மதிப்பிற்குரிய புருனே சுல்தான் அவர்கள்,
அரச குடும்பத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களே,
எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கும் விருந்தோம்பலுக்கும் புருனே சுல்தானுக்கும், ஒட்டுமொத்த அரச குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியப் பிரதமர் ஒருவர் புருனே நாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இதுவாகும். இங்கு எனக்கு கிடைத்த அன்பும் அரவணைப்பும், நமது இருநாடுகளுக்கு இடையேயான நூற்றாண்டுகள் பழமையான உறவுகளை எனக்கு நினைவுபடுத்துகின்றன.
மதிப்பிற்குரிய புருனே சுல்தான் அவர்களே,
இந்த ஆண்டு புருனேயின் சுதந்திரத்தின் 40-வது ஆண்டு நிறைவு ஆண்டாகும். உங்களது தலைமையின் கீழ், புருனே நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. புருணை குறித்த உங்கள் பார்வை பாராட்டத்தக்கது. 140 கோடி இந்தியர்களின் சார்பாக, உங்களுக்கும், புருனே மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்தியாவும் புருனேயும் ஆழமான வரலாற்று, கலாச்சார உறவுகளைக் கொண்டுள்ளன. இந்த ஆண்டு, நமது தூதரக உறவுகளின் 40-வது ஆண்டைக் கொண்டாடுகிறோம். இந்தத் தருணத்தில், நமது உறவுகளை மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்புடன் கொண்டாட முடிவு செய்துள்ளோம்.
நமது ஒத்துழைப்புக்கு உத்திசார்ந்த வழிகாட்டுதல்களை ஏற்படுத்த, பல்வேறு அம்சங்கள் குறித்து நாங்கள் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பொருளாதாரம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். வேளாண்மை, மருந்து, சுகாதாரம், நிதித் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம்.
எரிசக்தித் துறையில், திரவ இயற்கை எரிவாயுவில் நீண்டகால ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த, பாதுகாப்புத் தொழில், பயிற்சி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். விண்வெளித் துறையில் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்த, செயற்கைக்கோள் மேம்பாடு, தொலையுணர்வுத் திட்டங்கள், பயிற்சி ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கு நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்பை மேம்படுத்த, நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்படும்.
நண்பர்களே,
மக்களுக்கு இடையேயான உறவுகளே நமது உறவின் அடித்தளமாகும். புருனேயில் உள்ள இந்திய சமூகத்தினர் புருனேயின் பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளித்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய தூதரகத்தின் புதிய தூதரக அலுவலகம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய சமூகத்தினருக்கு புருனேயில் நிரந்தர முகவரி கிடைத்துள்ளது. புருனேயில் உள்ள இந்திய சமூகத்தின் நலனுக்காக புருனே சுல்தானுக்கும், அவரது அரசுக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.
நண்பர்களே,
இந்தியாவின் கிழக்கத்திய நாடுகள் கொள்கை, இந்தோ-பசிபிக் தொலைநோக்கு செயல்பாடு ஆகியவற்றில் புருனே முக்கிய நாடாக உள்ளது. ஆசியான் மையத் தன்மைக்கு இந்தியா எப்போதும் முன்னுரிமை அளித்து வந்துள்ளது. அதை தொடர்ந்து மேற்கொள்ளும். ஐநாசிஎல்ஓஎஸ் போன்ற சர்வதேச சட்டங்களின் கீழ் சுதந்திரமான கடல்வழி, வான்வழி போக்குவரத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.
இந்தப் பிரிவில் ஒரு நடத்தை விதித் தொகுப்பு இறுதி செய்யப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். நாங்கள் வளர்ச்சிக் கொள்கையை ஆதரிக்கிறோம், விரிவாக்கவாதத்தை அல்ல.
மதிப்பிற்குரிய புருனே சுல்தான் அவர்களே,
இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்து உங்கள் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இன்று நமது வரலாற்று உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. என்னை அன்புடன் வரவேற்றதற்காக மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புருனே சுல்தான், அரச குடும்ப உறுப்பினர்கள், புருனே மக்கள் ஆகியோரின் ஆரோக்கியத்துக்காகவும் செழிப்புக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்.
மிக்க நன்றி
பொறுப்புத் துறப்பு இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.