விளையாட்டுத்துறையில் உடல் பலத்துடன், மனபலமும் முக்கியம் என்பதை விளையாட்டு வீரராக, நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். சவாலான சூழ்நிலைகளிலும், நீங்கள் முன்னேறிச் செல்ல உங்களின் மனபலம்தான் உதவியது. ஆகையால், தனது விளையாட்டு வீரர்களுக்காக, நாடு அனைத்து பிரச்சினைகளையும் கவனிக்கிறது. விளையாட்டு வீரர்களுக்காக ‘விளையாட்டு உளவியல்’ பற்றிய பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. நமது பெரும்பாலான வீரர்கள் சிறு நகரங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து வருகின்றனர். ஆகையால், வெளிப்பாடு குறைவாக இருப்பது அவர்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. சில நேரங்களில் புதிய இடங்கள், புதியவர்கள், மற்றும் சர்வதேச நிலவரங்கள் போன்ற சவால்கள் நம் மன உறுதியை குறைக்கின்றன. ஆகையால், இந்த நோக்கிலும் நமது வீரர்கள் பயிற்சி பெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்காக நீங்கள் பங்கேற்ற மூன்று அமர்வுகளும் உங்களுக்கு அதிகம் உதவியிருக்கும் என நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
உங்களைப் பார்க்கும் போது, நமது கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்கள் திறமையும், நம்பிக்கையும் நிறைந்தவர்கள் என்று என்னால் கூற முடிகிறது. அதற்கு நீங்கள் தான் உதாரணம். முறையான பயிற்சிகள் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால், உங்கள் கனவுகள் என்னவாகியிருக்கும் என பல நேரங்களில் நீங்கள் நினைத்திருப்பீர்கள். நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் அதே அக்கறை பற்றி தான் நாங்களும் கவலைப்பட வேண்டும். பல பதக்கங்கள் வெல்லும் திறமையுடய பல இளைஞர்கள் நாட்டில் உள்ளனர். அவர்களைச் சென்றடைய நாடு முயற்சிக்கிறது மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. திறமையானவர்களை அடையாளம் காண, நாட்டில் 250க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று 360 கேலோ இந்தியா மையங்கள் உள்ளூர் அளவில் அமைக்கப்பட்டுள்ளன. அப்போது தான் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். வரும் நாட்களில், இந்த மையங்களின் எண்ணிக்கை 1,000-மாக அதிகரிக்கப்படும். அதே போல், பயிற்சி வசதிகளும், நமது வீரர்களுக்கு மற்றொரு சவாலாக உள்ளது. முன்பு, நல்ல மைதானங்கள் மற்றும் தரமான பயிற்சி உபகரணங்கள் இல்லை. இது விளையாட்டு வீர்களின் மனஉறுதியை பாதித்தது. அவர் மற்ற நாட்டு வீரர்களைவிட, தாழ்ந்தவர் என எண்ணத் தோன்றியது. ஆனால், இன்று, விளையாட்டு உள்கட்டமைப்பு நாட்டில் விரிவுபடுத்தப்படுகிறது. நாடு ஒவ்வொரு வீரருக்கும் திறந்த மனதுடன் உதவி வருகிறது. ‘ஒலிம்பிக் வெற்றி மேடை இலக்கு’ (‘Target Olympic Podium Scheme’) திட்டம் மூலம் இலக்குகளை அமைக்க விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை நாடு செய்துள்ளது அதன் பலன் இன்று நம்முன் உள்ளது.
நண்பர்களே,
நாடு விளையாட்டில் முன்னேற வேண்டும் என்றால், பழைய பயத்தை நாம் தவிர்க்க வேண்டும். இது பழைய தலைமுறையினரின் மனதில் வேரூன்றி இருந்தது. விளையாட்டில் ஒரு குழந்தை ஆர்வமாக இருந்தால், அவன் எதிர்காலத்தில் என்ன செய்வான் என குடும்ப உறுப்பினர்கள் பயந்தனர். ஏனென்றால், ஒன்றிரண்டு விளையாட்டு போட்டிகளைத் தவிர, நமது வேலைக்கு விளையாட்டு வெற்றிகரமாக இருக்காது என அவர்கள் நினைத்தனர். இந்த மனநிலையிலிருந்தும், பாதுகாப்பற்ற உணர்வில் இருந்தும் வெளிவர வேண்டியது மிக முக்கியம்.
