எனது அமைச்சரவை சகாக்களான திரு அர்ஜுன் முண்டா அவர்களே, திரு ஃபக்கன் சிங் குலாஸ்தே அவர்களே, திருமதி. ரேணுகா சிங் அவர்களே, டாக்டர் பார்தி பவார் அவர்களே, திரு பிசேஷ்வர் டூ டு அவர்களே, பிற உயரதிகாரிகள் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எனது பழங்குடியின சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆடி மஹோத்ஸவ் நல்வாழ்த்துக்கள்.
இந்த ஆடி மஹோத்ஸவ் நமது 'வேற்றுமையில் ஒற்றுமை'க்கு புதிய உயரத்தைத் தருகிறது. இது 'வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்' என்ற கருத்தை மேலும் உயிர்ப்பூட்டுகிறது. இந்த நிகழ்விற்காக பழங்குடியினரின் நலன்களுக்காக உழைக்கும் எனது பழங்குடி சகோதர சகோதரிகள் மற்றும் அமைப்புகளை நான் வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பழங்குடி சமூகங்களுடன், பழங்குடி குடும்பங்களுடன் நான் பல வாரங்கள் செலவிட்டுள்ளேன். உங்கள் பாரம்பரியங்களை நான் உன்னிப்பாக கவனித்து, வாழ்ந்து, அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். பழங்குடியினரின் வாழ்க்கை முறை, நாட்டைப் பற்றியும், நமது மரபுகள் மற்றும் பாரம்பரியத்தைப் பற்றியும் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. எனவே, நான் உங்கள் மத்தியில் இருக்கும்போது, ஒரு வித்தியாசமான பாசத்தை உணர்கிறேன். உங்கள் அன்புக்குரியவர்களுடன் இருக்கும்போது இந்த சிறப்பு பிணைப்பின் உணர்வு இருக்கும்.
நண்பர்களே,
இன்று, இந்தியாவின் பாரம்பரிய பொருட்களுக்கான தேவை, குறிப்பாக பழங்குடி சமூகத்தால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வடகிழக்குப் பகுதியின் உற்பத்திப் பொருட்கள் இப்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மூங்கில் பொருட்களின் புகழ் இன்று வேகமாக அதிகரித்து வருகிறது. பழங்குடியினரின் தயாரிப்புகள் அதிகபட்ச சந்தைகளை அடைவதற்கும், அவற்றின் அங்கீகாரம் மற்றும் தேவை அதிகரிப்பதற்குமான திசையில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
சகோதர, சகோதரிகளே,
பழங்குடியின இளைஞர்கள் மொழித் தடையால் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் புதிய தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழியில் படிக்கும் வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது. இனி நமது பழங்குடியின குழந்தைகள், பழங்குடி இளைஞர்கள் தங்கள் சொந்த மொழியில் படித்து முன்னேற முடியும்.
நண்பர்களே,
கடந்த 8-9 ஆண்டுகளில் சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்திற்கு நாடு எவ்வாறு முன்னுரிமை அளிக்கிறது என்பதற்கான மாற்றத்தின் சாட்சியமாக பழங்குடி சமூகத்தின் பயணம் உள்ளது. சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் முதன்முறையாக நாட்டின் தலைமை பழங்குடியினரின் கைகளில் உள்ளது. முதன்முறையாக பழங்குடியின பெண் ஒருவர் குடியரசுத் தலைவர் பதவியை ஏற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இன்று முதன்முறையாக, பழங்குடியின வரலாறு நாட்டில் இவ்வளவு அங்கீகாரம் பெறுள்ளது.
நண்பர்களே,
இந்தியாவின் முன்முயற்சியால் இந்த ஆண்டு உலகம் முழுவதும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக 'மோட்டா தானியங்கள்' என்று அழைக்கப்படும் சிறுதானியங்கள், பல நூற்றாண்டுகளாக நமது ஆரோக்கியத்தின் மையமாக இருந்தது.. மேலும் இது நமது பழங்குடி சகோதர சகோதரிகளின் உணவில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இந்தியா இப்போது இந்த மோட்டா தானியங்களுக்கு மிகச் சிறந்த உணவு, அதாவது 'ஸ்ரீ அன்னா' என்ற அடையாளத்தை வழங்கியுள்ளது.
ஆரோக்கிய உணர்வுள்ளவர்கள், சாப்பாட்டு மேசையில் உள்ள அனைத்து விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருப்பவர்கள், குறிப்பாக தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், ஆரோக்கியத்திற்கும் ஊட்டச்சத்துக்கும் எவ்வளவு வளமான விளைபொருட்கள் நமது காடுகளில் உள்ளன என்பதைக் காண வருமாறு கேட்டுக்கொள்கிறேன். வாருங்கள், நாம் ஒன்றிணைந்து இந்த ஆதி மஹோத்ஸவை மறக்கமுடியாததாகவும் மிகவும் வெற்றிகரமானதாகவும் ஆக்குவோம். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்!
உங்களுக்கு மிகுந்த நன்றி!