அன்பார்ந்த சத்தீஷ்கர் மக்களே!
சத்தீஸ்கர் மாநில ஆளுநர் திரு. பிஸ்வபூஷன் ஹரிச்சந்தன் அவர்களே, நாடாளுமன்றத்தைச் சேர்ந்த எனது இரண்டு பிரபலமான சகாக்களே, மாநில சட்டமன்றப் பிரதிநிதிகளே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, மாவட்ட கவுன்சில், தாலுகா கவுன்சில் உறுப்பினர்களே, பெண்கள் மற்றும் பெருமக்களே,
ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு கிராமமும் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே வளர்ந்த பாரதம் என்ற கனவு நனவாகும். இந்த உறுதியை வலுப்படுத்தும் வகையில், இன்று, சுமார் 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும், தொடக்க விழாவும் நடந்துள்ளது. உங்கள் அனைவருக்கும், சத்தீஸ்கர் மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் குடும்ப உறுப்பினர்களே,
நேரடியான, டிஜிட்டல் மற்றும் சமூக உள்கட்டமைப்பு இந்தியாவின் வளர்ச்சிக்கான எதிர்காலத் தேவைகளுடன் ஒத்துப்போக வேண்டும். இதன் காரணமாகவே கடந்த 9 ஆண்டுகளில் உள்கட்டமைப்பிற்கான செலவினத்தை நமது அரசு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு உள்கட்டமைப்புக்கான செலவு 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, இது முன்பை விட 6 மடங்கு அதிகமாகும்.
நண்பர்களே,
இன்று நாட்டில் கட்டப்பட்டு வரும் ரயில்வே, சாலைகள், விமான நிலையங்கள், மின் திட்டங்கள், வாகனங்கள், ஏழைகளுக்கான வீடுகள், பள்ளிகள்-கல்லூரிகள்-மருத்துவமனைகள் ஆகியவற்றில் எஃகு முக்கிய பங்கு வகிக்கிறது. எஃகு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எஃகு உற்பத்தியில் முக்கிய மாநிலமான சத்தீஸ்கர் இதன் மூலம் பெரிதும் பயனடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாரதத்தின் அதிநவீன எஃகு ஆலைகளில் ஒன்று இன்று நாகர்நாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் எஃகு, பாரதத்தின் வாகன உற்பத்தி, பொறியியல் மற்றும் விரைவாக வளர்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தித் துறைக்கு பங்களிக்கும், புதிய ஆற்றலை வழங்கும். பஸ்தாரில் உற்பத்தி செய்யப்படும் எஃகு நமது இராணுவத்தை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பாதுகாப்பு ஏற்றுமதியையும் அதிகரிக்கும். இந்த எஃகு ஆலையின் விளைவாக பஸ்தர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பஸ்தார் போன்ற ஆர்வமுள்ள மாவட்டங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு கவனம் செலுத்துவது இந்த எஃகு ஆலையிலிருந்து குறிப்பிடத்தக்க ஊக்கத்தைப் பெறும். இந்த சாதனைக்காக பஸ்தர் மற்றும் சத்தீஸ்கர் இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளாக போக்குவரத்து இணைப்பில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. சத்தீஸ்கரில் பொருளாதார வழித்தடங்கள் மற்றும் நவீன நெடுஞ்சாலைகள் கிடைத்துள்ளன. சத்தீஸ்கருக்கான ரயில்வே பட்ஜெட் 2014-க்கு முந்தையதை விட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது பல முக்கிய ரயில்வே திட்டங்கள் நடந்து வருகின்றன. சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியும், சத்தீஸ்கரில் உள்ள தடோகி இதுவரை ரயில்வே வரைபடத்தில் இடம் பெறவில்லை. இன்று, தடோகி ஒரு புதிய ரயில் பாதையை பெறுகிறது. இது பழங்குடி சமூகங்களுக்கு வசதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், விவசாயம், வனவியல் மற்றும் வனப் பொருட்களை கொண்டு செல்லவும் உதவும். தடோகி இப்போது ராய்ப்பூர்-அந்தகர் மின்சார ரயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தலைநகர் ராய்ப்பூருக்கு பயணத்தை எளிதாக்குகிறது. ஜக்தல்பூர்-தண்டேவாடா ரயில் பாதை திட்டத்தை இரட்டிப்பாக்குவது பயணத்தை எளிதாக்குவதோடு, தொழிற்சாலைகளுக்கான தளவாட செலவுகளையும் குறைக்கும். இந்த ரயில்வே திட்டங்கள் அனைத்தும் இப்பகுதியில் ஏராளமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
நண்பர்களே,
சத்தீஸ்கரில் ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இது ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சத்தீஸ்கரில் காற்றை சுத்தமாக வைத்திருக்கவும் பங்களிக்கும். சத்தீஸ்கரில் ரயில்வே கட்டமைப்பை முழுமையாக மின்மயமாக்கப்பட்ட பிறகு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் இயக்கமும் மாநிலத்தில் தொடங்கப்படும்.
நண்பர்களே,
சத்தீஸ்கரில் உள்ள ரயில் நிலையங்களை விரைவில் சீரமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 30 க்கும் மேற்பட்ட நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் இந்த ஏழு நிலையங்களை மறுசீரமைப்பதற்கான அடிக்கல் ஏற்கனவே நாட்டப்பட்டுள்ளது. பிலாஸ்பூர், ராய்ப்பூர் மற்றும் துர்க் நிலையங்களைத் தவிர, ஜக்தல்பூர் நிலையமும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் நாட்களில், ஜக்தல்பூர் நிலையம் மேம்பட்ட பயணிகள் வசதிகளுடன் நகரின் முக்கிய மையமாக மாறும். கடந்த ஒன்பது ஆண்டுகளில், மாநிலத்தில் 120 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
சத்தீஸ்கரின் மக்கள், ஒவ்வொரு சகோதரி, மகள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை மென்மையாக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இன்று இந்த திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா சத்தீஸ்கரில் முன்னேற்றத்தின் வேகத்தை விரைவுபடுத்தும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் புதிய வணிகங்களை ஊக்குவிக்கும். இந்த நிலையான வேகத்தில் சத்தீஸ்கரை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இந்தியாவின் தலையெழுத்தை மாற்றுவதில் சத்தீஸ்கர் முக்கியப் பங்கு வகிக்கும். இந்த திட்டங்களுக்காக சத்தீஸ்கர் மக்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு சிறிய அரசு திட்டம் என்பதால், உங்கள் நேரத்தை நான் அதிகம் எடுத்துக் கொள்ள மாட்டேன். வெறும் 10 நிமிடங்களில் மற்றொரு பொது நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் தொடர்பான பல்வேறு விஷயங்களைப் பற்றி குடிமக்களுடன் பகிர்ந்து கொள்வேன். வளர்ச்சியின் பல அம்சங்களை அங்குள்ள சத்தீஸ்கர் மக்களுடன் பகிர்ந்து கொள்வேன். இங்கு ஆளுநர் இருப்பது மாநிலத்தின் பிரதிநிதித்துவத்தை குறிக்கிறது. சத்தீஸ்கர் மீதான ஆளுநரின் அக்கறை, சத்தீஸ்கரின் வளர்ச்சியில் அவரது அக்கறை ஆகியவை ஒரு நேர்மறையான செய்தியாகும். அனைவருக்கும் மிக்க நன்றி.
வணக்கம்,