நண்டர்களே,
எந்த விளையாட்டுடன் நீங்கள் தொடர்புடையவராக இருந்தாலும், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை நீங்கள் வலுப்படுத்துகிறீர்கள்.
எந்த மாநிலம், எந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவராக நீங்கள் இருந்தாலும், என்ன மொழி நீங்கள் பேசினாலும் அது முக்கியம் அல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக, இன்று நீங்கள் இந்தியக் குழுவினர் என்பது தான் முக்கியம். இந்த உணர்வு நமது சமூகத்தில் ஒவ்வொரு மட்டத்திலும் ஊடுருவ வேண்டும். சமூக சமத்துவம் மற்றும் தற்சார்பு இந்தியா என்ற இந்த பிரசாரத்தில், எனது மாற்றுத்திறனாளி சகோதார, சகோதரிகள் நாட்டுக்கு முக்கிய பங்காளிகள். உடல் அளவிலான கஷ்டங்களால், வாழ்க்கை முடிவுக்கு வருவதில்லை என்பதை நீங்கள் நிருபித்துள்ளீர்கள். ஆகையால், நீங்கள் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக புதிய தலைமுறையினருக்கு மிகவும் ஊக்கம் அளிப்பவர்களாக இருக்கிறீர்கள்,.
நண்பர்களே,
முன்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் அளிப்பது நல உதவிகளாகக் கருதப்பட்டது, இன்று தனது கடமையின் ஒரு பகுதியாக நாடு அதை செய்து கொண்டிருக்கிறது. அதனால் தான், மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவான பாதுகாப்பை அளிக்க, மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் போன்ற சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றியது. இதற்கு ‘சுகம்யா பாரத் பிரசாரம்’ மிகப் பெரிய உதாரணம். இன்று நூற்றுக்கணக்கான அரசுக் கட்டிடங்கள், ரயில்வே நிலையங்கள், ரயில் பெட்டிகள், உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் இதர உள்கட்டமைப்புகள் ஆகியவை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்படுகின்றன. இந்திய சைகை மொழிக்கான நிலையான அகராதியை தயாரிக்கும் திட்டமும் நடந்து கொண்டிருக்கிறது. என்சிஇஆர்டி புத்தகங்கள், சைகை மொழியில் மாற்றப்படுகின்றன. இது போன்ற முயற்சிகள், பலரது வாழ்க்கையை மாற்றுகிறது மற்றும் நாட்டுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையை பல திறமைசாலிகளுக்கு அளிக்கிறது.
நண்பர்களே,
நாடு முயற்சிகள் மேற்கொள்ளும் போது, அதன் பொன்னான முடிவுகளை நாம் விரைவில் பெறுகிறோம். இது பெரிதாகவும், புதுமையாகவும் சிந்திக்க நமக்கு ஊக்கம் அளிக்கிறது. நமது ஒரு வெற்றி, நமது புதிய இலக்குகளுக்கான பாதையைத் திறக்கிறது. ஆகையால், டோக்கியோ போட்டியில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி, மூவர்ணக் கொடியை ஏந்தும் போது, நீங்கள் பதக்கம் மட்டும் வெல்லாமல், இந்தியாவின் தீர்மானத்தை வெகுதூரம் கொண்டு செல்கிறீர்கள். இந்தத் தீர்மானங்களுக்கு நீங்கள் ஒரு புதிய ஆற்றலைக் கொடுத்து அதை முன்னோக்கி எடுத்துச் செல்வீர்கள். உங்களின் தைரியம் மற்றும் உற்சாகம் டோக்கியோவில் புதிய சாதனைகள் படைக்கும் என நான் உறுதியாக உள்ளேன். இந்த நம்பிக்கையுடன், உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள் பல!