மாட்சிமை தங்கிய சுல்தான் அவர்களே,
உங்கள் கனிவான வார்த்தைகள், அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக உங்களுக்கும், ஒட்டுமொத்த அரச குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலாவதாக, 140 கோடி இந்தியர்களின் சார்பில், உங்களுக்கும், புருனே மக்களுக்கும் 40-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாட்சிமை தங்கிய சுல்தான் அவர்களே,
நமக்கு பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார உறவுகள் உள்ளன. நமது நட்புறவின் அடித்தளம் இந்த மகத்தான கலாச்சார பாரம்பரியமாகும். உங்களது தலைமையின் கீழ், நமது உறவுகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன. 2018-ம் ஆண்டு நமது குடியரசு தினத்தின் சிறப்பு விருந்தினராக நீங்கள் இந்தியாவுக்கு வருகை தந்ததை இந்திய மக்கள் இன்றும் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறார்கள்.
மாட்சிமை தங்கிய சுல்தான் அவர்களே,
எனது மூன்றாவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில், புருனேவுக்கு வருகை தந்து, உங்களுடன் எதிர்கால விஷயங்களைப் பற்றி விவாதிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நமது இருதரப்பு ஒத்துழைப்பின் 40-வது ஆண்டை நாம் கொண்டாடுவது ஒரு இனிமையான நிகழ்வாகும். இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்கு பார்வையில் புருனே முக்கிய கூட்டாளியாக இருப்பது நமது பிரகாசமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. நாம் ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதிக்கிறோம். இந்தப் பயணமும், நமது விவாதங்களும் வரும் காலங்களில் நமது உறவுகளுக்கு ராஜீய நோக்கத்தை வழங்கும் என்று நான் நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை இந்தத் தருணத்தில் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.