நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணம் சமீபத்தில் 50 நாட்களை நிறைவு செய்து சுமார் 11 கோடி மக்களை சென்றடைந்துள்ளது. வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணம் அரசின் பயணமாக மட்டுமின்றி, நாட்டின் பயணமாகவும் மாறியுள்ளது. மோடியின் உத்தரவாத வாகனம் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கிறது. அரசுத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்காக தங்கள் வாழ்நாளைக் கழித்த ஏழை மக்கள் இன்று அர்த்தமுள்ள மாற்றத்தைக் காண்கிறார்கள். அரசு முனைப்புடன் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. மோடியின் உத்தரவாத வாகனத்துடன், அரசு அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் மக்களைச் சென்றடைகின்றனர்.
எனது குடும்ப உறுப்பினர்களே,
மோடியின் உத்தரவாத வாகனம் உலக அளவில் பேசப்படுகிறது. உத்தரவாதத்தின் வரையறைகளுடன் விரைவான முறையில் திட்டங்களின் பயன்கள் பயனாளிகளை சென்றடைகின்றன. பல தலைமுறைகளாக ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் இன்னல்களைச் சந்தித்து வந்துள்ளனர். முந்தைய தலைமுறையினர் சந்தித்த இன்னல்களை தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினர் சந்திக்கக் கூடாது என்று இந்த அரசு விரும்புகிறது. அன்றாடத் தேவைகளுக்கான போராட்டத்தில் இருந்து நாட்டு மக்களை விடுவிக்க நாங்கள் விரும்புகிறோம். ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். எங்களைப் பொறுத்தவரை, இவர்கள் நாட்டின் நான்கு பெரிய பிரிவினர் ஆவர். இவர்கள் அதிகாரம் பெற்றால், நாடு சக்திவாய்ந்ததாக மாறும்.
நண்பர்களே,
அரசுத் திட்டங்களின் பயன்களிலிருந்து தகுதியான எந்தவொரு பயனாளியையும் விட்டுவிடக்கூடாது என்பதே வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணத்தின் முக்கியக் குறிக்கோள். பயணம் தொடங்கியதிலிருந்து இலவச சமையல் எரிவாயு இணைப்புகளுக்கான 12 லட்சம் புதிய விண்ணப்பங்களும், விபத்துக் காப்பீட்டுத் திட்டம், ஆயுள் காப்பீடு திட்டம், பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான ஸ்வநிதித் திட்டம் ஆகியவற்றுக்காக லட்சக்கணக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
நண்பர்களே,
வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணத்தின் போது இதுவரை 2 கோடிக்கும் அதிகமான மக்களுக்குக் காசநோய் பரிசோதனைகள், 22 லட்சம் அரிவாள் செல் நோய்க்கான ரத்தப் பரிசோதனைகள் உட்பட சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு, ஏழைகளுக்கு இலவச டயாலிசிஸ், மக்கள் மருந்தக மையங்களில் குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் திட்டம், ஆயுஷ்மான் திட்டம் போன்றவை ஏழைகளுக்குப் பெரிதும் பயனளிக்கின்றன.
எனதருமை குடும்ப உறுப்பினர்களே,
நாட்டில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் அரசு முக்கிய கவனம் செலுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 10 கோடி பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு ரூ.7.5 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல சகோதரிகள் லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர். லட்சாதிபதி சகோதரிகளின் எண்ணிக்கையை மேலும் 2 கோடியாக அதிகரிப்பதற்கான அரசின் இயக்கம், நமோ ட்ரோன் மகளிர் திட்டமாகும். வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயண காலத்தில் சுமார் 1 லட்சம் ட்ரோன்கள் மூலம் செயல் விளக்கங்கள் செய்து காட்டப்பட்டுள்ளன.
எனதருமை குடும்ப உறுப்பினர்களே,
நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக துரிதமான அடிப்படையில் புதிய தொழில்நுட்பங்களுடன் பொதுமக்கள் இணைக்கப்படுகிறார்கள். தற்போது, வேளாண் துறையில் மட்டுமே ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வரும் நாட்களில், அதன் நோக்கம் மற்ற பயன்பாடுகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
நண்பர்களே,
முழு அர்ப்பணிப்புடன் தங்கள் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் நிர்வாகம் உட்பட வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணத்தின் நிகழ்ச்சியை நடத்தும் குழுவின் முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்கள். இந்த உணர்வுடன் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற நமது கடமைகளை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணத்தில் மீண்டும் உங்களுடன் இணைவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
மிக்க நன்றி!