மேதகுதலைவர்களே,
உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.
மேதகு தலைவர்களே,
140 கோடி இந்தியர்களின் சார்பாக, உலகளாவிய தென்பகுதி நாடுகளின் 2 வது குரல் உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வுக்கு உங்கள் அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன். உலகின் தென்பகுதி நாடுகளின் குரல் என்பது 21 ஆம் நூற்றாண்டின் மாறிவரும் உலகின் மிகவும் தனித்துவமான தளமாகும். நாம் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகள், ஆனால் நமக்குள் ஒரே நலன்கள், ஒரே முன்னுரிமைகள் உள்ளன.
நண்பர்களே,
கடந்த ஆண்டு டிசம்பரில், ஜி-20 அமைப்பின் தலைமைத்துவத்தை இந்தியா ஏற்றபோது, இந்த மன்றத்தில் உலகளாவிய தெற்கு நாடுகளின் குரல்களை அதிகரிப்பது நம்முடைய பொறுப்பாக இருக்க வேண்டும் என நாம் கருதினோம். ஜி-20 மாநாட்டை உலக அளவில் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், மனிதனை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதே நமது முன்னுரிமையாக இருந்தது
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 200-க்கும் மேற்பட்ட ஜி-20 கூட்டங்களில், உலகளாவிய தென்பகுதி நாடுகளின் முன்னுரிமைகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்தோம். இதன் விளைவாக, புதுதில்லி தலைவர்களின் பிரகடனத்தில் உலகளாவிய தென்பகுதி நாடுகளின் பிரச்சினைகள் குறித்து அனைவரின் ஒப்புதலையும் பெறுவதில் நாங்கள் வெற்றி பெற்றோம்.
மேதகு தலைவர்களே,
ஜி-20 மாநாட்டில், உலகளாவிய தென்பகுதி நாடுகளின் நலன்களை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகளை தாழ்மையுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியாவின் முயற்சியால் ஆப்பிரிக்க ஒன்றியம் புதுதில்லி உச்சிமாநாட்டில் ஜி-20 அமைப்பில் நிரந்தர உறுப்புரிமை பெற்ற அந்த வரலாற்று தருணத்தை என்னால் மறக்க முடியாது. பலதரப்பு வளர்ச்சி வங்கிகளில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், வளரும் நாடுகளுக்கு நிலையான நிதியை வழங்குவதில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் ஜி-20 இல் உள்ள அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
உலகளாவிய தென்பகுதி நாடுகள் எந்தவொரு இயற்கைப் பேரழிவுகளாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதைச் சமாளிக்க, இந்தியா பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியை, அதாவது, சி.டி.ஆர்.ஐ.,யை துவக்கியது. இப்போது பேரிடர் தணிப்பு மற்றும் நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்காக ஜி-20 இல் ஒரு புதிய பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்முயற்சியால், ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடுகிறது. ஜி-20-ன் கீழ், சிறந்த உணவு சிறுதானியங்கள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள ஒரு புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது, இதற்கு 'ஸ்ரீ அன்னா' என்ற அடையாளத்தை வழங்கியுள்ளோம். பருவநிலை மாற்றம் மற்றும் வளப்பற்றாக்குறையால் எழும் உணவுப் பாதுகாப்பு கவலைகளை நிவர்த்தி செய்ய இது உலகளாவிய தென்பகுதி நாடுகளுக்கு உதவும்.
மேதகுதலைவர்களே,
உலகளாவிய செழிப்புக்கு அனைவரின் ஆதரவும், வளர்ச்சியும் அவசியம். ஆனால் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து புதிய சவால்கள் உருவாகி வருவதை நாம் அனைவரும் காண்கிறோம். அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. கட்டுப்பாடுகளைத் தவிர பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தையும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் பேசிய பிறகு, பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளையும் அனுப்பியுள்ளோம். உலகளாவிய நன்மைக்காக உலகளாவிய தென்பகுதி நாடுகள் ஒரே குரலில் பேச வேண்டிய நேரம் இது.
இந்த எண்ணங்களுடன் எனது அறிக்கையை நிறைவு செய்கிறேன். இப்போது, உங்கள் எண்ணங்களைக் கேட்க நான் மிகவும் ஆவலுடன் உள்ளேன். இவ்வளவு பெரிய அளவில் நீங்கள் தீவிரமாகப் பங்கேற்றதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகவும் நன்றி!