நண்பர்களே,
நாடாளுமன்ற புதியக் கட்டிடத்தின் முதலாவது அமர்வின் முடிவில், மிக முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக - மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஜனவரி 26 அன்று, 'கடைமைப் பாதையில்' நடைபெற்ற அணிவகுப்பில் பெண்களின் துணிச்சல், வலிமை மற்றும் மனஉறுதியைக் காணமுடிந்தது. இன்று, பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் வழிகாட்டுதல்கள், நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள இடைக்கால பட்ஜெட் போன்றவை பெண்களின் வலிமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. பெண்களின் வலிமையை வெளிப்படுத்தும் அம்சமாக இத்தகைய நிகழ்வுகள் அமைந்துள்ளன.
நண்பர்களே,
கடந்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்களுக்கே உரித்தான வகையில், பங்களிப்பை வழங்கியுள்ளனர். எனினும், அவை நடவடிக்கைளில் இடையூறு ஏற்படுத்துவதையும், ஜனநாயக மாண்புகளைக் குறைத்து மதிப்பிடுவதையும் குறிப்பாக சில உறுப்பினர்கள் தங்களது வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதி அமர்வில், கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சாதனைகள் குறித்து, அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மக்களிடம் கேட்கும் போது, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களின் பெயர்கள் அவர்களது நினைவில் இருக்காது. எதிர்க்கட்சிகளின் தீவிரமான விமர்சனங்கள் தொடர்ந்து இருந்தபோதிலும், கணிசமான எண்ணிக்கையிலான மக்களவையில் ஆக்கபூர்வமாக செயல்பட்டவர்களை நினைவில் கொள்வார்கள்.
இனி வரும் காலங்களில் மக்களவையில் நடைபெறும் விவாதங்களை கவனிக்கும் போது, உறுப்பினர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் வரலாற்றில் இடம்பெறும். எனவே, அவையில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தகுந்த பதிலளிக்கும் விதமாக மக்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு, உறுப்பினர்கள் அவையில் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும். உறுப்பினர்களின் கண்ணியமான செயல்பாடுகள், நாட்டின் ஜனநாயக மாண்புகள் மற்றும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டுள்ள கணிசமான மக்களால் பாராட்டப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதற்கு நேர்மாறாக, எதிர்மறையான எண்ணங்கள், அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள், சுயநலமுடையவர்கள், மக்களால் அரிதாகவே நினைவுகூரப்படுகின்றனர். இருப்பினும், நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், மதிப்பு வாய்ந்த சிந்தைகளை அவைக்கு வழங்குவதன் மூலம், நாட்டிற்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் மரபு இல்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. இந்த மரபிற்கு உட்பட்டு புதிய அரசு அமைக்கப்பட்ட பின்னர், முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த நேரத்தில், நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய இடைக்கால பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார்.
நண்பர்களே,
நாடு தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் சென்று வளர்ச்சியின் புதிய உச்சங்களை எட்டும் என்றும், வளர்ச்சியை உள்ளடக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்றும் நான் நம்புகிறேன். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பயணம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் ஆசியுடன் இந்த செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இத்தகையை நம்பிக்கையுடன் எனது உரையை நிறைவு செய்கிறேன். உங்கள் அனைவருக்கும் ராம்-ராம்.