மேன்மை தங்கிய பிரதமர் திரு கிஷிடா அவர்களே, இரு நாடுகளின் பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே,
வணக்கம்!
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பிரதமர் திரு கிஷிடா மற்றும் அவரது குழுவினரை நான் மனமார வரவேற்கிறேன். பிரதமர் திரு கிஷிடாவும், நானும் கடந்த ஓராண்டில் பலமுறை சந்தித்துள்ளோம். ஒவ்வொரு முறையும் இந்தியா- ஜப்பான் நட்புறவையொட்டிய அவரது நேர்மறையான உறுதித்தன்மையை நான் உணர்ந்துள்ளேன். அதனால் அவருடைய வருகை இன்று நமது ஒத்துழைப்பு தருணத்தை பராமரிக்க மிகவும் உபயோகமாக இருக்கும்.
நண்பர்களே,
இன்றைய நமது கூட்டம் மற்றொரு காரணத்திற்காகவும் சிறப்பு பெற்றுள்ளது. இந்த வருடம் ஜி-20 நாடுகளுக்கு இந்தியாவும், ஜி-7 நாடுகளுக்கு ஜப்பானும் தலைமை தாங்குகின்றன. அதனால் நம்முடைய முன்னுரிமைகள் மற்றும் விருப்பங்களில் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கு சரியான வாய்ப்பாக இது அமைந்துள்ளது. இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் முன்னுரிமை பற்றி பிரதமர் திரு கிஷிடாவிடம் இன்று நான் விரிவாக எடுத்துரைத்தேன். உலகில் தென்பகுதி நாடுகளின் முன்னுரிமைகளுக்கு குரல் கொடுப்பது நமது ஜி-20 தலைமைத்துவத்தின் முக்கியத்தூணாகும். வசுதைய்வ குடும்பகம் என்ற உலகம் ஒரு குடும்பம் என்பதை நம்பும் நமது கலாச்சாரத்தால் இந்த முன்னெடுப்பை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
நண்பர்களே!
இந்தியா- ஜப்பான் சிறப்பு உத்தி மற்றும் உலகளாவிய கூட்டாண்மை சர்வதேச விதிகளின் படி பகிர்ந்து கொள்ளப்படும். ஜனநாயக மதிப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த கூட்டாண்மையை வலுப்படுத்துவது நமது இரு நாடுகளுக்கு மட்டும் முக்கியமாக மட்டுமல்லாமல் இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, செழுமை, ஸ்திரத்தன்மையை மேம்பட செய்கிறது. இன்றைய உரையாடலின் போது நாங்கள் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்தோம். பாதுகாப்பு தளவாட உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, வர்த்தகம், சுகாதாரம் மற்றும் மின்னணு கூட்டாண்மை குறித்து நாங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம். செமி கண்டக்டர் மற்றும் முக்கிய தொழில்நுட்பங்களில் நம்பகத்தன்மையான விநியோக அமைப்பின் முக்கியத்தன்மை குறித்து நாங்கள் ஆரோக்கியமான விவாதத்தை மேற்கொண்டோம். கடந்த ஆண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 5 ட்ரில்லியன் யென் அளவிற்கு, அதாவது 3 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் ஜப்பான் முதலீட்டை ஈர்க்க நாங்கள் இலக்கு நிர்ணயித்தோம். இதை நோக்கி வளர்ச்சி நடைபெற்று வருவது திருப்தி அளிக்கிறது.
கடந்த 2019-ம் ஆண்டு இந்தியா- ஜப்பான் தொழில்துறை போட்டிக் கூட்டாண்மையை நாங்கள் ஏற்படுத்தினோம். அதன் மூலம் சரக்குப் போக்குவரத்து, உணவுப்பதப்படுத்துதல், குறு, சிறு மற்றும் நடுத்தரத்துறை, ஜவுளிகள், எந்திரங்கள், எஃகு ஆகிய துறைகளில் இந்திய தொழில்துறையின் போட்டிகளை அதிகரித்து வருகிறோம். இன்று இந்த கூட்டாண்மையின் செயல்பாடுகள் குறித்து நான் திருப்தி வெளியிட்டோம். மும்பை- அகமதாபாத் அதிவிரைவு ரயில் திட்டத்தை விரைவுப்படுத்தவும் ஆலோசனை நடத்தினோம். 2023-ம் ஆண்டு சுற்றுலா பரிமாற்ற ஆண்டாக நாம் கொண்டாடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மவுண்ட் ஃப்யுஜியுடன் இமாலயாவை இணைத்தல் என்ற தலைப்பில் இதை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.
நண்பர்களே,
மே மாதத்தில் ஹிரோஷிமாவில் நடைபெறவுள்ள ஜி-7 தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் திரு கிஷிடா இன்று எனக்கு அழைப்பு விடுத்தார். இதற்காக நான் அவருக்கு மனப்பூர்வ நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சில மாதங்களுக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் ஜி-20 தலைவர்கள் மாநாட்டிற்காக திரு கிஷிடாவை இந்தியாவில் வரவேற்க எனக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்தப் பேச்சுக்கள் தொடர்ந்து இந்தியா-ஜப்பான் நட்புறவு உச்சத்தை தொடரும் என்று வாழ்த்தி எனது உரையை நிறைவு செய்கிறேன்.
மிக்க நன்றி!