வணக்கம்!
தேசிய அளவிலான இது போன்ற வேலைவாய்ப்பு விழாக்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் பா.ஜ.க அரசின் புதிய அடையாளமாக மாறி உள்ளன. இன்று 70 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. விடுதலையின் அமிர்த காலம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் இலக்கு உங்கள் முன் உள்ளது. நிகழ்காலத்திற்கு மட்டுமல்லாமல், நாட்டின் வளமான எதிர்காலத்திற்காகவும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.
நண்பர்களே,
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் இன்று வேலைவாய்ப்புகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. சுய தொழில்களை ஏராளமான இளைஞர்கள் தொடங்கி வருகின்றனர். வங்கி உத்திரவாதம் இல்லாமல் நிதி உதவி அளிக்கும் முத்ரா திட்டம், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு உதவிகரமாக இருந்து வருவதோடு, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா போன்ற இயக்கங்கள் அவர்களது திறன்களை மேலும் வலுப்படுத்தி உள்ளன.
இன்று நமது வளர்ச்சிப் பயணத்தில் இணைந்து முன்னேற ஒட்டுமொத்த உலகமும் தயாராக உள்ளது. நம் பொருளாதாரத்தின் மீது இதற்கு முன் இது போன்ற நம்பிக்கை இருந்ததில்லை. பொருளாதார மந்தநிலை, கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் உலகம் முழுவதும் நிலவி வரும் நிலையிலும், இந்தியா தனது பொருளாதாரத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்க உலகின் முன்னணி நிறுவனங்கள் தற்போது முன் வருகின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாகன உற்பத்தித் துறையின் பங்களிப்பு 6.5% ஆகும். பயணிகள் வாகனம், வணிக வாகனம் முதலியவற்றின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. மூன்று சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களின் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தினால் இந்த துறை மேலும் உத்வேகம் அடைந்துள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இந்த துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.
நண்பர்களே,
முந்தைய தசாப்தத்தை விட இந்தியா தற்போது மேலும் நிலையான, பாதுகாப்பான மற்றும் வலுவான நாடாக திகழ்கிறது. தனது அரசியல் நிலைத்தன்மைக்காக இந்தியா பெயர் பெற்றுள்ளது. உறுதியான மற்றும் துணிச்சலான முடிவுகளுக்காக இந்திய அரசு அங்கீகாரம் பெற்றுள்ளது. அனைத்து துறைகளிலும் முந்தைய அரசுகளை விட தற்போது இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதாக உலகளாவிய முகமைகள் தொடர்ந்து அறிவித்து வருகின்றன. உள்கட்டமைப்புக்காக கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் இயக்கத்திற்காக ரூ. 4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் 130 மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமிர்த காலத்தின் அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்றுவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி!
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.