மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் அவர்களுக்கு எனது பணிவான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரையாற்றிய போது, வளர்ந்த இந்தியாவுக்கான பார்வையையும், வளர்ந்த இந்தியாவின் தீர்மானங்களுக்கான செயல் திட்ட வரைபடத்தையும் வழங்கினார்.
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநிலங்களவையில் பல அறிவு ஜீவிகள் இருந்து நாட்டுக்கு வழிகாட்டுதலை வழங்கியுள்ளனர். இந்த அவையில் பல நண்பர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு சாதனைகளைச் செய்தவர்கள். எனவே, இந்த அவையில் என்ன நடந்தாலும், அது குறித்து நாடு மிகுந்த அக்கறையுடன் உள்ளது. தேசம் அதை உன்னிப்பாகக் கவனிக்கிறது மற்றும் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது.
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,
முந்தைய காலத்தைப் போலல்லாமல், பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரமானத் தீர்வுகளை வழங்கி அவர்களை அதிகாரப்படுத்துவதே இந்த அரசின் நோக்கமாகும். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டியது அரசின் பொறுப்பாக இருந்த நேரத்தில் முந்தைய அரசுகளுக்கு வேறு முன்னுரிமைகளும், நோக்கங்களும் இருந்தன. இன்று நாங்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை நோக்கி முன்னேறி வருகிறோம்.
வெறுமனே முயற்சிகளைத் துவங்குதுடன் நின்றுவிடாமல் தொடர்ந்து பணி செய்து நிறைவேற்றுகிறோம். தண்ணீர் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் முழுமையான ஒருங்கிணைந்த அணுகுமுறை, தண்ணீர் நிர்வாகம், தரக்கட்டுப்பாடு, தண்ணீர் சேமிப்பு, புதுமையான பாசனம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. தண்ணீர் பிரச்சனை ஒவ்வொரு குடும்பத்திற்கும் உள்ள பிரச்சனை. அது இல்லாமல் வாழ்க்கையைத் தொடர முடியாது. எதிர்காலத்தின் சாத்தியக்கூறுகளைப் பார்த்து, அதைத் தீர்ப்பதற்கான வழிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,
ஜன்தன் – ஆதார் – மொபைல் மூலம் நேரடிப் பணப்பரிமாற்றம் உள்கட்டமைப்பு திட்டமிடுதல், பிரதமரின் விரைவுசக்தி பெருந்திட்டத்தின் மூலம் செயலாக்கம் ஆகியவை நிதி உள்ளீட்டில் நிரந்தரத் தீர்வுகளை உருவாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாகும். ஜன்தன், ஆதார், மொபைல் ஆகிய மூன்றும், நேரடிப் பலன் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் கடந்த சில வருடங்களில் இந்நாட்டு குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் 27 லட்சம் கோடி ரூபாயை செலுத்தியுள்ளன. இந்த நேரடிப் பயன்பாட்டினால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,
உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தையும், நவீன இந்தியாவை கட்டமைப்பதற்கான வேகத்தையும், அளவையும் நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். தொழில்நுட்பத்தின் ஆற்றல் மூலம் நாட்டின் பணிக்கலாச்சாரம் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. வேகத்தை அதிகரிப்பதிலும், பணிகளின் அளவை உயர்த்துவதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. தகுதி என்ற பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம். தேர்ந்தெடுத்த பாதையுடன் அரசின் முன்னுரிமை நின்றுவிடாது. சாதாரண மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற இரவு பகலாக இடையறாமல் இந்த அரசு உழைத்து வருகிறது.
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,
விடுதலையின் அமிர்த காலத்தில் உச்சத்தை எட்ட முக்கியமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நாட்டில் ஒவ்வொரு பயனாளிக்கும் 100 சதவீத பயன்கள் சென்றடைய அரசு முயற்சிகளை எடுத்துள்ளது. இது பாகுபாடு மற்றும் ஊழலை ஒழித்துள்ளது. இதுதான் உண்மையான மதச்சார்பின்மை.
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,
பல பத்து ஆண்டுகளாக பழங்குடியின சமுதாயத்தினரின் மேம்பாடு புறக்கணிக்கப்பட்டது. அவர்களது நலனுக்கு நாங்கள் உயர் முன்னுரிமை வழங்கினோம். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில்தான் பழங்குடியினர் நல அமைச்சகம் என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. அந்த அமைச்சகத்தின்கீழ், பழங்குடியினர் நலனுக்கான உறுதியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,
சிறு விவசாயிகள், இந்திய வேளாண் துறையின் முதுகெலும்பு என்று குறிப்பிட்ட பிரதமர், இவர்களின் கரங்களை வலுப்படுத்த நாங்கள் பாடுபட்டு வருகிறோம். சிறு விவசாயிகள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டனர். சிறு விவசாயிகளின் தேவைகளில் கவனம் செலுத்தும் தற்போதைய அரசு அவர்களுக்கும், சிறு வியாபாரிகள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோருக்கும் பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மகளிருக்கு அதிகாரமளிக்கவும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் பெண்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும், வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கமாக கொண்டு அரசு செயல்படுகிறது. அவர்களது கௌரவத்தையும், அதிகாரமளித்தலையும் உறுதி செய்வதற்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்துகிறது.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
நமது விஞ்ஞானிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களின் நிபுணத்துவம் காரணமாக மருந்து தயாரிப்பில் உலகின் மருந்து தயாரிப்பு மையமாக இந்தியா மாறியிருக்கிறது. அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம், ஆய்வுக்கான சோதனைக் கூடங்கள் போன்ற நடவடிக்கைகள் மூலம் அறிவியல் மனப்பான்மை வளர்க்கப்படுகிறது. அரசால் உருவாக்கப்பட்ட வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்காகவும், தனியார் செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுவதற்காகவும், இளைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன். சாமானிய மக்களுக்கு அதிகாரமளிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்.
மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் உலகின் தலைமை நிலையை நாடு தக்கவைத்துக் கொண்டுள்ளது. டிஜிட்டல் இந்தியாவின் வெற்றி இன்று ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. செல்பேசிகளை இந்தியா இறக்குமதி செய்த காலம் மாறி இன்று, மற்ற நாடுகளுக்கு செல்பேசிகளை ஏற்றுமதி செய்யும் பெருமையை நாம் பெற்றிருக்கிறோம்.
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,
2047-க்குள் 'வளர்ச்சியடைந்த பாரதம்' என இந்தியாவை மாற்றுவது நமது தீர்மானமாக உள்ளது. நமக்குத் தேவையான வாய்ப்புகளைக் கண்டறிவதற்கு அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தியா மாபெரும் முன்னேற்றப் பாதையில் செல்லத் தயாராக உள்ளது; இனிமேல் அது பின்னடைவை சந்திக்காது.
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,
ஒரே ஒரு நபர் எப்படி பலரை எழுச்சியூட்டுகறார் என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது! நான் உறுதிப்பாட்டுன் நடை போடுகிறேன். நான் நாட்டுக்காக வாழ்கிறேன். நான் நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்துள்ளேன். தைரியம் இல்லாத சிலர் அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்கள்.
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,
இந்த அவையில் குடியரசுத் தலைவரின் சிறப்பான, வழிகாட்டும் மற்றும் ஊக்கமளிக்கும் உரைக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து, உங்களுக்கும் நன்றி தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கிறேன்!
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கி இருந்தார்.